என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் மாவட்டத்தில் உள்ள தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகள் மட்டும் பயன்படுத்தி வருகிற 10-ந் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
    வேலூர்:

    தமிழகத்தில் வருகிற 10-ந் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் சினிமா தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள தியேட்டர்கள், தியேட்டர் வளாகங்கள் (மல்டிபிளக்ஸ்) மற்றும் வணிக வளாகங்களில் உள்ள தியேட்டர்கள் உள்பட அனைத்து தியேட்டர்களும் 50 சதவீத இருக்கைகள் மட்டும் பயன்படுத்தி வருகிற 10-ந் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. திரைப்படம் ஒளிபரப்புவதற்கு முன்பாக அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவற்றை திரையிட வேண்டும். அனைத்து தியேட்டர் உரிமையாளர்களும் தியேட்டர் திறப்பதற்கு முன்பாக விண்ணப்பம் செய்து அனுமதி பெற்ற பின்னரே தியேட்டர்களை திறக்க வேண்டும். இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே வேலூர், காட்பாடியில் உள்ள சினிமா தியேட்டர்களை திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை அதன் உரிமையாளர்கள் செய்து வருகிறார்கள். விருதம்பட்டில் உள்ள சினிமா தியேட்டரை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். கிருமிநாசினி தெளித்து, 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டரை திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
    ரூ.60 ஆயிரம் கடனுக்கு இரட்டிப்பு தொகை செலுத்தக்கோரி நெருக்கடி கொடுத்ததால் வாலிபர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    குடியாத்தம்:

    குடியாத்தத்தை அடுத்த சேத்துவண்டை கிராமம் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் லத்தீப். இவரது மகன் பஷீர் (வயது 26), அப்பகுதியில் மாட்டு இறைச்சி பக்கோடா கடை நடத்தி வந்தார். பஷீர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் குடியாத்தம் காந்திநகர் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் ரூ.60 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த கடனுக்காக தினமும் அசலும் வட்டியும் செலுத்தி வந்துள்ளார்.

    கொரோனா மற்றும் ஊரடங்கு காலத்தினால் வியாபாரம் செய்ய முடியாததால் அவரால் தவணை தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை. வாங்கிய கடனுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் செலுத்த வேண்டும் என பஷீரின் வீட்டிற்கு சென்று நிதி நிறுவனத்தினர் நெருக்கடி கொடுத்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் முன்னிலையில் தகாத வார்த்தைகளாலும் அவர்கள் திட்டியதால் அவமானம் அடைந்த பஷீர் மனம் உடைந்தார்.

    இந்த நிலையில் பஷீர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது அறையின் கதவை திடீரென தாழிட்டுக் கொண்டார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதவை தட்டியும் பஷீர் கதவை திறக்கவில்லை. இதனால் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது மின்விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் பஷீர் இருந்தார். உடனடியாக அவரை தூக்கிலிருந்து மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது பஷீர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் திரண்டு பஷீரின் இறப்பிற்கு காரணமான நிதி நிறுவனத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனர். இதனையடுத்து அவர்களிடம் பேசிய குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் உள்ளிட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இது குறித்து பஷீரின் மனைவி ஆப்ரீன் அளித்த புகாரின் பேரில் குடியாத்தம் டவுன் போலீசார் இது தொடர்பாக பைனான்ஸ் நிறுவனத்தை சேர்ந்த சந்தோஷ்பாபு, சிவராமன், நந்தகுமார், நரேன் (35)உள்ளிட்ட 4 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இவர்களில் நரேன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
    தன்னார்வலர்கள் தயாரித்த 20 ஆயிரம் விதைப்பந்துகள் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலைப்பகுதியில் வீசப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைகளை பசுமையாக்க தன்னார்வலர்கள் 20 ஆயிரம் விதைப்பந்துகளை தயாரித்தனர். அவற்றை பெருமுகை பகுதியில் உள்ள மலைகளில் வீசும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    உதவி கலெக்டர்கள் கணேஷ் (வேலூர்), ஷேக்மன்சூர் (குடியாத்தம்) ஆகியோர் தலைமையில் அதிகாரிகள், தன்னார்வலர்கள் விதைப்பந்துகளை மலைப்பகுதியில் வீசினர். இந்த பந்துகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலைப்பகுதியில் வீசப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
    அசிங்கமாக பேசி மிரட்டிய சப்- இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்ககோரி போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் ஒருவர் மனு கொடுத்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாரிடம் வேலூர் அருகே உள்ள கம்மவான்பேட்டை சலமநத்தம் கிராமத்தை சேர்ந்த வெண்மதி (வயது 48) என்பவர் நேற்று புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் பெயர் சங்கர். ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். எங்களுக்கும் உறவினர்கள் சிலருக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சினை உள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக சிலர் எங்களது உறவினர்களுக்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர். இவர்களில் தூண்டுதலின்பேரில் சம்பவத்தன்று எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதலுக்கு முந்தையநாள் அன்று முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக்கோரி வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தோம். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த தாக்குதலுக்கு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் முக்கிய காரணம். இதையடுத்து போலீஸ் நிலையத்தில் மீண்டும் ஆன்லைனில் புகார் செய்யப்பட்டது. ஆனால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்று அந்த சப்-இன்ஸ்பெக்டர் கூறினார். மேலும் அவர் அசிங்கமாக பேசி மிரட்டினார். எனவே தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் மற்றும் அந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.
    தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து நாளை முதல் பஸ்கள் இயக்கப்படும் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தகவல் தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் புதிய பஸ் நிலைய விரிவாக்கப்பணிகள் நடைபெறுவதால் சென்னை மார்க்கம் தவிர புறநகர் பஸ்கள் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இதனால் அதிக இடநெருக்கடி ஏற்பட்டது. இதை தடுக்க புதிய மீன் மார்க்கெட், மக்கான் அருகே உள்ள லாரி ஷெட்டில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று முடிவடைந்துள்ளது. எனவே ஆரணி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, சிதம்பரம், கும்பகோணம், திருச்சி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

