search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் கோட்டைக்கு வந்த ஜோடியிடம் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
    X
    வேலூர் கோட்டைக்கு வந்த ஜோடியிடம் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

    காதலர் தினத்தையொட்டி வேலூர் கோட்டையில் குவிந்த காதல் ஜோடிகள்

    காதலர் தினத்தையொட்டி வேலூர் கோட்டை மற்றும் பூங்காவில் ஏராளமான காதல் ஜோடியினர் குவிந்தனர்.
    வேலூர்:

    உலகம் முழுவதும் காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி காதலர்கள் பரிசு பொருட்கள், வாழ்த்து அட்டையை ஒருவருக்கொருவர் வழங்கி தங்களின் அன்பை பரிமாறிக்கொண்டனர். மேலும் அவர்கள் தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு சென்று காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    காதலர் தினத்தையொட்டி பரிசு பொருட்கள், வாழ்த்து அட்டை, ரோஜாப்பூக்களின் விற்பனை அதிகமாக காணப்பட்டது. காதலர் தினத்தை காதலர்கள் கொண்டாடிய அதே வேளையில், அதற்கு சில இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    வேலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் வேலூர் கோட்டைக்கு காதலர் தினத்தையொட்டி ஏராளமான காதல் ஜோடிகள் நேற்று வந்தனர். கோட்டை மற்றும் கோட்டையின் முன்பகுதியில் உள்ள பூங்காவில் காதல் ஜோடியினர் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். அதேபோன்று விடுமுறை தினத்தை சந்தோஷமாக கழிக்க பலர் குடும்பத்துடன் கோட்டைக்கு வருகை தந்தனர். அதனால் கோட்டையில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் காணப்படுவதை விட அதிக கூட்டம் காணப்பட்டது.

    கடந்தாண்டு இந்து அமைப்புகளின் எதிர்ப்பால் காதலர் தினத்தன்று கோட்டைக்குள் செல்ல காதல் ஜோடிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு கோட்டைக்குள் காதலர்கள் அனுமதிக்கப்பட்டனர். அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு கோட்டையின் முன்பகுதியில் வேலூர் வடக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இருசக்கர வாகனங்களில் வந்த காதல் ஜோடிகளை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அவர்களில் பலர் அருங்காட்சியகம் மற்றும் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர்.

    வேலூர் கோட்டை அருகே உள்ள பெரியார் பூங்காவிற்கு காதல் ஜோடிகள் வருவதை தவிர்க்கும் வகையில் நேற்று பூங்காவுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது. பராமரிப்பு பணி காரணமாக பூங்காவுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×