என் மலர்
வேலூர்
வேலூர் காகிதப்பட்டறையை சேர்ந்தவர் ராஜா (வயது 37). இவர் மீது கொலை, கற்பழிப்பு, வழிப்பறி உள்ளிட்ட 22 வழக்குகள் உள்ளன. தலைமறைவாக இருந்த ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வேலூரில் பதுங்கியிருந்த ராஜாவை நேற்று கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் செம்மர கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
மேலும் ராஜா காட்பாடி விருதம்பட்டு அரிஹிந்த்நகரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் செம்மரங்களை பதுக்கி வைத்திருந்ததாக தெரிவித்தார்.
இதுபற்றி காட்பாடி டி.எஸ்.பி துரைப்பாண்டியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது தலைமையில் போலீசார் ராஜா வாடகை வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
அவற்றை விருதம்பட்டு போலீஸ் நிலையத்தில் வைத்துள்ளனர். தொடர்ந்து ராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூரை அடுத்த காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியில் உயர் ரக மதுபானங்கள் விற்கும் டாஸ்மாக் கடை உள்ளது. ஊரடங்கு காலத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு நேற்று முன்தினம் 2-வது முறையாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. வண்ண வண்ண டோக்கன்கள் அச்சடிக்கப்பட்டு தினந்தோறும் 500 பேருக்கு மட்டும் மதுபானம் வழங்க வேண்டும் என்ற உத்தரவுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
வேலூர் மாவட்டத்தில் ஒரு சில கடைகளை தவிர்த்து மற்ற டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு டோக்கன் முறையில் மதுபான விற்பனை நடந்தது. இந்தநிலையில் காங்கேயநல்லூர் பகுதியில் உயர் ரக மதுபானங்கள் விற்கும் எலைட் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் சென்று விட்டனர்.
நேற்று காலை வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த உயர்ரக மதுபானங்கள் மற்றும் பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது. இது குறித்து கடை ஊழியர்கள் விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது கடைகளில் மதுபானங்களை திருடிய மர்ம நபர்கள் சில மதுபானங்களை திறந்து ஆசை தீர அங்கேயே குடித்துள்ளனர். பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அதன் மானிட்டரை அருகிலிருந்த குப்பைத்தொட்டியில் வீசி சென்றுள்ளனர்.
கடையில் திருட்டு போன உயர் ரக மதுபானங்களின் விலை சுமார் ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. ரூ.25 ஆயிரத்தையும் திருடிச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். இரவிலும் அனல் காற்று வீசியதால் அவர்கள் தூக்கத்தை தொலைத்தனர். ஊரடங்கு இருப்பதாலும், வெயிலில் தாக்கத்தாலும் பொதுமக்கள் பலர் வீடுகளிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர்.
வேலூரில் கடந்த சில நாட்களாக 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் 104.7 டிகிரி பதிவாகி இருந்தது. நேற்று பிற்பகல் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. இந்தநிலையில் பிற்பகல் 3 மணி அளவில் திடீரென சூறாவளி காற்று வீசியது. இதனால் சாலையில் புழுதி கிளம்பியது. அப்போது வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். தொடர்ந்து 4 மணி அளவில் திடீரென மழை பெய்தது. ஆனால் மழை அதிக நேரம் நீடிக்கவில்லை. சிறிது நேரத்திலேயே நின்று விட்டது. அதைத்தொடர்ந்து குளிர்ந்தகாற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
டாஸ்மாக் நிர்வாக வசதிக்காக வேலூர் மற்றும் ராணிப்பேட்டை என இரு மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 72 கடைகளில் 55 கடைகள் நேற்று திறக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 46 கடைகளில் 15 கடைகள் , ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள 88 டாஸ்மாக் கடைகளில் 67 கடைகள் திறக்கப்பட்டன.
குடி மகன்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன் பெற்று மது வாங்கி சென்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
வேலூர் ,திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மொத்தம் ரூ.4கோடியே 50 லட்சத்திற்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ 3 கோடியே 55 லட்சத்திற்கும் மதுபானங்கள் விற்பனையானது.
வேலூர்,திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 7ந்தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டபோது ஒரே நாளில் ரூ 5 கோடிக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ 3 கோடியே 40 லட்சம் மது விற்பனையானது.7ந் தேதியை விட நேற்று ரூ 35 லட்சம் குறைவாக மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 215 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் உள்ள 168 கடைகள் நேற்று திறக்கப்பட்டன. நேற்று மட்டும் இந்த டாஸ்மாக் கடைகளில் ரூ 6 கோடியே 90 லட்சத்துக்கு மது விற்பனையானது.
கடந்த 7 ந் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ5 கோடிக்கு மது விற்பனையானது.அதை விட ரூ.1 கோடியே 90 லட்சம் அதிகமாக நேற்று மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன.
4 மாவட்டத்தில் மொத்தம் ரூ.14.95 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
குடியாத்தம்:
தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ள தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தடை உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் தமிழக அரசின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலர் தேவி, துணை தாசில்தார் செந்தில், வருவாய் ஆய்வாளர்கள் ஜோதி, பூங்கோதை, வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலக உதவியாளர் வடிவேலு வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, குடியாத்தம் தாசில்தார் வத்சலா, நகராட்சி ஆணையர் ரமேஷ், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் கலந்துக்கொண்டு 517 தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ எண்ணெய் உட்பட மளிகை பொருட்களை வழங்கினார்கள்.