    மேலும், குடியாத்தம், பேரணாம்பட்டு, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், ஓசூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் புறநகர் பஸ்கள் மற்றும் அனைத்து டவுன் பஸ்கள் தொடர்ந்து பழைய பஸ் நிலையத்தில் இருந்தும், சென்னை, ஆற்காடு, காஞ்சிபுரம், தாம்பரம், கல்பாக்கம், அரக்கோணம், திருத்தணி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும். இந்த மாறுதல் நாளை (புதன்கிழமை) முதல் அமல்படுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    வேலூர் பழைய பஸ்நிலையத்தில் தடையை மீறி நுழையும் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், இதனை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.46 கோடியில் புதிதாக கட்டும் பணி நடந்து வருகிறது. அதனால் அங்குள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் இருந்து சென்னை, தாம்பரம், அரக்கோணம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. வேலூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், ஓசூர், திருப்பத்தூர் மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன.

    பழைய பஸ்நிலையத்தில் இருந்து ஏராளமான அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுவதால் இடநெருக்கடி காணப்படுகிறது. மேலும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இடநெருக்கடி காரணமாக திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம் பகுதிகளுக்கு செல்லும் அரசு, தனியார் பஸ்கள் மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு பஸ்கள் வேலூர் புதிய மீன்மார்க்கெட் அருகேயுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து ஓரிருநாட்களில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வேலூர் பழைய பஸ்நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக பஸ் நிலையத்தின் உள்ளே இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. மேலும் தடையை மீறி நுழையும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் 5 இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மேலும் மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். ஆனாலும் இருசக்கர வாகனங்களை பஸ் நிலையத்தில் நிறுத்தி வைப்பதும், ஆட்டோக்கள் தடையை மீறி நுழைந்து பயணிகளை ஏற்றி செல்வதும் தொடர் கதையாக உள்ளது.

    விடுமுறைதினமான நேற்று மதியம் 12 மணியளவில் பழைய பஸ்நிலையத்தில் ஒரேசமயத்தில் 15-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் தடையை மீறி நுழைந்து பயணிகளை ஏற்றும் பணியில் டிரைவர்கள் மும்முரமாக இருந்தனர். அதனால் பஸ்நிலையத்தின் உள்ளே பஸ்கள் வருவதில் சிரமம் காணப்பட்டது. ஆட்டோக்களால், பஸ்கள் செல்ல முடியாமல் வரிசையாக நின்றன. சிறிதுநேரத்துக்கு பின்னரே உள்ளே நுழைந்தன.

    இதனால் பஸ்டிரைவர்கள் மற்றும் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். தடையை மீறி நுழைந்து பயணிகளை ஏற்றும் மற்றும்போக்குவரத்துக்கு நெரிசலை ஏற்படுத்தும் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
    திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு திருமணத்துக்கு மறுப்பு தெரிவிப்பதாக வாலிபர் மீது இளம்பெண் புகார் அளித்தார். அதன்பேரில் அரசு ஊழியரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    வேலூர்:

    காட்பாடி ஓடை பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு காட்பாடியை அடுத்த பள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (27) என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு அறிமுகமானார். மணிகண்டன் வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவி டைப்பிஸ்டாக பணியாற்றி வருகிறார்.

