என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அம்மன் பொட்டல் தெருவை சேர்ந்தவர் பாலுச்சாமி
    • ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் பாலுச்சாமியின் தந்தை முத்துராஜ் புகார் செய்தார்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அம்மன் பொட்டல் தெருவை சேர்ந்தவர் பாலுச்சாமி (வயது45). ஆட்டோ டிரைவர்.

    இவர் நேற்று முன்தினம் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் மனைவியிடம் மாடியில் உள்ள அறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். மாடி அறைக்கு சென்ற பாலுச்சாமி அறை கதவு திறக்காததால் காலால் உதைத்துள்ளார்.

    இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் பாலுச்சாமியின் தந்தை முத்துராஜ் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பலியான ஆட்டோ டிரைவர் பாலுச்சாமிக்கு பிரியா, பார்வதி என்ற மனைவிகள் மற்றும் 3 மகன்கள். 1 மகள் உள்ளனர்.

    • நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் 100 பேருக்கு இலவச ஓட்டுநர் பயிற்சி நடந்தது.
    • வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ பயிற்சியில் சேர்ந்த 100 பேருக்கும் பழகுநர் உரிமம் வழங்கினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் 100 பேருக்கு இலவச ஓட்டுநர், பழகுநர் உரிமம் வழங்கப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ தலைமை வகித்தார். போக்குவரத்து ஆய்வாளர் பூர்ணலதா முன்னிலை வகித்தார். மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 20 முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இலவச கார் ஓட்டுநர் பயிற்சி அளித்து உரிமம் வழங்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த 30 பெண்கள், 70 ஆண்கள் என 100 பேருக்கு ஓட்டுநர் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ பயிற்சியில் சேர்ந்த 100 பேருக்கும் பழகுநர் உரிமம் வழங்கினார். சக்தி சரவணா ஓட்டுநர் திறன் மேம்பாட்டு பயிற்சி மைய நிர்வாக இயக்குநர் முத்துவேல் நன்றி கூறினார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் 24 மணி நேர 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசு உறுதி செய்ய வேண்டும்.
    • தொழிலாளர்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

    விருதுநகர் 

    விருதுநகர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாவட்ட மாநாடு ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தது. மதுரை மண்டல கமிட்டி உறுப்பினர் சுகதேவ் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாள் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.

    மாநில தலைவர் வரதராஜ், பொதுச்செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம், கல்குறிச்சி, சத்திரப்பட்டி, விருது நகர், சிவகாசி தீயணைப்பு நிலையம், கல்லமநாயக்கன்பட்டி ஆகிய 6 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை இரவு நேரங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதில் பணியாற்றிய ஊழியர்கள் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்க ளுக்கு இடமாற்றம் செய்யப்ப ட்டுள்ளனர். இதனால் அவசர காலங்களில் அந்த பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    இதற்கு காரணமான விருதுநகர் மாவட்ட ஜி.வி.கே. - ஈ.எம்.ஆர்.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் சேவை இயங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பங்கேற்றனர்.

    • விருதுநகர் அருகே கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது28). இவர் சம்பவத்தன்று சிறுகுளம் கண்மாய் பகுதியில் சென்றார். அப்போது அங்கு வந்த பராசக்தி நகரை சேர்ந்த குருசங்கர் (எ) குண்டு காளி (37) என்பவர் அவரை மிரட்டி பணம் பறிக்க முயற்சித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் குண்டு காளியை கைது செய்தனர்.

