என் மலர்tooltip icon

    வேலூர்

    சித்தூர் அருகே இளம்பெண்ணிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததால் குடியாத்தம் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
    திருப்பதி:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சையது தமிம் (வயது 27). இவரது சகோதரி வீடு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமநேரியில் உள்ளது.

    நேற்று முன்தினம் சகோதரி வீட்டுக்கு சென்ற சையது தமிம் அவரை பார்த்துவிட்டு நேற்று மீண்டும் குடியாத்தம் செல்வதற்காக பலமநேர் பஸ் நிலையத்திற்கு வந்தார்.

    பஸ் நிலையத்தில் இருந்த இளம்பெண்ணிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது பலமநேர் எஸ்.டி.காலனியை சேர்ந்த மகேஷ்குமார் பஸ் நிலையத்திற்கு வந்தார். பஸ்நிலையத்தில் சையது தமிம் இளம்பெண்ணுடன் பேசிக்கொண்டு இருப்பதைக் கண்ட மகேஷ்குமார் ஆத்திரமடைந்து இளம்பெண்ணிடம் ஏன் நீண்ட நேரமாக பேசிக்கொண்டு இருக்கிறாய் என கேட்டார்.

    இதில் மகேஷ்குமார், சையது தமிம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதையடுத்து மகேஷ்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் சையது தமீமை குத்தினார். இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சையது தமிம் கீழே விழுந்தார்.

    அருகில் இருந்தவர்கள் சையது தமிமை மீட்டு சிகிச்சைக்காக பலமநேர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பலமநேர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மகேஷ்குமார் ஏற்கனவே குற்ற செயலில் ஈடுபட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பலமநேர் கிளை சிறையில் இருந்து விடுதலை ஆனது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் தலைமறைவாக உள்ள மகேஷ்குமார் தேடி வருகின்றனர்.
    ஒரே நேரத்தில் 2 பெண்களிடம் 12 பவுன் செயினை பறித்து சென்ற சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த வினாயகாபுரம் எழில் நகரை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளராக உள்ளார். இவரது மனைவி பாரதி (வயது 40). இவர் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பாரதியின் கழுத்திலிருந்த 9½ பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் பாரதியின் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

    செல்லப்பாண்டியன் வீட்டிற்கு சற்று அருகில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி (35). இவர் அணிந்திருந்த 2½ பவுன் செயினையும் மர்ம நபர்கள் பறித்துச்சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    வேலூர் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின்பேரில் வேலூர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. திருட்டு சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஒரே நேரத்தில் 2 பெண்களிடம் 12 பவுன் செயினை பறித்து சென்ற சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர் மாவட்டம் முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் 880 இடங்களில் நடைபெற உள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வேலூர் மக்களுக்கு வாட்ஸ்அப்பில் ஆடியோ குறுந்தகவல் ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:-

    தமிழக அரசின் உத்தரவின் பேரில் வேலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் பலர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த நிலையில் அரசின் உத்தரவின்பேரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அன்று வேலூர் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் 880 இடங்களில் நடைபெற உள்ளது.

    கொரோனாவால் பலர் பெற்றோரை இழந்துள்ளனர். வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் ஏராளம் பேர். தற்போது தான் மெல்ல, மெல்ல அனைவரும் மீண்டு வருகின்றனர். இந்தப்பேரிடர் மீண்டும் சமூகத்தில் தாக்காமல் இருக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

    இந்த முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

    காங்கேயநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் நிவேத குமாரி கரசமங்கலத்துக்கும், அங்கு பணியாற்றிய பவிதா காங்கேயநல்லூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    காட்பாடி:

    காட்பாடி தாலுகாவில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதன் அடிப்படையில் தற்போது 23 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதன் விவரம் வருமாறு:-

