என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • மேம்பாலத்தில் சென்றபேது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் பாலத்தில் இருந்து கீழே பாய்ந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்:

    விருதுநகர் ஆனைக் குழாய் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 28), எலக்ட்ரீசியன். இவரும் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் சிவக்குமார் (50) என்பவரும் நேற்று இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை பிரபாகரன் ஓட்டினார். சிவக்குமார் பின்னால் அமர்ந்திருந்தார்.

    அவர்கள் விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபேது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் பாலத்தில் இருந்து கீழே பாய்ந்தது.

    இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் பொதுமக்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாகரன், சிவக்குமார் ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

    இதுபற்றி சிவக்குமாரின் மனைவி ராணி விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தொழிலாளர்களுக்கான 41-வது விளையாட்டு விழா ஆலையின் வளாகத்தில் நடந்தது.
    • இந்த விழாவிற்கு மில்களின் மேனேஜிங் டைரக்டர்கள் என்.ஆர்.கே. ராம்குமார்ராஜா, நளினா ராமலட்சுமி தலைமை தாங்கினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ராம்கோ குரூப் டெக்ஸ்டைல்ஸ் டிவிசன் தி ராமராஜூ சர்ஜிகல் காட்டன் மில்ஸ், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ், சுதர்சனம் பேப்ரிக்ஸ் மற்றும் தரம் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய தொழிற்சாலைகளின் தொழிலாளர்களுக்கான 41-வது விளையாட்டு விழா ஆலையின் வளாகத்தில் நடந்தது.

    ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா வழிகாட்டுதலின்படி நடந்த இந்த விழாவிற்கு மில்களின் மேனேஜிங் டைரக்டர்கள் என்.ஆர்.கே. ராம்குமார்ராஜா, நளினா ராமலட்சுமி தலைமை தாங்கினர். முதன்மை நிதிநிலை அதிகாரி விஜய்கோபால் வரவேற்றார்.

    தொழிற்சங்க தலை வர்கள் மகாலிங்கம் (எச்.எம்.எஸ்),ரமேஷ் (ஏ.ஜ.டி.யு.சி),சுரேஷ் (ஐ.என்.டி.யு.சி) ஆகியோர் பேசினர். நிர்வாக இயக்குனர்கள் பேசுகையில், ராமராஜூ சர்ஜிகல் காட்டன்மில்ஸ் குழுமத்தில் தொழிலாளர்கள் முழுமை யான ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் பணிபுரிவதால் ஒரு முதிர்ந்த அறிவு திறனும், இளமையான உத்வேகமும் கலந்த நிறுவனமாக இந்த நிறுவனம் திகழ்கிறது என்றனர்.

    கடந்த 2 மாதங்களாக நடந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் பரிசுகளாக வழங்கப் பட்டது. கடந்த ஆண்டில் ஆலையில் சிறந்த முறையில் பணியாற்றிய தொழிலாளர்கள், 15 முதல் 35 ஆண்டுகள் வரை பணியாற்றி வரும் தொழிலாளர்கள், விடுப்பு எடுக்காமல் பணிபுரியும் தொழிலாளர்கள், வருடத்தில் 295 நாட்களுக்கு மேல் பணியாற்றிய தொழிலாளர்கள் என சுமார் 963 தொழிலாளர்களுக்கு ரொக்கப் பரிசுடன் சான்றிதழ்களை மேனேஜிங்டை ரக்டர்கள் ராம்குமார் ராஜா, நளினா ராமலட்சுமி, டைரக்டர் கஜபதி என்ற என்.ஆர்.கே. ஸ்ரீகண்டன் ராஜா ஆகியோர் வழங்கி பாராட்டினர்.