    சிவகாசி மருதுபாண்டியர் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (21). இவர் பள்ளப்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்த போது லிங்கபுரம் காலனியை சேர்ந்த விசால் முருகன் (31), நேரு காலனி சோனு குமார் (31) ஆகியோர் வாளால் மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    சிவகாசி மீனம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (25). பட்டாசு தொழிலாளியான இவர் நாரணாபுரம் ரோட்டில் சென்ற போது சுப்பிரமணியபுரம் காலனியை சேர்ந்த கருப்பசாமி (36), முனீஸ்வரன் (21) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதிய ஆலய பிரதிஷ்டை விழா நடந்தது.
    • இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் சி.எஸ்.ஐ பரிசுத்த பவுல் ஆலயத்தின் 4-வது புதிய ஆலய பிரதிஷ்டை விழா நடைபெற்றது. விழாவிற்கு மதுரை பேராயர் ஜெய்சிங் பிரின்ஸ் பிரபாகரன் தலைமை தாங்கினார்.

    சபை ஆயர் அருள்தனராஜ் முன்னிலை வகித்தார். இதில் 34-வது அசனப் பண்டிகை விழாவும் அனுசரிக்கப்பட்டது. பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு ஸ்டீபன் சுந்தர்சிங் இசைக்குழுவினரின் நிகழ்ச்சி நடந்தது. பாடல் போட்டியில் முதல் பரிசு பெற்ற அத்திகுளம் சி.எஸ்.ஐ பரிசுத்த பவுல் பாடகர் குழுவினருக்கு கேடயங்களை வழங்கினர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • போதிய இடவசதி இல்லாததால் பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசை கட்டி நிற்கின்றன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் மையப்பகுதியில் 1985-ம் ஆண்டு 2 ஏக்கர் பரப்பளவில் 50 பஸ்கள் நிற்கும் வகையில் பஸ் நிலையம் கட்டப்பட்டது. தற்போது இங்கு மதுரை, சென்னை, திருச்சி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், நகர பஸ்கள் என தினசரி நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. போதிய இடவசதி இல்லாததால் பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசை கட்டி நிற்கின்றன.

    ஆண்டாள் கோவில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில், பிளவக்கல் அணை, செண்பக தோப்பு உள்ளிட்ட இடங்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்க ணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் பஸ் நிலையத்தில் பஸ் நுழைவு கட்டணம், கடைகளின் வாடகை என மாதம் பல லட்சம் வருவாய் வந்தாலும் கழிப்பறை, காத்திருப்பு அறை, வாகன காப்பகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

    நகரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் அமைந்துள்ள தால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம், திருக்கல்யாணம், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில் புரட்டாசி உற்சவம் உள்ளிட்ட விழா காலங்களில் போக்குவரத்து மாற்றம் செய்ய முடியாமல் விழாக்காலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    பஸ் நிலையம் அருகில் அரசு மருத்துவமனை, மார்க்கெட், கடை வீதிகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. மார்க்கெட், வணிக நிறுவனங்களுக்கு வரும் சரக்கு வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் நகர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் பஸ்கள் வரும் வழி ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டது.

    மதுரையில் இருந்து வரும் பஸ்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் சர்ச் நிறுத்தத்தில் இருந்து நேதாஜி சாலை வழியாக பஸ் நிலையம் வந்து, பின் திருவண்ணாமலை சாலை வழியாக ராமகிருஷ்ணா புரம் சென்று மீண்டும் சர்ச் வழியாக ராஜபாளையம் செல்கிறது. இதனால் நேதாஜி சாலை, திருவண்ணாமலை சாலை, ராமகிருஷ்ணாபுரம், பென்னிங்கடன் மார்க்கெட், அரசு மருத்துவமனை, சின்னக்கடை பஜார் உள்ளிட்ட முக்கிய சாலை கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் நகராட்சி குப்பை கிடங்கு அருகில் புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யாததால் பஸ் நிலையம் கட்டப்படவில்லை. தற்போது திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலைக்கான பூர்வாங்க பணிகள் முடிவடைந்து விரைவில் பணிகள் தொடங்க உள்ளன.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 4வழிச்சாலை அருகே போதிய அடிப்படை வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் டி.என்.பி.எஸ்.சி இலவச பயிற்சி வகுப்பு நடந்தது.
    • நண்பர்கள் ரோட்டரி சங்கம், டால்பின் அகடாமி, முகில் இன்ஸ்டியூஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தியது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் நண்பர்கள் ரோட்டரி சங்கம், டால்பின் அகடாமி, முகில் இன்ஸ்டியூஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தினர்.

