என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மக்கள் மீது கருணை இல்லாத அரசாக தி.மு.க. செயல்பட்டு வருகிறது- அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு
    X

    மக்கள் மீது கருணை இல்லாத அரசாக தி.மு.க. செயல்பட்டு வருகிறது- அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு

    • தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தான் தேர்தல் விதிமுறை மீறல்களில் அதிகமாக ஈடுபட்டனர்.
    • தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது.

    ராஜபாளையம்:

    இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ராஜபாளையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராஜபாளையம் நீதிமன்றத்தில் தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் இங்கு வந்து நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளேன். தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தான் தேர்தல் விதிமுறை மீறல்களில் அதிகமாக ஈடுபட்டனர்.

    வள்ளலார் 200-ம் ஆண்டு அவதார விழாவை முன்னிட்டு தமிழக அரசு 50 வாரம் விழா நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. வள்ளலாரின் கொள்கை மதுவிலக்கு, புலால் மறுத்தல், ஜீவதாரண்ய கொள்கை, பசிப்பிணி போக்குவது உள்ளிட்டவையாகும். இதனை தமிழக அரசு முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

    கருணை இல்லாத ஆட்சி என, வள்ளலார் கூறியது போல் தற்போது மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு என மக்கள் நலனில் கருணை இல்லாமல் தமிழக அரசு கட்டணங்களை ஏற்றி வருவதை கைவிட வேண்டும் .

    மேலும் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து அவதூறு பேசியது குறித்து பா.ஜ.க. மற்றும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?

    கவிஞர் வைரமுத்து மீது தொரடப்பட்ட வழக்கில் ராஜபாளையம் நீதிமன்றம் அவர் கூறிய கருத்து சரி என தீர்ப்பளித்து வழக்குகளை தள்ளுபடி செய்துள்ளது. இது ஆண்டாள் பக்தர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சட்ட போராட்டம் நடத்தி அவதூறு பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க செய்வோம்.

    தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. திராவிட மாடல் என கூறிக்கொண்டு மக்கள் நலனுக்கான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.

    ராஜபாளையம் தேவதானம் பகுதியில் பெரியகுளம் கண்மாயில் தி.மு.க.வினர் தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில் நிலங்களில் கனிமவளங்களை கொள்ளையடிப்பதை கண்டு அமைதியாக இருக்க மாட்டோம். நிச்சயமாக அதற்கு எதிராக குரல் கொடுப்போம். தி.மு.க. ஆட்சி காலத்தில் கனிமங்கள் சுரண்டல் அதிகமாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×