search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏரி தூர்வாரும் பணி
    X
    ஏரி தூர்வாரும் பணி

    வேலூர் மாவட்டத்தில் 14 ஏரிகள் தூர்வாரும் பணி தொடங்கியது

    குடிமராமத்து திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 14 ஏரிகளை ரூ.4.69 கோடி மதிப்பில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    பேரணாம்பட்டு ரெட்டி மாங்குப்பம் ஏரியில் பூமிபூஜை நடந்தது. அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார். கலெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மூலம் 101 ஏரிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. குடிமராமத்து திட்டத்தின் கீழ் இதுவரை மாவட்டத்தில் 3 கட்டங்களாக 42 ஏரிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 3,486.56 ஹெக்டர் விளை நிலங்கள் பாசன வசதிபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    4-ம் கட்டமாக நடப்பு நிதியாண்டில் ரூ.4.69 கோடியில் 14 ஏரிகளை தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    அந்தந்த ஏரிகள் ஆயக்கட்டுதாரர், விவசாய சங்கங்களின் மூலம் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. குடிமராமத்து திட்டத்தின் கீழ் 14 ஏரிகளில் 17.91 நீளத்துக்கு கரைகளை பலப்படுத்தவும் , 103.89 கி.மீ கால்வாய்களை தூர்வாரவும், 23 மதகுகளை பழுதுபார்க்கவும், 2 மதகுகளை மறுகட்டுமானம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் 1,272.83 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இத்திட்டத்தின் கீழ் ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி, உள்வரத்து, வெளிவரத்து கால்வாய்களை சீரமைத்து, ஏரிகளின் கரைகளை பலபடுத்தி, நீர்வள ஆதாரம் பெருக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் தட்டுபாடு இல்லாமல் இருக்க இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் ஊரக வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 157 குளம், குட்டைகள் ரூ.11.26 கோடி மதிப்பில் தூர்வாரும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    Next Story
    ×