search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க  செய்யப்பட்டன.
    X
    நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டன.

    நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க வைப்பு

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முட்புதரில் வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டன.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்ராயிருப்பு வனப்பகுதியில் வனத்துறையினர் சில நாட்களுக்கு முன்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர். வ.புதுப்பட்டியில் இருந்து கான்சாபுரம் செல்லும் சாலையில் அவர்கள் சென்றபோது அங்குள்ள அர்ச்சுனாபுரம் பெரிய ஓடை பகுதியில் 3 பேர் எதிரே வந்தனர்.

    அவர்கள் வனத்துறையினரை பார்த்ததும் தப்பி ஓடினர். இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர்,  வத்ராயிருப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  போலீசார் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.  

    மேலும் ஓடை பகுதியில் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர். அப்போது அங்கு முட்புதரில் 2 பைகளில் 9 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார்,  தப்பி ஓடிய புதுப்பட்டி கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்த புஷ்பராஜ், சின்னமணி, சரத்குமார் ஆகியோரை கைது செய்தனர்.   

    வெடிகுண்டுகள் வெடிக்கும் அபாயம் இருந்ததால் ஓடைப்பகுதியிலேயே குழி தோண்டி அதில் வெடிகுண்டுகளை போலீசார் புதைத்து வைத்தனர். கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்த சுபாஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக எதிர் தரப்பினரை தீர்த்துக்கட்ட வெடிகுண்டுகள் பதுக்கியது  தெரியவந்தது. 

    தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை கைது செய்தனர்.  மேலும் 4  பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

    இந்த நிலையில் பாதுகாப்பு கருதி கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை  செயலிழக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மதுரையில் உள்ள வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் இன்று வத்ராயிருப்பு வந்தனர்.  தொடர்ந்து அங்குள்ள அர்ச்சுனாபுரம் பெரிய ஓடை பகுதியில் புதைக்கப்பட்டிருந்த வெடி குண்டுகளை செயலிழக்க வைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

    இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பொதுமக்கள் யாரும் அங்கு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது.

    Next Story
    ×