என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • வெம்பக்கோட்டையில் விரைவில் தொடங்க உள்ள 2-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கப்பட உள்ளது.
    • அழகிய கலை நயம் மிக்க கண்கவர் குவளை உள்ளிட்ட 3,254 பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள வெம்பக்கோட்டை வைப்பற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த ஆண்டு முதலாம் கட்ட அகழாய்வு நடைபெற்றது.

    அகழாய்வில் சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள், யானை தந்தம் மூலம் செய்யப்பட்ட அணிகலன்கள் மற்றும் பதக்கம், சுடுமண்ணாலான தொங்கட்டான், பகடைக் காய், அழகிய வேலைப்பாடு களுடன் கூடிய சுடு மண் அகல் விளக்கு, அழகிய கலை நயம் மிக்க கண்கவர் குவளை உள்ளிட்ட 3,254 பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்நிலையில் 2-ம் கட்ட அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மீண்டும் 2-ம் கட்ட அகழாய்வு தொடங்க உள்ளதாக தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

    முதல் கட்ட அகழாய்வின் முடிவில் சங்கு வளையல்கள் இங்கு தயரிக்கப்பட்டதற்கான ஆதாரங்களும், அவைகள் வெளி நாடுகளில் வணிகம் செய்ததற்கான சான்றாக பல்வேறு தொன்மையான பொருட்கள் கண்டறியப் பட்டுள்ள நிலையில் அதன் தொடர்ச்சியை 2ம் கட்ட அகழாய்வில் அறிய முடியும் என தொல்லியல் துறையினர் நம்பிக்கை தெரி வித்துள்ளனர். இதன் மூலம் தமிழர்கள் வெளி நாடுகளுடன் கொண்டுள்ள வணிக தொடர்பை அறிய முடியும்.

    • காளீஸ்வரி கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
    • கண்புரை அறுவை சிகிச்சைக்கான நோயாளிகளை அடையாளம் காணுதல் போன்ற சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி (தன்னாட்சி), விரிவாக்க நடவடிக்கைகள், என்எஸ்எஸ் பிரிவுகள் (எண். 192 & 209), உன்னத் பாரத் அபியான் திட்டம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை, ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தியது. கல்லூரி முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் முத்துலட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் கண் சோர்வு. நீண்ட பார்வை, குறுகிய பார்வை, கண் விழித்திரை நோய்கள், குழந்தைகளுக்கான கண் பராமரிப்பு மற்றும் கண்புரை அறுவை சிகிச்சைக்கான நோயாளிகளை அடையாளம் காணுதல் போன்ற சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 183 பேர் பயனடைந்தனர். என்.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் என்.சி.சி. கேடட்கள் தன்னார்வ தொண்டு செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை விரிவாக்கம் மற்றும் உன்னத பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் பிரிவு எண்.209 ராஜீவ்காந்தி, பிரிவு எண். 192 மாரீசுவரன் செய்திருந்தனர்.

    • இளம்பெண்-மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்

    விருதுநகர்

    விருதுநகர் சின்னவாடியூரை சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மகள் சவுந்தரலட்சுமி(23). சம்பவத்தன்று ஆடு மேய்ச்சல் தொடர்பாக மகளை பெற்றோர் கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சவுந்தரலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கினார். உயிருக்கு போராடிய அவரை குடும்பத்தினர் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சவுந்தரலட்சுமி இறந்தார். வச்சகாரப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருச்சுழி அருகே உள்ள செங்மடை கிராமத்தை சேர்ந்தவர் அழகம்மாள்(72). இவரது மகன் ஜெயபாண்டி வௌிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தாயும், மகனும் செல்போனில் பேசியபோது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அழகம்மாள் விஷம் குடித்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மகள் நாகஜோதி கொடுத்த புகாரின்பேரில் வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏலக்காய் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
    • மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் 15-க்கும் மேற்பட்ட ஏலக்காய் தோட்டங்கள் உள்ளன. சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த தோட்டங்கள் தேவியாறு, காவு, நகரை யாறு, பச்சையாறு குளிராட்டி, சேத்தூர், பூலாமலை, கோட்டமலை உள்பட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளன.

    இந்த தோட்டங்களில் பிரதானமாக ஏலக்காய் பயிரிடப்பட்டு வருகிறது. இதுதவிர காப்பி, மிளகு, கிராம்பு போன்றவைகளும் பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த தோட்டங்கள் மிகவும் அதிகமான ஏலக்காயை உற்பத்தி செய்து விருதுநகர் உள்பட பல்வேறு சந்தைகளுக்கு அனுப்பி வைத்து வந்தனர்.

