என் மலர்tooltip icon

    வேலூர்

    நாட்டறம்பள்ளி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தர்மபுரி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி பலியானார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாட்டறம்பள்ளி:

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் மகேந்திரன் (52). தர்மபுரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர். நேற்று சென்னை தி.நகரில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் மகேந்திரன் கலந்து கொண்டார்.

    அவருடன் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த அருண் (22), ராஜசேகர் (25), தமிழ் (24) உடன் சென்றிருந்தனர். கூட்டம் முடிந்ததும் நேற்று இரவு காரில் புறப்பட்டனர். டிரைவர் வெங்கடேஷ் காரை ஓட்டி வந்தார்.

    நள்ளிரவு 2 மணிக்கு வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி லெட்சுமிபுரம் என்ற இடத்தில் சென்றபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் தேசிய நெடுஞ்சாலை தடுப்பு கம்பியில் மோதி கவிழ்ந்தது.

    இதில் மகேந்திரன் மற்றும் டிரைவர் உள்பட 5 பேரும் படுகாயமடைந்தனர்.

    நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேந்திரன் பரிதாபமாக இறந்தார்.

    நாட்டறம்பள்ளி போலீசார் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    உயர் அதிகாரிகளிடம் அவதூறாக பேசியதாக ஆம்பூர் நகராட்சி கமி‌ஷனர் பார்த்தசாரதி சஸ்பெண்டு செய்யப்பட்டார். #Suspend
    ஆம்பூர்:

    ஆம்பூர் நகராட்சி கமி‌ஷனர் பார்த்தசாரதி (45), வாணியம்பாடி நகராட்சி கமி‌ஷனர் பொறுப்பையும் கவனித்து வந்தார். இவர் உயர் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலகத்துக்கு புகார் சென்றது.

    இதுகுறித்து, விசாரணையில் பார்த்தசாரதி மீதான புகார் நிரூபணமாகியுள்ளது.

    இதையடுத்து பார்த்த சாரதியை சஸ்பெண்டு செய்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்த ஆணை சென்னையில் இருந்து பேக்ஸ் மூலம் ஆம்பூர் நகராட்சி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    நகராட்சி கமி‌ஷனர் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Suspend
    ஆம்பூரில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை புதுதெருவை சேர்ந்தவர் பழனி மகள் ஐஸ்வர்யா (வயது 18). இவரும் கம்பிக்கொள்ளை பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் ஜெயசூர்யா என்பவரும் கடந்த 2ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் 2 பேர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    கடந்த 31-ந் தேதி பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி பேரணாம்பட்டில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.

    சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே விபத்தில் மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி நேருநகரை சேர்ந்தவர் ராஜா. டீ மாஸ்டர். இவருடைய மகள் தமிழ்ச்செல்வி (வயது 14). இவர், சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை பள்ளி முடிந்ததும், சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார், திடீரென தமிழ்ச்செல்வி மீது மோதியது.

    இதில் அவர் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    கெங்கையம்மன் கோவில் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க சுரங்கப்பாதை ஒன்று அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்து வருகிறோம்.

    கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. ஆர்.டி.ஓ. அலுவலக சந்திப்பில் இருந்த அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளும் அகற்றப்பட்டன. இதற்கு பிறகு எந்த பணிகளும் நடைபெறவில்லை.

    சாலையை கடக்கும்போது, பலர் விபத்தில் சிக்கி இறந்துள்ளனர். விரைவில் இந்த பகுதியில் சுரங்கப்பாதை ஒன்று அமைத்து, விபத்தைத் தடுக்க வேண்டும், என்றனர்.

    வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட 1½ டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    வேலூர்:

    சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக்கால் ஆன தட்டு, தண்ணீர் பாக்கெட்டுகள், கைப்பை, உறிஞ்சுகுழல் உள்பட 14 வகையான பொருட்களுக்கு அரசு தடை விதித்திருந்தது. மேலும் அவற்றுக்கு பதிலாக துணிப்பை, கண்ணாடி டம்ளர், வாழை இலை, மந்தார இலை, தாமரை இலை, பாக்கு மட்டை போன்றவற்றை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

    தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் குறித்தும், அவற்றுக்கு பதிலாக பயன்படுத்தும் பொருட்கள் குறித்தும் வேலூர் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. மேலும் இதுதொடர்பாக பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள் இடையே பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் அரசு அறிவித்த 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை அமலுக்கு வந்தது.

    வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடையை மீறி கடைகளில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய 400 பேர் கொண்ட குழு, கமிஷனர் சிவசுப்பிரமணியன் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டது. இக்குழுவினர் நேற்று காலை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், வணிக நிறுவன குடோன்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    வேலூர் மாநகராட்சி நகர்நல அலுவலர் மணிவண்ணன், 2-வது மண்டல உதவிகமிஷனர் கண்ணன், சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர், சுண்ணாம்புக்கார தெரு, ரொட்டிக்கார தெரு, அண்ணா பஜார், சிட்டிங் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்களில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கைப்பைகளை பறிமுதல் செய்தனர்.

    மண்டித்தெரு, லாங்குபஜார் பகுதியில் உள்ள ஜவுளிக்கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கைப்பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது மாநகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதேபோன்று 1,3,4-வது மண்டலத்திலும் சுகாதார ஆய்வாளர்கள் பாலமுருகன், லூர்துசாமி, சிவக்குமார் ஆகியோர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. வேலூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் 175 கிலோ பிளாஸ்டிக் பொருட்களும், 2-வது மண்டலத்தில் 1 டன், 3-வது மண்டலத்தில் 55 கிலோ, 4-வது மண்டலத்தில் 200 கிலோ என 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வேலூர் மாநகராட்சியில் உள்ள ஓட்டல்களில் பிளாஸ்டிக் பயன்பாடு பெரிதும் குறைக்கப்பட்டுள்ளது. தள்ளுவண்டி, சிற்றுண்டி கடைகளிலும் வாழை இலைகளிலேயே உணவு பரிமாறப்பட்டது. உணவுப்பொருட்கள் பார்சல் பெற்று சென்றவர்களிடம் பாத்திரம் கொண்டு வரும்படி கடைக்காரர்கள் அறிவுறுத்தினார்கள். சில ஓட்டல்களில் பார்சலில் வழங்கும் உணவுப்பொருட்களுக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டது.

    வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள இறைச்சி கடைகளில் வாழை இலைகளில் சிக்கன், மட்டன் ‘பேக்கிங்’ செய்யப்பட்டது. மளிகை கடைகளில் துணிப்பைகளில் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் கடைக்கு வரும்போது கைப்பை கொண்டு வரவேண்டும் என பொதுமக்களை வியாபாரிகள் அறிவுறுத்தினர். துணிப்பைகளில் தேவை அதிகரிப்பு காரணமாக அதன் விலையும் அதிகமாகி உள்ளது.
    வாலாஜா அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். #VelloreAccident #ChennaiAccident #CarTruckAccident
    வாலாஜா:

    வாலாஜா அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். சென்னையைச் சேர்ந்த இவர்கள் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது இந்த சோக சம்பவம் நடந்தது.

    சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள பனையூர் கும்மிடிகான் தோப்பு என்ற இடத்தை சேர்ந்தவர் சாதிக் அலி (வயது 40). சோழிங்கநல்லூர் மீன்மார்க்கெட்டில் கோழிக்கடை நடத்தி வந்தார். இவருடைய உறவினர் ஒருவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இறந்துவிட்டார். அவருடைய காரிய நிகழ்ச்சிக்காக சாதிக் அலி நேற்று காலை தனது குடும்பத்தினருடன் ஒரு காரில் ஆரணிக்கு சென்றிருந்தார். காரியம் முடிந்ததும் மாலையில் அனைவரும் ஊருக்கு திரும்பினர். காரை சாதிக் அலி ஓட்டி உள்ளார்.



    நேற்று இரவு 7 மணியளவில் வேலூர் மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடியை தாண்டி வன்னிவேடு ஊராட்சி பகுதியில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது ரோட்டின் ஓரத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்பிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று தேசியநெடுஞ்சாலைக்கு வந்து எதிர்திசையில் திரும்பியது.

    இதை பார்த்ததும் சாதிக் அலி காரை நிறுத்த முயன்றார். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் கன்டெய்னர் லாரியின் பக்கவாட்டில் கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதைபார்த்த பொதுமக்கள் சென்று அவர் களை மீட்க முயன்றனர்.

    ஆனால் இடிபாடுகளுக்குள் அவர்கள் சிக்கியிருந்ததால் மீட்கமுடியவில்லை. அதைத்தொடர்ந்து வாலாஜா போலீஸ் நிலையம் மற்றும், ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.

