என் மலர்
வேலூர்
வேலூர் அருகே உள்ள பாலமதி செட்டேரி மலை கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 43) கூலி தொழிலாளி.
கடந்த மாதம் 29-ந் தேதி அவரது நண்பர்கள் 2 பேர் பழனியை வீட்டிலிருந்து அழைத்து சென்றனர்.
பின்னர் அவர்கள் பழனியை சில மணி நேரம் கழித்து வீட்டில் விட்டுச் சென்றனர். அதற்கு பிறகு உடல் சோர்ந்து காணப்பட்ட பழனி கடந்த 3-ந்தேதி இறந்தார்.
அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் உடலை புதைத்தனர்.
இந்த நிலையில் பழனியின் மனைவி ராதா பாகாயம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் மனு ஒன்று அளித்தார். அதில் எனது கணவர் பழனியை அவரது நண்பர்கள் 2 பேர் கடந்த மாதம் வீட்டிலிருந்து அழைத்துச் சென்றபோது நன்றாக இருந்தார்.
அவர்கள் திரும்ப வீட்டுக்கு அழைத்து வந்து விட்டுச் சென்ற போது எனது கணவர் உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. அன்று முதல் சோர்வாக காணப்பட்ட அவர் சில நாட்களிலேயே இறந்துவிட்டார்.
இதனால் எனது கணவர் சாவில் சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து புதைக்கப்பட்ட பழனியின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
மேலும் பழனியின் நண்பர்கள் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி பப்ளிக் மாநாட்டில் பங்கேற்ற ஆம்பூரை சேர்ந்த 16 பேர், வாணியம்பாடியை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 18 பேர் நேற்று விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் வேன் மூலம் அவர்கள் நேற்று இரவு ஆம்பூர், வாணியம்பாடி வந்தனர்.
சுகாதாரத் துறையினர் அவர்களை ஆம்பூர் அடுத்த உமராபாத்தில் உள்ள அரபிக் கல்லூரியில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
அவர்களுக்கு தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு பீகாருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயிலில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் வடமாநில தொழிலாளர்கள் 1464 பேர் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதில் வேலூரில் இருந்து மட்டும் 444 பேர் செல்கின்றனர்.
அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து பஸ்கள் மூலம் அவர்கள் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு ரெயிலில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
காட்பாடியிலிருந்து இன்று மேற்குவங்கத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த ரெயில் இரவு திடீரென ரத்து செய்யப்பட்டது. மேற்குவங்கத்திற்கு சிறப்பு ரெயில் இயக்குவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
காட்பாடியில் இருந்து இதுவரை 7 சிறப்பு ரெயில்களில் சுமார் 9 ஆயிரம் பேர் வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்று பீகாருக்கு செல்லும் 8-வது ரெயிலில் 1464 பேர் செல்கின்றனர்.
திருப்பத்தூர் அருகே உள்ள பாச்சல் கிராமத்தை சேர்ந்தவர் சிவசக்தி (வயது22) லாரி டிரைவர். இவர் வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த லாவண்யா( 20) என்பவரை கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதியின் மகள் பிரவீனா(2).
கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர். லாவண்யா குழந்தையுடன் சத்துவாச்சாரியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றார்.
இந்த நிலையில் காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் அருகே உள்ள தேவரிஷி குப்பத்தை சேர்ந்த பிரவீன்குமார் (22) என்பவரை லாவண்யா 2-வது திருமணம் செய்துகொண்டார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு லாவண்யாவின் குழந்தை பிரவீனாவுக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சில மணி நேரத்தில் குழந்தை இறந்துவிட்டது.
இதைத் தொடர்ந்து குழந்தையின் உடலை லாவண்யா அவருடைய முதல் கணவர் சிவசக்தியிடம் ஒப்படைத்தார். அவர் குழந்தை எப்படி இறந்தது என்று கேட்டதற்கு சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிவசக்தி திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். அதில் தனது மனைவி வேறு ஒரு திருமணம் செய்து கொண்டு குழந்தையை கொலை செய்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இது தொடர்பாக கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் முரளி குழந்தையின் தாய் லாவண்யா மற்றும் அவரது 2-வது கணவர் பிரவீன்குமார் ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார். இதற்கிடையே பிரேத பரிசோதனையில் குழந்தை அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
போலீசார் லாவண்யா மற்றும் பிரவீன்குமாரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
லாவண்யா ஏற்கனவே தனக்கு திருமணமாகி குழந்தை இருப்பதை மறைத்து பிரவீன்குமாரை 2-வதாக திருமணம் செய்தார். அவரது குழந்தை வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அவரது தாய் வீட்டிலேயே இருந்தது.
