என் மலர்
செய்திகள்

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் ஆட்டோக்கள் நிற்பதை படத்தில் காணலாம்.
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தடையை மீறி நுழையும் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல்
வேலூர் பழைய பஸ்நிலையத்தில் தடையை மீறி நுழையும் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், இதனை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.46 கோடியில் புதிதாக கட்டும் பணி நடந்து வருகிறது. அதனால் அங்குள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் இருந்து சென்னை, தாம்பரம், அரக்கோணம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. வேலூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், ஓசூர், திருப்பத்தூர் மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன.
பழைய பஸ்நிலையத்தில் இருந்து ஏராளமான அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுவதால் இடநெருக்கடி காணப்படுகிறது. மேலும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இடநெருக்கடி காரணமாக திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம் பகுதிகளுக்கு செல்லும் அரசு, தனியார் பஸ்கள் மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு பஸ்கள் வேலூர் புதிய மீன்மார்க்கெட் அருகேயுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து ஓரிருநாட்களில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் பழைய பஸ்நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக பஸ் நிலையத்தின் உள்ளே இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. மேலும் தடையை மீறி நுழையும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் 5 இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மேலும் மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். ஆனாலும் இருசக்கர வாகனங்களை பஸ் நிலையத்தில் நிறுத்தி வைப்பதும், ஆட்டோக்கள் தடையை மீறி நுழைந்து பயணிகளை ஏற்றி செல்வதும் தொடர் கதையாக உள்ளது.
விடுமுறைதினமான நேற்று மதியம் 12 மணியளவில் பழைய பஸ்நிலையத்தில் ஒரேசமயத்தில் 15-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் தடையை மீறி நுழைந்து பயணிகளை ஏற்றும் பணியில் டிரைவர்கள் மும்முரமாக இருந்தனர். அதனால் பஸ்நிலையத்தின் உள்ளே பஸ்கள் வருவதில் சிரமம் காணப்பட்டது. ஆட்டோக்களால், பஸ்கள் செல்ல முடியாமல் வரிசையாக நின்றன. சிறிதுநேரத்துக்கு பின்னரே உள்ளே நுழைந்தன.
இதனால் பஸ்டிரைவர்கள் மற்றும் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். தடையை மீறி நுழைந்து பயணிகளை ஏற்றும் மற்றும்போக்குவரத்துக்கு நெரிசலை ஏற்படுத்தும் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
Next Story