தொழிலாளர்கள் சமூக இடைவெளியில் நின்று பெற்று சென்றனர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அன்னை ராஜம்மாள் கட்டுமானம் மற்றும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் இமயவரம்பன், கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில், வெங்கடாஜலபதி, குமார் உள்பட அரசு அதிகாரிகள், அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த தன கொண்டபள்ளி கிராமம் வனப்பகுதி அருகே உள்ள நிலங்களுக்குள் நேற்று நள்ளிரவு 7 காட்டு யானைகள் புகுந்தது.
அங்கு நாகராஜ் மற்றும் கண்ணையன் என்பவரின் மாந்தோப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் ஏராளமான மா மரங்களை ஒடித்து நாசப்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் காட்டு யானைகளை அடர்ந்த காட்டு பகுதிக்குள் விரட்டி விட்டனர்.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி பகுதியில் முக கவசம் அணிந்துதான் வெளியே செல்லவேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அதோடு முக கவசம் இன்றி வெளியே செல்பவர்களிடம் 100 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படுகிறது. ஆனாலும் முக கவசம் இன்றி வெளியே செல்வது தொடர்கிறது.
வேலூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முக கவசம் அணியாமல் வெளியே நடமாடுபவர்களிடம் 100 ரூபாய் அபராதம் வசூலிப்பதை தீவிரப்படுத்துமாறு மாநகராட்சி சுகாதாரத்துறையினருக்கு கமிஷனர் சங்கரன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வெளியே செல்பவர்கள் தாங்கள் செல்லும் இடங்களில் கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
வணிகர்கள், வியாபாரிகள் ஆகியோர் தங்கள் கடைகளுக்கு முன்பாக கை கழுவும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
உதாரணமாக 2 அல்லது 3 கடைகளை சேர்ந்தவர்கள் இணைந்தும், கைகழுவும் வசதியை ஏற்படுத்தி கொள்ளலாம்.
இது வணிகர்கள், வியாபாரிகள் மற்றும் மக்களுக்கு பாதுகாப்பானதாக அமையும் என்று கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் உள்ள போர்வெல்களில் மோட்டார் மற்றும் பைப்புகள் பழுதடைந்ததால் கடந்த பல நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிராம மக்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். பைப்கள் சரி செய்யப்படாததால் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு தட்டப்பாறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பழுதடைந்த மோட்டார் மற்றும் பைப்புகளை உடனடியாக சீர் செய்வதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் 100 பேர் ஒரே இடத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாலாஜா:
வாலாஜா ஒன்றியம் வன்னிவேடு ஊராட்சிக்கு உட்பட்ட ரபிக் நகர், தென்றல் நகர், சத்யா நகர், காந்தி நகர், பெரியார் நகர் கீழ்தேவதானம், மேல் தேவதானம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வன்னிவேடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சேஷாவெங்கட் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறி அடங்கிய தொகுப்பினை 601 ஏழை எளிய குடும்பங்களுக்கு வழங்கினார்.
மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், ராணிப்பேட்டை நகர துணை செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் அருகே மோசூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை 7 நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது.
இந்த கடையில் காலை 10 மணிக்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் டாஸ்மாக் கடை முன்பு மது வாங்குவதற்கு வரிசையில் காத்திருந்தனர்.
ஆனால் மதுக்கடையில் உள்ள சூப்பர்வைசர் கடையில் மதுபானம் இல்லாததால் ராணிப்பேட்டையில் இருந்து 2 மணிக்கு மேல்தான் மது கொண்டுவரப்படும் என கூறினார்.
இதனால் ஏமாற்றமடைந்த குடிமகன்கள் தொடர்ந்து கொளுத்தும் வெயிலில் மது வாங்குவதற்கு காத்திருந்தனர்.
வேலூர்:
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி பகுதியில் 2 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த உணவகங்களில் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மாதம் 24-ந் தேதி முதல் நாளை 17-ந் தேதி வரை வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி. எம்.எல்.ஏ. தன்னுடைய சொந்த செலவில் 3 வேளையும் இலவசமாக உணவு வழங்க நடவடிக்கை எடுத்தார்.
பொதுமக்களுக்கு இலவசமாக அம்மா உணவகங்களில் 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சு.ரவி எம்.எல்.ஏ. நேற்று காட்பாடி வந்தார்.
ஓடை பிள்ளையார் கோவில் அருகே உள்ள அம்மா உணவகம், காந்திநகர் பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஆகியவற்றில் திடீர் ஆய்வு செய்தார். அங்கு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த சாம்பார் சாதத்தை ருசித்து பார்த்தார்.
மேலும் உணவு சாப்பிட வந்த பொதுமக்களிடம் உணவு தரமாக இருக்கிறதா என கேட்டறிந்தார். அம்மா
காட்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த மாட்டுவண்டி தொழிலாளி பூபதி (20) என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது.
மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய பூபதி அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதில் கர்ப்பமடைந்த மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ள பூபதியிடம் வற்புறுத்தினார்.
இதையடுத்து பூபதி திடீரென தலைமறைவானார். மாணவி காட்பாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பூபதியை கைது செய்தனர்.






