என் மலர்
விருதுநகர்
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள இனாம் ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் ராமர் (வயது 35), டிராக்டர் டிரைவர். அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜேஸ்வரன் (32).
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமர் ரெட்டியபட்டி பகுதியில் டிராக்டர் ஓட்டிச் சென்றபோது ராஜேஸ்வரனின் ஆட்டோ மீது மோதி விட்டது. இதையடுத்து அவர்களுக்கு இடையே தகராறு நடந்துள்ளது. இது தொடர்பாக அவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்துள்ளது.
இந்தநிலையில் அதே ஊரைச்சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் கருப்பசாமி (27) என்பவருடனும், ராமருக்கு பிரச்சினை ஏற்பட்டது. கடந்த 6-ந் தேதி மாரியப்பனின் பணத்தை காணவில்லை. இதனால் கருப்பசாமி அக்கம் பக்கத்தினர் மீது சந்தேகம் அடைந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவர் மண்ணை எடுத்து எறிந்துள்ளார். அது அந்த வழியாக சென்ற ராமர் மீது விழுந்தது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது கருப்பசாமி கத்தியை காட்டி ராமரை மிரட்டியுள்ளார்.
இதையடுத்து அந்தப் பகுதியினர் இரு வரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ராமர் மற்றும் கருப்பசாமிக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டிருக்கிறது.
இந்தநிலையில் நேற்று இரவு விருதுநகர்-தாதம் பட்டி ரோட்டில் உள்ள தனியார் மதுக்கடை பாரில் ராமர் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ராமருடன் முன்விரோதம் இருந்து வந்த கருப்பசாமி மற்றும் ராஜேஸ்வரன் வந்தனர்.
அவர்கள் இருவரும் சேர்ந்து ராமருடன் தகராறு செய்தனர். அப்போது கருப்பசாமி கத்தியாலும், ராஜேஸ்வரன் மதுபாட்டிலை உடைத்தும் ராமரை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். கத்தி மற்றும் மது பாட்டிலால் குத்தப்பட்டதில் படுகாயமடைந்த ராமரை அங்கிருந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ராமர் பரிதாபமாக இறந்தார். ராமர் கொலை செய்யப்பட்டது குறித்து அவரது மனைவி ரம்யா சூலக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் ராமரை குத்திக்கொன்ற கருப்பசாமி மற்றும் ராஜேஸ்வரனை போலீசார் இன்று கைது செய்தனர். முன்விரோதத்தில் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் இனாம் ரெட்டியபட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜபாளையம்:
ராஜபாளையம் தென்றல் நகரைச் சேர்ந்த மாணவர் பெருமாவளவன். இவர் உக்ரைன் நாட்டில் உள்ள லுகான்ஸ் மருத்துவ பல்கலைகழகத்தில் 5-ம் ஆண்டு படித்து வந்தார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் ரஷிய எல்லை அருகே இவர் தங்கியிருந்தார்.
சாப்பாட்டிற்கே வழியில்லாத நிலையில் பெருமாவளவன் மிகுந்த கஷ்டப்பட்டார். பின்னர் நண்பர்கள் 6 பேர் சேர்ந்து தலா ரூ. 1½ லட்சம் பேசி 1500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹங்கேரி நாட்டு எல்லையில் உள்ள ஸோனி பகுதிக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து ரெயில் மூலம் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் வந்து சேர்ந்தார். பின்னர் விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்தார்.
கடந்த 27-ந் தேதி புறப்பட்ட பெருமாவளவன் 8-ந் தேதி ராஜபாளையம் வந்து சேர்ந்தார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்து அங்கிருந்து அரசு உதவியுடன் சென்னை வந்தார். தமிழக அரசு 6 பேரையும் காரில் அனுப்பி வைத்ததாக பெருமாவளவன் கூறினார்.
மேலும் பல மாணவர்கள் உக்ரைனில் சிக்கியிருப்பதாகவும், உணவுக்கே வழியில்லாத நிலையில் அபாயகரமான நிலையில் உள்ளதாகவும், அவர்களையும் விரைந்து அரசு முயற்சிகள் எடுத்து மீட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
ராஜபாளையம் வந்து சேர்ந்த மாணவரை, தந்தை பால்சாமி, தாயார் சவுந்தரலதா ஆகியோர் கண்ணீர் மல்க வரவேற்றனர். டெல்லியில் இருந்து மீட்க உதவி செய்த தமிழக அரசிற்கும், மத்திய அரசுக்கும் பெருமாவளவன் நன்றி தெரிவித்தார்.






