என் மலர்tooltip icon

    வேலூர்

    • 30 மாணவ, மாணவி்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.
    • ரோபோக்கள் கட்டளைகளை நிறைவேற்றியதை கண்டு நெகிழ்ச்சி அடைந்தனர்.

    வேலூர்:

    நவீன தொழில் நுட்பத்தில் உலகம் மூழ்கி வரும் நிலையில் எல்லா துறைகளிலும் நாளுக்கு நாள் ரோபோவின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    பெருநகரங்களில் உள்ள உணவகங்கள் தங்கும் விடுதிகளில் மனிதர்களுக்கு பதில் ரோபோக்கள் பயன்பாட்டிற்கு வந்திருப்பதை காணமுடிகிறது.

    எதிர்காலத்தில் ரோபோக்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்ற நிலையில் சிறுவயது முதலே ரோபோ வடிவமைப்பு குறித்து மாணவ மாணவிகள் இடையே மிகுந்த ஆர்வம் காணப்படுகிறது.

    வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் 2 நாள் எந்திரனியல் (ரோபோடிக்ஸ்) பயிற்சிப்பட்டறை நடந்தது.

    இதில் 5-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை படிக்கும் 30 மாணவ, மாணவி்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். பிரத்தியேக ரோபாட் பயிற்சியாளர்கள் மூலம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

    ரோபோவின் பாகங்களை தொகுத்து வடிவமைப்பது எப்படி? அவற்றிற்கு கட்டளைகள் வழங்குவது? எப்படி?, சின்ன சின்ன சவால்களை எதிர்கொள்வது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

    பள்ளி மாணவர்கள் தங்களது கோடை விடுமுறையை பயனுள்ளதாக களிக்கும் வகையில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    ரோபோவில் உள்ள உதிரி பாகங்கள் என்னென்ன அவற்றின் பயன்பாடுகள் என்ன அவற்றை எப்படி தொகுத்து வடிவமைப்பது மற்றும் அவற்றுக்கு கட்டளைகள் எப்படி வழங்குவது உள்ளிட்ட பயிற்சிகளைப் பெற்றனர்.

    இந்த பயிற்சியில் இ.வி-3 ரோபோ வட்டமாக சுற்றுதல் சதுரமாக சுற்றுதல் மற்றும் தடைகளை கண்டறியும் சென்சார் மற்றும் நிறங்களை கண்டறியும் சென்சார்கள் மூலம் ரோபோவிற்கு கட்டளைகளை வழங்கி பள்ளி மாணவர்கள் இயக்கி அசத்தினர்.

    தங்களது கட்டளைகளுக்கு ஏற்ப ரோபோ செயல்படுவதைக் கண்டு மாணவ-மணவியர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    சிறுவர்கள் விளையாட்டாக தொழில் நுட்பத்தையும், கட்டளைகளை (கோடிங்) எழுதுவதையும் மட்டுமல்லாமல் அறிவியலையும், கணிதத்தையும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள இதுபோன்ற பயிற்சி பட்டறைகள் வழிவகுக்கும் என பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

    • போலீசார் விழிப்புணர்வு
    • மாநகராட்சியில் நவீன கேமரா கட்டுப்பாட்டு அறை திறப்பு

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் விபத்துக்களைத் தடுக்க காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விபத்துகளில் சிக்கும் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாததால் பலத்த காயம் மற்றும் உயிர் சேதம் ஏற்படுகிறது.இதை தடுக்கும் வண்ணம் காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    எனினும் பலர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் வேலூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு உடனடி அபராதம் விதித்து உத்தரவிட்டார். அதன்படி வேலூர் மாநகர பகுதியில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். பைக் ஓட்டுவோர் மட்டுமின்றி பின்னால் இருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என கட்டாயமாக் கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் தெருக்களில் நவீன ரக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கான கட்டுப்பாட்டு அறை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் துரைமுருகன் இன்று திறந்து வைத்தார்.

    கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொண்டு போலீசார் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கும் விதி மீறுபவர்களுக்கும் அபராதம் விதிக்க முடியும். மாநகர பகுதியில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்கள் வாகனங்களின் பதிவு எண்களை துல்லியமாக படம் பிடித்து காட்டும். எனவே விதி மீறுபவர்கள் மற்றும் ஹெல்மெட் அணியாதவர்கள் இதிலிருந்து தப்ப முடியாது.