    முதலில் 2 பேரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறிஉள்ளது. அதைத் தொடர்ந்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயம் மணிகண்டன் விரைவில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் மணிகண்டன் பல்வேறு தவணைகளில் இளம்பெண்ணிடம் இருந்து ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் பெற்றுள்ளார்.

    இளம்பெண் பெற்றோரிடம் சம்மதம் வாங்கி விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படி மணிகண்டனை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அவர் சில மாதங்கள் கழித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி காலம் கடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் மீண்டும் திருமணம் செய்யும்படி கூறிஉள்ளார். ஆனால் அதற்கு மணிகண்டன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் செல்போன் மற்றும் நேரில் இளம்பெண்ணுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

    அதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதுகுறித்து விருதம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை தேடி வருகிறார்.
    திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந் துவிட்டு திருமணத்துக்கு மறுப்பு தெரிவிப்பதாக வாலிபர் மீது இளம்பெண் புகார் அளித்தார். அதன்பேரில் அரசு ஊழியரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    வேலூர்:

    காட்பாடி ஓடை பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் வேலூரில் உள்ள தனியார் மருத் துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு காட் பாடியை அடுத்த பள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்த மணி கண்டன் (27) என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு அறிமுகமானார். மணி கண்டன் வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவி டைப்பிஸ்டாக பணி யாற்றி வருகிறார்.

    முதலில் 2 பேரும் நண்பர்களாக பழகி வந்து ள்ளனர். நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறிஉள்ளது. அதைத் தொடர்ந்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயம் மணிகண்டன் விரைவில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் மணிகண்டன் பல்வேறு தவணைகளில் இளம்பெண்ணிடம் இருந்து ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் பெற்றுள்ளார்.

    இளம்பெண் பெற்றோரிடம் சம்மதம் வாங்கி விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படி மணி கண்டனை வற்புறுத்தி வந்து ள்ளார். ஆனால் அவர் சில மாதங்கள் கழித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி காலம் கடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் மீண்டும் திருமணம் செய்யும்படி கூறிஉள்ளார். ஆனால் அதற்கு மணிகண்டன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் செல்போன் மற்றும் நேரில் இளம்பெண்ணுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

    அதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதுகுறித்து விருதம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை தேடி வருகிறார்.
    மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் படம் எடுத்து மிரட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    காட்பாடி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 28 வயதுடைய பெண். இவர் நேற்று விருதம்பட்டு போலீஸ் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. நான் குடும்ப சூழ்நிலை காரணமாக விருதம்பட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 2017-ம் ஆண்டில் வேலைக்கு சென்றேன். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு என்னுடைய பிறந்தநாளை அலுவலகத்தில் அனைவரும் சேர்ந்து கொண்டாடினோம். அன்று எனக்கு விருந்து வைப்பதாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் காரில் கசம் என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் எனக்கு தின்பண்டங்களை கொடுத்தார். பின்னர் நான் மயங்கினேன். அப்போது அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அதை அவர் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டார். அப்போது தான் அவர் தந்த தின்பண்டங்களில் மயக்க மருந்து கலந்திருந்தது எனக்கு தெரியவந்தது.

    அன்று முதல் அவர் அந்த வீடியோவை என்னிடம் அடிக்கடி காண்பித்து பாலியல் தொந்தரவு செய்தார். அப்போதும் அவர் அதை செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டார். இதனால் நான் வேலையில் இருந்து நின்று விட்டேன். தொடர்ந்து அவர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து என்னை தாக்கினார். கடந்த 27-ந் தேதி அன்று அவர் என்னை மிரட்டினார். மேலும் அவர், தனது ஆசைக்கு என்னை இணங்க வற்புறுத்தினார். அவரது பேச்சை நான் கேட்காவிட்டால் கொலை செய்து விடுவதாகவும், அவர் வைத்துள்ள எனது 6 வீடியோக்களை இணையதளத்தில் வெளியிடுவதாகவும் மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதைத்தொடர்ந்து அப்பெண் தர்ணாவை கைவிட்டார். அவரின் மனு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மராட்டிய மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருவதால் தண்ணீரில் மூழ்கி வெங்காய சாகுபடி குறைந்துள்ளது. இதன் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் வெங்காயத்தின் அளவு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    வேலூரில் 1 கிலோ வெங்காயம் ரூ.90 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெங்காயத்தை நினைத்தாலே இல்லத்தரசிகள் கண்களில் கண்ணீர் வருகிறது. ஏழை மக்கள் இதனால் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். ஆனால் சிலர் வெங்காயத்தை பதுக்கி வைத்துள்ளதாக புகார்கள் எழுந்தது. இதுகுறித்து சோதனை செய்ய வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் மாவட்ட வழங்கல் அலுவலர் பானுமதிக்கு உத்தரவிட்டார். அதன்படி அவர் தலைமையில் பறக்கும் படை தாசில்தார் கோட்டீஸ்வரர், வட்ட வழங்கல் அலுவலர்கள் நெடுமாறன், பலராமன், வெங்கடேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று திடீரென வேலூர் நேதாஜி மார்க்கெட் பகுதியில் சோதனை நடத்தினர்.

