search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக பளுதூக்கும் அணிக்கு தேர்வு செய்யும் போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்ட போது எடுத்த படம்.
    X
    தமிழக பளுதூக்கும் அணிக்கு தேர்வு செய்யும் போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்ட போது எடுத்த படம்.

    வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பளுதூக்கும் போட்டியில் பதக்கம் பெற்று பெருமை சேர்த்து வருகிறார்கள் - கலெக்டர்

    வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பளுதூக்கும் போட்டியில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் பதக்கங்கள் பெற்று மாவட்டத்துக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.
    வேலூர்:

    73-வது சீனியர் தேசிய பளுதூக்கும் போட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மார்ச் மாதம் 12-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் அணியை தேர்வு செய்யும் போட்டி வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள பளுதூக்கும் பயிற்சி மையத்தில் நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பளுதூக்கும் பயிற்சி மைய மேலாளர் நோயலின் ஜான், தமிழ்நாடு பளுதூக்கும் சங்க பொதுச்செயலாளர் சண்முகவேல், நவீன கல்வித்துறை வளர்ச்சியாளர் டேவிட் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    பளுதூக்கும் போட்டியில் மாவட்ட, மாநில, தேசிய அளவில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு பதக்கங்களை பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து வருகிறார்கள்.

    வேலூர் மாவட்ட நிர்வாகம் விளையாட்டு மாணவர்களுக்கு தமிழக அரசு அறிவிக்கும் அனைத்து திட்டங்களையும் உரிய நேரத்தில் செயல்படுத்தி வருகிறது. காட்பாடியில் 16 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.20 கோடி மதிப்பில் விளையாட்டு மைதானம் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட உள்ளது. விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த இது பெரும் உதவியாக இருக்கும். கிராமப்புற மாணவர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த பல்வேறு பயிற்சிகள் நமது மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விளையாட்டு துறைக்கென ஒதுக்கப்பட்டுள்ள அரசு பணியில் சேர்ந்து சிறப்பாக வாழ வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    இதில், வேலூர் மாவட்ட பளுதூக்கும் சங்க செயலாளர் சிவலிங்கம், பளுதூக்கும் பயிற்றுனர் விநாயகமூர்த்தி, பளுத்தூக்கும் போட்டியில் பல்வேறு பதக்கங்களை வென்ற வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

    தேர்வு போட்டியில் 15 மாவட்டங்களை சேர்ந்த 42 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் தேர்வு செய்யப்பட்ட தலா 10 ஆண்கள், பெண்கள் குறித்த விவரம் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று தேர்வு குழுவினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×