என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • விருதுநகர்-சிவகாசி ரோட்டில் உள்ள ஊரணி அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
    • வேகத்தில் ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள தவசிலிங்காபுரத்தை சேர்ந்தவர் வைரமுத்து (வயது24). இவர் சிவகாசியில் உள்ள அச்சகத்தில் பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சங்கிலிவீரன். இவரது மகன் ஸ்ரீராம் (15). இவர் முத்துகுமாரபுரத்தில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று குமாரலிங்கபுரத்தில் உள்ள முனியாண்டி கோவிலில் திருவிழா நடந்தது.

    இதில் பங்கேற்பதற்காக வைரமுத்து மோட்டார் சைக்கிளில் ஸ்ரீராமை அழைத்து சென்றார். அங்கு திருவிழா முடிந்து 2 பேரும் நேற்று இரவு 10 மணிக்கு ஊருக்கு புறப்பட்டனர். விருதுநகர்-சிவகாசி ரோட்டில் உள்ள ஊரணி அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    அதே வேகத்தில் ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிய அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வைரமுத்து, ஸ்ரீராம் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

    இந்த விபத்து குறித்து சங்கிலிவீரன் கொடுத்த புகாரின்பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை அன்புநகரை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி மாரியம்மாள்(36). நேற்று கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டனர்.

    விருதுநகர்-அருப்புக்கோட்டை ரோட்டில் சென்றபோது ராஜா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த மாரியம்மாள் தவறி நடுரோட்டில் விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி அவர் மீது மோதியது.

    இதில் உடல் நசுங்கி மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சொக்கலிங்காபுரத்தை சேர்ந்த கல்லூரி விரிவுரையாளர் நாகலட்சுமி(38) படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு தொடர்பான புகாரை கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.
    • இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழில், தீப்பெட்டி தொழில், அச்சுத் தொழில், நூற்பாலைகள் மற்றும் கட்டுமான பணிகளில் பல மாநிலங்களில் இருந்தும் வெளிமாநில தொழிலாளர்கள் வந்து அமைதியான சூழ்நிலையில் பணியாற்றி விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகி றார்கள்.

    வெளிமாநில தொழிலா ளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அவர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தொழி லாளர் நலச்சட்டங்களை கடைபிடிக்கப்படுவதை தொழிலாளர் துறையின ராலும், தொழிலக பாது காப்பு மற்றும் சுகாதார இயக்கக துறையினராலும் உறுதி செய்யப்படுகிறது.

    வெளிமாநில தொழிலாளர்களின் பாது காப்பினை மாவட்ட நிர்வாகத்தினராலும், காவல் துறையினராலும், கண்காணிக்கப்பட்டு உறுதி செய்யப்படுகிறது. விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்ற தமிழ்நாடு மக்களும், தொழிலாளர் நலன் காக்கும் தமிழ்நாடு அரசும் வெளிமாநில தொழிலாளர்களின் பங்க ளிப்பை நன்கு உணர்ந்து இருப்பதால் இணக்கமான, அமைதியான சூழ்நிலையில் இங்கு அனைவரும் வாழ்ந்து வருகிறார்கள்.

    இந்த சூழ்நிலையில் சில சமூக வலைதளங்களில் உண்மைக்கு மாறான, தவறான உள்நோக்கத்தோடு, வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் சில இடங்க ளில் தாக்கப்படுவதாக விஷ மத்தனமான செய்தி சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதை தமிழ்நாட்டில் இருக்கும் வடமாநிலத்தவர் உள்ளிட்ட அனைவரும் அறி வார்கள்.

    விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வெளிமாநில தொழிலாளர்களும் எவ்வித அச்சமுமின்றி அமைதியாக, சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், சமூக ஊடகங்களால் பரப்பப்பட்ட தவறான செய்திகளால் ஏற்படுத்தப்பட்ட வெளி மாநில தொழிலாளர்களின் அச்சத்தை போக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களின் ஏஜென்டுகளுக்கு இன்று (6-ந்தேதி) மாலை 5 மணியளவில் சிவகாசியில் உள்ள டான்பாமா திருமண மண்டபத்தில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தொடர்புடைய அதிகாரிகள் வெளிமாநில தொழிலாளர்களின் அச்சத்தினை போக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தை எடுத்துரைப்பர்கள்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சமூக ஊடங்களால் பரப்பப்படும் செய்தியின் உண்மைத்தன்மை அறியவும் மற்றும் அவர்களது பாதுகாப்பு தொடர்பான புகாரினை அளிக்கவும் 'கட்டணமில்லா தொலைபேசி எண் -1077" மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அனைத்து வெளிமாநில தொழிலாளர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகாசி அம்மா உணவகங்களில் பொதுமக்கள் வருகை குறைந்தது.
    • தரமான உணவு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அண்ணா காய்கறி மார்க்கெட் அருகில் அம்மா உணவகம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

    பள்ளிக்கூடம், பத்திரப்பதிவு அலுவலகம், காய்கறி மார்க்கெட், வணிக வளாகங்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் அம்மா உணவகத்துக்கு காலை, மதியம் என 2 வேளையும் மக்கள் அதிகஅளவில் வந்து சாப்பிட்டு செல்வார்கள். சிலர் அவைகளை வாங்கி சென்று இரவு உணவாகவும் பயன்படுத்துவார்கள்.

    ஏழை, நடுத்தர மக்கள் மட்டுமின்றி, வசதியானவர்களும் அம்மா உணவகத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக சாப்பாட்டிற்கு தரம் குறைவான அரிசியை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அம்மா உணவகத்துக்கு சாப்பிட வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

    இந்தமாற்றத்தை பார்த்தும் வேறு வழியின்றி உணவுகளை வாங்கிச் சாப்பிடுபவர்கள் அதனை முழுவதுமாக சாப்பிட முடியாமல் குப்பைத்தொட்டியில் வீசி செல்கின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் செய்தும் தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சிவகாசியை மாநகராட்சியாக மாற்றிய பிறகு பல்வேறு நவீன வசதிகள் செய்து வரும் அதிகாரிகள் அம்மா உணவகத்தில் உணவினை தரமாக வழங்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராம்கோ குரூப் அறக்கட்டளை சார்பில் மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • மலைவாழ் குழந்தைகள் கொண்டாடிய 19-ம் ஆண்டு விழா நடந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ராம்கோ குரூப் அறக்கட்டளைகளில் ஒன்றான பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் சாரிட்டி டிரஸ்ட் சார்பில் மலைவாழ் பழங்குடியின மக்கள் மற்றும் மலைவாழ் குழந்தைகள் கொண்டாடிய 19-ம் ஆண்டு விழா நடந்தது.

    பரம பூஜ்ய ஸ்வாமி ஸ்ரீமத் தயானந்த சரஸ்வதி ஆலோசனைப்படி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக ராம்கோ குரூப் முன்னாள் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிர மணியராஜாவும், அவரது துணைவியார் சுதர்சனமும் இணைந்து 2004-ம் ஆண்டு பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் சாரிட்டி டிரஸ்ட் சார்பில் ராஜபாளையத்தில் ஜெயந்த் மலைவாழ் பழங்குடியின மாணவ-மாணவிகள் விடுதியை தொடங்கினர்.

    கல்வி அறிவு என்பதே இல்லாமல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த மலைவாழ் குழந்தைகளை ராஜபாளையம் அழைத்து வந்து பள்ளி, கல்லூரிகளில் படிக்க வைத்தனர். இந்த விடுதியில் தற்போது 51 மாணவர்கள், 54 மாணவிகள் என மொத்தம் 105 பேர் கல்வி கற்று வருகிறார்கள்.

