என் மலர்
விழுப்புரம்
- நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
- பா.ம.க. , நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட அனைத்து வேட்பாளர்களும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் மும்முரமாக உள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தி.மு.க.வை சேர்ந்த நா.புகழேந்தி. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர் மரணம் அடைந்தார்.
இதையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை மறுநாள் (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பாக அன்னியூர் சிவா, பா.ம..க. சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இதனால் இங்கு தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் பிரசாரம் செய்தார். மேலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அவருடைய மனைவி சவுமியா அன்புமணி மற்றும் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜனதா கூட்டணி தலைவர்களும் பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல இடங்களில் வாக்குகளை சேகரித்தார்.
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து, திறந்த வாகனத்தில் நின்றபடி நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட திருவாமாத்தூர், காணை, பனமலைப்பேட்டை, அன்னியூர் ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார்.
பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேற்று மாலை அய்யூர்அகரம், தென்னமாதேவி, திருவாமாத்தூர், சோழகனூர், கொசப்பாளையம், சங்கீதமங்கலம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.
தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
இதனால் வேட்பாளர்கள் தற்போது இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று (திங்கட்கிழமை) தும்பூர், நேமூர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாலை 5 மணிக்கு விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதியில் பிரசாரத்தை முடிக்கிறார்.
இதேபோல பா.ம.க. , நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட அனைத்து வேட்பாளர்களும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் மும்முரமாக உள்ளனர்.
இதனிடையே வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரப்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 276 வாக்குச்சாவடி மையங்களில் நடக்கிறது.
தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளை போலீசார் துணையுடன் தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 13ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகிறது.
- விக்கிரவாண்டியில் பாலம், சாலை உள்ளிட்ட பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்படும்.
- நந்தன் கால்வாய் திட்டப்பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை நடைபெறுவதை முன்னிட்டு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து திருவாமாத்தூர் கிராமத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு பணியையும் பார்த்து பார்த்து முதல்வர் செய்து வருகிறார்.
தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல பெட்ரோல், பால் விலையை குறைத்தார்.
பெண்களுக்கான விடியல் பணயத்திட்டத்தில் 500 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் விடியல் பயணத்திட்டத்தில் 8 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத்திட்டத்தால் பலரும் பயனடைந்து வருகின்றனர்.
31 ஆயிரம் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
1.16 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.
விக்கிரவாண்டிக்கான திட்டங்கள் தேர்தலுக்குப்பின் செயல்படுத்தப்படும். விக்கிரவாண்டியில் பாலம், சாலை உள்ளிட்ட பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்படும்.
நந்தன் கால்வாய் திட்டப்பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. விக்கிரவாண்டியில் ரூ.75 லட்சத்தில் பூங்கா அமைக்கப்படும்.
அன்னியூர் சிவாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வருவாய்த்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த மாடுகளை பார்வையிட்டு விசாரணை.
- உடற்கூராய்வுக்காக நேமூர் கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி அருகே தென்பேர் ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் நாகப்பன் மனைவி ஜெயலட்சுமி (வயது55). இவர் நேற்று காலை மேய்ச்சலுக்காக தனது 11 மாடுகளை அதே பகுதியில் உள்ள சரவணன் என்பவரின் வயலில் விட்டிருந்தார்.
இந்த நிலையில் இரவு பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக அப்பகுதியில் சென்ற உயரழுத்த மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது. இந்த மின்கம்பியை அங்கு மேய்ந்து கொண்டிருந்த 6 மாடுகள் மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே 6 மாடுகளும் செத்தன.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் உடனே, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரிய தச்சூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த மாடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மின் இணைப்பை துண்டித்து இறந்த மாடுகளை உடற்கூராய்வுக்காக நேமூர் கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெரிய தச்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமைச்சர் பொன்முடி, கொள்கை பரப்புச்செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்பி. ஆகியோர் தலைமையில் மாலை 4 மணிக்கு திருவாமாத்தூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
- திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கிறார்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 10-ந் தேதி நடக்கிறது.
இத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், இத்தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார். இதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விக்கிரவாண்டி வருகிறார்.
அமைச்சர் பொன்முடி, கொள்கை பரப்புச்செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்பி. ஆகியோர் தலைமையில் மாலை 4 மணிக்கு திருவாமாத்தூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
தொடர்ந்து, மாலை 5 மணிக்கு காணையிலும், 6 மணிக்கு பனமலைப்பேட்டையிலும், இரவு 7 மணிக்கு அன்னியூரிலும் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கிறார்.
