search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரணியில் வீடு இடிந்து பலியான மூதாட்டி உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்ட காட்சி
    X
    ஆரணியில் வீடு இடிந்து பலியான மூதாட்டி உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்ட காட்சி

    வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூரில் பரவலாக மழை - ஆரணியில் வீடு இடிந்து பெண் பலி

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி, திருவலம் பகுதிகளில் இடியுடன் மழை கொட்டியது. குடியாத்தம் பகுதிகளில் லேசான மழை பெய்தது. வேலூர் மாநகர பகுதியில் இடியுடன் மழை பெய்ததால் தெருக்களில் மழை தண்ணீர் தேங்கி உள்ளது.

    பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருவதால் தெருக்கள் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கின்றன.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாலாற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. கத்தாழம்பட்டு, காவனூர், விரிஞ்சிபுரம், செதுவாலை மேல்மொணவூர் உள்ளிட்ட ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த ஏரிகள் 50 சதவீதத்துக்கும் மேல் நிறைந்துள்ளன. குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணை11.5 மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்த அணையில் தற்போது 11.2 மீட்டர் தண்ணீர் உள்ளது.அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இன்று அல்லது நாளைக்குள் மோர்தானா அணை நிரம்பி விடும்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜாவில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. அங்கு 114.6 மில்லி மீட்டர் மழை பதிவானது. அம்மூர், சோளிங்கர், ஆற்காடு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது மற்ற இடங்களில் லேசான மழை பெய்தது. ராணிப்பேட்டை, வாலாஜாவில் பலத்த மழையால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    அந்த பகுதியில் உள்ள கானாறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாறு, பொன்னையாறுகளில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.நேற்று பெய்த மழையால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம், ஆம்பூர், நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது. திருப்பத்தூர் நகர பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆம்பூரில் 56 மில்லி மீட்டர் மழை பதிவானது.ஏலகிரி மலையில் சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசுகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. ஆரணி அருகே உள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ரேணு என்பவரது மனைவி சின்ன பாப்பா (வயது85). இவருடைய கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். 2 மகள்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.

    சின்ன பாப்பா தனியாக அந்தப்பகுதியில் உள்ள காங்கிரீட் வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது சின்ன பாப்பா வீட்டின் மேற்கூரை மற்றும் பின்பக்க சுவர் இடிந்து விழுந்தது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சின்ன பாப்பா இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×