என் மலர்
நீங்கள் தேடியது "பைக் ஓட்டுவோர் மட்டுமின்றி பின்னால் இருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்"
- போலீசார் விழிப்புணர்வு
- மாநகராட்சியில் நவீன கேமரா கட்டுப்பாட்டு அறை திறப்பு
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் விபத்துக்களைத் தடுக்க காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விபத்துகளில் சிக்கும் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாததால் பலத்த காயம் மற்றும் உயிர் சேதம் ஏற்படுகிறது.இதை தடுக்கும் வண்ணம் காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
எனினும் பலர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் வேலூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு உடனடி அபராதம் விதித்து உத்தரவிட்டார். அதன்படி வேலூர் மாநகர பகுதியில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். பைக் ஓட்டுவோர் மட்டுமின்றி பின்னால் இருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என கட்டாயமாக் கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் தெருக்களில் நவீன ரக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கான கட்டுப்பாட்டு அறை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் துரைமுருகன் இன்று திறந்து வைத்தார்.
கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொண்டு போலீசார் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கும் விதி மீறுபவர்களுக்கும் அபராதம் விதிக்க முடியும். மாநகர பகுதியில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்கள் வாகனங்களின் பதிவு எண்களை துல்லியமாக படம் பிடித்து காட்டும். எனவே விதி மீறுபவர்கள் மற்றும் ஹெல்மெட் அணியாதவர்கள் இதிலிருந்து தப்ப முடியாது.
மேலும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் விவரங்களையும் இந்த கேமராக்களில் பதிவு செய்துள்ளனர். அதன் மூலம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மாநகர பகுதியில் நுழைந்தால் அவர்கள் குறித்த விவரங்களும் போலீசாருக்கு இந்த கேமரா மூலம் தெரியவரும்.
எனவே மாநகர பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். அணியா விட்டால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