அதனை தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு தும்பூரிலும், 9 மணிக்கு நேமூரிலும், மாலை 5 மணிக்கு விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதியிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க.வினர் செய்து வருகின்றனர்.
- நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டு சென்றனர்.
- பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தலையிட்டு, தி.மு.க., நாம் தமிழர் கட்சியினரை சமாதானப்படுத்தினர்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட தொரவி கிராமத்தில் தி.மு.க.வினர் நேற்று மாலை பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் பிரசாரத்தில் ஈடுபட திரவுபதி அம்மன் கோவில் அருகே ஒன்று திரண்டு நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியில் நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டு சென்றனர். தி.மு.க.வினர் நிற்பதை பார்த்த நாம் தமிழர் கட்சியினர், அங்கே நின்று பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது தி.மு.க.வை தாக்கி பேசியதால் தி.மு.க.வினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தலையிட்டு, தி.மு.க., நாம் தமிழர் கட்சியினரை சமாதானப்படுத்தினர். இருந்த போதும் போலீசாரின் முன்னிலையிலையே இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் நெட்டித் தள்ளிக்கொண்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- சட்டமன்ற தேர்தலுக்கான ஒவ்வொரு வேட்பாளருக்கும், வாக்குப்பதிவு நாளன்று வாகன அனுமதி அளிக்கப்படுகிறது.
- பணியாளர்கள் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம் ஆகிய வாகனங்களின் அனுமதி தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்படும்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி 8-ந் தேதி மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி சில கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்.
அதன்படி, தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது. எந்தவொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், எக்ஸ், குறுஞ்செய்தி மற்றும் இணையம் உள்பட அனைத்து மின்னணு வடிவிலான சாதனம் மூலமாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக்கூடாது. பொதுமக்களை ஈர்க்கிற வகையில், இசை நிகழ்ச்சி, திரையிடுதல் மற்றும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்து, அதன் மூலம் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது.
இந்த கட்டுப்பாடுகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சி பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் 8-ந் தேதியன்று மாலை 6 மணிக்கு மேல் அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். திருமண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா? என்பதை கண்டறியப்படும். வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் வாகன அனுமதிகள் 8-ந் தேதி மாலை 6 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும்.
சட்டமன்ற தேர்தலுக்கான ஒவ்வொரு வேட்பாளருக்கும், வாக்குப்பதிவு நாளன்று வாகன அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி, வேட்பாளரின் சொந்த பயன்பாட்டிற்கான ஒரு வாகனம், தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்காக ஒரு வாகனம், தேர்தல் முகவர் அல்லது அவரது பணியாளர்கள் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம் ஆகிய வாகனங்களின் அனுமதி தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்படும்.
வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச்சாவடிகளில் இருந்து அழைத்துச்செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும். 2 பேரை மட்டுமே கொண்ட, வேட்பாளர்களின் அரசியல் கட்சிகளின் தற்காலிக பிரசார அலுவலகம், வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 10-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
- அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், அமைப்புகள், அனைத்து கல்வி நிறுவனங்கள் அனைத்தும் 10-ம் தேதியன்று மூடப்படும்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வரும் 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 10-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. எனவே அந்த தொகுதிக்கு 10-ம் தேதியன்று பொது விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி அந்த தொகுதிக்குள் உள்ள அரசு அலுவலகங்கள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், அமைப்புகள், அனைத்து கல்வி நிறுவனங்கள் அனைத்தும் 10-ம் தேதியன்று மூடப்படும்.
மேலும், விழுப்புரம் மாவட்டம் மற்றும் அருகில் உள்ள பிற மாவட்டங்களில் பணியாற்றும் விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு வாக்களிக்க வசதியாக, அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் 10-ம் தேதியன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க. பல தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது.
- புதுப்புது காரணங்களை கண்டுபிடித்து சொல்லும் எடப்பாடி தமிழக மக்களுக்கு ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி தலைவராக இல்லை.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியில் பா.ம.க. வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-
* பீகார், கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்போது தமிழக அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாதது ஏன்?
* பீகாரில் அனுமதி உள்ளபோது தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனுமதியில்லையா?
* தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தி.மு.க. அரசு தயாராக இல்லை.
* சிலரின் சுயலாபம் மற்றும் அதிகாரத்திற்காக அ.தி.மு.க.வை அழித்து கொண்டிருக்கிறார்கள்.
