search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வேலூரில் ரோட்டில் ஓடிய கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

    வேலூரில் ரோட்டில் ஓடிய கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர்:

    காட்பாடியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், தனியார் பள்ளி மேலாளர். இவர் நேற்று மாலை தனது நண்பர் சந்தோஷ்குமாரின் காரில் காட்பாடியில் இருந்து ஓட்டேரியில் தாயார் வீட்டில் இருக்கும் மனைவியை பார்க்க சென்றார். நேஷனல் சந்திப்பு அருகே வந்தபோது காரில் திடீரென பழுது ஏற்பட்டது. அதையடுத்து பாலகிருஷ்ணன் பைபாஸ் சாலையில் உள்ள மெக்கானிக் கடை ஒன்றில் காரின் பழுதை சரி செய்வதற்காக நிறுத்தினார்.

    காரை பரிசோதனை செய்வதற்காக மெக்கானிக் ஓட்டி சென்றார். பாலகிருஷ்ணனும் காரில் சென்றார். புதிய மீன்மார்க்கெட் அருகே மக்கான் சிக்னலில் சென்றபோது காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. உடனடியாக காரை நிறுத்திய மெக்கானிக் முன்பகுதியை திறந்து பார்த்தார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. காரில் இருந்த பாலகிருஷ்ணன் வேக வேகமாக வெளியேறினார். சிறிது நேரத்தில் தீ மள மளவென எரியத்தொடங்கியது.

    தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து போனது. இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×