குழந்தையை பிரிந்து அவரால் இருக்க முடியவில்லை. இதனால் சத்துவாச்சாரிக்கு வந்து குழந்தையை தூக்கிக்கொண்டு தேவரிஷி கும்பத்திற்கு சென்றார்.
அப்போதுதான் பிரவீன் குமாருக்கு லாவண்யாவிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பது தெரியவந்தது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பிரவீன் குமார் குழந்தையை தூக்கி தரையில் அடித்துள்ளார். இதில் குழந்தை தலையின் பின்பக்கம் அடிபட்டு மயங்கியது.
இதனையடுத்து குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று குழந்தையை சேர்த்தனர். அப்போது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறியுள்ளனர்.
குழந்தை இறந்து விட்டதால் கொலையை மறைப்பதற்காக குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டது என நாடகமாடியது தெரியவந்தது. லாவண்யா மற்றும் பிரவீன்குமாரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் 13 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. மாநகர பகுதியில் மட்டும் சுமார் 7 ஆயிரம் ஆட்டோக்கள் உள்ளது.
கடந்த 60 நாட்களாக ஆட்டோக்கள் ஓடாததால் ஆட்டோ டிரைவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வேலூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் இன்று காலை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் முன்பு திரண்டனர். அங்கிருந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர் .அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அலுவலகம் வந்து செல்வதற்கு வசதியாக 27 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்திருந்தார். இந்த பஸ்கள் மாவட்டத்தின் முக்கிய வழித்தடங்களில் வழியாக செல்லும். இதில் பயணம் செய்ய அரசு ஊழியர்கள் தங்களின் துறை மூலம் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். மேலும் முக கவசம் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணி முதல் வேலூர் பழைய பஸ் நிலையத்தில இருந்து பேரணாம்பட்டு, குடியாத்தம், கணியம்பாடி, ஒடுகத்தூர், பொன்னை, சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்சில் அரசு ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு அமர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டிரைவர், நடத்துனர் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர். பஸ்சில் ஏறும் முன்பாக அவர்களுக்கு கை கழுவம் திரவம் வழங்கப்பட்டது.
இதேபோன்று பேரணாம்பட்டு, குடியாத்தம், கணியம்பாடி, ஒடுகத்தூர், பொன்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வாலாஜாவில் இருந்து வேலூருக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்கள் அனைத்தும் மாலை 6 மணிக்கு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டன.
வேலூர் காட்பாடியில் பிளஸ் 2 படித்து வந்த இரட்டை சகோதரிகள் தங்களது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இரட்டை சகோதரிகளான பத்மப்பிரியா, ஹேமப்பிரியா சடலத்தை கைப்பற்றிய போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி இவருக்கு இதே கிராமத்தில் பல ஏக்கர் பரப்பளவில் தைல மர தோப்பு உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென இடி மின்னலுடன் பலத்த சூறைக்காற்று வீசியது. அப்போது தைல மர தோப்பின் மேலே செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்தது.
அதில் ஏற்பட்ட தீப்பொறிகள் தைலமர தோப்பின் மேல் விழுந்தது. தோப்பில் தைல மரங்களில் இலைகள் காய்ந்து கீழே சிதறிக் கிடந்தது.
அதன் மேல் தீப்பொறிகள் பட்டதால் மளமளவென தீ பற்றியது. காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பல இடங்களுக்கும் பரவியது. இதனை கண்ட கிராம மக்கள் உடனடியாக குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கும், வருவாய்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து மேலும் பரவாமல் தடுத்தனர்.
