என் மலர்
வேலூர்
வேலூர்:
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அண்டை மாநிலங்களுடன் இணைந்து சட்டம் ஒழுங்கு மற்றும் தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தையொட்டி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் உள்ளது. சித்தூர் மாவட்டத்துடன் சுமார் 65 கி.மீ தொலைவு எல்லை வேலூர் மாவட்டத்துடன் இணைந்துள்ளது.
எனவே, 2 மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலான தேர்தல் முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கலெக்டர்கள் சண்முகசுந்தரம் (வேலூர்), ஹரிநாராயணன் (சித்தூர்), போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வகுமார் (வேலூர்), செந்தில்குமார் (சித்தூர்), உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் ரவுடிகள் சித்தூர் மாவட்டத்தில் தஞ்சமடைவார்கள் என்பதால் அவர்களை கைது செய்யவும், தமிழக எல்லைக்குள் கள்ளச்சாராயம் எடுத்து வருவதை தவிர்க்கவும், இரு மாநிலங்களில் குற்றவாளிகள் மீதான நிலுவையில் கோர்ட்டு கைது ஆணைகளை நடைமுறைப்படுத்தவும் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரித்து பணப் பரிமாற்றத்தை தடுக்க அதிகளவில் சோதனை நடத்தவும் ஆலோசனை நடந்தது.
இந்த கூட்டம் தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறும்போது:-
‘‘ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் எல்லை மட்டும் தமிழகத்துடன் சுமார் 120 கி.மீ தொலைவுக்கு உள்ளது. இதில், 65 கி.மீ தொலைவு வேலூர் மாவட்டத்துடன் தொடர்புடையது. தற்போது 6 சோதனைச் சாவடிகள் உள்ளன. கூடுதலாக 3 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு 9 ஆக உயர்த்தப்பட உள்ளது.
மேலும், சித்தூர் மாவட்டத்தில் இருந்து 15 வழித்தடங்கள் வேலூர் மாவட்டத்துடன் தொடர்பில் உள்ளது. அங்கெல்லாம் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.
இதற்காக இரு மாவட்ட அதிகாரிகள் அடங்கிய வாட்ஸ்அப் குழு ஒன்று ஏற்படுத்தி தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
இது தொடர்பாக வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது:-
2 மாவட்டங்கள் இடையில் கஞ்சா கடத்தல், கள்ளச்சாராயம், மதுபாட்டில் கடத்தல், பணம் பதுக்கலை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குற்றவாளிகள் எல்லை தாண்டி வருவதை கண்காணிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
2 மாவட்ட அதிகாரிகள் மத்தியில் உளவு தகவல்களை பரிமாறிக்கொள்ளப்படும். சோதனைச் சாவடிகள் மற்றும் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிப்பை அதிகரிக்கப்படும்.
வேலூர், சித்தூர் மாவட்ட எல்லையில் உள்ள கவுன்டன்யா வனப்பகுதி வழியாக சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
திருவண்ணாமலையில் ஒரு மாதத்துக்கு மேலாக மழை பெய்யாத நிலையில் இன்று காலை திடீரென 6 மணி முதல் 8 மணி வரை மழை பெய்தது. ஓரளவு வேகமாக பெய்த இந்த மழையால் கடந்த சில நாட்களாக மக்களை வாட்டி வந்த வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது.
மழைக்காலம் முடிவடைந்துவிட்டது. இனிமேல் மழை பெய்யாது என்று நினைத்திருந்த நிலையில் இன்று காலை மழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அண்ணாமலையார் தீர்த்தவாரிக்கு சென்றுவந்ததால் இந்த மழை பெய்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை சுற்றுப்புற கிராமங்களான அடி அண்ணாமலை, வேங்கிக்கால், அத்தியந்தல், ஆணாய்பிறந்தான் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.
இந்த மழையால் வெயிலில் வாடிய பயிர்கள் புத்துணர்வு பெற்று உள்ளன. இந்த மழை மேலும் சில நாட்கள் நீடிக்குமா? என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
வேலூரில் நேற்று மாலை 6.30 மணியளவில் மழை பெய்தது. திடீரென மழை பெய்ததால் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பியவர்கள், ரோட்டில் நடந்து சென்ற பொதுமக்கள் மழையில் நனைந்து சென்றனர். திடீர் மழையால் வெப்பம் தணிந்து இரவில் குளிர்காற்று வீசியது.
வேலூர்:
காட்பாடி சட்டசபை தொகுதிக்கு உள்பட்ட காந்திநகர், சேண்பாக்கம் பகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் காட்பாடியில் நடந்தது.
இதில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பங்கேற்று பேசியதாவது:-
நான் பல தேர்தல்களைப் பார்த்துள்ளேன். இரவு, பகல் பாராமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். ஆனால், இந்தத் தேர்தல் அப்படியல்ல. தி.மு.க. பொதுச்செயலாளராக இருப்பதால் தென் மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டியுள்ளது.
எனவே, இத்தேர்தலில் கட்சியினர் ஒவ்வொருவரும் துரைமுருகனாக மாறி பணியாற்றிட வேண்டும். தேர்தல் பணியாற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் பூத் சிலிப்பைக் கொண்டு வாக்காளர் பட்டியலில் விடுபட்டோர் பெயர்கள் குறித்து சரிபார்க்க வேண்டும்.
நூறு வாக்குகளுக்கு ஒருவர் பொறுப்பேற்க வேண்டும். வரக்கூடிய சட்டசபை தேர்தல் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் பலப்பரீட்சை போல் நடக்க உள்ளது.
இந்த தேர்தலில் ஆளும்கட்சியினர் பண பலம், படை பலம் காட்டலாம். அதை தவிடுபொடியாக்கக்கூடிய வல்லமை தி.மு.க.வினருக்கு உண்டு. அந்த வகையில், இந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
வேலூர் அடுக்கம்பாறை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது50). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். தற்போது இவர் இரவு நேர காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
சுப்பிரமணி நேற்று இரவு குடித்துவிட்டு வந்து தனது மகளை திட்டினார். இதனை இளையமகன் வினோத் (25) தட்டிகேட்டார். அப்போது தந்தை, மகன் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி தான் வீட்டில் வைத்திருந்த இரட்டை குழல் துப்பாக்கியை எடுத்து வந்து வினோத்தை சுட்டார். இதில் குண்டு பாய்ந்து வினோத் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் ஓடிவந்தனர். அங்கு பிணமாக கிடக்கும் வினோத் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பொதுமக்கள் அங்கு வருவதை அறிந்த சுப்பிரமணி அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இதுபற்றி தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வினோத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருந்த சுப்பிரமணியை தேடி வந்தனர்.
இந்நிலையில் சுப்பிரமணி அடுக்கம்பாறை பகுதியில் சுற்றி திரிந்த போது ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிபோதையில் பெற்ற மகனை தந்தையே சுட்டுக்கொன்ற சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காட்பாடி சஞ்சீவிராயபுரத்தைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 38). இவர் சத்துவாச்சாரியை அடுத்த பெருமுகை பகுதியில் பாலாற்றங்கரையோரம் கொட்டகை அமைத்து வாத்துக்குஞ்சுகளை வளர்த்து வருகிறார். வாத்துகள் வளர்ந்த பின்னர் ஜார்க்கண்ட், கேரளா மாநிலங்களில் விற்பனை செய்வார்.
தினமும் வாத்துக் குஞ்சுகளுக்கு காலையில் தீவனம் அளித்து அருகிலுள்ள பாலாற்று குட்டையில் விடுவார். இந்தநிலையில் நேற்று காலையிலும் வழக்கம் போல குஞ்சுகளுக்கு தீவனம் அளித்து பின்னர் குட்டையில் விட்டார்.
சிறிது நேரம் கழித்து குஞ்சுகள் ஒன்றன்பின் ஒன்றாக மயக்கமடைந்து இறந்தன. அவர் வளர்த்து வந்த சுமார் 7 ஆயிரம் வாத்துக் குஞ்சுகளும் நீரில் செத்து மிதந்தது. இதைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் கால்நடை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வாத்துக் குஞ்சுகள் குடித்த குட்டை நீர், தீவனம் மற்றும் மருந்துகளின் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.
இதுகுறித்து சுதாகர் கூறுகையில், வாத்துக் குஞ்சுகளை ஆந்திர மாநிலம் சிங்கராயகொண்டம் பகுதியிலிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாங்கி வந்தேன். தினமும் குஞ்சுகளுக்கு தீவனம் அளித்து பின்னர் அருகில் உள்ள குட்டையில் விடுவேன். இந்த நிலையில் தண்ணீர் குடித்த குஞ்சுகள் அனைத்தும் திடீரென உயிரிழந்து விட்டன. இதனால் பல லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
கால்நடைத்துறை இணை இயக்குனர் நவநீத கிருஷ்ணன் கூறுகையில், திடீரென குஞ்சுகள் இறந்ததால் நீரில் மாசு ஏற்பட்டு விஷமாக மாறி இருக்கலாம். அல்லது எலிகளை கொல்ல பயன்படுத்தப்படும் மருந்து கலந்திருக்கலாம். மருந்து சாப்பிட்ட எலிகளை பறவைகள் தூக்கி குட்டையில் போட்டிருக்கலாம். பறவை காய்ச்சலுக்கான வாய்ப்புகள் இல்லை.
ஏனெனில் குட்டையில் மட்டும் வாத்துக்குஞ்சுகள் இறந்திருக்கிறது. நிலத்தில் உள்ள பிற குஞ்சுகள் நன்றாக உள்ளது. வேறு காரணங்கள் உள்ளதா? என ஆய்வு செய்யப்படுகிறது. பிற கால்நடைகளை அந்த தண்ணீரை குடிக்கவைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
வேலூர்:
திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை புறப்பட்டு வந்தது. அதில் கேரளாவைச் சேர்ந்த 40 வயது இளம்பெண் ஒருவர் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.
அதே பெட்டியில் இருந்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டார். அங்கிருந்த பயணிகள் அவரை மடக்கிப் பிடித்தனர்.
இதுதொடர்பாக பெண் பயணி காட்பாடி ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் புதுச்சேரிக்கு நண்பர்களுடன் மது குடிக்க செல்வது தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ரெயில் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகம் முழுவதும் காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி காதலர்கள் பரிசு பொருட்கள், வாழ்த்து அட்டையை ஒருவருக்கொருவர் வழங்கி தங்களின் அன்பை பரிமாறிக்கொண்டனர். மேலும் அவர்கள் தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு சென்று காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
காதலர் தினத்தையொட்டி பரிசு பொருட்கள், வாழ்த்து அட்டை, ரோஜாப்பூக்களின் விற்பனை அதிகமாக காணப்பட்டது. காதலர் தினத்தை காதலர்கள் கொண்டாடிய அதே வேளையில், அதற்கு சில இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் வேலூர் கோட்டைக்கு காதலர் தினத்தையொட்டி ஏராளமான காதல் ஜோடிகள் நேற்று வந்தனர். கோட்டை மற்றும் கோட்டையின் முன்பகுதியில் உள்ள பூங்காவில் காதல் ஜோடியினர் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். அதேபோன்று விடுமுறை தினத்தை சந்தோஷமாக கழிக்க பலர் குடும்பத்துடன் கோட்டைக்கு வருகை தந்தனர். அதனால் கோட்டையில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் காணப்படுவதை விட அதிக கூட்டம் காணப்பட்டது.
கடந்தாண்டு இந்து அமைப்புகளின் எதிர்ப்பால் காதலர் தினத்தன்று கோட்டைக்குள் செல்ல காதல் ஜோடிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு கோட்டைக்குள் காதலர்கள் அனுமதிக்கப்பட்டனர். அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு கோட்டையின் முன்பகுதியில் வேலூர் வடக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இருசக்கர வாகனங்களில் வந்த காதல் ஜோடிகளை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அவர்களில் பலர் அருங்காட்சியகம் மற்றும் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர்.
வேலூர் கோட்டை அருகே உள்ள பெரியார் பூங்காவிற்கு காதல் ஜோடிகள் வருவதை தவிர்க்கும் வகையில் நேற்று பூங்காவுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது. பராமரிப்பு பணி காரணமாக பூங்காவுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.