    மேலும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் விவரங்களையும் இந்த கேமராக்களில் பதிவு செய்துள்ளனர். அதன் மூலம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மாநகர பகுதியில் நுழைந்தால் அவர்கள் குறித்த விவரங்களும் போலீசாருக்கு இந்த கேமரா மூலம் தெரியவரும்.

    எனவே மாநகர பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். அணியா விட்டால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
    • முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி ஸ்ரீ புரத்தில் 14-ம் தேதி ஆலோசனை கூட்டம்.

    வேலூர்:


    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி ஸ்ரீ புரத்தில் 14-ம் தேதி ஆலோசனை கூட்டம்.வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கான வீடு ஆணை, புதியதாக வீடு கட்டிக்கொள்ள விரும்பியவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது.

    வாரிய நிர்வாக பொறியாளர் ஜெயசெல்வன் வரவேற்றார். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். கதிர் ஆனந்த் எம்பி, கார்த்திகேயன் எம்எல்ஏ, மேயர் சுஜாதா, துணைமேயர் சுனில் குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு அடுக்குமாடி குடியிருப்பில் பங்கு தொகை செலுத்திய 30 பேருக்கும், புதிதாக வீடு கட்டிக் கொள்ள உள்ள 104 பேருக்கும் ஆணைகள் வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில், குடிசை வீடுகளில் மக்கள் கஷ்டப்படுவதை தவிர்க்க குடிசை வீடுகள் இருக்கக்கூடாது என்பதற்காக குடிசை மாற்று வாரியம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தார். அதன்படி அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.

    ஏழை எளிய மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அவ்வாறு செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் மட்டும்தான் கிராமபுரத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

    வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் வினியோகிக்கப் பட்டுள்ளது.

    இனி வேலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு துறை வாரியாக நான் திறனாய்வு செய்ய போகிறேன். வேலூருக்கு தமிழக முதல் அமைச்சர் வருகை தர உள்ளார். இதை முன்னிட்டு நிகழ்ச்சியை எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஸ்ரீ புரத்தில் வருகிற 14-ம் தேதி நடைபெற உள்ளது.

    இதில் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள்.

    மக்கள் பிரதிநிதிகள் ஒற்றுமையாக இருந்தால்தான் அதிகாரிகள் உங்களை கண்டு பயப்படுவார்கள். மக்களுக்கும் சிறந்த முறையில் பணியாற்ற முடியும். வேலூரில் முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி மற்ற மாவட்டங்களை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு செய்து காட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில்உதவி நிர்வாக பொறியாளர் மோகன் நன்றி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காட்பாடியில் எம்.ஜி.ஆருக்கு அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளார்.
    • குஷ்புவுக்கு கோவில் கட்டும்போது எம்ஜிஆருக்கு கோவில் கட்டுவது தவறு இல்லை.

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன கேமரா கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் துரைமுருகன் இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஹெல்மெட் அணிவது மிகவும் அவசியமானது. 100ல் 80 பேர் ஹெல்மெட் அணிவது இல்லை. பெரும்பாலானோர் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுகின்றனர். சென்னையில் வாகன ஓட்டிகள் அதிகளவில் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் ஹெல்மெட் அணியவேண்டும்.

    ஹெல்மெட் அணியாதவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதிக்க வேண்டும். பட்டியலின பெண்ணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தால் தனிப்பட்ட முறையில் நான் அதை வரவேற்கிறேன்.

    காட்பாடியில் எம்.ஜி.ஆருக்கு அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளார். குஷ்புவுக்கு கோவில் கட்டும்போது எம்ஜிஆருக்கு கோவில் கட்டுவது தவறு இல்லை.

    திராவிட கொள்கைகளை உண்மையிலே கடைபிடிக்கும் கட்சியாக தி.மு.க மட்டுமே உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கதிர் ஆனந்த் எம்.பி. கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மேயர் சுஜாதா ஆனந்தகுமார் துணை மேயர் சுனில்குமார் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • பேரணாம்பட்டு பங்களாமேடு பகுதியில் உள்ள மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளியில் யானை நுழைந்தது.
    • சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் போராடி யானையை காட்டுப்ப குதிக்குள் விரட்டியடித்தனர்.

    பேரணாம்பட்டு:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள மோர்தானா காப்புக்காடு பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆண் யானை ஒன்று சுற்றித் திரிந்தது. குண்டக்கல் காப்புக்காடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான வனப்பகுதிக்குள் நுழைந்தது.

