என் மலர்
உள்ளூர் செய்திகள்

உக்ரைனில் இருந்து ராஜபாளையம் வந்த மாணவரை கண்ணீர் மல்க வரவேற்ற பெற்றோர்
ராஜபாளையம்:
ராஜபாளையம் தென்றல் நகரைச் சேர்ந்த மாணவர் பெருமாவளவன். இவர் உக்ரைன் நாட்டில் உள்ள லுகான்ஸ் மருத்துவ பல்கலைகழகத்தில் 5-ம் ஆண்டு படித்து வந்தார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் ரஷிய எல்லை அருகே இவர் தங்கியிருந்தார்.
சாப்பாட்டிற்கே வழியில்லாத நிலையில் பெருமாவளவன் மிகுந்த கஷ்டப்பட்டார். பின்னர் நண்பர்கள் 6 பேர் சேர்ந்து தலா ரூ. 1½ லட்சம் பேசி 1500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹங்கேரி நாட்டு எல்லையில் உள்ள ஸோனி பகுதிக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து ரெயில் மூலம் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் வந்து சேர்ந்தார். பின்னர் விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்தார்.
கடந்த 27-ந் தேதி புறப்பட்ட பெருமாவளவன் 8-ந் தேதி ராஜபாளையம் வந்து சேர்ந்தார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்து அங்கிருந்து அரசு உதவியுடன் சென்னை வந்தார். தமிழக அரசு 6 பேரையும் காரில் அனுப்பி வைத்ததாக பெருமாவளவன் கூறினார்.
மேலும் பல மாணவர்கள் உக்ரைனில் சிக்கியிருப்பதாகவும், உணவுக்கே வழியில்லாத நிலையில் அபாயகரமான நிலையில் உள்ளதாகவும், அவர்களையும் விரைந்து அரசு முயற்சிகள் எடுத்து மீட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
ராஜபாளையம் வந்து சேர்ந்த மாணவரை, தந்தை பால்சாமி, தாயார் சவுந்தரலதா ஆகியோர் கண்ணீர் மல்க வரவேற்றனர். டெல்லியில் இருந்து மீட்க உதவி செய்த தமிழக அரசிற்கும், மத்திய அரசுக்கும் பெருமாவளவன் நன்றி தெரிவித்தார்.