    சங்கத்தின் தலைவர் அங்குராஜ் தொடங்கி வைத்து பேசினார். அகடாமி நிறுவனர் முருகதாசன் வரவேற்றார். டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வில் 10 ஆண்டுகளுக்கு மேலான பணி அனுபவம் பெற்றுள்ள விரிவுரையாளர்களான முகில், வீரையா, செல்வி ஆகியோர் பயிற்சி வகுப்பினை நடத்தினர்.

    சுமார் 45 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் சமுத்திரவேல், ரோட்டரி நிர்வாகிகள் முருகானந்தம், வினோத்குமார், ஸ்டார் ஹெல்த் வெங்கடேஷ், பத்திர எழுத்தர் ராஜாமணி, விக்ரம் முருகன், கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் செயலாளர் பால்சாமி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை திட்ட இயக்குனர்கள் கந்தசாமி, அமுதா ஹரிஹரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு திறமைகணை வெளிப்படுத்தினர்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் உயிர் மருத்துவ பொறியியல் துறையின் அசோசியேஷன் சார்பில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.

    கல்லூரி தாளாளர்் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரியின் டீன் மாரிச்சாமி வாழ்த்துரை வழங்கினார்.

    உயிர் மருத்துவ பொறியியல் துறையின் 4-ம் ஆண்டு மாணவி வாஷினி வரவேற்றார். உயிர் மருத்தவ துறையின் துறைத்தலைவர் மணிகண்டன் தொடக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக சென்னை ''நிப்ரோ மெடிக்கல் இந்தியா'' நிறுவனத்தின் மண்டல விற்பனை மேலாளர் நம்பி வேதாச்சலம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    3-ம் ஆண்டு மாணவர் சதீஷ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தின்ர் பேசுகையில், உயிர் மருத்துவ பொறியியல் துறை என்பது வளர்ந்து கொண்டிருக்கின்ற முக்கியத்துவம் வாய்ந்த துறையாகும்.

    உயிர் மருத்துவ பொறியாளர்கள் மருத்தவ சமூகத்தில் முக்கியத்துவம் பெற்ற நிலையில் இருக்கிறார்கள். இந்த துறையில் உள்ள வேலைவாய்ப்புகள், மற்றும் ஆராய்ச்சி பற்றிய கருத்துகளை எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சியில் பேப்பர் பிரசன்டேசன், மல்டிமீடியா பிரசன்டேசன், போஸ்டா் மேக்கிங் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகளும், தொழில்நுட்பம் சாராத போட்டிகளும் நடந்தன.

    இதில் பல்வேறு கல்லூரிகளில் இருத்து சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு திறமைகணை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயங்களும், சான்றி தழ்களும் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், துறையின் பேராசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர்கள் கிருத்திகா, காளீஸ்வரி, மாணவர் ஒருங்கிணைப்பாளர், 4-ம் ஆண்டு மாணவர் நெல்லையப்பராஜா மற்றும் துறை பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • வீடு திரும்பிய ரோஜா ராணி, தனது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 10 பவுன் நகை மாயமாகி உள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த மீனாட்சிபுரம் கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் சூரியபிரகாஷ். இவர் ஐதராபாத்தில் சிவில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரோஜாராணி மீனாட்சிபுரம் கல்லுப்பட்டியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அருகில் உள்ள 2 வீடுகளில் சூரியபிரகாஷின் சகோதரர்களின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று 3 குடும்பத்தினரும் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு மதுரை வாடிப்பட்டி பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்று விட்டனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீடு புகுந்து பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 10 பவுன் நகையை திருடிவிட்டுச் சென்று விட்டனர்.