    ராம்கோ குரூப் பிரசிடெண்ட் என். மோகனரங்கன், சீனியர் வைஸ் பிரசிடெண்ட் ஹேமந்த்குமார், பொது மேலாளர் சுந்தரராஜ், மனிதவள மேம்பாட்டுத் துறை துணைப் பொது மேலாளர் ரங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் அருகே 108 ஆம்புலன்ஸ் மோதி பால் வியாபாரி பலியானார்.
    • ராஜபாளையம் ரெட்டியபட்டியை சேர்ந்த தர்மலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள நல்லமங்கலம் கணபதி நாடார் தெருவை சேர்ந்தவர் தர்மர் (வயது 51). பால் வியாபாரி. இவர் தனது ஊரில் இருந்து ராஜபாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    தென்காசி மெயின் ரோட்டில் தளவாய்புரம் விலக்கு பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் தர்மரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    இந்தநிலையில் அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் தர்மரின் அண்ணன் விஜயன் வந்தார். அவர் தர்மரை அங்கிருந்து மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், தர்மர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த விபத்து குறித்து சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்யப் பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார், விபத்துக்கு காரணமான 108 ஆம்புலன்சின் டிரைவரான ராஜபாளையம் ரெட்டிய பட்டியை சேர்ந்த தர்மலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வன விலங்குகளுக்காக 16 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்படும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • இதற்காகவே 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை விலங்குகள், பறவைகள், மரங்கள் கணக்கெடுக்கப்படுகின்றன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் சார்பில் வன உயிரின வாரவிழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    மேகமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் திலீப்குமார் முன்னிலை வகித்தார். கலெக்டர் மேகநாதரெட்டி பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் அவர் பேசியதாவது:-

    இந்தியாவில் வன விலங்குகளுக்காக 44 தேசிய பூங்கா, 247 வன விலங்கு சரணாலயங்கள் உள்ளன. வனப் பாதுகாப்புக்கு பல்வேறு சட்டங்கள் இருந்தாலும் காலநிலை மாற்றம், வேட்டையாடுதல், வறட்சி, பிளாஸ்டிக் பயன்பாடு, ஆக்கிரமிப்பு போன்றவற்றால் விலங்குகளுக்கு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

    தமிழ்நாட்டில் களக்காடு, முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் புலிகள் காப்பகம் உள்ளது. விருதுநகர், மதுரை, தேனி ஆகிய 3 மாவட்டங்களை இணைத்து 5-வது புலிகள் காப்பகமாக விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இது இந்தியாவில் 51-வது புலிகள் காப்பகமாக உள்ளது.

    விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுப்பதற்காக விருதுநகர் மாவட்டத்தில் 60 வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளனர். விலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்வதற்காக 16 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    ஒரு வனம் ஆரோக்கியமாக இருப்பது, அங்கு உயிரினங்களின் பெருக்கத்தை பொறுத்து உள்ளது. இதற்காகவே 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை விலங்குகள், பறவைகள், மரங்கள் கணக்கெடுக்கப்ப டுகின்றன.

    வனப் பரப்பை அதிகரிக்க பல்வேறு வகையான மரங்கள் நடப்பட்டு உள்ளது. காடுகள் இல்லையென்றால் மனித குலமே இல்லை என்று சொல்லலாம். காடுகள் என்பது அதில் வசிக்கும் விலங்குகளையும் சேர்த்துதான். சுற்றுச்சூழல் பாதுகாப்பு காடுகளை பாதுகாப்பதில் தான் இருக்கிறது. காடுகளையும் விலங்குகளையும் பாதுகாப்பதை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இயற்கையை பாதுகாத்தால் அது நம்மை வாழ வைக்கும். எனவே நாம் அனைவரும் நம்மால் இயன்ற வரை காடுகளையும், காடுகளில் வாழும் வன உயிரினங்களையும் பாதுகாப்பதற்கு உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) ஷாலினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக கணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இளம்பெண்ணின் தாய் கணேசமணியின் தந்தையிடம் ரூ. 80 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்

    விருதுநகர்

    சிவகாசி கவிதா நகரைச் சேர்ந்தவர் கணேசமணி, சமையல் தொழிலாளி. இவரும் கோவில்பட்டியைச் சேர்ந்த 16 வயது பெண்ணும் ஆன்லைன் கேம் மூலம் பழகி வந்துள்ளனர். அவர்களது பெற்றோர் 4 ஆண்டுகளுக்கு பின்பு திருமணம் செய்யலாம் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் இளம்பெண்ணின் தாய் கணேசமணியின் தந்தையிடம் ரூ. 80 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அதனை அவர் சொன்னபடி திருப்பி கொடுக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து கணேசமணி கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி 16 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர்கள் சிவகாசி பர்மா காலனி, கவிதா நகர் ஆகிய இடங்களில் வசித்து வந்துள்ளனர். இதன் பின்னர் கணேசமணியின் தந்தை 16 வயது இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியு ள்ளார். அவருடன் இருப்பவர்களை போட்டோ எடுத்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

    இளம்பெண்ணுடன் இருந்த ராணுவ வீரரையும் போட்டோ எடுத்து அவரிடம் பணம் கேட்டுள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் சிவகாசி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசமணி, சுடலை மற்றும் கணேசமணியின் தந்தை, இளம்பெண்ணின் தாய், ராணுவவீரர் உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தான் தேர்தல் விதிமுறை மீறல்களில் அதிகமாக ஈடுபட்டனர்.
    • தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது.

