என் மலர்tooltip icon

    வேலூர்

    காட்பாடியில் ஆட்டோ டிரைவர் பெண்கள் குளிப்பதை பார்ப்பது, செல்போனில் அவற்றை படம் பிடிப்பது என ஒரு சைக்கோ போல செயல்பட்டு வந்துள்ளார்.
    வேலூர்:

    காட்பாடி விருதம்பட்டு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஆடம்ஸ் (வயது45). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 21-ந் தேதிஆடம்ஸ் அவரது வீட்டு மொட்டை மாடியில் இருந்தார். அப்போது பக்கத்து வீட்டு இளம்பெண் குளிப்பதை அவரது செல்போனில் படம் பிடித்தார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் அலறி கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் ஆடம்ஸ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். மறுநாள் காலையில் ஆடம்ஸ் ஆட்டோவில் வீட்டுக்கு வந்தார். இதைக்கண்ட இளம்பெண்ணின் உறவினர்கள் அவரை பிடிக்க வந்தனர். அப்போது அவர் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

    ஆடம்ஸ் வந்த ஆட்டோவை இளம்பெண்ணின் உறவினர்கள் கீழே தள்ளினர். மேலும் இதுகுறித்து விருதம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டுக்குள் பதுங்கி இருந்த ஆடம்சை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    போலீசார் அவருடைய செல்போனை வாங்கி சோதனை செய்தனர். அதில் சுமார் 15 பெண்கள் குளிக்கும் ஆபாச காட்சிகள் பதிவாகி இருந்தன.

    ஆடம்ஸ் 15 இளம்பெண்கள் குளிக்கும் போது ஆபாசம் படம் எடுத்து அதனைப் பார்த்து ரசித்து வந்துள்ளார்.

    பெண்கள் குளிப்பதை பார்ப்பது, செல்போனில் அவற்றை படம் பிடிப்பது என ஒரு சைக்கோ போல செயல்பட்டு வந்துள்ளார். ஆடம்ஸ் செல்போனில் சுமார் 15 பெண்களின் ஆபாச படம் இருந்தாக போலீசார் தெரிவித்தனர்.

    கடைசியாக அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் எடுத்த போது மாட்டிக் கொண்டார். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆடம்சை கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் 90 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரவுடிகள் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    தமிழகம் முழுவதும் ஹோம்பிங் ஆபரே‌ஷன் மூலம் ரவுடிகள் வீடுகள் மற்றும் ரவுடிகள் அதிகம் உள்ள பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    வேலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையிலான போலீசார் இரவில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இதில் ரவுடிகள் 41 பேர் கைது செய்யப்பட்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 300 இடங்களில் போலீசார் ஹோம்பிங் ஆபரே‌ஷன் நடத்தினர். இதில் ரவுடிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ரவுடிகள் 21 பேரிடம் நன்னடத்தைச் சான்றிதழ் கையெழுத்து வாங்கிவிட்டு அனுப்பியுள்ளனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று இரவு முதல் காலை வரை அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரவுடிகள் 42 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் 90 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரவுடிகள் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்டம் காட்பாடியில் திருவள்ளூரை சேர்ந்த போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    வேலூர்:

    திருவள்ளூர் மாவட்டம் எரும்பி கிராமத்தைச் சேர்ந்த நாகரத்தினம் என்பவரது மகன் அஜித்குமார் (வயது24). கடந்த 2017-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார்.

    வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள சேவூர் சிறப்பு காவல்படை 15-வது பட்டாலியனில் பணியாற்றி வந்தார். பட்டாலியன் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் அஜித் குமார் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அஜித்குமார் மற்றும் மற்றொரு போலீஸ்காரர் சீனிவாசன் ஆகியோர் பட்டாலியன் போலீஸ் குடியிருப்பில் உள்ள வீட்டில் படுத்து தூங்கினர்.

    அஜித்குமார் படுக்கை அறையில் படுத்திருந்தார். சீனிவாசன் வெளியே தூங்கினார். இந்த நிலையில் படுக்கை அறையில் அஜித்குமார் துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலையில் கண்விழித்த சீனிவாசன், அஜித்குமார் பிணமாக தொங்குவதை கண்டு திடுக்கிட்டார்.