    ஒவ்வொரு கடையாக அவர்கள் சென்று லாரியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் எவ்வளவு?, விற்பனை செய்யப்பட்டது எவ்வளவு?, கையிருப்பில் வெங்காயம் உள்ளதா?, எங்கிருந்து வரவழைக்கப்படுகிறது? என கோப்புகளை ஆய்வு செய்தனர். மேலும் குடோனில் இருந்த வெங்காயத்தையும் அவர்கள் பார்வையிட்டனர்.

    சுமார் 35 கடைகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனை சுமார் 3 மணி நேரம் நீடித்தது. எந்த கடையிலும் வெங்காயம் பதுக்கவில்லை என்பது தெரியவந்தது.

    அதிகாரிகள் திடீரென நேதாஜி மார்க்கெட் பகுதியில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை நடத்தியதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர் மலைகளில் தூவ 20 ஆயிரம் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    வேலூர்:

    வேலூரை பசுமையானதாக உருவாக்க இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் பலர் முயன்று வருகின்றனர்.

    வேலூர் நகரை சுற்றி மலைகள் உள்ளது. இந்த மலைகள் மழைக்காலங்களில் பச்சை போர்வை போர்த்தியது போல் பசுமையாக காட்சி அளிக்கும். ஆனால் கோடை காலத்தில் செடி, கொடிகள் கருகி பாறைகளாக காட்சி அளிக்கும். எனவே இந்த மலைகளில் மரங்களை வளர்த்து பசுமையானதாக மாற்ற விதைப்பந்துகள் தூவ தினேஷ்சரவணன் என்ற தன்னார்வலர் முடிவு செய்தார். அதன்படி அலமேலுமங்காபுரம் பகுதியில் உள்ள மக்கள் சிலரை அவர் ஒருங்கிணைத்து 20 ஆயிரம் விதைப்பந்துகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    வேலூரை சுற்றி உள்ள மலைகள் அதிகம் உள்ளது. இங்கு அதிகளவில் மரங்கள் இல்லாததால் கோடை காலத்தில் அனல் காற்று அதிகமாக வீசுகிறது. எனவே மலைகளில் மரக்கன்றுகள் வளர விதைப்பந்துகள் தூவப்பட உள்ளது. தயாரிக்கப்படும் 20 ஆயிரம் விதைப்பந்துகளில் வன்னி மரம், பூவரசு மர விதைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த இரு மரங்களும் மழை பொழிவு சூழலை உருவாக்கும். ஆக்சிஜன் காற்றை அதிகம் வெளியிடும். குறைந்த நீரில் வளரும் தன்மை உடையது.

    வரும் நாட்களில் அதிக மழை பொழியும் என்பதால் அதை கருத்தில் கொண்டு இவை தயாரிக்கப்படுகிறது. மழை பெய்யும் போது மலைப்பகுதிகளில் விதைப்பந்துகள் தூவப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    வேலூரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 3 டாஸ்மாக் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். விடிய விடிய நடந்த இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன. மிலாதுநபியைமுன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளததால் நேற்று முன்தினம் மதுபானங்கள் வாங்க மதுபிரியர்கள் கடைகளில் அலைமோதினர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வேலூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமச்சந்திரா தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் பென்னாத்தூரில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளில் திடீரென சோதனை நடத்தினர்.

    இதனால் விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சோதனை நடந்தபோது மதுபானங்கள் விற்பனை செய்யப்படாததால் குடிமகன்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்தசோதனை நேற்று அதிகாலை வரை விடிய, விடிய நடந்தது.

    சோதனையின் போது விற்பனை செய்யப்பட்ட மதுபானத்தின் மூலம் பெறப்பட்ட பணத்துக்கும், இருப்பில் உள்ள பணத்துக்கும் ஒப்பீடு செய்து கணக்கெடுத்தனர். இதில் 3 கடைகளையும் சேர்த்து ரூ.60 ஆயிரத்து 900 கூடுதலாக வசூல் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மூலம் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. பென்னாத்தூரில் உள்ள ஒரு கடையில் ரூ.4 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்க வெளியில் கொடுத்துள்ளது தெரியவந்தது.

    இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேலூர் மற்றும் பென்னாத்தூர் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×