    ராஜபாளையம்:

    இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ராஜபாளையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராஜபாளையம் நீதிமன்றத்தில் தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் இங்கு வந்து நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளேன். தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தான் தேர்தல் விதிமுறை மீறல்களில் அதிகமாக ஈடுபட்டனர்.

    வள்ளலார் 200-ம் ஆண்டு அவதார விழாவை முன்னிட்டு தமிழக அரசு 50 வாரம் விழா நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. வள்ளலாரின் கொள்கை மதுவிலக்கு, புலால் மறுத்தல், ஜீவதாரண்ய கொள்கை, பசிப்பிணி போக்குவது உள்ளிட்டவையாகும். இதனை தமிழக அரசு முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

    கருணை இல்லாத ஆட்சி என, வள்ளலார் கூறியது போல் தற்போது மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு என மக்கள் நலனில் கருணை இல்லாமல் தமிழக அரசு கட்டணங்களை ஏற்றி வருவதை கைவிட வேண்டும் .

    மேலும் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து அவதூறு பேசியது குறித்து பா.ஜ.க. மற்றும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?

    கவிஞர் வைரமுத்து மீது தொரடப்பட்ட வழக்கில் ராஜபாளையம் நீதிமன்றம் அவர் கூறிய கருத்து சரி என தீர்ப்பளித்து வழக்குகளை தள்ளுபடி செய்துள்ளது. இது ஆண்டாள் பக்தர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சட்ட போராட்டம் நடத்தி அவதூறு பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க செய்வோம்.

    தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. திராவிட மாடல் என கூறிக்கொண்டு மக்கள் நலனுக்கான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.

    ராஜபாளையம் தேவதானம் பகுதியில் பெரியகுளம் கண்மாயில் தி.மு.க.வினர் தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில் நிலங்களில் கனிமவளங்களை கொள்ளையடிப்பதை கண்டு அமைதியாக இருக்க மாட்டோம். நிச்சயமாக அதற்கு எதிராக குரல் கொடுப்போம். தி.மு.க. ஆட்சி காலத்தில் கனிமங்கள் சுரண்டல் அதிகமாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் பாலியல் குற்ற நிகழ்வை மறைத்து வழக்குகள் மாற்றி பதியப்படுகின்றன.
    • போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது போலீசார் உரிய விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்காக ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் தனிப்பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வழக்கின் விபரங்களை கண்காணித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிப்பார்கள்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் 22 வயதுடைய வாலிபர் ஒருவர் கோவில்பட்டியை சேர்ந்த 17 வயது பெண்ணிடம் ஆன்லைன் மூலம் பழகி சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பின்னர் சிவகாசிக்கு அந்த பெண்ணை அழைத்து வந்து குடும்பம் நடத்தினார்.

    இந்த நிலையில் அந்த பெண்ணை கணவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தெரிகிறது. இதற்காக அவரது வீட்டிற்கு பலர் வந்து சென்றனர். அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் நபர்களை வீடியோக்கள் எடுத்து மிரட்டி அந்த தம்பதி பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று ராஜபா ளையத்தை சேர்ந்த ஒரு நபர் அந்த பெண் வீட்டிற்கு வந்துள்ளார். வழக்கம்போல் அந்த கும்பல் அவருக்கு தெரியாமல் ஆபாச வீடியோ எடுத்து அந்த நபரை மிரட்டி உள்ளனர். இதில் ஏற்பட்ட பிரச்சினையில் ராஜபாளையத்தை சேர்ந்த நபரை விபச்சார கும்பல் அரிவாளால் வெட்டியது.

    படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட அந்த பெண்ணை போலீசார் மீட்டு காப்பகத்திலும் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    ஆனால் உண்மை தன்மை குறித்து எப்.ஐ.ஆரில் பதிவு செய்யாமல் சாதாரண அடிதடி வழக்காக பதிவு செய்துள்ளனர். பாலியல் தொடர்பாக குற்ற நிகழ்வை மறைத்து போலீசார் சாதாரண வழக்காக பதிவு செய்வதால் இதுபோன்ற குற்றத்தை தடுக்க முடியாது.