    அங்குள்ள பால் சுனை, மாமரத்து பள்ளம் ஓடை மற்றும் கங்கா ஓடை உள்ளது. இந்த ஓடைகளில் ஆண்டுதோறும் வற்றாத தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். இதனைப் பயன்படுத்தி அங்கு சாராய வியாபாரிகள் சாராயம் காய்ச்சி வருகின்றனர். அதற்காக பானைகளில் ஊறல் வைத்திருந்தனர். அதனை மிதித்து நாசம் செய்த யானை தண்ணீர் என நினைத்து சாராயத்தை குடித்துள்ளது. இதனால் மதம் பிடித்ததுபோல் யானை பிளிறியபடி சுற்றித் திரிந்தது. யானையைக் கண்ட சாராய வியாபாரிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    பின்னர் பேரணாம்பட்டு பங்களாமேடு பகுதியில் உள்ள மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளியில் யானை நுழைந்தது. அங்கு யானை பிளிரியப்படி இருந்தது.

    இதனால் பள்ளியில் இருந்தவர்கள் பயத்தில் அஞ்சி நடுங்கினர். ஆனால் யானை அவர்களை ஒன்றும் செய்யாமல் மீண்டும் குடியாத்தம் நெடுஞ்சாலை வழியாக வனத்துறை ஓய்வு விடுதிக்குள் வந்தது.

    அப்போது வனச்சரகர் சதீஷ்குமார் வனக்காவலர் ரவி காப்பாளர் வெங்கடேசன் தூங்கிக்கொண்டு இருந்தனர். யானையின் பிளிறல் சத்தம் கேட்டு வெளியே வந்தவர்கள் பொதுமக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் போராடி யானையை காட்டுப்ப குதிக்குள் விரட்டியடித்தனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    • நாட்டறம்பள்ளி அருகே 2 பாம்புகள் பின்னி விளையாடிக் கொண்டிருந்ததை கண்டு தீயணைப்புத் துறையினர் மீட்டு அருகில் உள்ள காட்டில் விட்டனர்.
    • அப்பகுதி இளைஞர்கள் 2 பாம்புகள் பின்னி விளையாடிக் கொண்டிருந்ததை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே 2 பாம்புகள் பின்னி விளையாடிக் கொண்டிருந்ததை கண்டு தீயணைப்புத் துறையினர் மீட்டு அருகில் உள்ள காட்டில் விட்டனர்.

    நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தரபள்ளி கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 27) இவருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று மாலை 2 பாம்புகள் பின்னி விளையாடிக் கொண்டிருந்தன. இதனை கண்ட பூபதி உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது 2 பாம்புகள் பின்னி விளையாடி கொண்டிருந்ததை கண்டு சுமார் அரை மணி நேரம் காத்திருந்தனர். அதன் பிறகு பாம்புகள் தனித்தனியாக பிரிந்து சென்றது. பாம்பு பிடிக்கும் கருவி மூலம் பாம்பை பிடித்து அருகில் உள்ள காட்டில் விட்டனர்.

    மேலும் அப்பகுதி இளைஞர்கள் 2 பாம்புகள் பின்னி விளையாடிக் கொண்டிருந்ததை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

    • வேலூர் பழைய பஸ் நிலையத்தில் திருவள்ளுவர் சிலை அருகே ஆட்டோக்கள் நிறுத்த அனுமதி கேட்டனர்.
    • 130-க்கும்மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள்.

    வேலூர்:

    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே ஆட்டோக்கள் நிறுத்தி பயணிகளை ஏற்றி வந்தனர். அந்த இடத்தில் ஆட்டோக்களை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி வேலூர் வடக்கு போலீஸ் சார்பில் ஆட்டோக்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டது. அங்கிருந்த ஆட்டோ களையும் போலீசார் அப்புறப்படுத்தினர்.

    இந்த நிலையில் இன்று காலை ஆட்டோ டிரைவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.

    அதில் நாங்கள் பழைய பஸ் நிலைய பகுதியில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் இல்லாமல் ஆட்டோ ஓட்டி வருகிறோம். திடீரென வடக்கு போலீசார் அந்த இடத்தில் ஆட்டோவை நிறுத்த கூடாது என கூறிவிட்டனர்.

    இதுபற்றி கேட்டதற்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் ஆட்டோக்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறினர். இதனால் சுமார் 130-க்கும்மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள்.

    பழைய பஸ் நிலையத்தில் திருவள்ளூர் சிலை அருகே ஆட்டோ நிறுத்த அனுமதிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    இதுதொடர்பாக அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனிடம் நேரில் கோரிக்கை விடுத்தனர். அப்போது அவர் திருவள்ளுவர் சிலை அருகே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் 5 ஆட்டோக்கள் என்ற அடிப்படையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல அனுமதி அளித்ததாக தெரிவித்தனர்.

