என் மலர்
விருதுநகர்
- விரைவு தபால், பதிவு தபால், பார்சல் சேவை இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- விரைவு தபால்களுக்கு 50 கிராம் வரை ரூ.41 கட்டணமாக பெறப்பட்டு மறுநாள் காலையில் தமிழகத்திற்குள் அந்தந்த முகவரியில் போய் சேரும் என்று தபால் துறையினர் தெரிவித்தனர்.
ராஜபாளையம்
தமிழகம் முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் மதியம் 3 மணி வரை சேவைகள் இருந்தன. பின்னர் தனியார் கூரியர் சேவை தொடங்கப்பட்டு அபரிதமான வளர்ச்சி கண்டது. இதன் காரணமாக மத்திய அரசின் அஞ்சலக சேவைகளில் சுணக்கம் ஏற்பட்டது.
மதியம் 3 மணி வரை பதிவு தபால், விரைவு தபால் மற்றும் பார்சல் சேவைகள் இருந்து வந்த நிலையில் தனியார் கூரியர் சேவைகளில் இரவு 8 மணி வரை பார்சல் பெறப்பட்டு, மறுநாள் காலை போய் சேரும் நிலை இருந்தது.
இதன் காரணமாக தபால் நிலையங்களில் கூட்டம் குறைந்து பொதுமக்கள் தனியார் கூரியர் சேவையை பயன்படுத்த தொடங்கினர். இதனால் அஞ்சலக சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய தலைமை தபால் நிலையங்களில் இரவு 8 மணி வரை பதிவு தபால், விரைவு தபால் மற்றும் பார்சல் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் துணை கோட்ட கண்காணிப்பாளர் கண்ணன் இந்த சேவையை தொடங்கி வைத்தார். தலைமை அஞ்சலக அதிகாரி சண்முகராஜ் வரவேற்றார். இதில் அஞ்சலக அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
விரைவு தபால்களுக்கு 50 கிராம் வரை ரூ.41 கட்டணமாக பெறப்பட்டு மறுநாள் காலையில் தமிழகத்திற்குள் அந்தந்த முகவரியில் போய் சேரும் என்று தபால் துறையினர் தெரிவித்தனர்.
- விருதுநகர் மாவட்டததில் 2 வீடுகளில் கொள்ளை நடந்தது.
- ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள வீரார்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். சம்பவத்தன்று பூட்டியிருந்த இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் செல்போன், ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து அப்பநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் காரியாபட்டி ராயல்கார்டனைச் சேர்ந்த ஜெயபாலன் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் தெற்குரத வீதியைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி (52). கணவரை இழந்த இவர் இட்லி மாவு வியாபாரம் செய்து தனது மகன் சுரேஷ், மகள் பிரியாவை வளர்த்தார். இருவருக்கும் திருமணமாகி கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். சுரேஷ் கடந்த சில மாதங்களாக சம்பள பணத்தை சரியாக கொடுக்கவில்லை. இதனை அவரது தாய் முருகேஸ்வரி கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் தாயை சரமாரியாக அடித்து உதைத்தார். தடுக்க வந்த சகோதரி பிரியாவையும் அவர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர்.
- ராஜபாளையத்தில் கனமழை பெய்தது. இதனால் அய்யனார் கோவில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
ராஜபாளையம்
ராஜபாளையம் நகருக்கு குடிநீர் ஆதாரமாக திகழும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்தது.
மழையின் காரணமாக அய்யனார் கோவில், நீராவி ஆறு, 6-வது மைல் நீர்த்தேக்க ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
நகர்மன்ற தலைவர் பவித்ராஷியாம்ராஜா ஆலோசனையின்படி அய்யனார் கோவில் ஆற்றில் இருந்து வரக்கூடிய தண்ணீர் 6-வது மைல் நீர்த்தேக்கத்தில் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இதன் காரணமாக இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதிதெரிவித்தார்.
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நகர் பகுதியில் தொடர்மழை பெய்ததால் நிலத்தடி நீரும் உயர்ந்து வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- கிணற்றில் தவறி விழுந்து முதியவர் இறந்தார்.
- தோப்புக்கு குளிக்க சென்ற கந்தசாமி இரவு வரை வீடு திரும்பவில்லை.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது80). இவருக்கு இப்பகுதியில் சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது. நேற்று முன்தினம் மாலை தோப்புக்கு குளிக்க சென்ற கந்தசாமி இரவு வரை வீடு திரும்பவில்லை. அவரது மகன் பொன்னுசாமி தோட்டத்திற்கு சென்று பார்த்த போது கிணற்றின் அருகே அவரது ஆடைகள் இருந்தது.
