search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அகழாய்வு பணிகள் நடைபெற உள்ள வெம்பக்கோட்டை மேட்டுக்காடு.
    X
    அகழாய்வு பணிகள் நடைபெற உள்ள வெம்பக்கோட்டை மேட்டுக்காடு.

    வெம்பக்கோட்டை ஆற்றுப்படுகையில் தொல்லியல் அகழாய்வு பணி விரைவில் தொடக்கம்

    வெம்பக்கோட்டை ஆற்றுப்படுகையில் தொல்லியல் அகழாய்வு பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.
    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகிலுள்ள வெம்பக்கோட்டை ஆற்றுப்படுகையில் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளப் பட உள்ளது.

    தமிழ்நாட்டில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில் முதல்கட்ட அகழாய்வு நடைபெற உள்ள வெம்பக்கோட்டையானது விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இருந்து தெற்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் வைப்பாறு ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. 

    இது கண்டி, சேதுபதி, பாண்டி சேதுபதி ஆகிய குறுநில மன்னர்கள் ஆட்சி செய்த பகுதி ஆகும். அந்த காலத்தில் அமைக்கப்பட்ட 8 கோணத்தில் சந்தியா மண்டபம் மற்றும்  வற்றாத நாழிக்கிணறு 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் பழங்கால மண்டபங்கள் இன்றும் நினைவுச் சின்னங்களாக வைப்பாற்றின்  கரையில் அமைந்துள்ளன. 

    மேலும் அவ்வப்போது இந்தப்பகுதியில் முதுமக்கள் தாழி ஏராளமாக கண்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேட்டுக்காடு என்றும் உச்சிமேடு என்றும் அழைக்கப்படுகின்ற 25 ஏக்கர் பரப்பளவில் பரந்து கிடக்கின்ற தொல்லியல் மேட்டில் நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடை யாளங்களை வெளிப் படுத்துகிறது. 

    இந்த தொல்லியல் மேடு தற்போதைய நிலப்பரப்பில் இருந்து 2 மீட்டம் உயரம் கொண்டது. இங்கு இரும்புக் கால மட்கல ஓடுகள் மிகுதியாக சிதறிக்கிடக்கின்றன. இந்த மேட்டில் நுண்கற்கருவிகள், பல்வேறு வகையான மணிகள், அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள், காதணிகள், சுடுமண்ணால் ஆன வட்டுகள், இரும்புக் கசடுகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. 

    தற்போது மேற்கொள்ளப்படவுள்ள அகழாய்வின் நோக்கமானது காலவாரியாக தொடர்ந்து நிலவியல் உருவாக்கத்தின் பின்னனியில் அதிக எண்ணிக்கையிலான நுண் கற்கருவிகளை சேகரிப்பதாகும்.

    இதேபோன்று இன்னும் தமிழகத்தில் 6 இடங்களில் அகழாய்வு மேற்கொண்டு தமிழகத்தின் பண்டைய பாரம்பரியம் நாகரிகம் கலை நுணுக்கங்களை தொல்லியல் ஆய்வு மூலம் உலகிற்கு பறைசாற்ற இந்த அகழாய்வு பேருதவியாகவும் ஆதாரமாகவும் அமையும்.

    வெம்பக்கோட்டை வைப்பாறு ஆற்றுப்படுகையில் விரைவில் அகழாய்வுப்பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×