    ஏலக்காய் தோட்டங்களில் நூற்றுக்கணக்கான தொழி லாளர்கள் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தனர். ராஜபாளையத்தை தலைமை இடமாக கொண்டு ஏலக்காய் வாரியம் செயல்பட்டு வந்தது. பின்னர் அது ஸ்பைசஸ் போர்டு என்று மாற்றப்பட்டது. ஏலக்காய் விவசாயிகளுக்கு தொழில் நுட்ப ஆலோசனைகள், மானிய விலையில் உரம், பூச்சி மருந்துகள் மற்றும் உபகரணங்கள் வழங்கி சிறப்பாக செயல்பட்டு வந்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையை முதலில் சாம்பல் நிற அணில் சரணாலயமாக மாற்றி ஏலக்காய் தோட்டத்திற்குள் தொழிலாளர்கள் மற்றும் யாரும் உள்ளே நுழையாதபடி வனத்துறையினர் கெடுபிடி செய்து வந்தனர். அதன் பின்னர் தற்போது மேகமலை புலிகள் சரணாலயமாக மாற்றப்பட்டு யாருமே உள்ளே நுழைய முடியாத அளவிற்கு வனத்துறையினர் கடுமையாக சட்ட திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஏலத் தோட்டத்திற்குள் உரிமையாளர்கள் சென்று பார்க்கவோ தொழிலாளர்களை வைத்து வேலை செய்யவோ இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இது தவிர ஏலக்காய் தோட்டத்திற்குள் முன்பு பாதுகாப்புடன் செல்வதற்கு இருந்து வந்த நிலை மாறி தற்போது 2பேர் அல்லது 3 பேர் மட்டும் செல்ல அனுமதி கிடைத்து வருவதால் வழியில் கரடி, யானைகள் மற்றும் பாம்பு குறுக்கிடுவதால் உள்ளே செல்ல மக்கள் அஞ்சுகிறார்கள். மேலும் மிகவும் கடினமான சூழலில் 7 முதல் 8 கி.மீட்டர் வரை மலை மீது ஏறி சென்று விவசாய பணிகளை செய்வதற்கு வேலையாட்கள் கிடைப்பதில்லை.

    ஏலக்காய் தோட்டங்களில் விளையும் பொருட்களை கீழே கொண்டு வருவதற்கு சுமந்து வருவதை தவிர வேறு எந்த வழியும் இல்லை. இதன் காரணமாக ஏல தோட்டங்கள் மிகவும் நலிவடைந்து காணப்ப டுகின்றன. புதர் மண்டி கிடக்கும் அவலம் நிலவுகிறது. களை எடுத்தல், பூச்சி மருந்து அடித்தல் போன்ற பணிகளை செய்யஆட்கள் கிடைக்காத நிலை தொடர்கிறது.

    எல்லாவற்றிற்கும் மேலாக யானை கூட்டங்கள் ஏலக்காய் தோட்டத்திற்குள் புகுந்து ஏலச் செடிகளை நாசம் செய்தும், அங்குள்ள இதர குடியிருப்பு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள அரிசி போன்ற உணவுப் பொருட்களை நாசம் செய்தும் வருவதால் தொழிலாளர்கள் யாரும் அங்கு தங்குவதற்கு முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்பைசஸ் போர்டு இங்கிருந்து மாற்றப்பட்டு போடி கொண்டு செல்லப்பட்டது.

    இங்குள்ள ஏலத்தோட்ட விவசாயிகள் ஆலோசனை பெறுவதற்கு நேரடியாக பார்வையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கவும் இயலாத நிலை தற்போது உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள விவசாயிகளின் ஏலத் ேதாட்ட விவசாயத்தை பாதுகாக்கவும், அதை மேம்படுத்த உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று ஏலத்தோட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அகில இந்திய செயல்திட்டப் போட்டியில் பி.எஸ்.ஆர். கல்லூரி மாணவிகள் சாதனை படைத்துள்ளது.
    • இந்த செயல்திட்டத்தில் மாணவர்களுக்கு உதவி செய்த பேராசிரியர்கள் கருப்பசாமி, கார்த்திகேயன், சங்கர் கணேஷ் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    சிவகாசி

