என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் 134 பேருக்கு அடுக்கு மாடி குடியிருப்புக்கான ஆணை
    X

    வேலூர் மாநகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடு கட்டுவதற்கான பணி ஆணையை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். அருகில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கதிர் ஆனந்த் எம்.பி, மேயர் சுஜாதா ஆனந்தகுமார்.

    வேலூரில் 134 பேருக்கு அடுக்கு மாடி குடியிருப்புக்கான ஆணை

    • அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
    • முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி ஸ்ரீ புரத்தில் 14-ம் தேதி ஆலோசனை கூட்டம்.

    வேலூர்:


    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி ஸ்ரீ புரத்தில் 14-ம் தேதி ஆலோசனை கூட்டம்.வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கான வீடு ஆணை, புதியதாக வீடு கட்டிக்கொள்ள விரும்பியவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது.

    வாரிய நிர்வாக பொறியாளர் ஜெயசெல்வன் வரவேற்றார். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். கதிர் ஆனந்த் எம்பி, கார்த்திகேயன் எம்எல்ஏ, மேயர் சுஜாதா, துணைமேயர் சுனில் குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு அடுக்குமாடி குடியிருப்பில் பங்கு தொகை செலுத்திய 30 பேருக்கும், புதிதாக வீடு கட்டிக் கொள்ள உள்ள 104 பேருக்கும் ஆணைகள் வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில், குடிசை வீடுகளில் மக்கள் கஷ்டப்படுவதை தவிர்க்க குடிசை வீடுகள் இருக்கக்கூடாது என்பதற்காக குடிசை மாற்று வாரியம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தார். அதன்படி அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.

    ஏழை எளிய மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அவ்வாறு செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் மட்டும்தான் கிராமபுரத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

    வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் வினியோகிக்கப் பட்டுள்ளது.

    இனி வேலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு துறை வாரியாக நான் திறனாய்வு செய்ய போகிறேன். வேலூருக்கு தமிழக முதல் அமைச்சர் வருகை தர உள்ளார். இதை முன்னிட்டு நிகழ்ச்சியை எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஸ்ரீ புரத்தில் வருகிற 14-ம் தேதி நடைபெற உள்ளது.

    இதில் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள்.

    மக்கள் பிரதிநிதிகள் ஒற்றுமையாக இருந்தால்தான் அதிகாரிகள் உங்களை கண்டு பயப்படுவார்கள். மக்களுக்கும் சிறந்த முறையில் பணியாற்ற முடியும். வேலூரில் முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி மற்ற மாவட்டங்களை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு செய்து காட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில்உதவி நிர்வாக பொறியாளர் மோகன் நன்றி கூறினார்.

    Next Story
    ×