என் மலர்tooltip icon

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே விவசாய வேலைக்கு சென்ற முதியவர் கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள நல்லான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுதேவர் (வயது 80). விவசாய கூலி தொழிலாளியான இவர், சம்பவத்தன்று நெல் அறுவடை பணிக்கு சென்றார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் முதியவரை பல இடங்களில் தேடினர். பலனில்லை.

    இந்த நிலையில் அழகுதேவர் அதே பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் பிணமாக கிடப்பதாக பரளச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டனர்.

    அப்போது அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்தனர். தொடர்ந்து போலீசார் பிரேத பரிசோதனைக்காக அழகுதேவர் உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அழகுதேவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழிலாளர்கள் முகக்கவசம் அணியாமல் பணியாற்றியதால் 2 தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    ஸ்ரீவில்லிபுத்தூர் 

    விருதுநகர் மாவட்ட கலெக்டரின் உத்திரவின்படி, ஸ்ரீவில்லிபுத்துர் நகராட்சி ஆணையாளர் மல்லிகா அறிவுறுத்தலின்படி, நகர்நல அலுவலர் கவிப்ரியா ஆலோசனை பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கொரோனா ஒழிப்பு பணியில் சுகாதாரத் துறை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

    பொதுமக்கள் மத்தியில் முகக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி ரூ.500 அபராதம் விதித்து வருகின்றனர். 

    எனினும் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் முகக்கவசம் அணிய தேவையில்லை என்ற மனநிலையில் மக்கள் வெளியே நடமாடி வருகின்றனர். அவர்களை கண்டுபிடித்து நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். 

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகர பகுதியில் ரெயில்நிலையம் செல்லும் வழியில் உள்ள தனியார் நூற்பாலையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், சந்திரா, ஜஹாங்கீர் ஆகியோர் திடீரென ஆய்வு செய்தனர். 

    அப்போது அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பணியாற்றினர். இதனால் அந்த நிறுவனத்துக்கு ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

    மேலும் அருகிலுள்ள பாலிதீன் தயாரிக்கும் கம்பெனிக்கு சென்று ஆய்வு செய்த போது ஊழியர்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் பணிபுரிந்தது கண்டறியப்பட்டது. 

    இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த 2 நிறுவனங்களின் மேலாளரையும் அழைத்து இனிவரும் காலங்களில் ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர்களுக்கு கொரானா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    விருதுநகர் அருகே பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையை சேர்ந்தவர் ராஜா(42). அரசு பஸ் டிரைவர். இவர் நேற்றிரவு அருப்புக்கோட்டையில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு விருதுநகருக்கு புறப்பட்டார். 

    அப்போது பயணிகளை ஒரு தனியார் பஸ் போட்டிக்போட்டு கொண்டு ஏற்றியது.

    இதனால் அரசு பஸ் மற்றும் தனியார் பஸ் டிரைவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரி கிறது. 

    இந்த நிலையில் அருப்புக்கோட்டை சிவன்கோவில் அருகே அரசு பஸ் சென்றபோது தாமோதரன் பட்டியை சேர்ந்த ராமராஜ், ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியை சேர்ந்த நாகராஜன் ஆகியோர் மறித்து ராஜாவை சரமாரியாக தாக்கினர். 

    இதில் அரசு பஸ் டிரைவர் ராஜா காயமடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 

    இதுகுறித்த புகாரின் பேரில் அருப்புகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர்.

    திருத்தங்கல்லில் உள்ள ஜவுளிக்கடையில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
    விருதுநகர்


    விருதுநகர் மாவட்டம்  திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியை  சேர்ந்தவர் பால்பாண்டி (வயது42). இவர் அதே பகுதியில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். தொழில் தேவைக்காக தனது நகைகளை அடகு வைத்து ரூ. 2.65 லட்சத்தை திரட்டினார். 

    சம்பவத்தன்று அந்த பணத்தை தனது கடையின் டேபிளில் வைத்துள்ளார். அப்போது கடைக்கு வந்து 2 வடமாநில வாலிபர்கள் ஜவுளி எடுத்துவிட்டு சென்றனர். 

    அவர்கள் சென்ற பிறகு  கடையில் இருந்த ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் மாயமாகி இருந்தது.

    இதுகுறித்து பால்பாண்டி திருத்தங்கல் போலீசில் புகார் செய்தார். அதில் கடைக்கு ரெடிமேட் வாங்க வந்த 2 வடமாநில வாலிபர்கள் பணத்தை திருடிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார். 

    அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் டிரைவர் மற்றும் வாலிபர் தற்கொலை செய்து கொண்டனர்.
    விருதுநகர்

    சாத்தூர் தென்றல் நகரைச்சேர்ந்தவர் சரவணன் (வயது38). டிரைவரான இவர் வேலை விஷயமாக வடமாநிலங்களுக்கு அடிக்கடி சென்றுவிடுவார். இதன் காரணமாக மாதத்தில் சில நாட்கள் மட்டுமே வீட்டில் இருப்பார்.

    கடந்த சில மாதங்களாக சரவணன் அடிக்கடி மது குடித்து வந்ததால் வீட்டில் பிரசினை ஏற்பட்டதாக தெரிகிறது. சம்பவத்தன்று சரவணன் மது குடித்து வந்தததால் மனைவி கண்டித்துள்ளார். 

    இதில் விரக்தி அடைந்த சரவணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராஜபாளையம் அருகே உள்ள கோதை நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (22). இவர் வேலைக்கு செல்லாமல் இருந்தார்.  மேலும் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரை வற்புறுத்தியுள்ளார். 

    ஆனால் அவர்கள் தற்போதைக்கு முடியாது என மறுத்து விட்டனர். இதில் விரக்தி அடைந்த முத்துராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

    இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது வத்திராயிருப்பு. இங்குள்ள வ.புதுப்பட்டியில் இருந்து கான்சாபுரம் செல்லும் சாலையில் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

    அவர்கள் அங்குள்ள அர்ச்சனாபுரம் பெரியஓடை அருகே சென்றபோது எதிரே 3 பேர் வந்தனர். அவர்கள் வனத்துறையினரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் சந்தேகம் அடைந்த வனத் துறையினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    வத்திராயிருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை சோதனை செய்தனர். அங்கு முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 பைகளை சந்தேகத்தின் அடிப்படையில் கைப்பற்றி பார்த்தனர். அந்த பையில் கலர் கல ராக 9 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தன. இதனை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்டு சபரிநாதன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடம் வந்து வெடிகுண்டுகளை பார்வையிட்டனர். விசாரணையில் கைப்பற்றப்பட்டவை நாட்டு வெடிகுண்டுகள் என தெரியவந்தது. பாதுகாப்பு கருதி அந்த வெடிகுண்டுகள் ஓடைப் பகுதியில் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டது.

    அதனை பதுக்கியவர்கள் யார்? தப்பி ஓடியவர்கள் யார்? என போலீசார் விசாரணையில் இறங்கினர். இதில் தப்பி ஓடிய 3 பேரும் வ.புதுப்பட்டி கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்த புஷ்பராஜ் (வயது 23), சின்னமணி (20), சரத்குமார் (20) என தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிறிஸ்டியான பேட்டை பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் ஓரு தரப்பினரால் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு பழி வாங்குவதற்காக எதிர்தரப்பினரை தாக்க வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    கைதான 3 பேரும் சுபாஷ் தரப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் வத்திராயிருப்பில் முகாமிட்டு நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார்.

    விருதுநகரில் போலீஸ் வேலைக்கு தேர்வு ஆகாததால் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    விருதுநகர்


    விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் பூஜா(வயது 21), பி.எஸ்சி. பட்டதாரி.


    கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்த பூஜா பல்வேறு வேலைகளுக்கு முயற்சி செய்துள்ளார். அரசு                  தேர்வுகளையும் எழுதினார். 

    அதன்படி காவலர் தகுதி தேர்வையும் பூஜா எழுதினார். இதன் முடிவுகள் வெளியானது. இதில் கட் ஆப் மார்க் குறைந்து விட்டதாக பூஜா கவலையில் இருந்தார். இந்த நிலையில் அவருடன் தேர்வு எழுதிய பலரும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர். 

    இதனை கேட்ட பூஜா மேலும் வேதனை அடைந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    இதுகுறித்து பண்டியன் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.  போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தற்கொலை செய்த பூஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பட்டதாரி பெண் தூக்குப்போட்டு  தற்கொலை செய்தது விருதுநகரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலையத்தில் இளம் பெண்ணை கத்தியால் குத்திய காதலன் கைது செய்யப்பட்டார்.
    விருதுநகர்



    ஸ்ரீவில்லிபுத்தூர் சூடிக்கொடுத்த விநாயகர் தெருவைச் சேர்ந்தவர் பிரபாதேவி (வயது 24). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் படிக்கும்போது பிரபாதேவிக்கும், பாட்டக்குளத்தை சேர்ந்த பிரகாஷ் (25) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. 

