என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானைகள்
    X
    யானைகள்

    குடியாத்தம் அருகே தக்காளிகளை சேதப்படுத்தி யானைகள் மீண்டும் அட்டகாசம்

    குடியாத்தம் அருகே நிலத்திற்குள் புகுந்த யானைகள் கரும்பு மற்றும் தக்காளி பயிரை சேதப்படுத்தியது.

    குடியாத்தம்:

    குடியாத்தம் அருகே தமிழக வனப்பகுதிக்குள் தொடர்ந்து இரவு நேரங்களில் காட்டு யானைகள் புகுந்து வனப்பகுதியை ஒட்டிய படி உள்ள விவசாய நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.

    நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணி அளவில் ஆந்திர மாநில காட்டுப்பகுதியில் இருந்து வந்த 3 யானைகள் குடியாத்தம் அடுத்த டி.பி. பாளையம் ஆஞ்சநேயர் கோவில் அருகே முகாமிட்டு இருந்தது.

    மேலும் அப்பகுதியில் லதா என்பவரின் நிலத்திற்குள் புகுந்த யானைகள் கரும்பு மற்றும் தக்காளி பயிரை சேதப்படுத்தியது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் வனச்சரக அலுவலர் மகேந்திரன், வனவர் முருகன், வனக்காப்பாளர்கள் பூபதி, நீலகண்டன் உள்ளிட்ட வனத்துறையினர் கிராம மக்கள் உதவியுடன் பல மணி நேரம் போராடி அந்த காட்டு யானைகளை ஆந்திர மாநிலம் வனப்பகுதிக்குள் விரட்டிவிட்டனர்.

    அதேபோல் ஒற்றை யானை ஒன்று குடியாத்தம் அடுத்த சைனகுண்டா பகுதியில் நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்தும், மேளம் அடித்தும் ஆந்திர மாநில காட்டுப்பகுதிக்குள் விரட்டிவிட்டனர்.

    தற்போது தமிழக எல்லைப் பகுதியில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் சுமார் 30 காட்டு யானைகள் ஆந்திர மாநில வனப்பகுதியில் உள்ளன அந்த யானைகளை இரவு நேரங்களில் ஆந்திர வனத்துறையினர் தமிழக வனப்பகுதிக்குள் விரட்டி விடுவதால் தொடர்ந்து அந்த யானைகள் தமிழக வனப்பகுதிக்குள் புகுந்து அருகில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    தமிழக அரசு இதற்கு உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்‌.‌

    Next Story
    ×