    இதன் 19-ம் ஆண்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற கலெக்டர் ஜெயசீலன் பேசுகையில், இந்த விடுதியில் நர்சிங் படித்த ராம் நகர் பகுதி மாணவி மகாலட்சுமியை நான் மலை கிராமத்திற்கு ஆய்வுக்கு சென்றபோது சந்தித்து பேசினேன். இந்த சமூகத்தில் ஒரு மாணவி படித்து வேலை பார்த்து வருவது மகிழ்ச்சியாக இருந்தது, மேலும் சிலர் வனத்துறையில் வேலை பார்த்து வருவதாக அறிந்தேன். இந்த சமூகம் முன்னேற ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா செய்து வரும் பணிகளை பாராட்டுகிறேன் என்றார்.

    ராம்கோ குரூப் சேர்மன் துணைவியார் நிர்மலாராஜ் சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். சேதுராமம்மாள் சாரிட்டி டிரஸ்டின் டிரஸ்டி யும், விஷ்ணு சங்கர் மில் மேனேஜிங் டிரஸ்ட்டியுமான சாரதா தீபா தலைமை தாங்கினார்.

    ராம்நகர், அத்திகோவில், ஜெயந்த்நகர், வள்ளியம்மாள் நகர், செண்பகத்தோப்பு, அய்யனார்கோவில், தலை யணை, மொக்கத்தான்பாறை ஆகிய பகுதிகளை சேர்ந்த மலைவாழ் மக்கள் 200 குடும்பங்களுக்கு கலெக்டர் ஜெயசீலன் புதிய ஆடைகள் வழங்கினார். மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன் வாழ்த்தி பேசி னார். விடுதி மேலாளர் முருகேசன் வரவேற்றார். பி.ஏ.சி ராமசாமி ராஜா கல்வி தர்மஸ்தாபன கல்வி நிறுவனங்களின் தாளாளர் என்.கே.ஸ்ரீகண்டராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    ராம்கோ டிரஸ்ட்களின் செயலாளரும், விஷ்ணு சங்கர் மில் துணைத் தலைவருமான குருசாமி, ஸ்ரீமதி லிங்கம்மாள் சாஸ்திர ப்ரதிஷ்டா டிரஸ்ட் முதன்மை பொது மேலாளர் ராஜ்குமார், பி.ஏ.சி.ஆர்.கல்வி தர்ம ஸ்தாபனத்தின் சி.இ.ஓ. வெங்கட்ராஜ், ஜி.எம்.கூடலிங்கம், பி.ஏ.சி.ஆர். அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ரோகிணி, பி.ஏ.சி.எம். ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து, பி.ஏ.சி.ஆர். சேதுராமம்பாள் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அருணா, டி.ஏ.கே.எம்.ஆர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சாரதா, ராம்கோ பாலவித்தியா பள்ளியின் தலைமை ஆசிரியர் சுதா, மற்றும் பலர் பங்கேற்றனர். ஆண்கள் விடுதி காப்பாளர் ராமசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    • 7-வது நிகழ்ச்சியாக நடந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    • மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம், மார்ச் 6-

    ராஜபாளையம் தொகுதி தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் லியோனி தலைமையில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., தனுஷ்குமார் எம்.பி. முன்னிலையில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் செட்டியார்பட்டி கலை யரங்கத்தில் நடந்தது.

    கூட்டத்தில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதற்கு சாட்சி ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி தான். தொடர்ந்து தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்றார்.

    திண்டுக்கல் லியோனி பேசுகையில், பெண்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றியது தி.மு.க. தான். பெண்கள் முன்னேற்றத்திற்காக கட்டணமில்லா பஸ் வசதி, புதுமைப்பெண் திட்டம் என பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் அதிகளவில் பெண் மேயர்களை உரு வாக்கிய ஆட்சி திராவிட மாடல் ஆட்சி ஆகும் என்றார்.

