என் மலர்
திருவண்ணாமலை
ஆரணி அருகே உள்ள களம்பூரையடுத்த கஸ்தம்பாடி குளத்து தெருவைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் அய்யப்பன் (வயது 28). இவர் சென்னையில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு போளூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆரணி கொசப்பாளையம் பங்களா தெருவைச் சேர்ந்த ராகவன் (54), போளூர் அருகே காந்தபாளையத்தில் உள்ள தனது நிலத்தை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார்.
வடமாதிமங்கலம் கூட்ரோடு அருகே வந்தபோது இவர்களது மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் அய்யப்பனும், ராகவனும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து களம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த அய்யப்பனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மற்றொருவரான ராகவனுக்கு ராணி என்ற மனைவியும், மோகனலஷ்மி என்ற மகளும், தனுஷ்ராஜ் என்ற மகனும் உள்ளனர். மோட்டார்சைக்கிள்கள் மோதலில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தண்டராம்பட்டு:
தண்டராம்பட்டு தாலுகா சின்னியம்பேட்டை கிராமத்தில் ஆயக்கலைகள் 63-ரையும் விளக்கும் சிற்பங்கள் பொறித்த குளம் ஒன்று அமைந்துள்ளது.
இந்த குளத்தை மத்திய தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. இதேபோன்ற குளம் ஒன்று தண்டராம்பட்டு அருகிலுள்ள கீழ்ராவந்தவாடி கிராமத்தில் உள்ளது. இந்த குளத்தை மக்கள் அம்மா குளம் என்று அழைக்கின்றனர்.
இந்த குளம் பராமரிக்கப்பட்டாததால் சிற்பங்கள் சிதலமடைந்து அழியும் நிலையில் காணப்பட்டது. இதனை சீரமைத்து வரலாற்று சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு முதல் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அப்போதைய கலெக்டர் கந்தசாமி இந்த கோரிக்கையை ஏற்று குளத்தை சீரமைப்பதற்கு தொல்பொருள் துறைக்கு கோப்புகளை அனுப்பினார்.
அதன் பின்னர் மத்திய தொல்லியல் துறை இயக்குனர் (ஓய்வு) வெங்கடேசன் மற்றும் பொறியாளர்கள் குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதைத் தொடர்ந்து குளத்தை சீரமைக்க ரூ.17 லட்சத்து 20 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு குளம் சீரமைக்கும் பணி வேகமாக நடைபெற்ற நிலையில் கொரோனா தொற்று காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன.
கடந்த ஜூன் மாதம் மீண்டும் தொடங்கிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. தற்போது பெய்த மழையால் குளத்தில் தண்ணீர் நிரம்பி இருப்பதால் தற்காலிகமாக புனரமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அபூர்வகலை சிற்பங்கள் கொண்ட குளத்தை தமிழக அரசு வரலாற்று சின்னமாக அறிவித்துள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
கோவிலில் இலவச தரிசனத்தை தவிர்த்து, கட்டண தரிசனத்தில் டிக்கெட் ரூ.20-க்கும், சிறப்பு தரிசன டிக்கெட் ரூ.50-க்கும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த தரிசனம் செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் தொடங்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பக்தர்கள் வரிசையாக சென்று சாமி மற்றம் அம்மன் சன்னதிகளில் மட்டுமே தரிசனம் செய்யலாம் என்றும், உள்பிரகாரங்களில் தரிசனத்துக்கு அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பதை தொடர்ந்து திடீரென கட்டண தரிசன டிக்கெட்டை ரூ.50 ஆக உயர்த்தியுள்ளனர்.
ஏற்கனவே, கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், இந்த திடீர் கட்டண உயர்வு பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் கூறியதாவது:-
அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்க முடியாமல் கட்டண தரிசனத்தில் வழிபாட்டுக்கு செல்கின்றனர். ஆனால் அங்கு பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவது கிடையாது. அமர்வு தரிசனமும் கிடையாது.
கொரோனா வைரஸ் தாக்கம், வேலையிழப்பு காரணமாக வருமானம் இல்லாமல் மக்கள் தவிக்கும் நிலையில் திடீரென கட்டண தரிசன தொகையை உயர்த்தியிருப்பது வேதனையளிக்கிறது. கட்டண தரிசனத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள களம்பூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட 6 பால் கொள்முதல் மையங்களில் திருவண்ணாமலை கூட்டுறவு துணைப் பதிவாளர் விஷ்வேஸ்வரன் தலைமையில் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) சந்தீப், ஆரணி சரக முதுநிலை ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 3 பால் கொள்முதல்பணியாளர்கள் சங்கத்தில் கொடுக்கப்பட்ட பால் அளவை லிட்டர்செட்டை பயன்படுத்தாமல் கூடுதல் அளவு பிடிக்கும் லிட்டர் செட்டை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து 3 முறை நடைபெற்ற ஆய்வின் போதும் அவர்கள் இவ்வாறு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட பால் கொள்முதல் பணியாளர்கள் 3 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சங்க நிர்வாகிகளிடம் அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.
பால் கொள்முதல் பணியாளர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது பால் வழங்கும் விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