    காருக்குள் 2 பெண்கள் உள்பட 6 பேர் இருந்தனர். அவர்கள் அனைவருமே இருந்த இடத்திலேயே பிணமாக கிடந்தனர். 6 பேரின் உடல்களையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், ராணிப்பேட்டை துணைபோலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், வாலாஜா இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் விபத்தில் பலியானவர்கள் சாதிக் அலி, அவருடைய மனைவி பர்வீன் (35), மகன் மகபூப்பாஷா (15), சாதிக் அலியின் தந்தை அன்வருதீன் (70), தாய் அலாமாபீ (65) மற்றும் பர்வீனின் உறவினர் அகமதுபாஷா (60) என்பது தெரியவந்தது. 6 பேரின் உடல்களும் வாலாஜா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த விபத்து குறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    வேலூர் ஜெயிலில் குடியாத்தம் கைதி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    குடியாத்தம் அருகே உள்ள தட்டப்பாறை சின்னாலிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 30), கடந்த ஆண்டு இவரது மனைவி வள்ளியை அடித்து கொலை செய்தார்.

    இந்த வழக்கில் குடியாத்தம் தாலுகா போலீசார் பிரபுவை கைது செய்ததனர்.பின்னர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜெயிலில் அவருக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கபட்டது.

    இதற்காக ஜெயில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மாத்திரை சாப்பிட்டு வந்தார். நேற்று பிரபுவுக்கு வலிப்பு ஏற்பட்டது. அவரை சிறைதுறையினர் மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு பரிதாபமாக இறந்தார்.

    வேலூர் ஜெயிலில் கைதிகள் பலர் உடல் நலம் பாதிக்கபட்டு வருவது தொடர்ச்சியாக நடக்கிறது. இன்று கைதி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூரில் மனநிலை பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமிக்கு பெயிண்டர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #girlmolestation

    வேலூர்:

    வேலூர் அடுத்த பெருமுகை பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 37), பெயிண்டர். இவருக்கு திருமணமாகி 15 வயதில் மகள் உள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஷாஜகானின் மனைவி மற்றும் மகள் அவரை விட்டு பிரிந்து சேத்துப்பட்டில் வசித்து வருகின்றனர்.

    மனைவியை பிரிந்து தனிமையாக வாழ்ந்து வந்த ஷாஜகான் கடந்த சில மாதங்களாக 10 வயது நிரம்பிய மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஷாஜகான் நேற்று முன்தினம் இரவு சிறுமியை ஒரு மறைவான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஷாஜகான், சிறுமியை அழைத்து செல்வதை கண்டு சந்தேகம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் இதுகுறித்து சிறுமியின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர்.

    அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது சிறுமிக்கு ஷாஜகான் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. இது குறித்து சிறுமியின் தந்தை வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மைதிலி வழக்குப்பதிந்து ‘போக்சோ’ சட்டத்தில் ஷாஜகானை கைது செய்தார்.

    மனநிலை பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமிக்கு பெயிண்டர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #girlmolestation

    வாணியம்பாடி அருகே காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தை மீண்டும் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்ததால் 15 கிராம மக்கள் விடிய விடிய தூங்காமல் பீதியில் தவித்தனர்.

    வாணியம்பாடி:

    வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சிக்கணாங்குப்பம் ஊராட்சி நாகலேரிவட்டம் பகுதியில் கடந்த மாதம் 28-ந் தேதி சிறுத்தை ஒன்று கரும்பு தோட்டத்தில் பதுங்கியது. அப்பகுதியை கடந்த பெண் உள்பட 3 பேர் மீது அது திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இத்தகவல் பரவியதை அடுத்து, கரும்புத் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை மீது அப்பகுதியை சேர்ந்த திரளானோர் ஒன்றிணைந்து கல்வீச்சு நடத்தினர். அப்போது கூட்டத்தினர் மீது சிறுத்தை பாய்ந்து தாக்குதல் நடத்தியதில், மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

    இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் முருகன் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க மாட்டு இறைச்சி, கோழி ஆகியவற்றை அடைத்த 3 கூண்டுகளை சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் வைத்தனர். மயக்க மருந்து செலுத்தி சிறுத்தையைப் பிடிக்க வண்டலூர், ஓசூரில் இருந்து மயக்க மருந்து நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். 3 நாள்கள் அவர்கள் தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க முயற்சித்த போதும் அது சிக்கவில்லை.

    ஆந்திர வனப்பகுதிக்குள் சிறுத்தை தப்பி சென்று விட்டது. இனி இந்த பகுதிக்குள் சிறுத்தை வராது என்று வனத்துறையினர் அங்கிருந்து சென்றனர்

    இந்நிலையில், சிக்கனாங்குப்பம் அருகே உள்ள அரப்பாண்டகுப்பம் கிராமத்தினுள் நேற்று அதிகாலை மீண்டும் சிறுத்தை புகுந்தது. அங்குள்ள மாட்டுக் கொட்டகை அருகே சிறுத்தை வந்ததைக் கண்ட மாடுகள் கத்தியது. இதனை கேட்ட கிராமத்தினர் தீப்பந்தங்களுடன் ஓடி வந்து சிறுத்தையை விரட்டினர்.