    ஜார்கண்ட் மாநிலம், தன்பாத்தில் உள்ள ஐ.ஐ.டி.யில், அடல் இன்னோவேசன் சென்டர் சார்பில் அகில இந்திய அளவில், கல்லூரி மாணவர்களுக்கான செயல் திட்டப் போட்டி நடைபெற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இதில் தங்களின் படைப்புகளை சமர்ப்பித்தனர். இவர்களில் 30 குழுக்கள் தேர்வு தேர்வு செய்யப்பட்டு 3 சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டது. இறுதிச் சுற்றில் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி இரண்டாமாண்டு மாணவிகள் சந்தியா, மெர்லின் எஸ்தர், நித்யஸ்ரீ மற்றும் பவித்ரா குழுவினர் 3-ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகளை எப்படி பிரித்தெடுப்பது என்பது விளக்கும் செயல்திட்டத்தை இவர்கள் சமர்ப்பித்திருந்தனர். வெற்றிபெற்ற மாணவிகளை கல்லூரி தாளாளர் சோலைசாமி, இயக்குநர் விக்னேஷ்வரி, முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிச்சாமி, எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் துறை தலைவர் வளர்மதி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர். இந்த செயல்திட்டத்தில் மாணவர்களுக்கு உதவி செய்த பேராசிரியர்கள் கருப்பசாமி, கார்த்திகேயன், சங்கர் கணேஷ் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    • அருப்புக்கோட்டை யூனியனில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு செய்தனர்.
    • இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட் ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி மற்றும் பலர் பங்கேற்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர் ஆனந்த்குமார், கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அதன்படி கூரைக்குண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை பார்வையிட்டு ஆசிரியர்களிடம் மாண வர்களின் வருகை பதிவு, கல்வி கற்பிக்கும் முறை குறித்து கேட்டறிந்ததுடன் கழிவறைகளை பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். கழிவறையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

    பின்னர், குல்லூர் சந்தையில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் மானிய விலையில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் கவுசிகாநதி உழவர் உற்பத்தியாளர் நிறு வனத்தின் ஒருங்கிணைந்த முதல்நிலை சுத்திகரிப்பு மற்றும் மதிப்பு கூட்டுதல் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய உணவு வகைகள் தயாரிக்கும் முறைகள், தரம், சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர்.

    குல்லூர்சந்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மருந்துகள், அங்கு வழங்கப்படும் சிகிச்சை, மருத்துவர்களின் வருகை குறித்தும், நாய்க்கடி மூலம் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    குல்லூர்சந்தையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு ரூ.340 லட்சம் மதிப்பில் 68 தொகுப்பு வீடுகளும், ரூ.11.30 லட்சம் மதிப்பில் 2 தனி வீடுகளும் என மொத்தம் ரூ.3.51 கோடி மதிப்பில் 70 புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவல, கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட் ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் நெசவு தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    • பால் வியாபாரி படுகாயம் அடைந்தார்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள புளியம்பட்டி காலனியை சேர்ந்தவர் சந்திரகுமார் (வயது 35). நெசவு தொழிலாளியான இவர் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.

    நெசவாளர் காலனி அருகே உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் சந்திரகுமார் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பால் வியாபாரி அருள் பாண்டி என்பவரின் மோட்டார் சைக்கிள் மீது சந்திரகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    தலையின் பின்புறம் பலத்த காயமடைந்த சந்திகுமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்தில் படுகாயம் அடைந்த அருண்பாண்டியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அருப்புக் கோட்டை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சந்திர குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் திரண்டனர்.
    • பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சாத்தார்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    தை மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் அம்மனுக்கு பால், பன்னீர், திருமஞ்சனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் போன்ற 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடனாக தீச்சட்டி, அங்கப்பிரதட்சணம், பால்குடம், ஆயிரம் கண் பானை, கரும்பு தொட்டி, மாவிளக்கு எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தை கடைசி வெள்ளி யை முன்னிட்டு தென்காசி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் பாதயாத்திரையாக அதிக அளவிலான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். சங்கரன்கோவில், திருவேங்கடம், தூத்துக்குடி, விளாத்தி குளம், கோவில் பட்டி உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து அதிக அளவிலான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர். இதில் பெண்கள் அதிக அளவில் சங்கரன்கோவில், திருவேட்டநல்லூர், சுரண்டை ஆகிய இடங்க ளில் இருந்து அம்மன் பாடல்களை பாடியவாறு பாதயாத்திரையாக வந்து இருக்கன்குடி மாரியம்மனை தரிசனம் செய்தனர்.

    இதையொட்டி பக்தர்களுக்கு கழிப்பறை வசதி, குடிநீர் தொட்டி, மருத்துவ வசதி, ஆகியவை கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.
    • மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை விருதுநகர் கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    விருதுநகர்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு 2-ம் கட்டமாக ஊக்கத்தொகை வழங்கும் புதுமைப்பெண் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி உயர்கல்வி உறுதி திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது 993 கல்லூரி மாணவிகளுக்கு தலா ரூ.1000 ஊக்கத்தொகையுடன், வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம், நிதிக்கல்வி புத்தகம் அடங்கிய "புதுமைப்பெண்" பெட்டகப்பை மற்றும் வங்கி ஏ.டி.எம்.களை வழங்கினார்.