    காட்பாடி கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் தலையாரம்பட்டுக்கும், தாராபடவேடு கோபிநாதன் முத்தரசிகுப்பத்துக்கும், விண்ணம்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் குண ராஜன் மேல்பாடிக்கும், அங்கு பணியாற்றிய பிரியதர்ஷினி வெப்பாலைக்கும், அங்கு பணியாற்றிய சின்னசாமி பெருமாள்குப்பத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன் செம்பராயநல்லூருக்கும், அங்கு பணியாற்றிய மேகலா சேனூருக்கும், அங்கு பணியாற்றிய திலீப்குமார் அம்முண்டிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    வஞ்சூர் கிராம நிர்வாக அலுவலர் ஷீலா மகிமண்டலத்துக்கும், அங்கு பணியாற்றிய அருண் தெங்காலுக்கும், அங்கு பணியாற்றிய பரத் பரமசாத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆரிமுத்துமோட்டூர் கிராமத்தில் பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர் விநாயகம் வண்டறந்தாங்கல் கிராமத்திற்கும், முத்தரசி குப்பம் கிராமத்தில் பணியாற்றிய விஜயா விண்ணம்பள்ளிக்கும், தலையாரம்பட்டு கிராமத்தில் பணியாற்றிய வெங்கடேசன் வஞ்சூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    வள்ளிமலை கிராம நிர்வாக அலுவலர் சுகுமார் காட்பாடி க்கும், கழிஞ்சூர் கிராம நிர்வாக அலுவலர் வடிவேல் வள்ளிமலைக்கும், கொடுக்கந் தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் நந்தகுமார் கழிஞ்சூருக்கும், அம்மவார் பள்ளி கிராம நிர்வாக அலுவலர் கமலக்கண்ணன் தாராபடவேடுக்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    பரமசாது கிராம நிர்வாக அலுவலர் கோமதி திருவலத்திற்கும், அங்கு பணியாற்றிய ஜோதீஸ்வரன் இளையநல்லூருக்கும், அங்கு பணியாற்றிய சரண்யா கொடுக்கந்தாங்கல் கிராமத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    காங்கேயநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் நிவேத குமாரி கரசமங்கலத்துக்கும், அங்கு பணியாற்றிய பவிதா காங்கேயநல்லூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த பணியிட மாறுதல் உத்தரவை வேலூர் உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா பிறப்பித்துள்ளார்.
    கே.வி. குப்பம் அருகே வீட்டுக்குள் அழுகிய நிலையில் இறந்து கிடந்த ரெயில்வே ஊழியர் என்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    கே.வி குப்பத்தை அடுத்த பில்லாந்திபட்டு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணாயிரம் (வயது 65).இவர் ரெயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    அவருடைய மனைவி செந்தாமரைச் செல்வி மற்றும் மகன்கள் டாக்டர் காந்தி, என்ஜினியர் ஸ்ரீகாந்த் ஆகியோர் பெங்களூரில் வசித்து வருகின்றனர்.

    கண்ணாயிரம் பில்லாந்தி பட்டு கிராமத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக அவர் வெளியே வரவில்லை. அவரது வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவரது வீட்டிலிருந்து நேற்று துர்நாற்றம் வந்தது.

    சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டில் ஜன்னல் வழியாக பார்த்தபோது கண்ணாயிரம் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

    இதுபற்றிய தகவல் அறிந்த கே.வி.குப்பம் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து பெங்களூரில் வசித்து வரும் அவருடைய மனைவி மற்றும் மகள்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து கே.வி குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். கண்ணாயிரம் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பரவி வருவதால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் இதுவரை 49,127 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 47,806 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 204 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,117 பேர் பலியாகியுள்ளனர்.

    இன்று வேலூர் மாவட்டத்தில் 18 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பரவி வருவதால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஊரடங்கு தளர்வு நேரத்தில் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிய வேண்டாம்.

    கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    வேலூர் அரசு விடுதியில் சிக்கன் சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 7 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் ஓட்டேரியில் அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி உள்ளது.

    இங்கு அரசு முத்துரங்கம் கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் விடுதியில் நேற்று முன்தினம் மாணவர்கள் உணவு சாப்பிட்டு தூங்கினர். நேற்று காலை வழக்கம்போல் அவர்கள் கல்லூரிக்கு சென்றனர். வகுப்பில் இருந்த போது 7 மாணவர்களுக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.