    • 21-ந் தேதி முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் புதிய பஸ் நிலையத்தை திறந்து வைக்கிறார்.
    • திருவண்ணாமலை பஸ்கள் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படுகிறது.

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் நடந்து வருவதால் திருவண்ணாமலை மற்றும் சித்தூர் செல்லும் பஸ்கள் கோட்டை அருகே உள்ள ஆடுதொட்டி பஸ் நிலையத்தில் இருந்தும் மற்ற பஸ்கள் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன.

    சென்னை மார்க்கமாக செல்லும் பஸ்கள் மட்டும் புதிய பஸ் நிலையத்தில் செல்லியம்மன் கோவில் பின்புறமுள்ள ஒரு பகுதியிலிருந்து இயக்கப்பட்டன. இந்த நிலையில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    வருகிற 21-ந் தேதி முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் புதிய பஸ் நிலையத்தை திறந்து வைக்கிறார். இந்த நிலையில் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் இயக்கப்படுவது நேற்று இரவு முதல் நிறுத்தப்பட்டது.

    வேலூர், புதிய பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், தாம்பரம், அரக்கோணம் செல்லும் பஸ்கள், ராணிப்பேட்டை மற்றும் திருத்தணி மார்கமாக செல்லும் தனியார் பஸ்கள் மற்றும் அரசு பஸ்கள் நேற்று இரவு முதல் ஆடுதொட்டி பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

    ஆடுதொட்டி பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட திருவண்ணா மலை மற்றும் சித்தூர் வழித்தடப் பஸ்கள் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

    புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படாததால் அந்த பகுதி நேற்று இரவு முதல் வெறிச்சோடியது.

    புதிய பஸ் நிலையம் திறக்கும் வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து ஏமாற வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • காட்பாடியில் இருந்து சத்துவாச்சாரி, தங்க கோவிலுக்கு பஸ்கள் இயக்க கோரிக்கை
    • மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் புதிய வழிதடம் அமைக்கவில்லை என்று குற்றச்சாட்டு

    வேலூர்:

    காட்பாடியில் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறை கேட்பு முகாமில் காந்திநகர் மக்கள் சேவை சங்கம் சார்பில் தலைவர் எஸ்.பகீரதன், செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், பொருளாளர் வி.பழனி ஆகியோர் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் சிறப்பு நிலை நகராட்சியாக இருந்து 1.08.2008 முதல் வேலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 2011-ல் காட்பாடி, சத்துவாச்சாரி போன்ற நகராட்சிகளும் பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளும் இணைக்கப்பட்டன.

    நகராட்சியாக இருந்த போது நடைமுறையில் இருந்த காட்பாடி, பாகாயம் வழித்தடத்தில் மட்டுமே டவுன் பஸ்கள் இன்றளவும் இயக்கப்படுகின்றன. மாநகராட்சியாக தரம் உயர்தப்பட்டு காட்பாடி, சத்துவாச்சாரி ஆகிய நகராட்சிகள் இணைக்கப்பட்ட பிறகும் 10 ஆண்டுகள் கடந்த நிலையில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு டவுன் பஸ் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.

    காட்பாடியிலிருந்து - அலமேலு ரங்காபுரம், கொணவட்டம், மாவட்ட வேலைவாய்பு அலுவலகம் மற்றும் தங்க கோயில் வரை டவுன் பஸ்கள் இயக்க வேண்டும்.

    காட்பாடியில் இருந்து மதிநகர், ஜாப்ராபேட்டை, வஞ்சூர், கழிஞ்சூர், புதிய பஸ் நிலையம் வழியாக புதிய வழித்தடம் ஏற்படுத்த வேண்டும். சத்துவாச்சாரியிலிருந்து திருவள்ளுவர் பல்லைகழகம், மாவட்ட வேலைவாய்பு அலுவலகம், தங்ககோவில் வரை புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்க வேண்டும்.

    கொணவட்டம் பகுதியிலிருந்து திருவள்ளுவர் பல்கலை கழகம், தங்க கோவில், விஐடி பல்கலைக்கழகம் போன்ற பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய வழித்தடம் ஏற்படுத்த வேண்டும்.