    எனவே வழக்கின் உண்மை தன்மையை சரியாக பதிவுசெய்ய போலீஸ் நிலையங்களுக்கு உத்தரவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குழந்தைகளுடன் 2 பெண்கள் மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வாலிபரை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    ராஜபாளையம் அருகே தென்கரையை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் கற்பகம்(22). இவரும் தென்கரை நடுத்தெருவை சேர்ந்த சங்கிலிபாண்டி என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கற்பகம் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். நேற்று ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதாக தனது 2 குழந்தைகளுடன் வெளியில் சென்ற கற்பகம் மாயமாகிவிட்டார்.

    பெண் மாயம்

    இதுபற்றி கீழராஜகுலராமன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கற்பகம் மற்றும் அவரது குழந்தைகளை தேடி வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த ராஜாமணி என்பவரது மனைவி அனுசியாதேவி(24). இவருக்கு 3 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் காரியாபட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு தனது ஒரு குழந்தையுடன் சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது தாய் சாந்தி காரியாப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அனுசியாதேவி மற்றும் அவரது குழந்தையை தேடி வருகின்றனர்.

    வாலிபர் மாயம்

    ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் தீர்த்தங்கன்(24). கட்டிடத் தொழிலாளி. இவர் சென்னையில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதுபற்றி அவரது தந்தை சிவபிரகாஷ் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வாலிபரை தேடி வருகின்றனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் 17-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    • மாணவர்கள் சமூக பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும் என விழாவில் துணை வேந்தர் அறிவுறுத்தினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் 17-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி செயலாளர் ஆ.பா.செல்வராசன் விழாவை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜெ.குமார் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது கூறியதாவது:-

    என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்று கூறும் வகையில், இந்தியா அனைத்து வளங்களையும் பெற்ற நாடு.நாம் அனைவரும் இந்தியர் என்பதை நினைத்து பெருமை கொள்ள வேண்டும்.

    கொரோனா தொற்று பரவிய காலகட்டத்தில் தடுப்பூசிகளை தயாரித்து நம் நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல் பிற நாட்டு மக்களுக்கும் வழங்கி உதவிய நாடு இந்தியா ஆகும். தமிழ்நாட்டில் பல்வேறு வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. அவற்றை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    ஒவ்வொருவரும் தங்களுக்கான இலக்கினை நிர்ணயம் செய்து பயணிக்க வேண்டும். பிறருக்கு உதவி புரியும் அளவிற்கு தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும். வாழ்நாள் முழுவதும் கற்றலை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் தங்களின் சமூக பொறுப்பு உணர்ந்து தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.

    உங்களை நீங்கள் நம்பும் போது தான் உலகம் உங்களை நம்பும். எந்த செயலையும் நம்பிக்கையோடும், துணிச்சலோடும், நேர்மை யோடும் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் இளங்கலை மாணவர்கள் 957 பேரும், முதுகலை மாணவர்கள் 164 பேரும் என மொத்தம் 1,121 பேர் பட்டம் பெற்றனர். பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • விருதுநகர் அருகே சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இன்று பிரதோஷத்திற்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டது.

    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இன்று பிரதோஷத்திற்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டது.

    கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் அடிவாரத்திலேயே சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் பக்தர்கள் வீடு திரும்பினர்.

    • ராஜபாளையம் அருகே நியாயவிலை கடை கட்ட பூமி பூஜை நடந்தது.
    • இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள முத்துசாமியாபுரத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைய இருக்கும் நியாய விலை கடை கட்டித்திற்கான பூமி பூஜை நடந்தது.

    இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அதனைத்தொடர்ந்து பொதுநிதியிலிருந்து ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கணேசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் உள்ள சொக்கர் கோவிலில் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து ‘அ’ என்ற எழுத்தை அரிசியில் எழுத செய்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் உள்ள சொக்கர் கோவில் என்ற மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு சரஸ்வதி தேவி முன்பு அட்சராப்யாசம் என்ற ஏடு தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது. ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா பரம்பரை அறங்காவலராக பொறுப்பு வகிக்கும் இந்த கோவிலில் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து 'அ' என்ற எழுத்தை அரிசியில் எழுத செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகள் பெற்றோருடன் சரஸ்வதி தேவி முன்பு வழிபாடு செய்தனர். அவர்களுக்கு சொக்கர் கோவில் சார்பில் சிலேடு, குச்சி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் பரம்பரை அறங்காவலரும், ராம்கோ குரூப் சேர்மனுமான பி.ஆர். வெங்கட்ராமராஜா வழிகாட்டுதலின்படி சொக்கர் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    ×