தந்தை குளிக்கும் போது கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என நினைத்து தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்தார். அதிக அளவு தண்ணீர் இருந்ததால் தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. நேற்று மதியம் முதியவரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பிரதமரின் காப்பீடு-ஓய்வூதிய திட்டத்தில் பொதுமக்கள் சேர்ந்து பயனடைய வேண்டும் மத்திய மந்திரி அறிவுறுத்தினார்.
- பாராட்டு சான்றிதழ்களை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் வழங்கினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவ லக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி மூலம் நிதி உள்ளடக்கம் தொடர்பாக மதிப்பாய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கரட் தலைமையில் நடைபெற்றது.
மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பினால் கடந்த 2018-ம் ஆண்டு நம் நாட்டின் பல்வேறு மாநிலங்க ளிலுள்ள மாவட்டங்களை ஆய்வு செய்து அதிலிருந்து 112 பின்தங்கிய மாவட்டங்கள் தேர்வு செய்து இம்மாவட்டங்களை முன்னேற்றும் விதமாக பாரத பிரதமரால் ஜனவரி-2018-ம் ஆண்டு முன்னேற விழையும் மாவட்ட திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 112 மாவட்டங்களில் தமிழ கத்தில் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது.
இந்த திட்டத்தை விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்து சிறப்பாக செயல்பட்ட 68 வங்கியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பாராட்டு சான்றிதழ்களை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நமது மாவட்டத்தில் பிரதம மந்திரி காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் பங்கு பெற்று பயனடைய வேண்டும். மேலும் பிரதம மந்திரி காப்பீடு மிகவும் முக்கியமான ஒன்று. அதனால் அனைவரும் இந்த காப்பீடு திட்டத்தில் இணைய வேண்டும். காப்பீடு செலுத்துவது அவரவர் குடும்பத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், திட்ட இயக்குநர் திலகவதி, சிவகாசி சார் ஆட்சியர் பிருதிவிராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தாயை கவனித்துக் கொள்ள முடியாத வேதனையில் மகனும், மகனின் நிலைமையை எண்ணி தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
- தாய்-மகன் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள கடம்பன்குளத்தைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 72). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சுப்புலட்சுமி மகன் கணேசன் (53). தச்சுத்தொழிலாளியான இவர் பாலவனத்தத்தில் மனைவி, மகனுடன் வசித்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் கணேசனுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தார். மேலும் வயதான தாய்க்கு பணிவிடை செய்ய முடியவில்லை என்ற வருத்ததிலும் கணேசன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று கடம்பன்குளத்தில் உள்ள தாயை சந்தித்து விட்டு வருவதாக கணேசன் வீட்டில் கூறிவிட்டுச் சென்றார். அங்கு தாயிடம் பேசிய கணேசன் தனது உடல்நல பாதிப்பு குறித்து கூறி கவலையடைந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவரது தாயார் சுப்புலட்சுமியும் தனது நிலைமை குறித்து கூறியுள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த 2 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி வீட்டில் இருந்த விஷத்தை தாயும் மகனும் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சூலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாய்-மகன் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயை கவனித்துக் கொள்ள முடியாத வேதனையில் மகனும், மகனின் நிலைமையை எண்ணி தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தகுதியான பயனாளிகளுக்கு வங்கிக்கடன் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- பொருளாதாரத்தில் இந்தியா சர்வதேச அளவில் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
விருதுநகரில் நடைபெற்ற முன்னோடி வங்கி மூலம் நிதி உள்ளடக்கம் தொடர்பான மதிப்பாய்வுக் கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் காரத் கலந்து கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி மற்றும் பலதுறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பிரதம மந்திரி காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டம் , கல்வி கடன் , பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் வங்கிகள் மூலமாக செயல்படுத்தப்படுவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் பிரதமர் ஜீவன் ஜோதி காப்பீடு திட்டம், பிரதமர் விபத்துக் காப்பீடு திட்டம் மற்றும் அடல் ஓய்வூதிய திட்டம் ஆகிய திட்டங்களை 111 கிராமங்களில் 68 வங்கிக் கிளைகளின் மூலம் அனைத்து தகுதி வாய்ந்த பயனாளிகளும் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மத்திய அரசுத் திட்டங்களை விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்துவதற்கு உறுதுணையாக செயல்பட்ட 68 வங்கியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பாராட்டு சான்றிதழ்களை அவர் வழங்கினார்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நிதித்துறை இணை மந்திரி, இந்தியாவில் விரைவில் டிஜிட்டல் கரன்சி திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார் என்றார். 75 வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு 75 டிஜிட்டல் வங்கிகளை பிரதமர் தொடங்கி வைத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மன் ஆகிய நாடுகளுக்கு அடுத்தப்படியாக பொருளாதாரத்தில் சர்வதேச அளவில் இந்தியா முன்னேறியுள்ளதாக கூறிய அவர், பிரதமரின் தற்சார்பு திட்டத்தினை ஊக்குவிக்கும் விதமாக தகுதியான பயனாளிகளுக்கு வங்கிக்கடன் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
- தார்சாலை அமைக்கும் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என்று தலைமை பொறியாளரிடம் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
- விரைவில் புதிய தார்ச்சாலை அமைத்து தருவதாக உறுதி அளித்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் நகரின் வளர்ச்சித்திட்டப் பணிகளுக்காக நேரு சிலை முதல் சொக்கர்கோவில் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தோண்டப்பட்டு திட்டப்ப ணிகள் நடந்தது.