    ஸ்ரீபுரம் பொற்கோவிலில் இருந்து காட்பாடி, அலமேலுமங்காபுரம், கொணவட்டம், திருவள்ளுவர் பல்கலைகழகம் போன்ற பகுதிகளுக்கு புதிய வழித்தடங்களில் டவுன் பஸ்கள் இயக்கப்பட வேண்டும்.

    மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் இருந்து எந்த மண்டத்திற்கும் செல்ல ஏதுவாக புதிய டவுன் பஸ்கள் வழித்தடங்களை ஏற்படுத்தி தர வேண்டுகின்றோம்.

    தற்போது நடைமுறையில் உள்ள காட்பாடி-பாகாயம் வழித்தடத்தில் காந்திநகரில் சாலையில் நடுவில் சென்டர் மீடியன் பொருத்தப்பட்டுள்ளதை காரணம் காட்டி டவுன் பஸ்கள் உள்ளே வராமல் சில்க்மில்-ஓடைபிள்ளையார் கோவில் வழியாக செல்கின்றன.

    வழித்தடம் அனுமதியளிக்கப்பட்டுள்ள வகையில் சென்று திரும்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காட்பாடி-காங்கேயநல்லூர்-பாகாயம் வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.

    • வக்கீலை சந்திக்க வரும்போது மடக்கி பிடித்தனர்.
    • மற்றொரு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டை ஊராட்சி லிங்குன்றம் வெள்ளகுட்டை பகுதியைச் சேர்ந்த நிலத் தரகர் பழனி (வயது 45) என்பவர் கடந்த சனிக்கிழமை இரவு தனது பைக்கில் சென்றார்.

    நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் வைத்து மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி கே வி குப்பம் அடுத்த மாச்சனூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (38) என்பவரை கைது செய்தனர். இவரது சித்தப்பாமகளுடன் பழனிக்கு பழக்கம் ஏற்பட்டது.

    ஆத்திரத்தில் இருந்த கோவிந்தராஜ் பழனியை தீவிரமாக கண்காணித்து வந்துள்ளார்.கடந்த சனிக்கிழமை இவரது சித்தப்பா மகளும்பழனியும் சினிமாவுக்கு போய் விட்டு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    குடியாத்தம் பஸ் நிலையத்தில் பெண்ணை இறக்கி விட்டுள்ளார். அப்போது கோவிந்தராஜ் தூரத்திலிருந்து தனது நண்பரான தேவரிஷி குப்பத்தை சேர்ந்த கார்த்தி என்கிற தயாநிதி என்பவருடன் பழனியை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

    நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதிக்கு செல்லும்போது கோவிந்தராஜு ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை, பழனியின் மோட்டார் சைக்கிள் மீது மோதி உள்ளனர்.

    கீழே விழுந்த பழனியை இரும்பு பைப்பால் கோவிந்தராஜும், தயாநிதியும் சரமாரியாக தாக்கியுள்ளனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த பழனி அங்கேயே இறந்துவிட்டார்.

    தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கண்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து ஆய்வு செய்தபோது பழனியின் மோட்டார்சைக்கிளை கோவிந்தராஜ் மற்றும் அவரது நண்பர் பின்தொடர்ந்து செல்வது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அவரது செல்போன் சிக்னலை கண்காணிக்கும் போது அந்த செல்போன் சிக்னல் ஆந்திர மாநிலம் பலமநேரை காட்டியது.

    இதனையடுத்து தனிப்படையினர் அங்கு சென்று தேடினர். தேடுவதை அறிந்த கோவிந்தராஜ் வழக்கு சம்மந்தமாக வக்கீலை சந்திக்க வரும்போது நேற்று காலையில் காந்திநகரில் வைத்து போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

    மேலும் இவ்வழக்கில் மற்றொரு குற்றவாளியான தயாநிதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்-டி.ஐ.ஜி எச்சரிக்கை பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள அறிவுறுத்தினார்.
    • இணைய வழி குற்றங்கள் தடுக்க சைபர் கிரைம் போலீசார் நியமனம்.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா நேற்று இரவு திடீர் ஆய்வு நடத்தினார்.

    அப்போது பணியில் இருந்த காவலர்களிடம் பணி குறித்தும் கேட்டறிந்தார் காவலர்களிடம் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்வது குறித்து அறிவுறுத்தினார் குற்ற வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.

    மேலும் வழக்கு சம்பந்த மான பதிவேடுகளை ஆய்வு செய்தார். சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கொலை சம்பவம் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார்.