    வீடு திரும்பிய ரோஜா ராணி, தனது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதில் வைக்கப்பட்டு இருந்த 10 பவுன் நகை மாயமாகி உள்ளது.

    இதனால் தனது வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து நகையை திருடியிருப்பதை அறிந்த அவர் இதுபற்றி தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாயை வரவழைத்து விசாரணை நடத்தினர். மேலும் இதில் தொடர்புடைய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ‘தென்னகத்து ஸ்ரீரங்கம்’ என்று மலைப்பட்டி பெருமாள் அழைக்கப்படுகிறார்.
    • நவகிரக தோஷம், தீராத பிரச்சினைகள், கடன் தொல்லைகள், திருமண தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும். தீராத நோய்கள் விலகும் என்பது ஐதீகமாகும்.

    அருப்புக்கோட்டை

    இன்றைய விஞ்ஞான உலகில் மக்கள் வாழ்க்கையில் மனநிம்மதி பெற, பிரச்சினைகள் தீர கோவில்களை நாடி வருகின்றனர். இவர்களின் கஷ்டங்களை தீர்த்து மன நிம்மதி தரும் வகையில் சிறப்பு கோவில்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று தான் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள மலைப்பட்டி ஸ்ரீபள்ளி கொண்ட பெருமாள் கோவில் ஆகும்.

    மலைப்பட்டியானது கற்கள், பாறைகள் இயற்கை கொஞ்சும் அழகிய கிராமம் ஆகும். இங்குள்ள பாறைகள் சிற்பங்கள், சிலைகள் செய்வதற்கு ஏற்றது.

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதிஜெகநாதர் கோவிலில் மூலவரான பள்ளி கொண்ட பெருமாள் சிலை இங்குள்ள பாறைகளால் செய்யப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட நாளில் சிலையை கொண்டு செல்ல முடியாமல் போகவே இங்கேயே ஒரு கோவில் அமைத்து சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறு உள்ளது.

    மூலவர் பெருமாள் 15 மீட்டர் நீள சிலையாக இருப்பதால், விஸ்வரூப பள்ளி கொண்ட பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். கருவறையில் மூலவர் உடை வாளுடன் சயனக் கோலத்தில் அமைந்திருப்பது சிறப்பு ஆகும்.

    இவரை வழிபட்டால் நவகிரக தோஷம், தீராத பிரச்சினைகள், கடன் தொல்லைகள், திருமண தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும். தீராத நோய்கள் விலகும் என்பது ஐதீகமாகும்.

    ஆண்டு முழுவதும் முக்கிய நிகழ்ச்சிகளான வருட பிறப்பு, ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, ஆஞ்சநேயர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, மார்கழி மற்றும் புரட்டாசி மாத நிகழ்ச்சிகள், கருட பஞ்சமி உட்பட பல விழாக்கள் இந்த கோவிலில் விமரிசையாக நடைபெறும்.

    கோவிலின் தல விருட்சம் மூலவரின் தலைக்கு அருகில் கருவறையின் பின்புறம் உள்ள ஒதிய மரம் ஆகும். திருமண தடை நீங்கவும், புத்திர பாக்கியம் பெறவும் இந்த விருட்சத்தை பெண்கள் பக்தியுடன் வழிபாடு செய்வார்கள். மலைமேல் அமைதியாய் அமைந்திருக்கும் பள்ளி கொண்ட பெருமாள் கோவிலை ''தென்னகத்து ஸ்ரீரங்கம்'' என்று இந்த பகுதி மக்கள் அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகளை ஏற்படுத்த மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் என்று தமிழக கவர்னர் பேசினார்.
    • பட்டங்களை பெற்ற மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    தாயில்பட்டி

    சிவகாசி பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரியின் 19-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலை அரங்கில் நடந்தது.