    அதைத் தொடர்ந்து, சிறுத்தை ராஜாமணிவட்டம் கிராமத்தில் புகுந்தது. அங்கு கொட்டையில் கட்டி வைத்திருந்த 2 மாடுகள், கன்று குட்டியை தாக்கியது.

    கன்றுக்குட்டி, மாடுகள் கத்தியதைக் கேட்ட அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து சிறுத்தையை விரட்டினர். காயமடைந்த கன்றுக்குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் காயமடைந்த 2 மாடுகள் பரிதாபமாக இறந்தது. சிறுத்தை கடித்து இதுவரை 5 மாடுகள் இறந்துள்ளது.

    விடிய, விடிய தவித்த கிராம மக்கள்

    வாணியம்பாடியை சுற்றி தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் இரவு நேரத்தில் வெளியே வருவதற்கு அச்சமடைந்துள்ளனர்.

    சிறுத்தை மீண்டும் ஊருக்குள் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதியை சுற்றி உள்ள கொத்தூர், பச்சூர், சிக்கனாங்குப்பம், சங்கரபுரம், தும்பேரி, அரப்பாண்ட குப்பம், சிமுக்கம்பட்டு உள்ளிட்ட 15 கிராம மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் தவித்து விடிய, விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இளைஞர்கள் கிராம வீதியில் தீப்பந்தம் கொளுத்தி வைத்திருந்தனர்.

    இன்று காலை திருப்பத்தூர் வன அலுவலர் சோழராஜன் தலைமையில் வனத்துறையினர் சிக்கனாம்குப்பம், அரபாண்டகுப்பம், ராஜாமணி வட்டம், சிமுக்கம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்களிடம் சிறுத்தை நடமாட்டம் குறித்து கேட்டறிந்தனர். பலியான மாட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.

    சிறுத்தையின் கால் தடங்களை பதிவு செய்து வருகின்றனர். சிறுத்தை எந்த திசையை நோக்கி சென்றுள்ளது என்பது குறித்த ஆய்வு செய்து வருகின்றனர். சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டில் தானியங்கி கதவு வேலை செய்யாததால் மாட்டு இறைச்சியை சிறுத்தை தின்று விட்டு தப்பி சென்று விட்டது.அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    வனத்துறையினர் மைக் மூலம் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.

    கிராம மக்கள் இரவு நேரத்தில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் கூட வீட்டை விட்டு வெளியே வரமல் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    தமிழக- ஆந்திர வனத்துறை இணைந்து பிடிக்க வலியுறுத்தல்

    கிராம மக்கள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபிலை சந்தித்து சிறுத்தையை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர். இந்த கிராமங்கள் அனைத்தும் ஆந்திர மாநில எல்லையில் இருப்பதால் சிறுத்தையை இங்கிருந்து விரட்டினால் ஆந்திர வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது.

    நம் மாநில வனத்துறையினர் சிறுத்தை ஆந்திர வனப்பகுதிக்குள் சென்று விட்டது இனி வராது என்கின்றனர். ஆனால் சில நாட்களில் சிறுத்தை மீண்டும் தமிழக கிராம பகுதிக்குள் புகுந்து எங்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது.

    இதனால் தமிழக- ஆந்திர வனத்துறையினர் கூட்டாக இணைந்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். * * * சிறுத்தை நடமாட்டம் உள்ள கிராம பகுதியில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்த காட்சி.

    வாலாஜா அருகே கோஷ்டி மோதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா:

    வாலாஜா அருகே உள்ள வி.சி.மோட்டூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 21). அதே பகுதியை சேர்ந்தவர் ஷாம்குமார் (21). இவர்கள் 2 பேரும் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.

    அப்போது ஜெயராம்பேட்டை பாவானி அம்மன் கோவிலை சேர்ந்த அரி என்பவர் மணிகண்டன் மீது மோதுவதுபோல் பைக்கில் சென்றுள்ளார். இதனை மணிகண்டன் அரியிடம் தட்டி கேட்டார் அப்போது இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

    இதனை கண்ட அரியின் நண்பர்கள் வேலு, யோகேஸ்வரன், ஆகியோர் வந்து மணிகண்டனை சரமாறியாக தாக்கினர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருதரப்பினரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாணியம்பாடி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். #Leopard

    வாணியம்பாடி:

    வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சிக்கணாங்குப்பம் அருகே உள்ள நாகலேரி வட்ட பகுதியில் கடந்த 28-ந் தேதி சிறுத்தை புகுந்தது அங்குள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கியது.

