என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Southern Srirangam"

    • ‘தென்னகத்து ஸ்ரீரங்கம்’ என்று மலைப்பட்டி பெருமாள் அழைக்கப்படுகிறார்.
    • நவகிரக தோஷம், தீராத பிரச்சினைகள், கடன் தொல்லைகள், திருமண தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும். தீராத நோய்கள் விலகும் என்பது ஐதீகமாகும்.

    அருப்புக்கோட்டை

    இன்றைய விஞ்ஞான உலகில் மக்கள் வாழ்க்கையில் மனநிம்மதி பெற, பிரச்சினைகள் தீர கோவில்களை நாடி வருகின்றனர். இவர்களின் கஷ்டங்களை தீர்த்து மன நிம்மதி தரும் வகையில் சிறப்பு கோவில்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று தான் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள மலைப்பட்டி ஸ்ரீபள்ளி கொண்ட பெருமாள் கோவில் ஆகும்.

    மலைப்பட்டியானது கற்கள், பாறைகள் இயற்கை கொஞ்சும் அழகிய கிராமம் ஆகும். இங்குள்ள பாறைகள் சிற்பங்கள், சிலைகள் செய்வதற்கு ஏற்றது.

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதிஜெகநாதர் கோவிலில் மூலவரான பள்ளி கொண்ட பெருமாள் சிலை இங்குள்ள பாறைகளால் செய்யப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட நாளில் சிலையை கொண்டு செல்ல முடியாமல் போகவே இங்கேயே ஒரு கோவில் அமைத்து சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறு உள்ளது.

    மூலவர் பெருமாள் 15 மீட்டர் நீள சிலையாக இருப்பதால், விஸ்வரூப பள்ளி கொண்ட பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். கருவறையில் மூலவர் உடை வாளுடன் சயனக் கோலத்தில் அமைந்திருப்பது சிறப்பு ஆகும்.

    இவரை வழிபட்டால் நவகிரக தோஷம், தீராத பிரச்சினைகள், கடன் தொல்லைகள், திருமண தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும். தீராத நோய்கள் விலகும் என்பது ஐதீகமாகும்.

    ஆண்டு முழுவதும் முக்கிய நிகழ்ச்சிகளான வருட பிறப்பு, ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, ஆஞ்சநேயர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, மார்கழி மற்றும் புரட்டாசி மாத நிகழ்ச்சிகள், கருட பஞ்சமி உட்பட பல விழாக்கள் இந்த கோவிலில் விமரிசையாக நடைபெறும்.

    கோவிலின் தல விருட்சம் மூலவரின் தலைக்கு அருகில் கருவறையின் பின்புறம் உள்ள ஒதிய மரம் ஆகும். திருமண தடை நீங்கவும், புத்திர பாக்கியம் பெறவும் இந்த விருட்சத்தை பெண்கள் பக்தியுடன் வழிபாடு செய்வார்கள். மலைமேல் அமைதியாய் அமைந்திருக்கும் பள்ளி கொண்ட பெருமாள் கோவிலை ''தென்னகத்து ஸ்ரீரங்கம்'' என்று இந்த பகுதி மக்கள் அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×