    கூட்டத்தில் நகர செயலா ளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூர் சேர்மன்கள் ஜெயமுருகன், பாலசுப்பிரமணியன், பேரூர் செயலாளர்கள் இளங்கோவன், சிங்கப்புலி அண்ணாவி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, மாணவரணி அமைப்பா ளர் வேல்முருகன், துணை சேர்மன்கள் கல்பனா குழந்தைவேல், விநாயகமூர்த்தி, காளீஸ்வரி மாரிச்செல்வம், மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மருந்து கலக்கும்போது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்தது.
    • விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 2 பேரும் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் 80 சதவீத தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் கோட்டநத்தம் பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் லைசென்ஸ் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 15 அறைகள் உள்ளன. இங்கு சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    இன்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டனர். ஆலையில் உள்ள ஒரு அறையில் கட்டநாயக்கன்பட்டியை சேர்ந்த கருப்பசாமி(வயது60), டி.சேடப்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி(40) உள்பட 4 தொழிலாளர்கள் திரி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர்.

    மருந்து கலக்கும்போது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்தது. அதனைத்தொடர்ந்து கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்த பட்டாசுகளில் பரவி பயங்கர சத்தத்துடன் வெடிக்கத்தொடங்கின.

    இந்த விபத்தில் அறையில் இருந்த கருப்பசாமி, முத்துசாமி ஆகிய 2 பேர் சிக்கி வெடி விபத்தில் உடல் கருகினர். மற்ற 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், வச்சக்காரபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.

    விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 2 பேரும் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் 80 சதவீத தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடிவிபத்து தொடர்பாக வச்சக்காரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • என்னுடைய அம்மா ஒரு மோசமான நபரைத் திருமணம் செய்து கொண்டார்.
    • பாலியல் ரீதியாக ஒரு குழந்தை துன்புறுத்தப்படும்போது அது அந்தக் குழந்தையின் வாழ்நாள் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    சென்னை:

    நடிகை குஷ்பு திரைப்பட வாழ்க்கையில் வெற்றிகரமாக இயங்கி வந்த நிலையில் அடுத்த கட்டமாக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    அவ்வப்போது பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு எதிராகவும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்.

    சமீபத்தில் அவர் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து டெல்லி சென்று ஆணையத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    டெல்லியில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த குஷ்பு சுந்தர் அதிர்ச்சிகரமான தகவலைப் பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியதாவது:-

    "பாலியல் ரீதியாக ஒரு குழந்தை துன்புறுத்தப்படும்போது அது அந்தக் குழந்தையின் வாழ்நாள் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த கொடூரம் ஆறாத வடுவாக மாறிவிடும் என்று நான் நினைக்கிறேன்.

    என்னுடைய அம்மா ஒரு மோசமான நபரைத் திருமணம் செய்து கொண்டார். என் அப்பா என் அம்மாவை அடிப்பதையும், தன் ஒரே மகளான என்னையும் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்வதையும் தனது பிறப்புரிமையாக நினைத்தார்.

    என்னை பாலியல் ரீதியாக அவர் துன்புறுத்தியபோது எனக்கு 8 வயதுதான் ஆகியிருந்தது. 15 வயது வரை அது தொடர்ந்தது. 16 வயதில்தான் நான் அப்பாவிற்கு எதிராகப் பேசத் தொடங்கினேன்.

    இதைச்சொன்னால் என் அம்மா என்னை நம்ப மாட்டார் என்ற பயம் எனக்கு இருந்தது. காரணம் தனக்கு என்ன துன்பம் கொடுத்தாலும் என் அப்பாவை தன்னுடைய கடவுளாகவே நினைத்தார் அம்மா.

    நான் 16 வயது தொடக்கத்தில் அப்பாவுக்கு எதிராகப் போராடினேன்.

    இவ்வாறு குஷ்பு கூறியிருக்கிறார்.

    தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகப் பொறுப்பேற்றபின் குஷ்பு தன்னை குறித்துப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • சிவகாசி அருகே இனப்பெருக்கத்திற்காக குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகளை கிராம மக்கள் கண்டு மகிழ்கின்றனர்.
    • அவைகளை வேட்டையாடாமல் பாதுகாப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கோட்டையூர் கண்மாய் பகுதியில் வெளிநாடுகளில் இருந்து செங்கால் நாரை, நீர் கோழிகள் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்துள்ளன.

