என் மலர்
விழுப்புரம்
- கல்வியை மாநில பட்டியலில் இருந்து மத்திய அரசு, பொது பட்டியலுக்கு எடுத்துச் சென்றது.
- தமிழகத்தில் சாராயத்தின் விலை மட்டும் குறைந்துள்ளது.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி சட்டமன்றதொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கெடார் கிராமத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
கல்வியை மாநில பட்டியலில் இருந்து மத்திய அரசு, பொது பட்டியலுக்கு எடுத்துச் சென்றது. அப்போது கல்வி மாநில உரிமையை பறிகொடுத்தவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தி.மு.க.தான். இதை மறந்துவிடுவது மக்களின் இயல்பு. நினைவுப்படுத்திக் கொண்டே இருப்பது போராளிகளின் கடமை. இதைத்தான் நாங்கள் செய்து கொண்டுள்ளோம்.
இன்றைக்கு கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வருவோம் என தேர்தல் அறிக்கை விடுக்கின்றனர். எடுத்துக்கொண்டு போகும்போது என்ன செய்தீர்கள்? உங்களால் தடுக்க முடியவில்லை. பள்ளிக்கூடங்கள், பலரை உருவாக்கியுள்ளது. ஆனால் நல்ல ஒரு அரசியல்வாதியை உருவாக்க முடியவில்லை.
ஒரு மாநில கட்சி, ஒன்றிய அரசுடன் 18 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற ஒரே கட்சி தி.மு.க.தான். அன்றெல்லாம் இவர்கள் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதற்காக என்ன போராட்டம் செய்தார்கள்?
தமிழில் வழக்காடு மொழிகள் வேண்டும் என பல போராட்டங்களை தி.மு.க.வினர் நடத்தினார்கள். இவர்கள் நினைத்திருந்தால் எனது தாய்மொழியில் வழக்காடும் மொழி வேண்டும் என கேட்டிருந்தால், அதை பெற்றிருக்கலாம். ஆனால் இவர்கள் அதனை செய்யவில்லை. எந்த இடத்திலுமே இவர்கள் சரியாக நின்றது கிடையாது.
தமிழகத்தில் சாராயத்தின் விலை மட்டும் குறைந்துள்ளது. இளைஞர்களின் கல்வி, வேலை வாய்ப்பை பற்றி சிந்திக்காத அரசு, 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகிற மதுவை 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனைசெய்ய என்ன வழி என சிந்தித்து கொண்டுள்ளது. நாடு எதை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- பிள்ளைகள், பேரன், பேத்திகள், படித்து கலெக்டராக டாக்டராக வேண்டும் என நானும், அன்புமணியும் கூறுகிறோம்.
- தமிழ்நாட்டில் இன்று பிள்ளைகளுக்கு சாராயத்துடன் கஞ்சாவை கொடுத்து கெடுத்து விடுகிறார்கள்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி தொகுதியில் சிந்தாமணி, உலகலாம் பூண்டி ஆகிய இடங்களில், பா.ம.க., வேட்பாளர் சி.அன்புமணிக்கு ஆதரவாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த 45 ஆண்டு காலமாக இட ஒதுக்கீடு கேட்டு போராடி வந்து கொண்டிருக்கிறேன். 10 முறை சிறைச்சாலைகளுக்கு சென்று வந்துள்ளேன்.
பிள்ளைகள், பேரன், பேத்திகள், படித்து கலெக்டராக டாக்டராக வேண்டும் என நானும், அன்புமணியும் கூறுகிறோம். நாங்கள் படியுங்கள் என்று கூறினால் ஆட்சியாளர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு குடியுங்கள் என்று கூறுகிறார்கள்.
சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க கூறினால் மத்திய அரசு தான் செய்யனும் என்கிறார்கள் திமுகவினர். பெண்கள் விழிப்பாக உள்ளனர். நீங்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். அரசாங்கத்தை மாற்ற முடியும். கொள்ளையர்களை விரட்ட முடியும்.
தமிழ்நாட்டில் இன்று பிள்ளைகளுக்கு சாராயத்துடன் கஞ்சாவை கொடுத்து கெடுத்து விடுகிறார்கள். சாதி வாரி கணக்கெடுப்பதால் வன்னியர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என தெரிந்துவிடும் நான் வன்னியர்களுக்காக மட்டும் கேட்கவில்லை. அனைத்து சமுதாயத்திற்கும் தான் நான் இட ஒதுக்கீடு கேட்டு போராடி சிறை சென்று வந்துள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- 200 வாக்காளர்களுக்கு ஒரு அலுவலகம் அமைத்து தினமும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்கின்றனர்.
- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியில் டாக்டர் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிடுகின்றனர்.
அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி இந்த தேர்தலில் போட்டியிடாததால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்காக அமைக்கப்பட்ட அக்கட்சியின் தேர்தல் பணிக் குழுவில் எஸ்.ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி, செஞ்சி மஸ்தான், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட 25 அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சட்டசபைக் கூட்டம் கடந்த சனிக்கிழமை முடிந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையில் இருந்து அனைவரும் விக்கிரவாண்டியில் முகாமிட்டு வாக்காளர்களை சந்தித்து வருகின்றனர்.
ஒவ்வொரு கிராமத்திலும் 2 வீதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்று பிரிக்கப்பட்டு அங்குள்ள வாக்காளர்களின் தேவையை நிறைவேற்றி வருகின்றனர்.
200 வாக்காளர்களுக்கு ஒரு அலுவலகம் அமைத்து தினமும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்கின்றனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு டீ, காபி கொடுத்து உபசரிக்கின்றனர். வடை, பஜ்ஜி உள்ளிட்டவைகளும் இலவசமாக கிடைக்கிறது.

காலை, மாலையில் தேர்தல் அலுவலகத்துக்கு வந்து செல்லுங்கள், உங்கள் பகுதி குறைகளை சொன்னால் நிறைவேற்றி தருகிறோம் என்று கூறுகின்றனர். இதனால் தி.மு.க. தேர்தல் அலுவலகங்களில் எப்போதும் கூட்டம் 'களை' கட்டுகிறது.
பா.ம.க.வை பொறுத்தவரை டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசார பலமாக ஒவ்வொரு பகுதியாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். தி.மு.க.வை கடுமையாக சாடுகிறார்.
மாநில, மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் தங்கி பிரசாரம் செய்கின்றனர். தி.மு.க.வினர் எப்படி பிரசாரம் செய்கிறார்கள் என்பதை கண்காணித்து அன்புமணி ராமதாசுக்கு தகவல் கொடுக்கிறார்கள்.
அதன் மூலம் பிரசார வியூகம் மாற்றப்படுகிறது. மதுவின் தீமைகளை எடுத்துக் கூறி பெண்களின் வாக்குகளை மொத்தமாக பெற்றிட டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், சவுமியா ஆகியோரும் தீவிரமாக வாக்கு சேகரிக்கின்றனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். பா.ம.க. எங்கெல்லாம் எழுச்சியாக உள்ளதோ அங்கு கூடுதலாக தி.மு.க. வினர் வரவழைக்கப்பட்டு களப் பணியாற்றுகின்றனர்.
மொத்தத்தில் இந்த தேர்தலில் சாதனைகளை சொல்லி தி.மு.க.வினர் ஓட்டு கேட்கும் நிலையில் வேதனைகளை சொல்லி பா.ம.க. வினர் ஆவேசமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்த தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க. வாக்காளர்களின் ஓட்டு யாருக்கு செல்லும் என்பதை பொறுத்தே வெற்றி அமையும் என தெரிகிறது.
- அ.தி.மு.க. பிரமுகர்களை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
- தி.மு.க.வை விழ்த்துவது தான் அ.தி.மு.க.வின் நோக்கம்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தல் வரும் 10-ந் தேதி நடைபெறுகிறது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதனை தொடர்ந்து அக்கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வும் போட்டியிடவில்லை
இதனால் அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க.வினரின் வாக்குகளை சேகரிக்க பா.ம.க. மற்றும் நாம் தமிழர் கட்சியினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, அ.தி.மு.க. பிரமுகர்களை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதே போல தே.மு.தி.க. பிரமுகர்களிடமும் ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்த நிலையில் பா.ம.க. சார்பில் வாக்கு சேகரிக்கும் போது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் அச்சிடப்பட்ட நோட்டீஸ், பேனர்களை பா.ம.க.வினர் எடுத்து செல்கின்றனர். மேலும், தி.மு.க.வை விழ்த்துவது தான் அ.தி.மு.க.வின் நோக்கம். இதனை நிறைவேற்ற மாம்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசார கூட்டங்களில் பேசி அ.தி.மு.க.வினரிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.
- பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளை மக்கள் புறக்கணித்து விட்டார்கள்.
- பா.ஜ.க.விற்கு கால் பிடிக்கும் வேலையை செய்கின்றது.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பிரசாரம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாசிச அரசியல், மதவாத அரசியல், ஜாதி அரசியலை, முன்னெடுத்த பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளை மக்கள் புறக்கணித்து விட்டார்கள்.
நாட்டு மக்கள் விரும்புவது நாட்டின் முன்னேற்றம், வளம், சமூக வளர்ச்சி, ஆகியவற்றை முன்னெடுத்த திராவிட நாயகன் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சமூக கட்டமைப்பு வளர்ச்சியைத்தான். இதனால் தான் இந்திய அளவில் 40-க்கு 40 தொகுதியிலும் வெற்றியினை பெற்று மகுடம் சூட்டி உள்ளனர்
சமூக நீதிக்கு எதிரான பா.ஜ.க. கட்சியுடன் பா.ம.க. கட்சி கூட்டணி சேர்ந்து, பா.ஜ.க.விற்கு கால் பிடிக்கும் வேலையை செய்கின்றது. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட சட்டசபையில் தனி தீர்மானம் நிறைவேற்றியுள்ள முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினால் மட்டுமே வன்னிய மக்களுக்கு பல நல்லதிட்டங்களையும், சிறந்த இட ஒதுக்கீட்டையும் வழங்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இடைதேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றி பிரகாசமாக உள்ளது.
- மு.க.ஸ்டாலின் ஆட்சி, மக்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி நகர பகுதியில் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்கள் பொன்முடி, சி.வெ.கணேசன், சேகர் பாபு ஆகியோர் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வாக்கு சேகரிப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், இடைதேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றி பிரகாசமாக உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி, மக்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. அமைச்சர்கள் பல்வேறு தேர்தலில் பணியாற்றியவர்கள் என்பதால் எளிதில் வெற்றி பெற்று பெறுவோம். பா.ம.க. வினருக்கு வன்முறையில் ஈடுபடுவது தான் வேலை. அவர்களுக்கு அது தான் தெரியும்.
பாலாற்றின் குறுக்கே அணைகட்டுவோம் என ஆந்திர முதல்வர் தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், அவர்கள் தடுப்பனை கட்டுவோம், கட்டுவோம் என்பார்கள். நாங்கள் அதனை தடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் விக்கிரவாண்டியில் வீடு வாடகை எடுத்து ஓட்டு சேகரித்து வருகிறார்.
- சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் பா.ம.கவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவாவும், பா.ம.க. சார்பில் சி. அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயாவும் போட்டியிடுகின்றனர்.
தி.மு.க வேட்பாளரை ஆதரித்து ஒட்டு மொத்த தமிழக அமைச்சர்கள், தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். அது போல் பா.ம.க வேட்பாளர் சி. அன்புமணியை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கிராமம் கிராமாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் விக்கிரவாண்டியில் வீடு வாடகை எடுத்து ஓட்டு சேகரித்து வருகிறார்.
இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட கடையம், கருவாட்சி, அத்தியூர் திருக்கை, கெடார் உள்ளிட்ட 7 ஊராட்சிகளில் பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார். கடையம் ஊராட்சியில் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போது இந்த பிரசாரத்தில் பெண்கள் கலந்து கொள்ளாமல் இருக்க தி.மு.க.,வினர் பணம் கொடுத்து அடைத்து வைத்துள்ளதாக பா.ம.க.,வினர் குற்றம் சாட்டினர்.
இதற்கு போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் இதனை கண்டித்து பா.ம.க.,வினர் கடையம் மைதானம் அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம். எல்.ஏ., அருள் மற்றும் ஏராளமான பா.ம.க.வினர் பங்கேற்றனர். போராட்டத்தின் போது பெண்களை போகவிடாமல் தடுக்கும் விதமாக பணம் கொடுத்து அவர்களை அழைத்துச் சென்றுவிட்டதாகவும், இதற்கு துணை போகும் போலீசாரை கண்டித்தும் கோஷமிட்டனர். இதனால் அங்கு திடீர் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் பா.ம.கவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- திருமங்கலம், ஈரோடு, இடைதேர்தல் பார்முலா போல நடக்கின்றது.
- பிரச்சாரத்துக்கு செல்லும் வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்திக்க முடியாத நிலை.