இந்த தீவிபத்தில் 500க்கும் மேற்பட்ட தைல மரங்கள் சேதமாகின. 20 தென்னை மரங்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தாசில்தார் வத்சலா, வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் சசிக்குமார் உள்ளிட்டோர் தீ விபத்து குறித்தும், சேத மதிப்பு குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த தீ விபத்து தொடர்பாக காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரணாம்பட்டு ரெட்டி மாங்குப்பம் ஏரியில் பூமிபூஜை நடந்தது. அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார். கலெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மூலம் 101 ஏரிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. குடிமராமத்து திட்டத்தின் கீழ் இதுவரை மாவட்டத்தில் 3 கட்டங்களாக 42 ஏரிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 3,486.56 ஹெக்டர் விளை நிலங்கள் பாசன வசதிபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
4-ம் கட்டமாக நடப்பு நிதியாண்டில் ரூ.4.69 கோடியில் 14 ஏரிகளை தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
அந்தந்த ஏரிகள் ஆயக்கட்டுதாரர், விவசாய சங்கங்களின் மூலம் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. குடிமராமத்து திட்டத்தின் கீழ் 14 ஏரிகளில் 17.91 நீளத்துக்கு கரைகளை பலப்படுத்தவும் , 103.89 கி.மீ கால்வாய்களை தூர்வாரவும், 23 மதகுகளை பழுதுபார்க்கவும், 2 மதகுகளை மறுகட்டுமானம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் 1,272.83 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இத்திட்டத்தின் கீழ் ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி, உள்வரத்து, வெளிவரத்து கால்வாய்களை சீரமைத்து, ஏரிகளின் கரைகளை பலபடுத்தி, நீர்வள ஆதாரம் பெருக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் தட்டுபாடு இல்லாமல் இருக்க இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் ஊரக வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 157 குளம், குட்டைகள் ரூ.11.26 கோடி மதிப்பில் தூர்வாரும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.
கொரோனா அறிகுறியுடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிறப்பு தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. சுமார் 350 படுக்கைகள் உள்ள இந்த வார்டில் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் உள்ளனர். அதன்படி இங்கு தற்போது 3 மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வீட்டில் இருப்பதைப் போல் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அரசு சார்பில் செய்து கொடுக்கபட்டுள்ளது. மேலும் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே, கொரோனா தொற்று குறித்து ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் வேலூர் அரசு மருத்துவனையில் கொரோனா தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர், நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களை கல்லூரி டீன் செல்வி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜவேலு, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் உள்ளிட்டோர் கைதட்டி வழியனுப்பி வைத்தனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் அருகே தமிழக வனப்பகுதிக்குள் தொடர்ந்து இரவு நேரங்களில் காட்டு யானைகள் புகுந்து வனப்பகுதியை ஒட்டிய படி உள்ள விவசாய நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.
நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணி அளவில் ஆந்திர மாநில காட்டுப்பகுதியில் இருந்து வந்த 3 யானைகள் குடியாத்தம் அடுத்த டி.பி. பாளையம் ஆஞ்சநேயர் கோவில் அருகே முகாமிட்டு இருந்தது.
மேலும் அப்பகுதியில் லதா என்பவரின் நிலத்திற்குள் புகுந்த யானைகள் கரும்பு மற்றும் தக்காளி பயிரை சேதப்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் வனச்சரக அலுவலர் மகேந்திரன், வனவர் முருகன், வனக்காப்பாளர்கள் பூபதி, நீலகண்டன் உள்ளிட்ட வனத்துறையினர் கிராம மக்கள் உதவியுடன் பல மணி நேரம் போராடி அந்த காட்டு யானைகளை ஆந்திர மாநிலம் வனப்பகுதிக்குள் விரட்டிவிட்டனர்.
அதேபோல் ஒற்றை யானை ஒன்று குடியாத்தம் அடுத்த சைனகுண்டா பகுதியில் நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்தும், மேளம் அடித்தும் ஆந்திர மாநில காட்டுப்பகுதிக்குள் விரட்டிவிட்டனர்.
தற்போது தமிழக எல்லைப் பகுதியில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் சுமார் 30 காட்டு யானைகள் ஆந்திர மாநில வனப்பகுதியில் உள்ளன அந்த யானைகளை இரவு நேரங்களில் ஆந்திர வனத்துறையினர் தமிழக வனப்பகுதிக்குள் விரட்டி விடுவதால் தொடர்ந்து அந்த யானைகள் தமிழக வனப்பகுதிக்குள் புகுந்து அருகில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
தமிழக அரசு இதற்கு உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
வேலூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35), கட்டிட தொழிலாளியான இவர் வெல்லைக்கல்மேடு பகுதியில் அறை எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து நேற்று காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மணிகண்டன் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