    அவைகள் இங்குள்ள புளியமரம், வேப்பமரம் உள்ளிட்ட மரங்களில் நூற்றுக்கணக்கில் கூடு கட்டி தங்கியுள்ளன. அவைகள் குஞ்சு பொறித்து வளரும் தருவாயில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தாய் நாட்டிற்கு திரும்பி செல்ல தொடங்கும்.

    அதுவரை இங்குள்ள கண்மாயில் மீன்களைப் பிடித்து உண்டு வாழும். பறவைகள் எழுப்பும் சத்தத்தையும், அவைகளின் அழகையும் காண்பதற்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் வந்து செல்வார்கள்.

    ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காக வரும் வெளிநாட்டு பறவைகளை இப்பகுதியை சேர்ந்தவர்கள் துன்புறுத்துவதில்லை. அவர்கள் பறவைகளை தங்களது அழையாத விருந்தாளிகளாகவே கருதுகின்றனர்.

    பறவைகள் தங்கி இருக்கும் சமயத்தில் தீபாவளி பண்டிகை வந்தாலும் வேறு ஏதேனும் முக்கிய நிகழ்ச்சிகள் இருந்தாலும் மக்கள் மரங்களில் தங்கியிருக்கும் பறவைகளை கருத்தில் கொண்டு பட்டாசுகளை வெடிக்க மாட்டார்கள். அவைகளை வேட்டையாடாமல் பாதுகாப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமாகினர்.
    • அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    அல்லம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகள் யோகலட்சுமி. இவர் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார்.இந்தநிலையில் கல்லூரிக்கு சென்ற அவர் மாயமாகிவிட்டார். இதுபற்றி கிருஷ்ணசாமி விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

    சிவகாசியை அடுத்த சொக்கலிங்காபுரத்தை சேர்ந்தவர் மாரீஸ்வரன். இவரது மனைவி ரஷியா (வயது19). சம்பவத்தன்று எம்.புதுப்பட்டிக்கு சென்றார். அதன்பின் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி மாரீஸ்வரன் எம்.புதுப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் நடுதெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது 17 வயது மகள் கிருஷ்ணன் கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிசென்ற அவர் வீடு திரும்பவில்லை.

    இதுதொடர்பாக கிருஷ்ணசாமி கூமாபட்டி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியில் தேசிய மாநாடு நடந்தது.
    • மாநாட்டில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    தமிழ்நாடு பர்மசூட்டிகல் சயின்சஸ் அறக்கட்டளை, இந்தியன் பர்மசூட்டிகல் அசோசியேசன்ஸ் தமிழ்நாடு மற்றும் டானிப்பா டிரஸ்ட் ஆதரவுடன் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் 2 நாள் தேசிய மாநாடு ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியில் நடந்தது.

    கல்லூரியின் தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். தாளாளர் டாக்டர்.அறிவழகி, செயலாளர் எஸ்.சசி ஆனந்த், இயக்குநர் எஸ். அர்ஜுன் கலசலிங்கம் முன்னிலை வகித்தனர். முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார்.

    மதுரை மண்டல மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநர் என்.சி. ரவிச்சந்திரன், விருதுநகர் மண்டல மருந்துகள் கட்டுப்பாட்டு துணை இயக்குநர் ஆர்.இளங்கோ, தலைமை விருந்தினர்களாகவும், டானிப்பா டிரஸ்டின் செயலாளர் யூசுப், ஐகாரஸ் ஹெல்த்கேர் நிறுவன இயக்குநர் ஆர்.இளங்கோ கவுரவ விருந்தினர்களாகவும் பங்கேற்று பேசினர்.