* கரையான் போல் சிலர் அதிமுகவை அரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
* எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. 2019 முதல் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
* நம்பிக்கை துரோகி என்ற பட்டம் எடப்பாடி பழனிசாமிக்குதான் சரியாக பொருந்தும்.
* ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என பேச சொன்னார் எடப்பாடி பழனிசாமி.
* ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க. பல தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது.
* தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டிருப்பதால் 2026 சட்டமன்ற தேர்தலையும் எடப்பாடி பழனிசாமி புறக்கணிப்பாரா?
* 2026 சட்டமன்ற தேர்தலின் போது தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீராகி விடுமா?
* சட்டம் ஒழுங்கு கெட்டுப்போனதால் விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிக்கிறேன் என கூறிய எடப்பாடி இன்று வேறு காரணம் கூறுகிறார்.
* புதுப்புது காரணங்களை கண்டுபிடித்து சொல்லும் எடப்பாடி தமிழக மக்களுக்கு ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி தலைவராக இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, மக்களவை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் 6000 வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்று 2-வது இடத்தில் அ.தி.மு.க. உள்ளது. கோவையில் 1.18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை தோல்வி அடைந்தார். மிகப்பெரிய அரசியல் ஞானிபோல் அண்ணாமலை பேசுகிறார். அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்துள்ளது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார் என அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
- பிரசார பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
- அத்துமீறல்களை முறியடித்து பாமக வெற்று பெறும் என்றார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன், ஜி.கே.வாசன், பாரிவேந்தர், தேவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
பிரசார பொதுக்கூட்டத்தில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேசினார்.
அதிமுகவினர் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டுமென அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். பெண் வாக்காளர்களை குறிவைத்து சவுமியா அன்புமணி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
10.5 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற பாமகவுக்கு வாக்களிக்குமாறு அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், அத்துமீறல்களை முறியடித்து பாமக வெற்று பெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டியில் பாமக வெற்றிபெறும். ஆட்சி எப்படி இருக்க கூடாது என்பதற்கு திமுக ஆட்சி உதாரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாமக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் மாற்றம் ஏற்பட இது முக்கியமான தேர்தல் என ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.
பாமக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். பல தேர்தலை சந்தித்துள்ளோம், மாற வேண்டியது நாம்தான் என ரவி பச்சைமுத்து தெரிவித்துள்ளார்.
- 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.
- மேயர்கள் பதவி விலகில் என்னவோ நடக்குது.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுப்பு , மதுவிலக்கு அமல்படுத்த மறுப்பு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இதனை அறிந்த தி.மு.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளது.
பா.ம.க. கூட்டத்திற்கு வரும் பெண்களை அடைத்து வைப்பது, உள்ளாட்சி பிரதிநிதிகளை மிரட்டுவது என தி.மு.க. அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த அத்துமீறல்களை முறியடித்து பா.ம..க வேட்பாளர் 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.
அ.தி.மு.க.வின் நோக்கமும் பா.ம.க.வின் நோக்கமும் இத்தேர்தலில் ஒன்றாகவே உள்ளது. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தி.மு.க.வை தீய சக்தி என்று கற்றுகொடுத்தனர். அந்த தீய சக்தியை வீழ்த்தும் வலிமை பாமகவிற்கு உண்டு. எனவே பா.ம.க.வின் மாம்பழ சின்னத்தில் அ.தி.மு.க.வினர் வாக்களிக்க வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பை இல்லாத காரணங்களை காட்டி அரசு தட்டிகழிக்கும் அரசு பதவி விலகவேண்டும். விழுப்புரம் அருகே டி.குமாரமங்கலத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து ஜெயராமன் இறந்துள்ளார். மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியிலிருந்து முருகன் வாங்கி வந்த கள்ளச்சாராயம் என தெரியவந்துள்ளது. இதிலிருந்து கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தமிழக அரசு தவறியதால் முதல்-அமைச்சர் மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். சாதிவாரி இடஒதுக்கீட்டால்தான் பலர் கல்வி கற்றுள்ளார் என்று தி.மு.க.வை சேர்ந்த ஆர்.எஸ் பாரதி கூறியிருப்பது கண்டிக்கதக்கது.
தி.மு.க. சமூகநீதிக்கு செய்த நன்மைகளைவிட தீமைகளே அதிகம். சட்டநாதன் அறிக்கையை செயல்படுத்த மறுத்தவர் கருணாநிதி. இடைத்தேர்தலுக்கு பின் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க தோல்வி அடைந்தால் மின் கட்டண உயர்வை அரசு கைவிடும்.
