என் மலர்tooltip icon

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பை அடுத்த வ.புதுப்பட்டி-கான்சாபுரம் பகுதியில் ஓடை பகுதியில் முட்புதரில் கிடந்த சாக்கு மூட்டையில் 9 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் உள்ள மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் வன விலங்குகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தியது. இதனால் விலங்குகளை கட்டுப்படுத்தவும், வேட்டையாடவும் நாட்டு வெடி குண்டுகளை சிலர் தயாரித்தனர்.

    நாளடைவில் கிராம பகுதிகளில் ஏற்படும் மோதல் சம்பவங்களிலும் இந்த வெடிகுண்டுகள் சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டன.

    இதற்கிடையில் அந்த பகுதியில் நக்சல் படையினர் நடமாட்டம் காணப்பட்டது. அவர்களும் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பை கட்டுப்படுத்தினர்.

    இதனால் நாட்டு வெடி குண்டுகள் அந்த பகுதிகளில் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. இந்த நிலையில் போலீசாரும் தங்கள் கண்காணிப்பை விட்டுவிட்டனர். இதனை பயன்படுத்தி சமீப காலங்களில் சிலர் நாட்டு வெடி குண்டுகளை மீண்டும் தயாரிக்க தொடங்கி உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பை அடுத்த வ.புதுப்பட்டி-கான்சாபுரம் பகுதியில் ஓடை பகுதியில் முட்புதரில் கிடந்த சாக்கு மூட்டையில் 9 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கொலை சம்பவத்துக்கு பழிக்கு பழி வாங்க நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கப் பட்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இந்த நிலையில் வத்திராயிருப்பு அருகே உள்ள தெற்கு கோட்டையூர் காலனி பகுதியில் ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளியின் பின்புறம் உள்ள தரிசு நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் விவசாய பணிக்காக டிராக்டர் ஓட்டி சென்றார்.

    அப்போது திடீரென வெடி சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக டிராக்டரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி பார்த்தார். அப்போது தரிசு நிலத்தில் கிடந்த நாட்டு வெடிகுண்டுகள் சிதறி கிடந்ததை பார்த்தார். அதில் ஒரு நாட்டு வெடிகுண்டு மீது டிராக்டரின் சக்கரம் ஏறியதால் குண்டு வெடித் திருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் நாட்டு வெடிகுண்டுகள் சிதறி கிடக்கும் தகவல் போலீஸ் சூப்பிரண்டு மனோகருக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதன் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு மனோகர், டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையிலான காவல் துறையினர் விரைந்து வந்து அந்த பகுதியை பார்வையிட்டனர். அங்கு கிடந்த 6 நாட்டு வெடிகுண்டுகளை வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி ஆய்வு செய்தனர். தொடர்ந்து வேறு எங்காவது நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

    நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பு நிலையிலேயே கண்காணித்து அதனை தடுத்தால் இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

    போலீசார் தொடர் கண்காணிப்பு இல்லாததால் தான் யாரோ சிலர் மீண்டும் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் இறங்கி உள்ளனர். பயங்கரவாத செயல்களுக்கு இவற்றை பயன்படுத்த திட்டமிட்டு இருக்கலாம்? என்ற சந்தேகமும் நிலவுகிறது.

    இதுதொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தால் அசம்பாவித சம்பவங்கள் தடுக்கப்படலாம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

    சாலையோரத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள கல்தூண் மண்டபங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    ராஜபாளையம்

    மதுரையில் இருந்து திருமங்கலம், கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், கடைய நல்லூர், தென்காசி, குற்றாலம் வரையிலான பகுதிகளில் 350 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான வரலாற்றுப் புகழ்மிக்க கல்தூண் மண்டபங்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிதைந்து வருகின்றன. 

    இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்கள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள கல்மண்டபம் சிதிலமடைந்த நிலையில் தூண்கள் சரிந்து அழிந்து வருகிறது. 

    இதுகுறித்து ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரி யரும், தொல்லியல் ஆய்வாளருமான கந்தசாமி கூறியதாவது:- 

    17&ம் நூற்றாண்டில் தமிழகத்தின் தென்பகுதியை ஆட்சி செய்த மதுரை நாயக்க மன்னர்களில் சிறந்து விளங்கியவர் திருமலை நாயக்கர். அவர் மதுரையில் இருந்து குற்றாலம் வரையிலும், அதேபோல் திருநெல்வேலி வரையிலும் பல இடங்களில் கல்தூண் மண்டபங்கள் மற்றும் தங்கும் சத்திரங்களை கட்டினார்.  

    அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த பாதையில் நீண்ட பயணத் தின் போது கல் மண்டபங்கள் மற்றும் சத்திரங்களில் தங்கி இளைப்பாறினர். 

    திருமலை நாயக்கர் ஆட்சி புரியும்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், குற்றாலநாதர் கோவில் போன்ற கோவில்களில் உச்சிகால பூஜை முடிந்த பிறகு மதிய உணவு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அவர் மதுரையில் இருக்கும்போது கோவில்களில் பூஜை நடைபெறுவதை மணியோசை கொண்டு அறிந்துகொள்ள வழிநெடுக கல் மண்டபங்களை கட்டி அங்கு மணிகளை கட்டி வைத்தார். 

    பூஜை தொடங்கியவுடன் கல் மண்டபங்களில் அமைக்கப்பட்ட மணிகளை ஒவ்வொரு மண்டபங்களில் இருந்தும் வரிசையாக அடுத்தடுத்து ஒலிக்கச்செய்து பூஜை தொடங்கியதை அறிந்து கொண்டார். எனவே கல் மண்டபங்கள் மணிமண்டபங்கள் எனவும் அழைக்கப்பட்டன. அப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கல் மண்டபங்கள் பெரும்பாலான இடங்களில் சிதைந்து காணப்படுகின்றன. 

    ராஜபாளையம் அருகே பிரதான சாலையின் ஓரங்களில் ஏராளமான கல் மண்டபங்கள் காணப்படுகின்றன. அவற்றில் பல மண்டபங்கள் அழியும் தருவாயில் உள்ளன. இன்னும் பல மண்டபங்கள் இன்று வர்த்தக கட்டிடங்களாக செயல்பட்டு வருகின்றன. சில கல் மண்டபங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது.  

    ராஜபாளையத்தில் அமைந்துள்ள கல் மண்டபத்தில் மேல் விதானத்தில் அலங்காரப் பூக்களை சிற்பிகளால் மிக நேர்த்தியாக வடிவமைக் கப்பட்டுள்ளன. கல்தூண்கள் எண்பட்டை கோணங்கள் கொண்ட மற்றும் அலங்கரிக்கப்பட்ட தூண்கள் அழகாக செதுக்கப்பட்டு உள்ளன. 10&க்கும் மேற்பட்ட கல் தூண்களில் பல தூண்கள் சரிந்த நிலையில் முட்புதர்கள் சூழப்பட்டு காணப்படுகிறது. கல் மண்டபங்கள் சில காலங்களுக்குப் பிறகு அறைகளாக உரு வாக்குவதற்காக செங்கல் கட்டுமானங்கள் கட்டப்பட்டதாக தெரிகிறது. 

    இந்த செங்கல் கட்டுமானங்கள் தற்போது இடிந்து விழுந்துள்ளது. இத்தகைய கல்தூண் மண்டபங்களை பாதுகாப் பதற்காக மக்கள் ஆர்வலர் குழுக்கள்  இணைந்து செயல் படும்போது ஊரின் பெருமையையும், பாரம்பரிய சின்னத்தின் முக்கியத்துவத்தையும், பிற்கால சந்ததியினருக்கு அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    நாயக்க மன்னர்கள் காலத்தில் மதுரையில் இருந்து செல்லும் முக்கிய வழித்தடமாக இருந்த இந்தப்பகுதியின் வரலாற்றை பாதுகாக்க முன்வர வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். 
    சாத்தூரில் அரசு பஸ் கண்ணாடியை அரிவாளால் வெட்டி உடைத்த வாலிபர் சிக்கினார்.
    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள நத்தத்துப்பட்டியை  சேர்ந்த தங்கப்பாண்டி   மகன் நாராயணன் ( வயது25). இவர் சாத்தூர் மெயின் ரோட்டில் பழைய அரசு மருத்துவமனை முன்பு கோட்டூரில் இருந்து சாத்தூர் வந்து கொண்டிருந்த அரசு பஸ்சை நிறுத்தி   அரிவாளால் வெட்டி பஸ் கண்ணாடியை நொறுக்கினார். 

    இதனை  எதிர்பாராத பயணிகள் அலறியடித்து இறங்கி ஓடினர்.  அரிவாள் வைத்திருந்ததால் செய்வதறி யாது டிரைவர் மற்றும் கண்டக்டர் அருகில் உள்ள சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்த னர்.

    உடனடியாக  அங்கு சென்ற போலீசார்  அரிவாளுடன்  இருந்த  வாலிபரான நாராயணனை பிடித்து வந்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் நாராயணன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. 