    கலெக்டர் ஜெயசீலன் பேசுகையில், இந்தியா விலேயே தமிழகத்தில் தான் உயர்கல்விக்கு செல்லும் பெண்களின் மொத்த சேர்க்கை விகிதம் 51 சதவீதமாக உள்ளது. உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் பெண்க ளுக்கான தொழில் வாய்ப்பு களை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல், அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்தல் ஆகி யவை நோக்கமாகும் என்றார். இதில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 6 பேர் மாயமானார்கள்.
    • இந்த சம்பவங்கள் குறித்து தளவாய்புரம், ஆமத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    ராஜபாளையம் சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் முப்பிடாதி. இவரது மகள் சமுத்திரகனி. சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிர்த்தான் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகள் ராதிகா. கல்லூரி மாணவியான இவர், அதே பகுதியை சேர்ந்த காதலன் கனி என்பவருடன் மாயமாகி விட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள வெள்ளக் கோட்டையை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகன் பாரதி (38). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் வீட்டில் இருந்து மாயமானார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் பரங்கிரி நாதபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(47). பிளாஸ்டிக் கடை நடத்தி வரும் இவர் சம்பவத்தன்று மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவரது மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் காந்திநகரை சேர்ந்தவர் மாரீஸ்வரி. இவரது கணவர் கருப்பையா. குடும்ப பிரச்சினை காரணமாக மாரீஸ்வரி தாய் வீட்டில் வசித்து வருகிறார். திருப்பூரில் வேலை பார்த்து வரும் கருப்பையா சம்பவத்தன்று விருதுநகருக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்தார். பின்னர் ஊருக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற கருப்பையா மாயமானார். பாண்டியன்நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள கோவில்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் (52). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் சம்பவத்தன்று ஊர் திரும்பி னார். ஆடு வியாபாரம் செய்து வந்த இவர் திடீரென மாயமானார். ஆமத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கல்குவாரியில் தவறி விழுந்து தொழிலாளி இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புதூரில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது.

    இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெடி வைத்து கல் உடைக்கப்பட்டது. குவிந்திருந்த கல் குவியலை அகற்றும் பணி இன்று காலை நடந்தது.

    இதில் ராஜபாளையம் அருகே உள்ள இளந்திரம்கொண்டான் கிராமத்தை சேர்ந்த மாரிக்கனி(வயது50), தென்காசி மாவட்டம் வலசையை சேர்ந்த முத்துமாணிக்கம்(45), சாமிராஜா(40) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

    கற்குவியலை அகற்றி கொண்டிருந்தபோது திடீரென கற்கள் சரிந்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 பேரும் நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தனர். இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். தலையில் பலத்த காயமடைந்த மாரிக்கனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    உயிருக்கு போராடி கொண்டிருந்த முத்து மாணிக்கம், சாமிராஜா ஆகிய 2 பேரை அப்பகுதி மக்கள் மீட்டு தென்காசி மாவட்டம் சிவகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் விபத்து குறித்து தகவல் அறிந்த சேத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாரிக்கனியின் உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்குவாரியில் தவறி விழுந்து தொழிலாளி இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு உரிமையாளர் தரப்பிலும், தொழிற்சங்கம் தரப்பிலும் அழைப்பு விடுக்கப்பட்டது.
    • உரிமையாளர் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு யாரும் வராததால் தொழிற்சங்கத்தினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியில் 400-க்கு மேற்பட்ட விசைத்தறிக்கூடங்கள் உள்ளன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கூலி உயர்வு மற்றும் போனஸ், விடுப்பு சம்பளம் வழங்க கோரி போடப்பட்ட ஒப்பந்தம் முடிவடைந்தது.

    கடந்த 2 ஆண்டுகளாக புதிய ஒப்பந்தம் போடப்படாமல் விசைத்தறி உரிமையாளர்கள் காலம் தாழ்த்தி வருவதாக புகார் கூறி கடந்த 30-ந் தேதி முதல் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

    நேற்று முன்தினம் கஞ்சித் தொட்டி திறந்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு உரிமையாளர் தரப்பிலும், தொழிற்சங்கம் தரப்பிலும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்த பேச்சுவார்த்தைக்கு விருதுநகர் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மின்னல் கொடி, ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் கோதண்டராமன், தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன் தலைமை தாங்கினர்.

    அப்போது உரிமையாளர் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு யாரும் வராததால் தொழிற்சங்கத்தினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

    தொழிற்சங்கத்தினர் அதிகாரியிடம் கூறுகையில், எங்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்க வழி செய்ய வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டம் தீவிரமடையும் என்றனர்.

    இந்த நிலையில் 11-வது நாளான இன்று செட்டியார்பட்டி அரசரடி பஸ் நிலையம் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ×