என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வெடிவிபத்து நடந்த பட்டாசு ஆலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தபோது எடுத்த படம்.
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து- 2 தொழிலாளர்கள் பலி
- மருந்து கலக்கும்போது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்தது.
- விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 2 பேரும் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் 80 சதவீத தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் கோட்டநத்தம் பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் லைசென்ஸ் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 15 அறைகள் உள்ளன. இங்கு சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.
இன்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டனர். ஆலையில் உள்ள ஒரு அறையில் கட்டநாயக்கன்பட்டியை சேர்ந்த கருப்பசாமி(வயது60), டி.சேடப்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி(40) உள்பட 4 தொழிலாளர்கள் திரி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர்.
மருந்து கலக்கும்போது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்தது. அதனைத்தொடர்ந்து கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்த பட்டாசுகளில் பரவி பயங்கர சத்தத்துடன் வெடிக்கத்தொடங்கின.
இந்த விபத்தில் அறையில் இருந்த கருப்பசாமி, முத்துசாமி ஆகிய 2 பேர் சிக்கி வெடி விபத்தில் உடல் கருகினர். மற்ற 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், வச்சக்காரபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.
விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 2 பேரும் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் 80 சதவீத தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடிவிபத்து தொடர்பாக வச்சக்காரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.