search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளியில் மாணவர்களுக்கு ஹேர் கட்டிங் செய்த காட்சி.
    X
    வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளியில் மாணவர்களுக்கு ஹேர் கட்டிங் செய்த காட்சி.

    புள்ளிங்கோ கட்டிங் செய்திருந்த மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஹேர் கட்டிங்

    பள்ளி மாணவர்களின் புள்ளிங்கோ கட்டிங்கை ஆசிரியர்கள் ஒழுங்கின்மையாக பார்ப்பதால் வேலூரில் உள்ள முடிவெட்டும் கடை வைத்திருப்பவர்கள் பள்ளி மாணவர்கள் யாருக்கும் மாடலாக முடிவெட்டக்கூடாது என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் ஸ்டைலாக முடிவெட்டும் போக்கு உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் நடிகர்கள், விளையாட்டு வீரர்களின் சிகை அலங்காரம் போல தாங்களும் முடிவெட்டிக் கொண்டு ஸ்டைலாக வலம் வருகின்றனர்.

    இளைஞர்கள் தங்கள் அடையாளத்தை தனித்துவமாக காட்டுவதற்காக ஸ்டைலாக முடிவெட்டி விதவிதமாக சிகை அலங்காரம் செய்துகொள்வது என்பது பெரிய அளவில் பரவலாகி வருகிறது.

    அந்த வகையில் பாக்ஸ் கட்டிங், ஒன் சைட், வி கட், ஸ்பைக் என ஸ்டைலாக முடிவெட்டிக்கொள்ளும் இளைஞர்களை புள்ளிங்கோ என்று கூறுகின்றனர். அதனாலேயே அதுபோன்ற ஸ்டைலான சிகை அலங்காரத்தை புள்ளிங்கோ ஹேர் ஸ்டைல் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த புள்ளிங்கோ சிகை அலங்காரம் வேலூரில் பரவலாகி வருகிறது. மாடர்னாக பார்க்கப்படும் இந்த சிகை அலங்காரம் வினோதமாகவும் ஒழுங்கின்மையாகவும் பார்க்கப்படுகிறது. ஆனாலும், இது போன்ற ஹேர் ஸ்டைலுக்கும் வேலூரில் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. அவர்களும் மாடர்னாக முடிவெட்டிக்கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.

    வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் புள்ளிங்கோ கட்டிங் செய்து பள்ளிக்கு வந்து செல்கின்றனர். 5 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் இது போன்ற தலை முடி சிகை அலங்காரம் செய்து சுற்றி வந்தனர். பள்ளி திறந்ததும் அதே சிகை அலங்காரத்தில் பள்ளிக்கு வர தொடங்கினர்.

    100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இது போன்ற புள்ளிங்கோ கட்டிங் செய்துள்ளதால் பள்ளி தலைமை ஆசிரியர் நெப்போலியன் அவர்களுக்கு சிகை அலங்காரம் செய்ய முடிவு செய்தார். இன்று காலை முடிதிருத்தும் தொழிலாளர்கள் 2 பேரை பள்ளிக்கு வரவழைத்து அவர்கள் மூலம் புள்ளிங்கோ கட்டிங் செய்திருந்த மாணவர்களை வரிசையாக மரத்தடியில் நிற்க வைத்து முடிதிருத்தும் தொழிலாளர்கள் மூலம் சிகை அலங்காரம் சீரமைக்கப்பட்டது. இன்று 11 மற்றும் 12வது படிக்கும் மாணவர்கள் 100 பேருக்கு முடி வெட்டி சீரமைக்கப்பட்டது. நாளை 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் புள்ளிங்கோ கட்டிங் செய்திருந்தால் அவர்களுக்கு முடி வெட்டப்படும் என தலைமையாசிரியர் நெப்போலியன் தெரிவித்தார்.

    பள்ளி மாணவர்களின் புள்ளிங்கோ கட்டிங்கை ஆசிரியர்கள் ஒழுங்கின்மையாக பார்ப்பதால் வேலூரில் உள்ள முடிவெட்டும் கடை வைத்திருப்பவர்கள் பள்ளி மாணவர்கள் யாருக்கும் மாடலாக முடிவெட்டக்கூடாது என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×