    பின்னர் போலீசார் நாராயணன் குடும்பத்தினரை வரவழைத்து மனநல மருத்துவமனைக்கு அனுப்ப  அறிவுறுத்தினர்.
    ஸ்ரீவில்லிபுத்தூரில் பள்ளி மாணவன் சாவில் சந்தேம் இருப்பதாக தந்தை புகார் கூறியுள்ளார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் என்.ஜி.ஓ. காலனியில் வசிப்பவர் ஆடிட்டர் விஜயவிநாயகம்.  இவருடைய மகன் சிவபிரசாத் (வயது 13). தனியார்   மெட்ரிகுலேசன் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். 

    நேற்று   சிவபிரசாத் ஆன்லைன் கிளாசில்  வீட்டில் படித்து கொண்டிருந்தார். விஜயவிநாயகத்தின் மனைவி வீட்டு  மாடியில் துணி காயப்போட்டுவிட்டு   வந்தபோது சிவபிரசாத்  தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவனை மீட்டு  தனியார் மருத்துவ மனைக்கு  கொண்டு சென்றனர். பின்னர்  அரசு மருத்துவமனைக்கு கொண்டு  சென்றனர். 

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள்  சிவபிரசாத் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இதுதொடர்பாக  நகர் போலீசில் விஜய விநாயகம் புகார் செய்தார். அதில், தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

    என்னுடைய மகன் தற்கொலை செய்து கொள்வதற்கு வாய்ப்புகள் இல்லை. போலீசுதான் எனக்கு உதவ வேண்டும். அவருடைய மரணத்துக்கு உண்மையான காரணத்தை விசாரணை நடத்தி  கண்டறிய வேண்டும் என புகாரில் கூறி உள்ளார்.

    அதன் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் இறந்து எப்படி? என்பது குறித்து   விசாரணை நடத்தி வருகின்றனர்.
    முழு ஊரடங்கு காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் சாலைகள் மற்றும் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

    மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர்  உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    இன்று முழு ஊரடங்கு காரணமாக பஸ்கள் இயக்கப்படாத நிலையில் ரெயில்கள் மட்டும் ஓடின. ஆனால் அதில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஊரடங்கு நாளான இன்று கடைகளை திறந்து மீன் வியாபாரம் செய்த வியாபாரிகளுக்கு நகராட்சி  ஆய்வாளர்  மல்லிகா உத்தரவின்பேரில் சுகாதார ஆய்வாளர்  சந்திரா அபராதம் விதித்தார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. பகல் நேர ரெயில்கள் இல்லாததால் ரெயில் நிலையங்களும் களை இழந்து காணப்பட்டன.

    ராமேசுவரம் கோவில் அடைக்கப்பட்டு இருந்ததால்  வெளிமாநில மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை. இதனால் கோவில் வீதிகள் வெறிச்சோடி இருந்தது-. 

    ஊரடங்கை கருத்தில் கொண்டு நேற்று மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் இன்று மீன்பிடி துறைமுகத்தில் யாரும் இல்லாத நிலை காணப் பட்டது. விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன.

    சிவகங்கை மாவட்டத்தில்  கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்  நிலையம் எந்தவித வாகன போக்குவரத்துமின்றி  வெறிச்சோடி காணப்பட்டது.

    மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களிளும் மக்கள் வீடுகளில் முடங்கினர். சாளைகள் மற்றும் தெருக்கள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முட்புதரில் வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டன.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்ராயிருப்பு வனப்பகுதியில் வனத்துறையினர் சில நாட்களுக்கு முன்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர். வ.புதுப்பட்டியில் இருந்து கான்சாபுரம் செல்லும் சாலையில் அவர்கள் சென்றபோது அங்குள்ள அர்ச்சுனாபுரம் பெரிய ஓடை பகுதியில் 3 பேர் எதிரே வந்தனர்.

    அவர்கள் வனத்துறையினரை பார்த்ததும் தப்பி ஓடினர். இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர்,  வத்ராயிருப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  போலீசார் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.  

    மேலும் ஓடை பகுதியில் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர். அப்போது அங்கு முட்புதரில் 2 பைகளில் 9 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார்,  தப்பி ஓடிய புதுப்பட்டி கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்த புஷ்பராஜ், சின்னமணி, சரத்குமார் ஆகியோரை கைது செய்தனர்.   

    வெடிகுண்டுகள் வெடிக்கும் அபாயம் இருந்ததால் ஓடைப்பகுதியிலேயே குழி தோண்டி அதில் வெடிகுண்டுகளை போலீசார் புதைத்து வைத்தனர். கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்த சுபாஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக எதிர் தரப்பினரை தீர்த்துக்கட்ட வெடிகுண்டுகள் பதுக்கியது  தெரியவந்தது. 

    தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை கைது செய்தனர்.  மேலும் 4  பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

    இந்த நிலையில் பாதுகாப்பு கருதி கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை  செயலிழக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மதுரையில் உள்ள வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் இன்று வத்ராயிருப்பு வந்தனர்.  தொடர்ந்து அங்குள்ள அர்ச்சுனாபுரம் பெரிய ஓடை பகுதியில் புதைக்கப்பட்டிருந்த வெடி குண்டுகளை செயலிழக்க வைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

    இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பொதுமக்கள் யாரும் அங்கு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது.

    விருதுநகர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் 2 வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    விருதுநகர்


    விருதுநகர் அருகே உள்ள கல்குறிச்சியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 41), கட்டிட தொழிலாளி. இவரது மனைவியும் கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று கணவன், மனைவி வேலைக்கு சென்றுவிட வீட்டிலிருந்த மகனும் கதவைப்பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 5 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.7 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

    இது குறித்த புகாரின் பேரில் மல்லாங்கிணறு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அய்யம்பட்டி நாயுடு தெருவை சேர்ந்தவர் ராசாத்தி (38). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்த 1 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது.

    இதுகுறித்து ராசாத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதில் தன்னுடன் பணிபுரியும் ஈஸ்வரி வீட்டுக்கு வந்திருந்தார். எனவே பணம் நகை திருடு போனது தொடர்பாக அவர் மீது சந்தேகம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வெம்பக்கோட்டை ஆற்றுப்படுகையில் தொல்லியல் அகழாய்வு பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.
    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகிலுள்ள வெம்பக்கோட்டை ஆற்றுப்படுகையில் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளப் பட உள்ளது.

    தமிழ்நாட்டில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில் முதல்கட்ட அகழாய்வு நடைபெற உள்ள வெம்பக்கோட்டையானது விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இருந்து தெற்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் வைப்பாறு ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. 

    இது கண்டி, சேதுபதி, பாண்டி சேதுபதி ஆகிய குறுநில மன்னர்கள் ஆட்சி செய்த பகுதி ஆகும். அந்த காலத்தில் அமைக்கப்பட்ட 8 கோணத்தில் சந்தியா மண்டபம் மற்றும்  வற்றாத நாழிக்கிணறு 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் பழங்கால மண்டபங்கள் இன்றும் நினைவுச் சின்னங்களாக வைப்பாற்றின்  கரையில் அமைந்துள்ளன. 

    மேலும் அவ்வப்போது இந்தப்பகுதியில் முதுமக்கள் தாழி ஏராளமாக கண்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேட்டுக்காடு என்றும் உச்சிமேடு என்றும் அழைக்கப்படுகின்ற 25 ஏக்கர் பரப்பளவில் பரந்து கிடக்கின்ற தொல்லியல் மேட்டில் நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடை யாளங்களை வெளிப் படுத்துகிறது. 

    இந்த தொல்லியல் மேடு தற்போதைய நிலப்பரப்பில் இருந்து 2 மீட்டம் உயரம் கொண்டது. இங்கு இரும்புக் கால மட்கல ஓடுகள் மிகுதியாக சிதறிக்கிடக்கின்றன. இந்த மேட்டில் நுண்கற்கருவிகள், பல்வேறு வகையான மணிகள், அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள், காதணிகள், சுடுமண்ணால் ஆன வட்டுகள், இரும்புக் கசடுகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. 

    தற்போது மேற்கொள்ளப்படவுள்ள அகழாய்வின் நோக்கமானது காலவாரியாக தொடர்ந்து நிலவியல் உருவாக்கத்தின் பின்னனியில் அதிக எண்ணிக்கையிலான நுண் கற்கருவிகளை சேகரிப்பதாகும்.

    இதேபோன்று இன்னும் தமிழகத்தில் 6 இடங்களில் அகழாய்வு மேற்கொண்டு தமிழகத்தின் பண்டைய பாரம்பரியம் நாகரிகம் கலை நுணுக்கங்களை தொல்லியல் ஆய்வு மூலம் உலகிற்கு பறைசாற்ற இந்த அகழாய்வு பேருதவியாகவும் ஆதாரமாகவும் அமையும்.

    வெம்பக்கோட்டை வைப்பாறு ஆற்றுப்படுகையில் விரைவில் அகழாய்வுப்பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் முகாம் வருகிற 24-ந்தேதி நடக்கிறது.
    விருதுநகர்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2013 மார்ச் 31-ந் தேதி வரை பதிவு செய்த சாதாரண வரிசை விண்ணப்பதாரர்கள் மற்றும் 2013-14-ல் பதிவு செய்த விவசாயிகளுக்கு சுயநிதி திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் பணம் செலுத்த முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. 