    ஜெனெக்சியா பயோசெர்வின் ஆராய்ச்சி விஞ்ஞானி முகேஷ் சுப்பிரமணியன், மைலான் லெபாரட்டரிஸ் நிறுவனத்தின் உற்பத்தி இணை இயக்குநர் பிரசாத் பழனிச்சாமி, ஐகாரஸ் ஹெல்த் கேர் நிறுவனத்தின் இயக்குநர் ஆனந்த் செல்வம், பார்மா கியூ.எஸ். எல்.எல்.பி-ன் குவாலிட்டி சிஸ்டெம்ஸ் அன்ட் ஆடிட் இயக்குநர் சிவக்குமார், ஈன்நெக்ஸ்ட் பயோசயின்சஸ் நிறுவனத்தின் இயக்குநர்-தலைவர் தட்சணா மூர்த்தி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

    பார்ம் டி முதல் பேட்ச் மாணவர்களுக்கு படிப்பு முடிந்ததற்கான சான்றிதழ்களை முனைவர் க. ஸ்ரீதரன் வழங்கினார். நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டாளர் சாரங்கபாணி பங்கேற்று பேசினார்.

    மாநாட்டில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அமைப்பு செயலாளர்-பேராசிரியர் எஸ்.ஆர். செந்தில் குமார் நன்றி கூறினார். மாநாட்டிற்கான ஏற்பாடுகளை கன்வீனர்-பேராசிரியர் அன்புராஜ் உள்ளிட்ட பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.
    • 1 முதல் 18 வயதுக்குள்பட்டோர் 209 பேர் பங்கேற்று பயன்பெற்றனா்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலகம் சாா்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் மருதக்காளை தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தாா்.

    மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். மருத்துவா்கள் சீனிவாசன் (மனநலம்),சுரேஷ் (எலும்பு முறிவு), ரமேஷ் பாபு (காது, மூக்கு, தொண்டை), பாஸ்கரன் (கண்) ஆகியோா் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து மருத்துவச் சான்று வழங்கினா்.

    மேலும் மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பதிவு செய்தல், புதுப்பித்தல், உதவித்தொகை மற்றும் உதவி உபகரணங்கள் பெறுவதற்கு பதிவு செய்தல், ரெயில் மற்றும் பஸ் பயண கட்டணச்சலுகை பெறுதல், மருத்துவரின் ஆலோசனை ஆகிய சேவைகள் வழங்கப் பட்டன.

    முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய பகுதிகளில் இருந்து 1 முதல் 18 வயதுக்குள்பட்டோர் 209 பேர் பங்கேற்று பயன்பெற்றனா். இதில் தேசிய அடையாள அட்டை 60 பேருக்கும், ரெயில் மற்றும் பஸ் பயண கட்டணச் சலுகை 180 பேருக்கும், உதவி உபகரணங்கள் 34 பேருக்கும் வழங்கப்பட்டன.

    • சிறுமிகள் உட்பட 4 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள மடத்துப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 49), மில் தொழிலாளி. இவர் 11 வருடத்திற்கு முன்பு சரஸ்வதி (35) என்பவரை இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொண்டார். சரஸ்வதி தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று முத்துராஜா பணிக்குச் சென்று விட்டு திரும்பி வந்த பார்த்த போது மனைவி வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து முத்துராஜா கொடுத்த புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் பெருமாள் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி மகேஸ்வரி (38). இவர் கோபாலன்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 11ம் வகுப்பு படிக்கும் மகளும் (16) 8-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். கடந்த 30-ந் தேதி மாலை பாலமுருகன் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் திருத்தங்கல் - ஆமத்தூர் ரோட்டில் வடமலாபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது கீழே விழுந்தனர். இதில் மகேஸ்வரிக்கு காயம் ஏற்பட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருடன் இரண்டு மகள்களும் இருந்தனர். பாலமுருகன் வீட்டிற்கு வந்து மறுநாள் காலை ஆஸ்பத்திரிக்கு சென்றபோது அங்கு மனைவி மற்றும் இரண்டு மகள்களும் இல்லை. எங்கு சென்றார்கள் என தெரியவில்லை. பலஇடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மனைவி மற்றும் மகள்களைக் கண்டுபிடித்துத் தருமாறு

    விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×