என் மலர்tooltip icon

    விருதுநகர்

    ஏலச்சீட்டு நடத்திய பாபு ரூ.10 கோடி வரை மோசடி செய்திருந்த நிலையில் தற்போது அவர் மீது புகார்கள் குவிந்து வருவதால் மேலும் பல கோடி ரூபாய் அவர் மோசடி செய்திருக்கலாம் என்று தெரிய வருகிறது.
    ஈரோடு:

    ஈரோடு சூளை சி.எஸ். நகரைச் சேர்ந்தவர் பாபு (56). சோப்பு தயாரிப்பு நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வந்தார்.

    இவர் அசோகபுரம் பிரதான சாலையில் அலுவலகம் அமைத்து ஏலச்சீட்டு நடத்தினார். இதில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சீட்டு பணம் செலுத்தினர். இவர் ஏலச்சீட்டில் பணம் எடுத்தவர்களுக்கு பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 28-ந்தேதி ஏலச்சீட்டு நடத்தி வந்த பாபு திடீரென தலைமறைவானார். இதனால் பணம் கட்டிய பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடந்த 28-ந்தேதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர். மேலும் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த பாபுவை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    அதைத் தொடர்ந்து மீண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணம் செலுத்தி ஏமாந்த பொதுமக்கள் புகார் செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. மேலும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் இதுகுறித்து புகார் செய்யலாம் என்றும் போலீசார் அறிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் கூறியதாவது:-

    ஏலச்சீட்டு மோசடி குறித்து இதுவரை 360 பேர் புகார் செய்துள்ளனர். புகார்கள் குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து இன்னும் ஓரிரு நாட்களில் சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். வேறு யாராவது இதுபோல் ஏலச்சீட்டில் பணம் செலுத்தி ஏமாந்து இருந்தால் அவர்களும் முன் வந்து புகார் அளிக்கலாம். தலைமறைவாக இருக்கும் தொழில் அதிபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏலச்சீட்டு நடத்திய பாபு ரூ.10 கோடி வரை மோசடி செய்திருந்த நிலையில் தற்போது அவர் மீது புகார்கள் குவிந்து வருவதால் மேலும் பல கோடி ரூபாய் அவர் மோசடி செய்திருக்கலாம் என்று தெரிய வருகிறது.
    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசு பஸ்சில் பெண் டாக்டரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கண்டக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த பெண் டாக்டர் உப்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

    தினமும் அரசு பஸ்சில் டாக்டர் வேலைக்கு சென்று வருகிறார். நேற்று அரசு பஸ்சில் பயணம் செய்த அவர் டிரைவர் இருக்கைக்கு 2 இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்தார்.

    பஸ் சென்று கொண்டிருந்தபோது அவரது பின் இருக்கையில் பஸ் கண்டக்டர் சிவராமைய்யா வந்து அமர்ந்தார். அவர் பெண் டாக்டரிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் டாக்டர், கண்டக்டரை கண்டித்தார். பஸ் டிரைவரும், கண்டக்டரை எச்சரித்தார்.

    இந்த சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசில் பெண் டாக்டர் புகார் செய்தார. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வத்திராயிருப்பு அருகே காரும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 40). இவர் கோவை மாநகர ஆயுதப்படை போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

    விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த பன்னீர்செல்வம் மனைவி ராஜலட்சுமி(35), மகள் ஜெசிகா ஆகியோருடன் காரில் நேற்று தம்பிபட்டி கோட்டையூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ஒரு ஆட்டோ வந்தது.

    அந்த ஆட்டோவில் வேல்முருகன் என்பவர் குடும்பத்தினருடன் ஜவுளி எடுப்பதற்காக சென்று கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக காரும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் போலீஸ்காரர் பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி ராஜலட்சுமி, மகள் ஜெசிகா, வேல்முருகன் அவரது மனைவி பிரியா (30) குழந்தைகள் விசுவாஸ், வைசியா மற்றும் மணிகண்டன் ஆகியோர் காயமடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் வத்திராயிருப்பு போலீசார் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    பலத்த காயமடைந்த வேல்முருகன், ராஜலட்சுமி ஆகியோர் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    தீபாவளி பண்டிகை முடியும் வரை கடை வீதியில் ஒரு வழி பாதைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    பல்லடம்:
     
    பல்லடம் கடை வீதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாலதண்டாயுதபாணிசுவாமி கோவில் முதல் அண்ணா சிலை வரை பொதுமக்கள் நடமாட்டம் அதிகரிப்பு மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் இரண்டு புறமும் இரும்பு தடுப்பு மூலம் அடைக்கப்பட்டு இருந்தது. 

    பொதுமக்கள் கடை வீதியில் நடந்து சென்று பொருட்கள் வாங்கும் வகையில் பாதை வசதி செய்யப்பட்டு இருந்தது. 

    இதுகுறித்து பல்லடம் வியாபாரிகள் சங்க தலைவர் ஆனந்தா செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் விமல் பழனிசாமி, விஜயகுமார், பானு பழனிசாமி ஆகியோர் பல்லடம் டி.எஸ்.பி.வெற்றிசெல்வன், இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரிடம் ஒரு வழிப்பாதையாக மாற்ற கோரிக்கை விடுத்தனர். 

    இதையடுத்து தீபாவளி பண்டிகை முடியும் வரை கடை வீதியில் ஒரு வழி பாதைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை வேன், லாரி உள்ளிட்ட சரக்கு வாகன போக்குவரத்திற்கு அனுமதி இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். '

    வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று ஒரு வழிபாதை போக்குவரத்திற்கு அனுமதி வழங்கிய போலீஸ் அதிகாரிகளுக்கு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். 
    உத்தரபிரதேச சட்டசபை தேர்ததலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் பஸ்களில் பெண்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்படும்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    அவர் நாள்தோறும் அதிரடியான தேர்தல் வாக்குறுதியை அளித்து அசத்தி வருகிறார். அவரது தேர்தல் வாக்குறுதிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

    இந்த நிலையில் பிரியங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    பள்ளி மாணவிகளுக்கு ஸ்கூட்டி மற்றும் ஸ்மார்ட் போன் இலவசமாக வழங்கப்படும். பெண்களுக்கு வருடந்தோறும் 3 கியாஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.

    பிரியங்கா காந்தி

    காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் பஸ்களில் பெண்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்படும். விதவைகளுக்கு ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும். காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட 40 சதவீத பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு பிரியங்கா அதில் தெரிவித்துள்ளார்.

    இதையும் படியுங்கள்...ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வீட்டுக் காவலில் அடைப்பு

    அ.தி.மு.க.வுக்கு எப்போதெல்லாம் சோதனைகள் வருகின்றதோ அப்போதெல்லாம் இருந்தவர்கள் தான் இப்போதும் இருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் போக்குவரத்து பிரிவிற்கு ராஜபாளையத்தில் 2 பணிமனை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் ஆகிய 5 பணிமனைகளை சேர்ந்த புதிய நிர்வாகிகளுக்கு நியமனம் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி விருதுநகரில் நடந்தது.

    சிறப்பு அழைப்பாளர்களாக விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்-முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாநில செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு நியமன சான்றிதழ்களை வழங்கினர்.

    கூட்டத்தில் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    அ.தி.மு.க.வுக்கு எப்போதெல்லாம் சோதனைகள் வருகின்றதோ அப்போதெல்லாம் இருந்தவர்கள் தான் இப்போதும் இருக்கிறார்கள். திடீரென்று வந்தவர்கள் திடீரென்று போய் விட்டார்கள்.

    அ.தி.மு.க. என்றும் சாகா வரம்பெற்ற இயக்கம். அ.தி.மு.க.வுக்கு 96-ல் ஏற்படாத சோதனையா தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில்கூட திருத்தங்கல் நகராட்சியில் நான் வைஸ் சேர்மனாக வெற்றி பெற்றேன்.

    சோதனை என்பது அ.தி.மு.க.வுக்கு புதிதல்ல. சோதனைகள் வரும்போது தான் எறிகின்ற பந்து எப்படி துள்ளி எழுந்து வருமோ அதே போன்று அ.தி.மு.க. மீண்டும் எழும். இங்கிருந்த பலபேர் வேறு இடத்திற்கு சென்றிருப்பார்கள்.

    பழத்தோட்டத்தை நாடி அவர்கள் பறந்து சென்றிருக்கின்றனர். ஆனால் நாம் தோட்டக்காரர்கள். நாம் நல்ல விதைகளை விதைத்து, விளைவித்து தோட்டத்தை பாதுகாக்க முடியும். பழங்களை உற்பத்தி செய்ய முடியும். ஆகையால் பழத்தோட்டக்காரர்களாக நாம் இருப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    தமிழகம் முழுவதும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இனிப்பு, பூங்கொத்து கொடுத்து மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    சென்னை:

    கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், கடந்த 19 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில், தமிழகத்தில் ஏற்கனவே 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகளுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.

    அதன்படி கொரோனா நெறிமுறைகளுடன் இன்று முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு வரும் மாணவ -மாணவிகளை ஆசியர்கள் பூக்கள் கொடுத்தும், சாக்லெட் வழங்கியும் வரவேற்றனர். மாணவர்கள்- மாணவிகளும் உற்சாகத்துடன் வகுப்பறைக்குள் சென்றனர்.

    பள்ளிகளின் வாசலிலேயே காய்ச்சல் சோதனை செய்யப்பட்டு, கைகள் சுத்தம் செய்த பிறகு, முகக்கவசம், கையுறைகள் வழங்கப்பட்டு பின் மாணவர்களை வகுப்புகளுக்குள் அனுமதித்தனர். வகுப்பறைக்குள் சமூக இடைவெளியைப் பின்பற்றி மாணவர்களை அமர வைத்துள்ளனர்.

    சில பள்ளிகளில், மாணவர்களுக்கு கொரோனா தொற்று குறித்தும், கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்தும் பள்ளிகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன. பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மாணவ- மாணவிகள் பள்ளிகளுக்கு வருவார்கள் என்பதால் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.

    பள்ளிகள் திறப்பு

    மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதால் பாடங்கள் நடத்துவதற்கு பதில், முதல் 15 நாட்களுக்கு ஓவியம், கதை, பாடல், விளையாட்டு உள்பட மனமகிழ்ச்சி செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது முறையாக செயல்படுத்திய பிறகு பாடம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

    விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 11 லட்சத்து 2 ஆயிரத்து 321 பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 5 லட்சத்து 16 ஆயிரத்து 22 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 978 இடங்களில் நடந்த 7-வது கொரோனா தடுப்பூசி முகாமில் 14,583 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 29,716 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 44, 299 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    இதுவரை 11 லட்சத்து 2 ஆயிரத்து 321 பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 5 லட்சத்து 16 ஆயிரத்து 22 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் ஆக மொத்தம் 16 லட்சத்து 18 ஆயிரத்து 343 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    பெட்டிக்கடையில் பட்டாசு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் ரிசர்வ் லைன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் மளிகை பொருட்களுடன் பட்டாசுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் அந்த கடையின் உரிமையாளர் ஞானசேகர் (வயது 49) என்பவரை கைது செய்தனர். இதேபோல் சப்- இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் அண்ணாகாலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (48) என்பவர் தனது மளிகை கடையில் பட்டாசு விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார் கடையில் இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
    மேற்கு தொடர்ச்சி மலையில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் 40 நாட்களுக்கு பின் எடுக்கப்பட்டு, அதன் பதிவுகள் டேராடூன் தேசிய புலிகள் ஆய்வு மையத்திற்கு அனுப்பப்படும்.
    ராஜபாளையம்:

    இந்தியா முழுவதும் புலிகளின் எண்ணிக்கையை கண்டறிய தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் இந்தப்பணிகள் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. ராஜபாளையம், சேத்தூர் போன்ற பகுதிகளில் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

    தேவதானம் வனவர் கார்த்திக் ராஜா, வன உயிரின ஆராய்ச்சியாளர் பார்த்திபன் தலைமையிலான குழுவினர் தேவதானம் சாஸ்தா கோவில் மலைப்பகுதிக்குள் சென்றனர்.

    அடர்ந்த வனப்பகுதிக்குள் புலிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது பின்னர் புலிகளின் கால் தடங்கள், எச்சங்கள் சேகரிக்கப்பட்டன.

    பொள்ளாச்சியில் உள்ள மேகமலை புலிகள் சரணாலய ஆராய்ச்சியாளர் பீட்டர் சக்கரவர்த்தி தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட வனவர்கள், பங்கேற்பாளர்களுக்கு புலிகள் குறித்து விளக்கம் கூறப்பட்டது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் 40 நாட்களுக்கு பின் எடுக்கப்பட்டு, அதன் பதிவுகள் டேராடூன் தேசிய புலிகள் ஆய்வு மையத்திற்கு அனுப்பப்படும். அதன் பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து தெரியவரும்.

    தமிழகம் முழுவதும் இதுவரை நடந்த 6 கட்ட மெகா தடுப்பூசி முகாம்களில் இதுவரை 1 கோடியே 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    அருப்புக்கோட்டை:

    தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும், தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும் தடுப்பூசி போடும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

    ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் தினமும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும், மக்கள் அனைவரும் தடுப்பூசி போடுவதற்கு ஏதுவாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை மெகா சிறப்பு தடுப்பூசி முகாமை நடத்தி வருகிறது.

    கோப்புப்படம்


    தமிழகம் முழுவதும் இதுவரை நடந்த 6 கட்ட மெகா தடுப்பூசி முகாம்களில் இதுவரை 1 கோடியே 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 7-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடந்தது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை யூனியனுக்கு உட்பட்ட கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள ராஜ்கோ மகாலிலும் தடுப்பூசி முகாம் நடந்தது.

    முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தியையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு மதுரை திரும்பும் வழியில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை யூனியனுக்கு உட்பட்ட கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். தடுப்பூசி போட வந்திருந்த பொதுமக்களிடம் பேசிய முதல்வர், மருத்துவ பணியாளர்களிடம் விவரங்களையும் கேட்டறிந்தார்.

    அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.

    அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
    சிவகாசி தாலுகாவில் 1 லட்சத்து 39 ஆயிரம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
    சிவகாசி:

    இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசி வாரம் முதல் இன்று வரை கொரோனா தனது கோர தாண்டவத்தை நிறுத்தியப்பாடில்லை. தொற்று குறைந்ததால். சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்தாலும் கொரோனா முற்றிலும் ஒழிக்கப்படவில்லை. தடுப்பூசி கண்டுபிடிப்புக்கு பின்னர் இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் குறைந்துள்ளது. இதுவரை 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மிகப்பெரிய சாதனையை மத்திய அரசு நிகழ்த்தி உள்ளது. தமிழகத்திலும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வாரந்தோறும் மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    சிவகாசி தாலுகாவில் மட்டும் 4 லட்சத்து 47 ஆயிரத்து 700 பேர் வசித்து வருகிறார்கள். இதில் தடுப்பூசி போட தகுதியானர்கள் என மாநில சுகாதாரத்துறை 3 லட்சத்து 42 ஆயிரத்து 234 பேரை அறிவித்துள்ளது. இதில் 2 லட்சத்து 3 ஆயிரத்து 32 பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இது மொத்தம் உள்ள மக்களில் 60 சதவீதம் தான். மற்ற 40 சதவீதம் பேர் இன்னும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடவில்லை.

    அதாவது சிவகாசி தாலுகாவில் 1 லட்சத்து 39 ஆயிரம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடவில்லை. இதே போல் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி 65 ஆயிரத்து 927 பேர் மட்டும் போட்டுள்ளனர். சிவகாசி தாலுகாவில் மட்டும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் 2 லட்சத்து 68 ஆயிரத்து 959 பேருக்கு தான் போடப்பட்டுள்ளது.

    இது குறித்து சுகாதார அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சிவகாசி தாலுகாவில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இன்னும் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பது எங்களுக்கு அதிர்ச்சியாக தான் இருக்கிறது. இவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று சுகாதாரத்துறை ஊழியர்கள் தேடி வருகிறார்கள். சிறப்பு முகாம்கள் நடத்தியும் இவர்கள் தடுப்பூசி போட முன்வராத நிலையில் இவர்களை தேடி தடுப்பூசி செல்ல உள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போட்டவர்களின் விவரங்களை சேரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது தடுப்பூசி போடாதவர்கள் இருந்தால் அவர்களுக்கு உடனே தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்படும்.

    இதுவரை சிவகாசி பகுதியில் 7 முறை மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. தினமும் 10 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது. சிவகாசி நகராட்சி பழைய கட்டிடம், திருத்தங்கல் பழைய நகராட்சி அலுவலகம், சிவகாசி ஜானகி அம்மாள் மகப்பேறு நிலையம் ஆகிய இடங்களில் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தங்களது ஆதார் எண்ணை கூறி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×