    இதைப்பார்த்த சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவர்கள் சாப்பிட்ட உணவு ஒத்துக் கொள்ளவில்லை என்றும் அதன் காரணமாக அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது என்றனர்.

    இதுகுறித்து பாகாயம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மாணவர் விடுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மாணவர்கள் மதியம் விடுதியில் அதிக அளவில் சிக்கன் சாப்பிட்டதாகவும், இரவில் சிலர் வெளியே சென்று சாப்பிட்டுவந்ததாகவும் விடுதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    வாந்தி மயக்கம் ஏற்பட்ட மாணவர்களுக்கு இன்று 2-வது நாளாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

    அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு மூத்த அமைச்சராக வலம் வந்த கே.சி.வீரமணி பாலாற்று பகுதியில் மணல் கடத்தி வருவதாக ஏற்கெனவே அவர் மீது புகார் எழுந்தது.
    வேலூர்:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடு மற்றும் திருமண மண்டபம், பீடி தொழிற்சாலை, நட்சத்திர ஓட்டல், சொகுசு விடுதி, கல்வி நிறுவனம், உறவினர் வீடு, சென்னையில் உள்ள வீடு உள்பட 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று காலை 6.30 மணி முதல் இரவு 11.20 மணி வரை சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் ஜோலார்பேட்டை இடையம்பட்டி காந்தி ரோட்டில் உள்ள கே.சி.வீரமணி வீடு தவிர மற்ற இடங்களில் நடத்தப்பட்ட சோதனை இரவு 7 மணிக்கு பிறகு ஒவ்வொன்றாக முடிவுக்கு வந்தது. மொத்தம் 17 மணி நேரம் சோதனை நடந்தது.

    பறிமுதல் செய்யப்பட்ட அமெரிக்க டாலர் நோட்டுகள்

    இந்த சோதனையில் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் ரொக்கமாக 34 லட்சத்து 1,060 ரூபாய், 1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான வெளிநாட்டு டாலர்கள், ரோல்ஸ் ராய்ல்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார்கள், 5 கம்ப்யூட்டர்கள், ஹார்டு டிஸ்க்குகள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், 623 பவுன் தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளிப்பொருட்கள், வங்கி கணக்கு புத்தகங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர்.

    இது தவிர கே.சி.வீரமணியின் வீட்டு வளாகத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள சுமார் 275 யூனிட் மணல் கைப்பற்றப்பட்டது.

    இந்த மணல் லாரிகள் மூலம் அங்கு கொண்டு வரப்பட்டு மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு மூத்த அமைச்சராக வலம் வந்த கே.சி.வீரமணி பாலாற்று பகுதியில் மணல் கடத்தி வருவதாக ஏற்கெனவே அவர் மீது புகார் எழுந்தது. இது மட்டுமின்றி அமைச்சராக கே.சி.வீரமணி பதவி வகித்தபோது அவர் பல்வேறு இடங்களில் கட்டி வந்த கட்டிடங்கள், நட்சத்திர ஓட்டல் கட்டுமானப்பணிக்கு பாலாற்று மணல் அதிக அளவில் கடத்தப்பட்டு கட்டிடப் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தவிர, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளையொட்டியுள்ள பாலாற்று பகுதிகளில் இருந்து கே.சி.வீரமணி தனது ஆதரவாளர்கள் மூலம் மணலை கடத்தி ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கு கடத்தியதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது.

    இந்நிலையில், ஜோலார்பேட்டை, இடையம்பட்டி காந்திரோட்டில் உள்ள கே.சி.வீரமணி வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புப்பிரிவு துறையினர் நடத்திய சோதனையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 275 யூனிட் ஆற்று மணல் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர் மணல் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்ததை உறுதி செய்துள்ளது.

    கே.சி.வீரமணியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட மணல் வருவாய்த்துறை மூலம் அதன் தற்போதைய சந்தை மதிப்பு கணக்கிடப்பட்டு, எவ்வளவு யூனிட் உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மணல் பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்கப்படும்.

    பறிமுதல் செய்யப்பட்ட கார்கள்


    அதன்பேரில், அவர்களிடம் புகார் பெறப்பட்டு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது மணல் பதுக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு மணல் கடத்தல் தனியாக விசாரணை நடத்தப்படும் என்றனர்.

    வெளிநாட்டு டாலர், சொகுசு கார்கள் வந்தது எப்படி?

    மேலும் கே.சி.வீரமணியின் வீட்டில் அமெரிக்க டாலர் எப்படி வந்தது என லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கே.சி.வீரமணியின் வீட்டிலிருந்து 9 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கார்கள் யாருடைய பெயரில் வாங்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.


    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் பரோல் கேட்டு சட்டபோராட்டம் நடத்தி வருகிறார். அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    வேலூர் :

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் பரோல் கேட்டு சட்டபோராட்டம் நடத்தி வருகிறார். எனினும் விடுதலையும், பரோலும் வழங்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் காலை உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

    அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, காலையில் உணவு உண்ணவில்லை. பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அன்று இரவு சாப்பிட்டு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் என்றனர்.
    நீட் தேர்வை தடுக்க அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு செய்து வருவதாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சவுந்தர்யா என்ற மாணவி நீட் தேர்வு எழுதிவிட்டு தோல்வி பயத்தில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலை அமைச்சர் துரைமுருகன் மாணவியின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

    எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், நந்தகுமார் எம்.எல்.ஏ ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீட் தேர்வு

    நீட் தேர்வு எனும் கொடிய அரக்கனை மத்திய அரசு ஏவி உள்ளது. இன்னும் எத்தனை மாணவர்களின் உயிரை காவு வாங்க போகிறது என்று தெரியவில்லை.

    தமிழக அரசு நீட் தேர்வினை தடுக்க வேண்டிய அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.

    தேர்வு என்பது இறுதி அல்ல. ஒரு முறை தோல்வி அடைந்தாலும் மறுமுறை தேர்ச்சி பெறலாம். மாணவர்கள் இதனை மனதில் கொண்டு தோல்வியை கண்டு துவண்டு விடக்கூடாது.

    டெல்லியில் நடந்த விவசாய போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தும் செவி சாய்க்காத மத்திய அரசா மாணவர்களின் இழப்பிற்கு செவிசாய்க்க போகின்றது.

    நீட் தேர்வின் காரணமாக உயிர் இழந்த மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் பெரும் கோபமும் கண்ணீரும் வீண்போகாது இதற்கு கண்டிப்பாக தீர்வு காணப்படும்.

    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்துவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.
    வேலூர் :

    கே.சி.வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதிகாலை 3 மணியில் இருந்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

    8 அதிகாரிகள் தலைமையில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஏலகிரி மலை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் திருமணம் ஆன 7 நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    குடியாத்தம்:

    குடியாத்தம் டவுன் பெரியார் நகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் எழிலரசன்.

    இவரது மனைவி நளினி. இருவரும் கூலித்தொழிலாளர்கள். இவரது மகள் அபிநயா என்கிற அன்பரசி (வயது 21). இவருக்கும் கே.வி.குப்பம் அடுத்த மேல் காவனூர் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் ராமராஜன் என்பவருக்கும் கடந்த புதன்கிழமை கே.வி.குப்பத்தில் திருமணம் நடந்தது. ராமராஜன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள பார்மசியில் வேலை செய்து வருகிறார்.

    மறு விருந்திற்காக 2 நாட்களுக்கு முன் புதுமண தம்பதிகள் குடியாத்தத்தில் உள்ள அபிநயா வீட்டிற்கு வந்தனர். இன்று காலை சுமார் 9 மணி அளவில் வீட்டில் அறையின் கதவை தாழிட்டுக் கொண்டு சேலையால் அபிநயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனைக் கண்ட உறவினர்கள் கணவர் மற்றும் பெற்றோர் உடனடியாக கதவை உடைத்து அபிநயாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அபிநயா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்டோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 7 நாட்களே ஆவதால் குடியாத்தம் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    ×