விழுப்புரம்:
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, அர்ஜூனன் ஆகியோர் விழுப்புரத்திற்கு இன்று வந்தனர். அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திருமங்கலம், ஈரோடு, இடைதேர்தல் பார்முலா போல நடக்கின்றது. இதற்கு உதாரணம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டும் தமிழக அமைச்சர்கள் 33 பேர் ஒவ்வொரு தெருவிலும் சூழ்ந்து கொண்டு மக்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்து அவர்களை மாலையில் விடுவிக்கின்றனர்.
இதனால் பிரச்சாரத்துக்கு செல்லும் வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்திக்க முடியாத நிலை உள்ளது. இதுதான் தற்போது விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் அவலமாகும். இப்படிப்பட்டவர்களுக்கு காவல்துறை முழு ஆதரவு அளிக்கின்றது. இதையெல்லாம் முன்பே உணர்ந்துதான் அ.தி.மு.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- 10 நாட்களாக சட்டசபையில் சாராயத்தை தவிர வேறு எதையும் பேசவில்லை.
- அநீதி என்பது வெளிப்படையாக தெரிகிறது.
விக்கிரவாண்டி:
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விக்கிரவாண்டி இடைதேர்தலில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயாவை ஆதரித்து திருவாமத்தூர் கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த 10 நாட்களாக சட்டசபையில் சாராயத்தை தவிர வேறு எதையும் பேசவில்லை. இது சட்டசபை இல்லை சாராய சபை. வேறு ஒன்றையும் பேசவில்லை. சைதாப்பேட்டையில் 11 வயது சிறுவன் இறந்துவிட்டான். குடிநீரில் கழிவு நீர் கலந்துவிட்டது. தண்ணீர் விஷம் ஆகிவிட்டது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டும்.
சாராயம், குடிநீர் அனைத்தும் இப்பொழுது விஷமாகிவிட்டது. இதை மாற்ற வேண்டும் பெரியவர் முதல் சிறியவர் வரை ஒரு மாற்றம் வர வேண்டும் என சொல்கின்றனர்.
அந்த மாற்றத்தை யார் கொண்டு வருவது, தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க நாங்கள் தயாராக இல்லை, 7அடி தாண்டுவதற்கு 70 அடி பின்னோக்கி செல்ல வேண்டியது உள்ளது. மாற்றம் மாற்றம் என சொல்லிக் கொண்டிருந்தால் மாறாது மாற்றம் என்பது ஒரு செயல், நாம் தான் அதை மாற்ற வேண்டும். மாற்றத்தை தொடங்க வேண்டும் என்றால் நம்மில் இருந்து தொடங்க வேண்டும்,
கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களுக்கு 10 லட்சம், பட்டாசு ஆலையில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம், சாகித்யா அகாடமி விருது பெற்றவர்களுக்க ரூ,25 ஆயிரம். அப்படியென்றால் சாகித்ய அகாடமி விருதை விட கள்ளச்சாராயம் குடிப்பது உயர்வானதா?. இது அநீதி என்பது வெளிப்படையாக தெரிகிறது.
தமிழக மக்கள் நீங்கள் நன்றாக சிக்கிக் கொண்டீர்கள் இதற்கு ஒரே ஒரு வாய்ப்பு மைக் சின்னத்திற்கு வாக்களிப்பது தான், உழைத்து கலைத்த மக்களுக்கு ஒரு பானம் தேவைப்படுகிறது என்கிறார் அமைச்சர் துரைமுருகன். இவர்களை வீட்டுக்கு அனுப்பாமல் நல்ல ஒரு அதிகாரத்தை, ஆட்சியை நம்மால் அளிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
- இடைத்தேர்தல் வரும் 10-ந் தேதி நடைபெற உள்ளது.
- விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் இந்தியா கூட்டணியின் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து பா.ஜ.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் சி. அன்புமணி போட்டியிடுகிறார். இது தவிர நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா போட்டியிடுகிறார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்த நிலையில், அக்கட்சியினரின் ஓட்டுக்களை பெறவும், தே.மு.க.தி.வினரின் ஓட்டுக்களை பெறவும், பா.ம.க.வும், நாம் தமிழர் கட்சியும் முயற்சித்து வருகின்றன.
மேலும், விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முகாமிட்டு தேர்தல் பணி செய்து வருகிறார்.
தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக 10 அமைச்சர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.
அதேபோல பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவாக, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், சவுமியா அன்புமணி ஆகியோர் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
மேலும், பா.ஜ.க.வின் உள்ளூர் நிர்வாகிகள் பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருவதால் பா.ம.க.வினர் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.
- இராம்நாத் கோயங்கா அந்தக் காலத்தில் இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர்.
- மறுபுறம் முனுசாமிக்கோ தேர்தல் செலவுக்கே பணம் கிடையாது. அதனால் அந்தத் தேர்தலில் கோயங்கா தான் வெல்வார்; முனுசாமியின் தோல்வி உறுதி என்று கூறப்பட்டது.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திண்டிவனம் மண் பல புரட்சி வரலாறுகளுக்கு சொந்தமானது.
பணத்தால் மட்டுமே அனைத்தையும் சாதிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு பாடம் புகட்டிய மண்.
இந்தியா விடுதலை அடைந்து குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பிறகு 1952-ஆம் ஆண்டில் முதல் மக்களவைத் தேர்தலும், சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. அப்போது திண்டிவனம் மக்களவைத் தொகுதி இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்தது.
அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுப்பிரிவு வேட்பாளராக இராம்நாத் கோயங்காவும், தனிப் பிரிவு வேட்பாளராக முனுசாமி பிள்ளையும் போட்டியிட்டனர். இராமசாமி படையாட்சியார் தலைமையிலான தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி சார்பில் பொதுப்பிரிவு வேட்பாளராக திருகுறள் முனுசாமி அவர்களும், தனிப்பிரிவு வேட்பாளராக ஜெயராமன் அவர்களும் போட்டியிட்டனர்.
இராம்நாத் கோயங்கா அந்தக் காலத்தில் இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். டாட்டா, பிர்லா ஆகியோருக்கு அடுத்தபடியாக கோயங்கா தான் பெரும் பணக்காரர். இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி இதழ்களின் அதிபர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர். காந்தியடிகள், ஜவகர்லால் நேருவுக்கு நெருங்கிய நண்பர். 1926-ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட முனுசாமியோ மிகச்சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். கோயங்கா விமானத்தில் பயணித்தும், பின்னர் ஹெலிகாப்டரில் பறந்தும் பரப்புரை மேற்கொண்டார். ஆனால், ஏழையான திருக்குறள் முனுசாமி அவர்களுக்கோ அவரது மிதிவண்டி தான் பரப்புரை வாகனம் ஆகும்.
இப்போது இருப்பது போன்று அப்போது தேர்தல் நடத்தை விதிகள் கடுமையானதாக இல்லை. அதைப் பயன்படுத்திக் கொண்டு இராம்நாத் கோயங்கா ஹெலிகாப்டர் மூலம் துண்டறிக்கைகளை வீசி பரப்புரை செய்ததாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டரில் இருந்து ஒரு ரூபாய் நோட்டுக்களை வாரி இறைத்து தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர்.
மறுபுறம் முனுசாமிக்கோ தேர்தல் செலவுக்கே பணம் கிடையாது. அதனால் அந்தத் தேர்தலில் கோயங்கா தான் வெல்வார்; முனுசாமியின் தோல்வி உறுதி என்று கூறப்பட்டது.
தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான போது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோயங்கா தோல்வியடைந்தார். அவருக்கு கிடைத்த வாக்குகள் 1,22,561 மட்டும் தான். ஆனால், திருக்குறள் முனுசாமி 2,14,772 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பணம் தான் வெல்லும் என்று நினைத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இனம் தான் வெல்லும் என்று நிரூபித்த மண் திண்டிவனம்.
அதே வரலாற்றை படைக்க காத்துக் கொண்டிருக்கிறது விக்கிரவாண்டி. பாட்டாளிகளாகிய நீங்கள் ஆற்றும் களப்பணி தான் அந்த புதிய வரலாறுக்கான அடித்தளமாக அமையும் என்று கூறியுள்ளார்.
- விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை.
- உரிய ஆவணங்கள் இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மழவன்தாங்கள் சோதனைச் சாவடியில் காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.
சென்னையை சேர்ந்த மருத்துவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் தனது தந்தையின் இடத்தை விற்பனை செய்து, பணத்தை சென்னை எடுத்து செல்வதாக தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி வழியாக பணத்தை எடுத்து செல்ல முடியாது என்பதால், திருவண்ணாமலை சென்று அங்கிருந்து சென்னை செல்ல திட்டமிட்டிருந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.