    இதுகுறித்து பட்டாலியன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் திருவலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அஜித்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அஜித் குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு ஒரு அண்ணன் ஒரு சகோதரி உள்ளனர். அவர்கள் சென்னையில் பணியாற்றி வருகின்றனர்.

    மேலும் அவர் தற்கொலை செய்ய காரணம் என்ன என்பது தெரியவில்லை. பணி சுமையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    3 குழந்தைகளின் கழுத்தை சேலையால் நெரித்து கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர்:

    வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது 30), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருக்கும் வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த ஜீவிதாவுக்கும் (23) கடந்த 6½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அக்சயா (5), நந்தகுமார் (4) மற்றும் பெயரிடப்படாத 6 மாத ஆண்குழந்தை என்று 3 குழந்தைகள். தினேஷ் குடும்பத்துடன் சலவன்பேட்டை கச்சேரி தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    தினேஷ் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பும்போது மதுஅருந்திவிட்டு வருவதாகவும், அதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறால் ஜீவிதா கோபித்து விட்டு 3 குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் ஜீவிதா குழந்தைகளுடன் நேற்று காலை 8.30 மணியளவில் தனது வீட்டுக்கு சென்றுள்ளார். இதற்கிடையே தினேஷ் காலை 7 மணிக்கு வேலைக்கு சென்று விட்டார்.

    தாயார் கெஜலட்சுமி மாலை 5 மணியளவில் செல்போனில் ஜீவிதாவை தொடர்பு கொண்டுள்ளார். நீண்டநேரமாகியும் எடுத்து பேசவில்லை. அதனால் சந்தேகம் அடைந்த அவர் உடனடியாக தனது மகன் ஜெகதீஸ்வரனை தொடர்பு கொண்டு விரைவாக அக்கா வீட்டிற்கு சென்று பார்க்கும்படி தெரிவித்தார். அதையடுத்து அவர் அங்கு சென்றார். வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜெகதீஸ்வரன் கதவை வெகுநேரம் தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்து அவர் ஜன்னல் வழியாக கதவின் உள்பக்க தாழ்பாளை திறந்து உள்ளே சென்றார்.

    அப்போது, படுக்கையறையில் 6 மாத ஆண்குழந்தை உள்பட 3 குழந்தைகளும் பேச்சு மூச்சின்றி கிடந்தனர். அவர்களின் கழுத்தில் சேலை சுற்றப்பட்டிருந்தது. அதனை அகற்றி விட்டு ஜெகதீஸ்வரன் குழந்தைகளை தட்டி எழுப்பி பார்த்தார். 3 பேரும் சேலையால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. ஜீவிதா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட அதிர்ச்சி அடைந்த ஜெகதீஸ்வரன் கதறி அழுதார். பின்னர் இதுகுறித்து தாயார் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது குடும்ப தகராறில் 3 குழந்தைகளையும் கொன்று விட்டு ஜீவிதா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக 8170 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
    வேலூர்:

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்றுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் 2478 உள்ளாட்சி பதவிகள் உள்ளன. அதற்கு 8170 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். 14 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 93 பேரும், 138 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 741 பேரும், 247 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 1192 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் 2079 பதவிக்கு 6144 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர்.
    பள்ளி மாணவர்களின் புள்ளிங்கோ கட்டிங்கை ஆசிரியர்கள் ஒழுங்கின்மையாக பார்ப்பதால் வேலூரில் உள்ள முடிவெட்டும் கடை வைத்திருப்பவர்கள் பள்ளி மாணவர்கள் யாருக்கும் மாடலாக முடிவெட்டக்கூடாது என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் ஸ்டைலாக முடிவெட்டும் போக்கு உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் நடிகர்கள், விளையாட்டு வீரர்களின் சிகை அலங்காரம் போல தாங்களும் முடிவெட்டிக் கொண்டு ஸ்டைலாக வலம் வருகின்றனர்.

    இளைஞர்கள் தங்கள் அடையாளத்தை தனித்துவமாக காட்டுவதற்காக ஸ்டைலாக முடிவெட்டி விதவிதமாக சிகை அலங்காரம் செய்துகொள்வது என்பது பெரிய அளவில் பரவலாகி வருகிறது.