    சிறப்பு திட்டமாக மேற்கண்ட ஆண்டுகளில் பதிவு செய்த விவசாயிகள் விரைந்து பயன்பெறும் வகையில் தயார் நிலை பதிவு செய்வது (பெயர் மாற்றம், சர்வே எண் மாற்றம், கிணறு போர்வெல் மாற்றம்) தொடர்பான விண்ணப்பங்களை உடனடியாக உரிய மாற்றம் செய்ய சிறப்பு முகாம் விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள மின்வாரிய வளாகத்துக்குள் அமைந்துள்ள விருதுநகர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் வருகிற 24-ந் தேதி காலை 10.30 மணி முதல் 2 மணி வரை நடைபெறுகிறது. இதில் விருதுநகர் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று விருதுநகர் மின் பகிர்மான செயற்பொறியாளர் (பொ) பாபு தெரிவித்துள்ளார். 

    அருப்புக்கோட்டையில் கோவில் விழாவில் பெண்ணிடம் 10 பவுன் தங்க செயின் பறிக்கப்பட்டது.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரத்தைச் சேர்ந்தவர் மீனாள் (வயது 77). கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் பிரசித்தி பெற்ற சென்னகேசவபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனை காண மீனாள் சென்றார்.

    கூட்ட நெரிசலை பொருட்படுத்தாமல் மீனாள் சாமி தரிசனம் செய்தார். அப்போது மர்ம நபர் நைசாக மீனாள் கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினார். 

    பின்னர் வீட்டுக்கு வந்த மீனாள் நகை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடியவரை தேடி வருகின்றனர்.

    விருதுநகரில் வீட்டில் கியாஸ் கசிந்து தீ பிடித்தது. இதில் பெண் ஒருவர் காயம் அடைந்தார்.
    விருதுநகர்

    விருதுநகர் பாண்டியன் நகர் முத்தால்நகர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. மாட்டு தீவன தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இரவு தனது மனைவி மீனாட்சி சங்கீதா(வயது35) மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் படுத்து தூங்கினார். 

    இன்றுகாலை மீனாட்சி சங்கீதா விழித்தெழுந்து சமையலறையில் சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டரின் டியூப் பகுதியில் குபீரென தீப்பிடித்தது. இதில் மீனாட்சி சங்கீதாவுக்கு காயம் ஏற்பட்டது. 

    இதனால் அவர் பயத்தில் அலறினார். இதையடுத்து அவரும், அவரது கணவர் மற்றும் குழந்தைகளும் வீட்டைவிட்டு வெளியே சென்றனர். தீவிபத்து குறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டுவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    இந்த தீவிபத்து குறித்து விருதுநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். சிலிண்டர் டியூப்பில் கியாஸ் கசிவு ஏற்பட்டதன் காரணமாக தீப்பிடித்துள்ளது. 

    தீப்பிடித்தது உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு வீட்டில் இருந்த அனைவரும் வெளியேறியதாலும், தீ உடனடியாக அணைக்கப்பட்டதாலும் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
    இரவில் வீடு புகுந்து தனியாக இருந்த மூதாட்டிக்கு, வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்து கொல்ல முயன்ற சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டியை சேர்ந்தவர் பாப்பா (வயது 64). இவரது கணவர் குருவையா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது 2 மகள்கள் மற்றும் மகன் திருமணமாகி இருக்கின்றனர். இதனால் பாப்பா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு பாப்பா தனது வீட்டில் தனியாக படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த மணிகண்டன் (32) என்ற வாலிபர் பாப்பாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பாப்பா கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து வாலிபர் மணிகண்டன் வீட்டில் கிடந்த அரிவாளை எடுத்து அதன் பின் பகுதியால் பாப்பாவை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்பு நடந்த சம்பவத்தை அக்கம் பக்கத்தினரிடம் பாப்பா தெரிவித்தார்.

    இதையடுத்து தாக்குதலில் காயம் அடைந்த பாப்பாவை அக்கம் பக்கத்தினர் வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வாலிபர் மணிகண்டன் தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தன்னிடம் தவறாக நடக்க முயன்றது மற்றும் தாக்கியது குறித்து கூமாபட்டி போலீஸ் நிலையத்தில் பாப்பா புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்பு வாலிபர் மணிகண்டனை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி, வீட்டினுள் அத்துமீறி நுழைதல், அபாயகரமான ஆயுதத்தால் தாக்குதல், பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இரவில் வீடு புகுந்து தனியாக இருந்த மூதாட்டிக்கு, வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்து கொல்ல முயன்ற சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×