தற்போது இந்த சாலையில் திட்டப்பணிகள் முடிவடைந்துள்ளதால் புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டி சென்னை கிண்டியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறையின் தலைமைப் பொறியாளர் பாலமுருகனை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. சந்தித்து மனு கொடுத்தார்.
அப்ேபாது தலைமைப் பொறியாளரிடம் எம்.எல்.ஏ. கூறுகையில், மேற்கண்ட சாலை மிகவும் பழுதடைந்து காணப்படு வதால் பொது மக்கள், வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர். ஆகவே நேரு சிலை முதல் சொக்கர்கோவில் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விரைந்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்.
மேலும் சாலையின் விரிவாக்கத்திற்காக சாலையின் உள்பக்கமாக உள்ள மின் கம்பங்களை நகராட்சி மூலம் சாலை யின் வெளிபக்கமாக மாற்றி யமைத்து–தருவதாக எம்.எல்.ஏ. கூறினார்.
அதற்கு தலைமை பொறியாளர் மத்திய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை என 2 துறை அதிகாரிகளிடம் கலந்துபேசி மதிப்பீடு தயார் செய்து டெல்லியில் உள்ள மத்திய நெடுஞ்சாலைத்துறையிடம் நிர்வாக அனுமதி பெற்று விரைவில் புதிய தார்ச்சாலை அமைத்து தருவதாக உறுதி அளித்தார்.
அதற்கு எம்.எல்.ஏ. மழைக்காலம் தொடங்க இருப்பதால் புதிய தார்ச்சாலை அமைக்கும் வரை சாலையில் உள்ள குண்டும் குழியையும் சீரமைக்கும் பணியை (பேட்ச் ஒர்க்) மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார். அதற்கு தலைமை பொறியாளர் கண்டிப்பாக சாலையை சீரமைத்து தருவதாக கூறினார்.
அப்போது தி.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணமுருகன் உடனிருந்தார்.
- லாரி மோதி விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலியானார்.
- பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டிய பட்டியை சேர்ந்தவர் சீனிவாச ராகவன் (வயது52). அரசு பஸ் டிரைவரான இவர் சம்பவத்தன்று விருதுநகரில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். ஆர்ப்பாட்டம் முடிந்த பின் சீனிவாச ராகவ ன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.
விருதுநகர்-சத்திர ரெட்டிய பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சீனிவாச ராகவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பாண்டியன் நகர் போலீசார் அங்கு வந்து அரசு பஸ் டிரைவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக அவரது மனைவி சித்ரா கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக செல்போன்கள் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
- செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் கைபேசி பெறுவதற்கு விண்ணப்பித்து பயனடையலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் 2022-23-ம் நிதியாண்டிற்கு கல்லூரி பயிலும், வேலைவாய்ப்பற்ற இளைஞர் மற்றும் சுயதொழில் புரியும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்று திறனாளிகளுக்கு பிரத்யே கமாக வடிவமைக்கப்பட்ட செல்போன்கள் வழங்கு வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
18 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 60 வயதிற்குட்பட்ட கல்லூரி பயிலும், வேலை வாய்ப்பற்ற இளைஞர் மற்றும் சுய தொழில் புரியும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் செல்போன்கள் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
கல்லூரி பயிலும், வேலைவாய்ப்பற்ற இளைஞர் மற்றும் சுய தொழில் புரியும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மட்டும் மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பணிச் சான்று (கல்லூரி பயில்பவராயின் படிப்புச் சான்று, வேலையில்லா பட்டதாரி இளைஞர் எனில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, சுய தொழில் புரிபவராயின் சுய தொழில் புரிவதற்கான சான்று), மார்பளவு புகைப்படம்-2 ஆகியவைகளுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதியுடைய பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் கைபேசி பெறுவதற்கு விண்ணப்பித்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கல்லூரி மாணவி, இளம்பெண் உள்பட 6 மாயமானார்கள்.
- வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகே உள்ள பெரிய புளியம்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் பாபுகண்ணன் (வயது 32). மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் சம்பவத்தன்று வீட்டிலிருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி அருகே உள்ள நல்லுக்குறிச்சி காலனியை சேர்ந்தவர் பாலு (40). இவர் திண்டுக்கல்லில் உள்ள தேங்காய் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு செல்வி (36) என்ற மனைவியும், திருமுருகன் (13) என்ற மகனும், அனிதா (10) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டில் இருந்த செல்வி தனது மகன், மகளுடன் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாலு வீரசோழன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை தேடி வருகின்றனர்.
கல்லூரி மாணவி
தேனி மாவட்டம் வாழை மரத்துப்பட்டியை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகள் ராஷ்மி(17). இவர் விருதுநகரில் உள்ள பெண்கள் கல்லூரியில் படித்து வந்தார்.
இதற்காக விடுதியில் தங்கியிருந்தா ராஷ்மி சம்பவத்தன்று திடீரென்று மாயமானார். இதுகுறித்து அவரது தாய் மல்லிகா கொடுத்த புகாரின்பேரில் பாண்டியன் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பி பட்டியை சேர்ந்த கந்தம்மாள். இவரது மகன் லட்சுமணன்(14). சம்பவத்தன்று இவர் திடீரென மாயமானார். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தீபாவளி பண்டிகையையொட்டி ராம்கோ குழும தொழிலாளர்களுக்கு ரூ.12.49 கோடி போனஸ் பட்டுவாடா செய்ய சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா உத்தரவு பிறப்பித்தார்.
- எஸ்.ஆர்.ஸ்ரீராம ராஜா முன்னிலையில் நடந்தது.
ராஜபாளையம்
ராஜபாளையம் ராம்கோ குரூப் நூற்பாலை மற்றும் துணி உற்பத்தி ஆலைகளில் 2021-22-ம் நிதி ஆண்டிற்கான போனஸ் பேச்சுவார்த்தை ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர். வெங்கட்ராமராஜா, இயக்குநர் பி.வி.அபிநவ் ராமசுப்பிரமணிய ராஜா, ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸின் நிர்வாக இயக்குநர் என்.ஆர்.கே. ராம்குமார் ராஜா, ஸ்ரீ விஷ்ணு சங்கர் மில்ஸின் நிர்வாக இயக்குநர் எஸ்.ஆர்.ஸ்ரீராம ராஜா முன்னிலையில் நடந்தது.
இதில் ராம்கோ குழுமத்தின் அனைத்து நூற்பாலைகளுக்கும், துணி உற்பத்தி ஆலைகளுக்கும் போனஸ் தொகையினை சேர்மன் அறிவித்தார். இதன்படி ராம்கோ குழுமத்தை சேர்ந்த நூற்பாலை மற்றும் துணி உற்பத்தி ஆலைகளில் பணி புரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு போனஸ் தொகை ரூ.12.49 கோடி பட்டுவாடா செய்ய சேர்மன் உத்தரவிட்டார்.
இந்த பேச்சுவார்த்தையில் ராம்கோ நூற்பாலை மற்றும் துணி உற்பத்தி பிரிவின் தலைவர் மோகனரங்கன், முதன்மை நிதி அதிகாரி ஞானகுருசாமி, துணை தலைவர் (மனிதவளம்) நாகராஜன், முதுநிலை துணை தலைவர் (பேப்ரிக்ஸ்) முருகேச பிள்ளை, சுதர்சனம் எஸ்பின்னிங் மில்ஸின் முதன்மை நிதி அதிகாரி விஜயகோபால், துணை பொது மேலாளர் (மனிதவளம்) ரங்கராஜ், மில்ஸ் தொழிற்சங்கங்களின் சார்பில் தேசிய தொழிலாளர் காங்கிரஸ் எச்.எம்.எஸ் பொது செயலாளர் என்.கண்ணன், மில் தொழிலாளர் சங்க ஏ.ஐ.டி.யு.சி. பொது செயலாளர் விஜயன், தேசிய பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் ஐ.என்.டி.யு.சி. தலைவர் ஆர்.கண்ணன் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ராம்கோ குரூப் நிறுவனம், வழக்கம்போல் இந்த ஆண்டும் சிற ப்பான போனஸ் தொகை யினை அறிவித்து, தொழிலாளர்களை ஊக்கப்படுத்தியதற்கு தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் நன்றி யையும், மகிழ்ச்சியையும் நிர்வாகத்திற்கு தெரிவித்தனர்.






