என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கொலை
வத்திராயிருப்பு அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிக்கொன்ற வாலிபர்
மணல் கடத்தல் குறித்து போலீசுக்கு தகவல் கூறியதாக நினைத்து தொழிலாளியை வாலிபர் வெட்டிக்கொன்ற சம்பவம் வத்திராயிருப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள அர்ச்சுனாபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது52). கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
அதே ஊரைச்சேர்ந்தவர் முருகன்(35). சம்பவத்தன்று இவர் கான்சாபுரம் செல்லும் சாலையில் உள்ள பெரிய ஓடையில் இருந்து மணல் அள்ளி சாக்குமூட்டையில் கட்டி தனது இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றுள்ளார். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார், இருசக்கர வாகனத்தில் சாக்குப்பையில் மணல் கடத்திச்சென்றதாக முருகன் மீது வழக்குப்பதிந்தனர்.
மேலும் அவரது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மணல் கொண்டு சென்ற தன்னைப் பற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தது மாரியப்பன் என்று முருகன் கருதினார். இதனால் மாரியப்பன் மீது அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை மாரியப்பன், அர்ச்சுனாபுரத்தில் உள்ள பழைய பள்ளிக்கூடம் அருகில் தனது மருமகன் சிங்கராஜ் (26)என்பவருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு முருகன் வந்துள்ளார்.
சாக்குப் பையில் மணல் அள்ளிக் கொண்டு சென்றது குறித்து போலீசுக்கு தகவல் கூறியது நீதான் என்று கூறி தகராறு செய்துள்ளார். ஆனால் போலீசிடம் தான் ஏதும் கூறவில்லை என்று மாரியப்பன் கூறியிருக்கிறார். ஆனால் அவர் கூறியதை ஏற்காமல், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாரியப்பனை சரமாரியாக வெட்டினார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மருமகன் சிங்கராஜ் தடுக்க முயன்றார். அப்போது அவருக்கு கொலைமிரட்டல் விடுத்து விட்டு முருகன் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். அரிவாளால் வெட்டப்பட்டதில் பலத்த காயமடைந்து கிடந்த மாரியப்பனை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு மாரியப்பன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டார். அங்கு அவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி மாரியப்பன் நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார்.
மாரியப்பன் கொலை செய்யப்பட்டது குறித்து வத்திராயிருப்பு போலீஸ் நிலையத்தில் சிங்கராஜ் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ் பெக்டர் பாலாஜி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மாரியப்பனின் வெட்டிக் கொன்ற முருகன் தலை மறைவாகிவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முருகனை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story