    மேலும் குற்றவாளிகளை பிடிப்பதற்கான பல்வேறு ஆலோசனைகளை காவல்துறையினருக்கு வழங்கினார். இந்த ஆய்வின்போது குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி உள்ளிட்ட போலீஸார் உடனிருந்தனர்.

    தொடர்ந்து நிருபர்களிடம் பேட்டி அளித்த வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா கூறியதாவது:-

    தமிழக டிஜிபி உத்தரவின்பேரில் கந்து வட்டி வசூலிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் பொதுமக்களிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டும் நபர்கள், வசூலிப்பவர்கள் மற்றும் கந்துவட்டிக்காரர்கள் பொதுமக்களின் சொத்துக்களை தவறான முறையில் எழுதி வாங்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், தைரியமாக கந்து வட்டி வசூலிக்கும் நபர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் அவர்கள் கூறும் புகார்கள் குறித்து பொறுமையுடன் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து காவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இணைய வழி குற்றங்கள், டிஜிட்டல் வழி குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுவதால் இதனை தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு மாவட்டம்தோறும் சைபர் கிரைம் போலீசார் உள்ளனர்.

    தற்போது இந்த குற்றங்கள் அதிகரித்துள்ளதால் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் சைபர் கிரைம் போலீசார் 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்‌.

    பொதுமக்களும் தேவையில்லாத ஆப்புகளை செல்போனில் டவுன்லோட் செய்வது தவிர்க்க வேண்டும் இணையதளத்தில் விளையாட்டுகளை டவுன்லோட் செய்து அதன் மூலம் விளையாடுபவர்களுக்கு அவர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் பணம் திருடப்படுகிறது.

    தேவை இன்றி வரும் எஸ்எம்எஸ் களுக்கு பதில் அளிக்க கூடாது மேலும் வங்கியிலிருந்து பேசுபவர்கள் எனக் கூறிக்கொண்டு எந்தவித தகவலும் கேட்டாலும் தெரிவிக்கக் கூடாது.

    மேலும் கடன் வசூலிக்கும் வங்கி ஏஜென்ட் என பொதுமக்களை மிரட்டும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொதுமக்கள் காவலன் ஆப்பை டவுன்லோட் செய்து அதன்மூலம் பயன்படுத்தவேண்டும் வேலூர் சரக முழுவதும் சைபர் கிரைம் போலீசார் பள்ளி கல்லூரிகளில் இணையவழி குற்றங்களை தடுப்பது குறித்து விரிவாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

    மேலும் பொதுமக்கள் இணையவழி குற்றங்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க இலவச தொலைபேசி எண் 19 30 பயன்படுத்த வேண்டும்.

    குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் சில தினங்களுக்கு முன் பழனி என்பவரை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளது.

    அதில் ஈடுபட்ட குற்றவாளிகள் குறித்தும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.

    ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் சிறுவர்கள் குளிக்கவோ விளையாடவோ நீச்சலடிக்க செல்லும் போது பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் உடன் சென்று அவர்களைப் பாதுகாப்பான முறையில் அழைத்துச் சென்று வரவேண்டும் என்றார்.

    • மாவட்டத்தில் முதல்முறையாக கந்துவட்டி செலுத்த முடியாதவரிடம் இருந்து செல்போனை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • வேலூர் மாவட்டத்தில் கந்து வட்டி வசூல் செய்பவர்கள் தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கந்துவட்டி கும்பல் குறித்து போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்‌.

    இந்த நிலையில் மாவட்டத்தில் முதல்முறையாக கந்துவட்டி செலுத்த முடியாதவரிடம் இருந்து செல்போனை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    காட்பாடி காங்கேயநல்லூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 34).ஆட்டோ டிரைவர் இவர் கழிஞ்சூரை சேர்ந்த கார்த்தி என்பவரிடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ 8,000 கடன் வாங்கியிருந்தார்.

    இந்த பணத்திற்கு வாரந்தோறும் ரூ.400 செலுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் சுப்பிரமணியால் கடந்த 2 வாரமாக பணம் செலுத்த முடியவில்லை. இதனை தொடர்ந்து கார்த்தியின் உறவினர் விக்னேஷ் என்பவர் நேற்று சுப்பிரமணியிடம் பணம் கேட்டுள்ளார்.

    அப்போது பணம் இல்லாததால் சுப்பிரமணி வைத்திருந்த செல்போனை விக்னேஷ் பிடுங்கி சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி இதுகுறித்து கந்துவட்டி கொடுமை செய்வதாக காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர்.

    வேலூர் மாவட்டத்தில் கந்து வட்டி வசூல் செய்பவர்கள் தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ×