என் மலர்tooltip icon

    வேலூர்

    வாணியம்பாடி அருகே 27 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் ஏற்றி வந்த லாரியையும் பறிமுதல் செய்தனர்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி- நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே திருப்பத்தூர் மாவட்ட பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர், அப்போது பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி வட்ட வழங்கல் அலுவலர் குமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சம்பத் மற்றும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது லாரியில் இருந்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் லாரியை சோதனை செய்ததில் அதில் 27 டன்னுக்கு மேல் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து வாணியம்பாடியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர் மேலும் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
    ஆம்பூர் அருகே குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அமைச்சர் கே.சி.வீரமணி காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தேவலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பாங்கி சாப் நகர் பகுதியில் கடந்த 5 மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதேபோல் கழிவுநீர் கால்வாய்களும் தூர்வாரப்படாமல் உள்ளன. இவைகளை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஆம்பூர் - பேரணாம்பட்டு சாலையில் காலி குடங்களுடன் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அமைச்சர் கார் முற்றுகை

    இந்த நிலையில் பேரணாம்பட்டில் அரசு விழாவில் கலந்து கொள்ள வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவ்வழியாக சென்றார். அப்போது பொதுமக்கள் அமைச்சர் காரை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அமைச்சர் காரிலிருந்து இறங்கி வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதாக கூறினார். மேலும் அதிகாரிகளிடம் செல்போன் மூலம் தொடர்புகொண்டு குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு கூறினார். அதைத்தொடர்ந்து குடிநீர் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும். இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    சாலை மறியல் காரணமாக ஆம்பூர் - பேரணாம்பட்டு சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வேலூர் அருகே மாட்டின் வயிற்றில் 20 கிலோ குப்பைககளை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள பென்னாத்தூரை சேர்ந்தவர் பரந்தாமன். இவர் பசு மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த மாடு உணவு உண்ணாமல் அவதிப்பட்டு வந்தது. மேலும் மூச்சுவிடவும் திணறியது. இதனால் பரந்தாமன், மாட்டை வேலூரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தார். மாட்டை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாட்டின் வயிற்றில் தேவையில்லாத பொருட்கள் இருக்கலாம் அல்லது உணவு குழாயில் ஏதேனும் சிக்கி இருக்கலாம் என கருதினார்.

    பின்னர் மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் மேற்பார்வையில் டாக்டர்கள் ஜோசப், ரவிசங்கர் உள்பட பலர் கொண்ட குழுவினர் மாட்டிற்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மாட்டின் வயிற்றில் சுமார் 20 கிலோ பிளாஸ்டிக்கால் ஆன பைகள், பாசி மாலை, கல், இரும்பு கம்பி போன்ற குப்பைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை டாக்டர்கள் அப்புறப்படுத்தினர். இதையடுத்து மாட்டின் உடல்நலம் சீரானது.

    இந்த அறுவை சிகிச்சை குறித்து டாக்டர்கள் குழுவினர் கூறுகையில், ‘இந்த அறுவை சிகிச்சையானது மாவட்டத்தில் முதன் முதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாடுகள் வைத்திருப்பவர்கள் சாலைகளில் மேய்ச்சலுக்கு விடுகின்றனர். அவற்றை மாடுகள் சாப்பிடுகிறது. இதனால் மாட்டின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. எனவே மாடுகளை சாலைகளிலும், பிளாஸ்டிக் பைகள் கிடக்கும் பகுதிகளிலும் மேய்ச்சலுக்கு விட வேண்டாம்’ என்றனர்.
    வள்ளிமலை அருகே திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்த கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.
    திருவலம்:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா கீழ்கொத்தூர் பகுதியை சேர்ந்தவர் அன்பு (வயது 42), கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஆற்காடு மாசாபேட்டை பகுதியை சேர்ந்தவர் வத்சலா (55). இவரது கணவர் இறந்துவிட்டார். வத்சலாவுக்கு, ஒரு மகள் உள்ளார். அவருக்கும் திருமணமாகி விட்டது.

    அன்புவுக்கும், அவரிடம் கட்டிட வேலைகளை செய்து வந்த வத்சலாவுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி அன்புவும், வத்சலாவும் வள்ளிமலைக்கு வந்துள்ளனர். கோவில் அருகே உள்ள மலைமேல் இருவரும் பேசிக்கொண்டு உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது வத்சலா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அன்புவிடம் கேட்டுள்ளார்.

    தன் பெண்களுக்கு திருமணம் செய்துவைத்து விட்ட நிலையில், உன்னை எப்படி திருமணம் செய்து கொள்வது என்று அன்பு மறுத்துள்ளார். வத்சலா இதனை ஏற்று கொள்ளாமல், திருமணம் செய்ய தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அன்பு தான் அணிந்திருந்த மேல் துண்டு மூலம் வத்சலாவை கழுத்து நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் தனது ஊருக்கு வந்து விட்டார்.

    இந்த நிலையில் வத்சலாவின் மகள் தனது தாயை கண்டுபிடித்து தருமாறு, வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் கடந்த 8-ந் தேதி புகார் செய்தார். அதன்பேரில் வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து வத்சலாவை தேடி வந்தனர்.

    போலீஸ் விசாரணையில், வத்சலாவிற்கும், அன்புவிற்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அன்புவை போலீசார் பிடித்து விசாரணை செய்தபோது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    இதனையடுத்து மேல்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு வள்ளிமலை கோவில் அருகே உள்ள மலைமேல் பாறை மறைவில் அழுகிய நிலையில் இருந்த வத்சலாவின் பிணத்தை கண்டுபிடித்தனர். மேலும் அன்புவை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    குடியாத்தம் அருகே மனைவி குடும்பம் நடத்த வராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    குடியாத்தம்:

    குடியாத்தத்தை அடுத்த ராஜாகோயில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் ராம்கி (வயது 27), தச்சுத்தொழிலாளி. இவருக்கு 2 மனைவிகள் உண்டு. முதல் மனைவி லட்சுமி, 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். 9 மாதங்களுக்கு முன்பு ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவரை ராம்கி 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கணவரிடம் கோபித்துக் கொண்டு காயத்ரி தனது தாய் வீட்டு சென்று விட்டார். இதனால் விரக்தி அடைந்த ராம்கி கடந்தசில நாட்களுக்கு முன்பு விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை, உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்கு பின் அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

    நேற்று முன்தினம் ராம்கி, காயத்ரிக்கு போன் செய்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். மேலும் காயத்ரியின் பெற்றோரும் ராம்கியை போனில் திட்டியதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராம்கி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் மாவட்டத்தில் 14 ஏரிகளில் ரூ.4½ கோடியில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருவதாக கலெக்டர் தெரிவித்தார்.
    வேலூர்:

    காட்பாடி தாலுகாவில் பொதுப்பணித்துறை (நீர்வளம்) சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சித்தேரி ஏரி, கெம்பராஜபுரம் ஏரி, சேர்க்காடு ஏரி, இளையநல்லூர் ஏரி, எருக்கம்பட்டு ஏரி ஆகிய 5 ஏரிகளில் ரூ.1 கோடியே 37 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் குடிமராமத்து பணிகள் நடைபெறுகிறது. இப்பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார். மேலும் பொன்னை அணைக்கட்டிலிருந்து 18 ஏரிகளுக்கு செல்லும் மேற்கு பிரதான கால்வாய்களையும் அவர் பார்வையிட்டார்.

    பின்னர் கலெக்டர் சண்முகசுந்தரம் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் 2020-2021-ம் நிதியாண்டில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 14 ஏரிகள் ரூ.4 கோடியே 69 லட்சம் மதிப்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் காட்பாடி தாலுகாவில் உள்ள செம்பராயநல்லூர் ஊராட்சியில் சித்தேரி ஏரி ரூ.23 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் பணிகள் நடைப்பெறுகிறது. அந்த ஏரியில் கரைகள் பலப்படுத்தும் பணிகளும், நீர்வரத்து கால்வாய், நீர் வெளியேற்று கால்வாய்கள் சீர்செய்து 70 சதவீதப்பணிகள் முடிவடைந்துள்ளது.

    கெம்பராஜபுரம் ஊராட்சியில் உள்ள கெம்பராஜபுரம் ஏரி ரூ.46 லட்சம் மதிப்பில் கரைகள் பலப்படுத்தும் பணிகளும், நீர்வரத்து கால்வாய், நீர் வெளியேற்று கால்வாய்கள் சீர்செய்து 70 சதவீதப்பணிகள் முடிவடைந்துள்ளது.