    கரும்புத்தோட்டத்துக்கு சென்ற பொதுமக்கள் 3 பேரை சிறுத்தை திடீரென பாய்ந்து தாக்கியது.

    சிறுத்தை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர். சிலர் சிறுத்தைப்புலி இருந்த பகுதியை நோக்கி கல்வீசினர். இதனால் கோபம் கொண்ட சிறுத்தை மக்கள் கூடி இருந்த கூட்டத்தில் புகுந்து தாக்க ஆரம்பித்தது. இதனால் பொதுமக்கள் உயிர் தப்பினால் போதும் என கருதி நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும் சிறுத்தை அவர்களை துரத்தி மேலும் 3 பேரை தாக்கியது.

    சிறுத்தையை பிடிக்க 3 கூண்டுகள் கொண்டு வரப்பட்டது. அதில் மாட்டு இறைச்சி, கோழி, நாய் ஆகியவற்றை அடைத்து ஏரி பகுதியில் வைத்துள்ளனர். சிறுத்தையை மயக்க மருந்து செலுத்தி பிடிக்க வண்டலூர், ஓசூரில் இருந்து மயக்க மருந்து நிபுணர்கள் வரவழைக்கபட்டனர்.

    வனத்துறையினர் மயக்க ஊசியுடன் சிறுத்தையை தேடினர். ஆனால் சிறுத்தை சிக்கவில்லை.

    சிறுத்தை அங்கிருந்து தப்பி காட்டுக்குள் சென்றது. இந்த நிலையில் சிக்கனாங்குப்பம் அருகே உள்ள அரப்பாண்ட குப்பம் கிராமத்திற்குள் நேற்று இரவு சிறுத்தை புகுந்தது. ரவி என்பவர் மாட்டு கொட்டகை அருகே வந்தது. அதனை கண்டதும் மாடுகள் சத்தமிட்டன. பொதுமக்கள் தீப்பந்தங்கள் கொளுத்தி சிறுத்தையை விரட்டினர். அவர்கள் விடிய விடிய தூங்காமல் கண்காணித்தனர்.

    அங்கிருந்து ஓடிய சிறுத்தை ராஜாமணிவட்டம் கிராமத்திற்கு சென்று முருகன் என்பவரது கன்றுகுட்டியை தாக்கியது. சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் அதனை விரட்டியடித்தனர். கன்றுகுட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் தாலிக்கு தங்கம் வழங்க சமூக நலத்துறை ஊழியர்கள் மூலம் பொதுமக்களிடம் லஞ்சம் வசூல் செய்தது தெரியவந்துள்ளது. #Thalikkuthangam
    வேலூர்:

    வேலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் பேருக்கு தாலிக்கு தங்கம், உதவித்தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக கடந்த 22-ந் தேதி 707 பெண்களுக்கு தாலிக்கு 8 கிராம் தங்கம், திருமண நிதியுதவி ஆகியவற்றை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் வழங்கினர். அதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் 690 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி வழங்கப்பட்டது.

    பயனாளிகளிடம் சமூக நலத்துறை அலுவலர் சாந்தி மற்றும் அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் வேலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணக்குமார், இன்ஸ்பெக்டர்கள் விஜய், எஸ்.விஜயலட்சுமி மற்றும் போலீசார் நேற்று மாலை 6 மணியளவில் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்றனர்.

    முதற்கட்டமாக அங்கிருந்த பொதுமக்களை வெளியேற்றினர். பின்னர் வெளியாட்கள் உள்ளேயும், அலுவலக ஊழியர்கள் வெளியேயும் செல்லாதபடி அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர். தொடர்ந்து சமூக நலத்துறை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

    இச்சோதனையில் பீரோவின் அடியில், சாமி படத்தின் பின்புறம், கழிவறை, மேசையின் அடியில் என பல பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ.76,500 லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியது.

    இதுதொடர்பாக மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சாந்தி, கணக்காளர் உள்பட 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 4 மணி நேரம் நீடித்தது.



    நேற்று தாலிக்கு தங்கம் பெற்ற 690 பேரிடமும் இருந்து ரூ.500 முதல் ரூ.1,500 வரை சமூகநலத்துறை அதிகாரிகள் லஞ்சமாக பெற்று தாலிக்கு தங்கம், நிதியுதவி வழங்கியுள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள சமூக நலத்துறை ஊழியர்கள் மூலம் இந்த பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    பண வசூல் செய்த சமூக நலத்துறை ஊழியர்கள் குறித்து விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.  #Thalikkuthangam

    ×