மாநில கல்வி கொள்கை அறிக்கையை அரசு வெளியிடவேண்டும். நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதால் இதை கைவிட வேண்டும் என பா.ம.க . தொடர்ந்து வலியுறுத்துகிறது. நீட் தேர்வை திணித்த தி.மு.க.வும், காங்கிரசும்தான்.
அப்போது நீட் தேர்வை அறிமுகம் செய்த தி.மு.க. இன்று அதற்கு எதிராக காட்டிக்கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழக முதல்-அமைச்சர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.
கல்விகண் திறந்த காமராஜர் பெயரில் உள்ள பல்கலைக்கழகம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக்கூட நிதி இல்லாமல் உள்ளது. இப்பல்கலை கட்டுப்பாட்டில் 121 கல்லூரிகள் உள்ளது. பிற கல்லூரிகளிடமிருந்து தலா ரூ.50 லட்சம் கேட்டுள்ளது.
தமிழக அரசு இப்பல்கலைக்கு ரூ.500 கோடி கடன் வழங்க வேண்டும். தி.மு.க தோல்வி அடைந்துவிடும் என்று தெரிந்ததால் தான் முதலமைச்சர் பிரச்சாரத்திற்கு வரவில்லை என தெரிகிறது. அப்படியே பிரச்சாரம் செய்தாலும் தி.மு.க தோல்வி அடையும். மேயர்கள் பதவி விலகில் என்னவோ நடக்குது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
- தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பெரியார் திடலில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, தொகுதிக்குப்பட்ட கிராமங்களில் வீதி, வீதியாக சென்று மாம்பழம் சின்னத்தில் பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அவரை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி, இவர்களது மகள் சங்கமித்ரா ஆகியோர் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் விக்கிரவாண்டி பெரியார் திடலில் இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
இக்கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமை தாங்குகிறார். ஜி.கே.மணி எம்.எல்.ஏ. அனைவரையும் வரவேற்று பேசுகிறார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் முன்னிலை வகிக்கின்றனர்.
இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் , பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க. உரிமை மீட்புக்குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி தலைவர் சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ரவிபச்சமுத்து, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன்யாதவ், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாம்பழம் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து சிறப்புரையாற்ற உள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் பா.ம.க.வினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
- தாழ்த்தப்பட்ட சமுதாயமும், வன்னிய சமுதாயமும் பெரிய சமுதாயங்களாகும்.
- திராவிடக் கட்சிகள் நம்மை பிரித்து சூழ்ச்சி செய்து வருகின்றன.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து காணை காலனி பகுதியில் அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தேர்தல் பிரசாரம் செய்து பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தாழ்த்தப்பட்ட சமுதாயமும், வன்னிய சமுதாயமும் பெரிய சமுதாயங்களாகும். தமிழக மக்கள் தொகையில் 40 சதவீதம் இந்த இரு சமுதாயத்தினர்தான் உள்ளனர். இந்த இரு சமுதாயங்களும் ஒன்று சேர்ந்து விட்டால், வேறு எந்த கட்சிகளும் நமக்கு தேவையில்லை.
வன்னியருக்கு எதிரி தாழ்த்தப்பட்டோர் என்றும், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரி வன்னியர் என்றும் நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் நம்மை முன்னேறவிடாமல் வைத்திருக்கிறார்களே, அவர்கள் தான் நம் முதல் எதிரி. திராவிடக் கட்சிகள் நம்மை பிரித்து சூழ்ச்சி செய்து வருகின்றன.
நான் இங்கு அரசியல் பேச வரவில்லை. நியாயம் கேட்க வந்திரு க்கிறேன்.1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தி.மு.க.வில், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது 1999-ல் தான்.
ஆனால், பா.ம.க.வில் 1998-ம் ஆண்டிலேயே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த தலித் ஏழுமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அதுபோல, அம்பேத்கர் சிலையை தமிழகத்தில் அதிகளவில் திறந்தவர்பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தான். உங்களை வாக்கு வங்கியாகத்தான் அவர்கள் பார்க்கிறார்கள். நீங்கள் முன்னேற வேண்டும் என்பதுதான் பா.ம.க.வின் எண்ணம்.
நமக்குள் சண்டை, பிரச்சினை எதற்கு?. நாம் ஒன்று சேர்ந்தால் இவர்களுக்கு வேலை இல்லை. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர்களே சிந்தித்துப்பாருங்கள். நாம் முன்னேற வேண்டும். நமக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும். இந்த இடைத்தேர்தல் மூலம் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினால்தான் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மாறுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.