    அந்த வகையில் பாக்ஸ் கட்டிங், ஒன் சைட், வி கட், ஸ்பைக் என ஸ்டைலாக முடிவெட்டிக்கொள்ளும் இளைஞர்களை புள்ளிங்கோ என்று கூறுகின்றனர். அதனாலேயே அதுபோன்ற ஸ்டைலான சிகை அலங்காரத்தை புள்ளிங்கோ ஹேர் ஸ்டைல் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த புள்ளிங்கோ சிகை அலங்காரம் வேலூரில் பரவலாகி வருகிறது. மாடர்னாக பார்க்கப்படும் இந்த சிகை அலங்காரம் வினோதமாகவும் ஒழுங்கின்மையாகவும் பார்க்கப்படுகிறது. ஆனாலும், இது போன்ற ஹேர் ஸ்டைலுக்கும் வேலூரில் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. அவர்களும் மாடர்னாக முடிவெட்டிக்கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.

    வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் புள்ளிங்கோ கட்டிங் செய்து பள்ளிக்கு வந்து செல்கின்றனர். 5 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் இது போன்ற தலை முடி சிகை அலங்காரம் செய்து சுற்றி வந்தனர். பள்ளி திறந்ததும் அதே சிகை அலங்காரத்தில் பள்ளிக்கு வர தொடங்கினர்.

    100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இது போன்ற புள்ளிங்கோ கட்டிங் செய்துள்ளதால் பள்ளி தலைமை ஆசிரியர் நெப்போலியன் அவர்களுக்கு சிகை அலங்காரம் செய்ய முடிவு செய்தார். இன்று காலை முடிதிருத்தும் தொழிலாளர்கள் 2 பேரை பள்ளிக்கு வரவழைத்து அவர்கள் மூலம் புள்ளிங்கோ கட்டிங் செய்திருந்த மாணவர்களை வரிசையாக மரத்தடியில் நிற்க வைத்து முடிதிருத்தும் தொழிலாளர்கள் மூலம் சிகை அலங்காரம் சீரமைக்கப்பட்டது. இன்று 11 மற்றும் 12வது படிக்கும் மாணவர்கள் 100 பேருக்கு முடி வெட்டி சீரமைக்கப்பட்டது. நாளை 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் புள்ளிங்கோ கட்டிங் செய்திருந்தால் அவர்களுக்கு முடி வெட்டப்படும் என தலைமையாசிரியர் நெப்போலியன் தெரிவித்தார்.

    பள்ளி மாணவர்களின் புள்ளிங்கோ கட்டிங்கை ஆசிரியர்கள் ஒழுங்கின்மையாக பார்ப்பதால் வேலூரில் உள்ள முடிவெட்டும் கடை வைத்திருப்பவர்கள் பள்ளி மாணவர்கள் யாருக்கும் மாடலாக முடிவெட்டக்கூடாது என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் நேற்று மதியம் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பொதுமக்களிடம் 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி அச்சுறுத்தி வந்தனர். இதனையடுத்து போலீசார் அவர்களை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் குடியாத்தம் அடுத்த கருணீகசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ரோ‌ஷன்பாபு (வயது 34), ஹேமந்த் (வயது 19) என தெரியவந்தது. இருவரும் லாரி டிரைவர் என்பதும் தெரியவந்தது.

    பொதுமக்களை மிரட்டிய ரோ‌ஷன்பாபு மற்றும் ஹேமந்த் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    பாலாறு படுகையில் உள்ள கிராம மக்களுக்கு வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆம்பூர்:

    தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பி தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா எல்லை பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் பாலாற்றின் கிளை நதிகளான வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள சாரங்கல் பெருங்காணாறு, பத்தலபல்லி பகுதியிலுள்ள மலட்டாறு, குண்டல பல்லியில் உள்ள குட்டாறு உள்ளிட்ட ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த கிளை ஆறுகளில் பாய்ந்தோடி வரும் வெள்ளம் ஆம்பூர் அடுத்த பச்ச குப்பம் பாலாற்றில் கலக்கிறது.

    ஏற்கனவே பாலாற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் தற்போது இந்த கிளை ஆறுகளின் வெள்ளம் பாலாற்றில் கலந்துள்ளதால் பச்சகுப்பம் பகுதியிலிருந்து பாலாற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் பாய்ந்தோடி வருகிறது.

    ஆம்பூரில் இருந்து குடியாத்தம் செல்லக்கூடிய பச்சகுப்பம் தரைப்பாலத்தை முற்றிலுமாக மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது. இதனால் பச்சகுப்பம் தரைப்பாலத்தில் இருந்து குடியாத்தம் செல்லும் போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல் நரியம்பட்டு பகுதியில் உள்ள தரைப்பாலம் முற்றிலுமாக நீரில் மூழ்கி உள்ளது. பாலாற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்களில் அதிகளவு தண்ணீர் செல்கிறது.

    பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால் பொதுமக்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தண்ணீரில் இறங்க வேண்டாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆறு மற்றும் ஏரி கால்வாய் அருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.

    பாலாறு படுகையில் உள்ள கிராம மக்களுக்கு வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி, திருவலம் பகுதிகளில் இடியுடன் மழை கொட்டியது. குடியாத்தம் பகுதிகளில் லேசான மழை பெய்தது. வேலூர் மாநகர பகுதியில் இடியுடன் மழை பெய்ததால் தெருக்களில் மழை தண்ணீர் தேங்கி உள்ளது.

    பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருவதால் தெருக்கள் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கின்றன.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாலாற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. கத்தாழம்பட்டு, காவனூர், விரிஞ்சிபுரம், செதுவாலை மேல்மொணவூர் உள்ளிட்ட ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த ஏரிகள் 50 சதவீதத்துக்கும் மேல் நிறைந்துள்ளன. குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணை11.5 மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்த அணையில் தற்போது 11.2 மீட்டர் தண்ணீர் உள்ளது.அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இன்று அல்லது நாளைக்குள் மோர்தானா அணை நிரம்பி விடும்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜாவில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. அங்கு 114.6 மில்லி மீட்டர் மழை பதிவானது. அம்மூர், சோளிங்கர், ஆற்காடு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது மற்ற இடங்களில் லேசான மழை பெய்தது. ராணிப்பேட்டை, வாலாஜாவில் பலத்த மழையால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    அந்த பகுதியில் உள்ள கானாறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாறு, பொன்னையாறுகளில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.நேற்று பெய்த மழையால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம், ஆம்பூர், நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது. திருப்பத்தூர் நகர பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆம்பூரில் 56 மில்லி மீட்டர் மழை பதிவானது.ஏலகிரி மலையில் சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசுகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. ஆரணி அருகே உள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ரேணு என்பவரது மனைவி சின்ன பாப்பா (வயது85). இவருடைய கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். 2 மகள்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.

    சின்ன பாப்பா தனியாக அந்தப்பகுதியில் உள்ள காங்கிரீட் வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது சின்ன பாப்பா வீட்டின் மேற்கூரை மற்றும் பின்பக்க சுவர் இடிந்து விழுந்தது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சின்ன பாப்பா இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பரவி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் இதுவரை 49,162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 47,825 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,118 பேர் பலியாகியுள்ளனர்.

    இன்று வேலூர் மாவட்டத்தில் 21 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பரவி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
    கே.வி.குப்பம் அருகே பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கே.வி.குப்பம்:

    கே.வி.குப்பம் அருகே வேப்பநேரியைச் சேர்ந்தவர் உமாபதி. அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 55), டீக்கடை அருகில் போண்டா கடை நடத்தி வருகிறார். இவர்கள் கடைகளை மூடிவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

    பிள்ளையார் கோவில் தெரு வழியே சென்றபோது மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் மகேஸ்வரி கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை அறுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர்.

    இதுகுறித்து உமாபதி கொடுத்த புகாரின் பேரில் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    பஸ் நிலையங்கள் மார்க்கெட், கடைவீதிகள், சினிமா தியேட்டர்கள் உள்பட பொதுமக்கள் கூடும் இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.
    வேலூர்:

    தமிழகம் முழுவதும் நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

    வேலூர் மாவட்டத்தில் 880 இடங்களில் நாளை கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடக்கிறது.

    மாநகராட்சி பகுதியில் மட்டும் 200 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. மாவட்டம் முழுவதும் 1,038 நர்சுகள் உட்பட 3 ஆயிரம் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    பஸ் நிலையங்கள் மார்க்கெட், கடைவீதிகள், சினிமா தியேட்டர்கள் உள்பட பொதுமக்கள் கூடும் இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

    மேலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் குறித்து பிரசாரம் செய்யப்பட்டது.

    பொதுமக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும். அனைத்து வாகனங்களின் டிரைவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படடுள்ளது.
    ×