    சேர்க்காடு ஏரி ரூ.19 லட்சம் மதிப்பில் ஏரி கரைகள் பலப்படுத்தும் பணிகளும், நீர் வெளியேற்று கால்வாய்கள் சீர்செய்து 70 சதவீதப்பணிகள் முடிவடைந்துள்ளது. ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றி மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்கப்படும். இளையநல்லூர் ஏரி ரூ.29 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலும், எருக்கம்பட்டு ஏரி ரூ.20 லட்சம் மதிப்பிலும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த ஏரிகளுக்கு வரும் மூங்கலேரி ஓடை கால்வாய் தூர்வாரி 80 சதவீதம் பணி நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள பணிகளை முடித்து பொன்னை அணைக்கட்டிலிருந்து மேற்கு பிரதான கால்வாய் வழியாக பாசன வசதி பெறும் 18 ஏரிகளில் 12 ஏரிகள் இதுவரை நிரம்பி உள்ளது. மேலும் உள்ள 6 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை தூர்வாரி தண்ணீர் நிரப்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர்கள் குணசீலன், விஸ்வநாதன், தாசில்தார் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    மருத்துவ ‘சீட்’ மோசடி வழக்கில் கைதான பாதிரியாருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கைதிகளுக்கான கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
    வேலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாசன். ஓய்வு பெற்ற அரசு என்ஜினீயர். இவரது மகனுக்கு வேலூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக பாதிரியார் சாது சத்தியராஜ் உள்பட 3 பேர் தெரிவித்தனர். இதற்காக சீனிவாசனிடம் இருந்து ரூ.57 லட்சம் வரை பணம் பெற்றதாக தெரிகிறது.

    ஆனால் சீனிவாசன் மகனுக்கு சீட் வாங்கி கொடுக்காமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி வந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பாதிரியார் சாது சத்தியராஜ் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

    தற்போதைய கொரோனா பாதுகாப்பு நடைமுறையின் படி சாதுசத்தியராஜுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதியானது. உடனே அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கைதிகளுக்கான கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரிடம் விசாரணை மேற்கொண்ட இன்ஸ்பெக்டர் இலக்குவன் உள்பட 6 போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


    குடியாத்தத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் பகுதிகளில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. குற்றவாளிகளை பிடிக்க குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சங்கர், ஏட்டுகள் மோசஸ், ஜலாலுதீன், கோவிந்தசாமி, சந்திரபாபு ஆகியோர் கொண்ட தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    நேற்று காலையில் சேம்பள்ளி கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்தவரை மடக்கி விசாரித்தனர். விசாரணையில் அவர் பேரணாம்பட்டு அருகே கோட்டச்சேரி கிராமத்தை சேர்ந்த வசந்தராஜ் (வயது24) என்பதும், அவர் ஓட்டி வந்தது குடியாத்தம் நகரில் திருடிய மோட்டார்சைக்கிள் என்பது தெரியவந்தது.

    இவர் ஏற்கனவே குடியாத்தம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் என்பதும், தற்போது குடியாத்தம் பழைய பஸ் நிலையம், ராஜகணபதி நகர், ஜவஹர்லால் தெரு, லிங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் 6 மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து அவர் கொடுத்த தகவலின்பேரில் 6 மோட்டார் சைக்கிள்களை மீட்டனர்.
    குடியாத்தம் அருகே ஆட்டோ மீது அரசு பஸ் மோதி தந்தை, மகன் பரிதாபமாக இறந்தனர்.
    குடியாத்தம்:

    சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 40), சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு சந்தியா (14) என்ற மகளும், மணி என்ற சஞ்சய் (12) என்ற மகனும் உள்ளனர். சந்தியா 10-ம் வகுப்பும், மணி 7-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராதிகா உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதனால் சந்தியாவும், மணியும் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த பிராமணமங்கலம் என்ற கிராமத்தில் பாட்டி சாவித்திரி வீட்டிற்கு வந்துவிட்டனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவா சென்னை புளியந்தோப்பில் இருந்து பிராமணமங்கலத்துக்கு வந்தார். நேற்று மதியம் சிவாவும். மணியும் குடியாத்தத்தில் உள்ள கடைக்கு ஆட்டோவில் வந்தனர். குடியாத்தம் அருகே அம்மணாங்குப்பம் துர்க்கை நகர் அருகே வரும்போது, குடியாத்தத்தில் இருந்து வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    இதில் படுகாயம் அடைந்து ஆட்டோவில் சிக்கி இருந்த சிவா மற்றும் மணியை அப்பகுதி பொதுமக்கள் போராடி மீட்டனர். ஆனால் சில நிமிடங்களிலேயே தந்தையும், மகனும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், கார்த்திகேயன், தனிப்பிரிவு ஏட்டு அரிதாஸ் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்து விபத்தில் பலியான தந்தை-மகன் உடல்களை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காட்பாடி அருகே விவசாய மின் இணைப்புக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
    திருவலம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையை சேர்ந்தவர் ரிஷிகேஷ் (வயது 25), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான வள்ளிமலை அருகே உள்ள விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு பெற தட்கல் முறையில் மின்வாரியத்துக்கு விண்ணப்பித்தார்.

    இதுகுறித்து ஆய்வு செய்த காட்பாடியை அடுத்த கார்ணாம்பட்டில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் (53) என்பவர், மின் இணைப்பு தருவதற்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதற்கு ரிஷிகேஷ் தயங்கியுள்ளார். பின்னர் இறுதியாக ரூ.7 ஆயிரத்தை லஞ்சமாக கார்த்திகேயன் கேட்டுள்ளார். இதனை தர விரும்பாத ரிஷிகேஷ் வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று ரிஷிகேஷிடம், ரசாயனம் தடவிய ரூ.7 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர். இதன் பின்னர், ரிஷிகேஷ், கார்ணாம்பட்டு மின்வாரிய அலுவலகத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயனிடம், ரசாயனம் தடவிய பணத்தை தந்துள்ளார்.

    அப்போது மறைந்திருந்த வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை துணை சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கார்த்திகேயனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து பணத்தையும் கைப்பற்றினர்.

    பின்னர் கார்த்திகேயனை வேலூரில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் காட்பாடி மற்றும் கார்ணாம்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். டிரைவரும் கைது செய்யப்பட்டார்.
    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் மற்றும் போலீசார் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கன்டெய்னர் லாரியை நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் மதுரை உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகுராஜா (வயது 28) என்பதும், சென்னையில் உள்ள பார்சல் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு பார்சல் கொண்டு செல்லும்படி லாரியின் உரிமையாளர் கூறியதால், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கன்டெய்னர் லாரியில் எடுத்துச் செல்வதாக கூறினார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியின் பின்பக்க கதவை திறந்து பார்த்தபோது பார்சல் பெட்டிகள் இருந்தது.

    300-க்கும் மேற்பட்ட பார்சல் பெட்டிகளில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது. அவற்றையும், லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
    வேலூரில் ரோட்டில் ஓடிய கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர்:

    காட்பாடியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், தனியார் பள்ளி மேலாளர். இவர் நேற்று மாலை தனது நண்பர் சந்தோஷ்குமாரின் காரில் காட்பாடியில் இருந்து ஓட்டேரியில் தாயார் வீட்டில் இருக்கும் மனைவியை பார்க்க சென்றார். நேஷனல் சந்திப்பு அருகே வந்தபோது காரில் திடீரென பழுது ஏற்பட்டது. அதையடுத்து பாலகிருஷ்ணன் பைபாஸ் சாலையில் உள்ள மெக்கானிக் கடை ஒன்றில் காரின் பழுதை சரி செய்வதற்காக நிறுத்தினார்.

    காரை பரிசோதனை செய்வதற்காக மெக்கானிக் ஓட்டி சென்றார். பாலகிருஷ்ணனும் காரில் சென்றார். புதிய மீன்மார்க்கெட் அருகே மக்கான் சிக்னலில் சென்றபோது காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. உடனடியாக காரை நிறுத்திய மெக்கானிக் முன்பகுதியை திறந்து பார்த்தார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. காரில் இருந்த பாலகிருஷ்ணன் வேக வேகமாக வெளியேறினார். சிறிது நேரத்தில் தீ மள மளவென எரியத்தொடங்கியது.

    தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து போனது. இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×