    இந்த நிலையில் பிரபாதேவி வேலைக்கு செல்வது பிரகாசுக்கு உடன்பாடு இல்லை. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரபாதேவி குடும்பத்தினர் அவரை மறந்து விடுமாறு கூறியுள்ளனர்.

    சம்பவத்தன்று பிரகாஷ் காதலி வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் இருவரையும் விசாரணைக்கு அழைத்தனர். அதன்படி பிரபாதேவி, பிரகாஷ் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரகாஷ், காதலியை கத்தியால் சரமாரியாக குத்தினார். 

    படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர். 
    அருப்புக்கோட்டையில் அரசு வேலை வாங்கித்தருவதாக 13 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது52). இவர் அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். 

    அதில் எனக்கும், எனது தம்பி மோகன்ராஜ், நண்பர் குணசீலன் ஆகிய 3 பேருக்கும் டி.என்.பி.எஸ்.சி. மூலம் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி தென்காசி மாவட்டம், புளியங்குடியை சேர்ந்த ராமமூர்த்தி, தூத்துக்குடியை சேர்ந்த பாலகுரு, சென்னையைச் சேர்ந்த சரவணன் ஆகிய 3 பேர் ஆசை வார்த்தை கூறினர்.

    அரசு வேலைக்காக இவர்களிடம் பல்வேறு தவணைகளில் ரூ.16 லட்சத்து 35 ஆயிரத்தை செலுத்தினோம். பணம் பெற்றுக்கொண்டபின் வேலை வாங்கித்தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது ரூ.2Ñ லட்சத்தை மட்டும் கொடுத்தனர். மீதமுள்ள ரூ.13© லட்சத்தை தர மறுத்து மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

    இதன் அடிப்படையில் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கரும்பு ஆலை தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது கரும்பு ஆலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கல்லாபுரம் பகுதியை சேர்ந்த ராஜா (வயது 36) வேலை பார்த்து வந்தார். இதற்காக அவரது குடும்பத்தினரும் அங்கேயே தங்கி உள்ளனர்.

    கடந்த 14-ந்தேதி ராஜா, மனைவியிடம் பணம் பெற்றுக் கொண்டு வெளியில் சென்று வருவதாக கூறி சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

    பல்வேறு இடங்களில் தேடியும் ராஜா கிடைக்கவில்லை. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள மொட்டை பத்தான் கண்மாயில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக கிராம அலுவலருக்கு தகவல் வந்தது.

    அதன்பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அவர் மாயமான ராஜா என தெரியவந்தது.

    இதுகுறித்து அவரது மனைவி ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வனகாவலருக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் வலைவேசி தேடி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கான்சாபுரத்தில் வனக்காப்பாளராக பணிபுரிந்து வருபவர் முத்தரசன். இவர் நேற்று முழு ஊரடங்கின்போது வனப்பகுதியில் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது கான்சாபுரத்தை சேர்ந்த முருகன், அவரது நண்பர்கள் அங்குள்ள முத்துக்கள் கேணியில் குளித்துக் கொண்டிருந்தனர்.இதை  முத்தரசன், ஊரடங்கு காலத்தில் குளிக்ககூடாது என அறிவுறுத்தினார். ஆத்திரமடைந்த முருகன், வன காப்பாளர் முத்தரசனை அவதூறாக பேசி, கொலைமிரட்டல் விடுத்தார்.  

    இதுகுறித்து முத்தரசன் கூமாபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முருகனை தேடி வருகின்றனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் 2 இளம்பெண்கள் மாயமாகினர்.

    விருதுநகர்

    ஆலங்குளம் அருகே உள்ள கொங்கன்குளத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவிராஜ். இவரது மனைவி வெங்கடேஸ்வரி (வயது 30).  இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக வெங்கடேஸ்வரி கங்கர்செவல் கிராமத்தில் தந்தை வீட்டுக்கு வந்து விட்டார். 

    இந்த நிலையில் அவர் திடீரென மாயமாகி விட்டார். இதுகுறித்து அவரது தந்தை பெருமாள்சாமி கொடுத்தபுகாரின்பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர் அருகே மேலமேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகள் முனியம்மாள் (20). தீப்பெட்டி ஆலையில் வேலை  பார்த்து வந்த இவர், திடீரென மாயமாகி விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×