    பி.எஸ்.ஆர். கல்விக்குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். மணிப்பூரில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் பாஸ்கர், விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி, கல்லூரி முதல்வர் மாரிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

    சிறப்பு விருந்தினராக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 635 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். ஒவ்வொரு துறையிலும் தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பட்டமளிப்பு விழா என்பது மாணவர்களுடைய கற்றல் மற்றும் கடின உழைப்பின் வெளிப்பாடாக உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைக்கின்றனர். கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் நடைபெறும் ஒரு செயலாகும்.

    கற்றல், கற்பித்தலில் உள்ள புதிய பரிமான வளர்ச்சியால் மாணவர்கள் கடினமான பாடங்களை எளிய முறையில் கற்றுக்கொள்ள முடிகிறது. இதற்கு உதாரணமாக பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி என்.ஏ.ஏ.சி. ஏ-பிளஸ் தரச்சான்றிதழ் பெற்று மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குகிறது.

    நமது விஞ்ஞானிகள் கொரோனா நோய் தொற்று காலத்தில் புதிய வகை நோய் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து உலக அளவில் திறமைகளை வெளிப்படுத்தினர். அவர்கள் மக்களின் உயிர்களை காத்து நாட்டின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தனர்.

    இன்றைய இளைய தலைமுறையினர், மாணவர்கள் ஆச்சரியப்ப டத்தக்க வகையில் அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதுமைகளை கண்டுபிடித்து நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்றில் வளர்ச்சியை ஏற்படுத்தி நாட்டை வல்லரசாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

    அடுத்து வரும் 25 ஆண்டுகள் மிக முக்கியமானது. இது இந்தியாவை வல்லராசாக்கும். தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகளை ஏற்படுத்துபவராக விளங்க மாணவர்கள் விடா முயற்சியுடன் செயல்பட வேண்டும். எழுந்திரு, விழித்திரு வெற்றி அடையும் வரை முயற்சி செய் என்று விவேகானந்தர் கூறினார்.

    மாணவர்கள் தங்களது ஆரோக்கியத்தை ேபணிக்காக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே ஒழுக்கம், கடினஉழைப்பு, விடா முயற்சி, தன்னம்பிக்கை, ஆரோக்கியம் ஆகியவற்றை பற்றி எடுத்துக்கூற வேண்டும். இதன் மூலம் இளைய தலைமுறையினர் வளர்ந்து வரும்போது அவர்களது குடும்பம், சமுதாயம் மகிழ்ச்சிஅடைகிறது. இதனால் நாடும் வளர்ச்சி அடைகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பட்டங்களை பெற்ற மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ராஜேஸ்வரி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் பருத்தியில் அதிக மகசூலை கொடுக்கும் பூஸ்டர் பற்றிய விழிப்புணர்வு நடந்தது.
    • பருத்தி பிளஸ் என்னும் பயிர் ஊக்கி அறிமுகப்படுத்தப்பட்டது.

    பாலையம்பட்டி

    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 7-ந் தேதி உலக பருத்தி தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையம் மூலம் பருத்தியில் அதிக மகசூல் பெற பருத்தி பிளஸ் தெளிப்பு பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

    வேளாண்மை பல்கலைக்கழத்தின் பயிர் வினையியல் துறை மூலம் பருத்தி பிளஸ் என்னும் பயிர் ஊக்கி அறிமுகப்படுத்தப்பட்டது. இது பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் ஏக்கருக்கு 2.5 கிலோ தெளிக்க வேண்டும்.

    இது பூ உதிர்வை கட்டுப்படுத்தும். காய் பிடிப்பு திறனை அதிகரிக்கும். இதனை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அருப்புக்கோட்டை கோபாலபுரம் கிராமத்தில் பருத்தி பிளஸ் தெளிப்பு பற்றி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதில் பயிர் வினையியல் துறை உதவி பேராசிரியர் பாபு ராஜேந்திர பிரசாத் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தொழில் நுட்ப உரையாற்றினார். அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா பாபு ஒருங்கிணைத்தார்.

    ×