என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மகாதீபம் ஏற்றப்பட்ட மலை உச்சியில் பிராயசித்த பூஜை செய்யப்பட்டது. பாதத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். நடந்து முடிந்த தீபத் திருவிழாவின் போது கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபமானது தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் காட்சி அளித்தது.

    மலை மீது ஏற்பட்ட மகாதீபத்தை மலையேறி சென்ற நேரில் தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் மகாதீபம் மலை உச்சியில் காட்சி அளித்த நாட்களில் ஏராளமான பக்தர்கள் மலை ஏறிச்சென்று தீபத்தை தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த மலையில் பக்தர்கள் மிதித்து ஏறியதால் பிராயசித்த பூஜை நடத்தப்படும். அப்போது மலையில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கும் அபிஷேகம் நடத்தப்படும். தீபத்திருவிழா முடிந்த சில நாட்களில் இந்த பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டிற்கான பிராயசித்த பூஜை நேற்று நடந்தது. இதனையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் புனித நீர் நிரப்பப்பட்ட யீலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் நடத்தி சாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து புனிதநீர் கலசத்தை மலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிராயசித்த பூஜை நடந்தது. பின்னர் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    தூசி அருகே சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த இறைச்சிக்கடைக்காரர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    தூசி:

    வெம்பாக்கம் தாலுகா சோழவரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஷேக் முகமது. இவரது மகன் அப்துல்ரகுமான் (வயது 34) இறைச்சிக் கடை வைத்துள்ளார். இவர் சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது கதவை உள்புறமாக தாழிட்டு விட்டு மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார்.

    இவரது மனைவி மதினா ஜன்னல் வழியாக பார்த்தபோது இவருடைய கணவர் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனே அங்கிருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று இவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது அப்துல்ரகுமான் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து இறந்தவரின் அண்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார் இறந்தவருக்கு மதினா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.
    சுடுகாட்டுக்கு செல்ல பாதைவசதி கேட்டு தாலுகா அலுவலகம் முன் பொதுமக்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த வங்காரம் கிராம காலனியில் 1500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் யாராவது இறந்து விட்டால் உடலை முதல் தெருவில் இருந்து இரண்டாவது தெருவிற்கு போகும் வழியில் உள்ள புறம்போக்கு நிலம் வழியாக கிராம மக்கள் எடுத்துச் சென்று வந்தனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு புறம்போக்கு நிலத்தில் ஒருவருக்கு வீடு கட்டிக்கொள்ள இடம் ஒதுக்கி மீதி பாதையை மயான பாதையாக அனுபவித்து வந்தார்கள்.

    தற்பொழுது இந்த புறம்போக்கு பாதையை ஒருவர் ஆக்கிரமித்து காலியாக இருந்த மயான பாதைக்கும் சேர்த்து பட்டா தயார்செய்து அந்த ஆக்கிரமிப்பு நபர் வேறு ஒருவருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இறந்தவர் உடலை எடுத்துச் செல்வதில் பிரச்சினை எழுந்துள்ளது.

    திருவிழாக்காலங்களில் அந்த வழியாக அம்மன் வீதி உலா வருவது வழக்கம்.அதுவும் தடைபட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் தரப்பில் தாசில்தாரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த மனுமீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பாதையை வாங்கியவர் முள்வேலியிட்டு அடைத்து விட்டார். அந்த பகுதியில் ஒருவர் இறந்து விட்டதையடுத்து அவரது உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் ஊர்ப்பொதுமக்களில் சிலர் முள்வேலியை அகற்றியதையடுத்து இறந்தவர் உடல் சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

    இந்த சுடுகாட்டு பாதைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் எனக்கேட்டு வந்தவாசி தாலுகா அலுவலகத்திற்கு நேற்று வந்த பொதுமக்கள் அலுவலகத்துக்கு எதிரே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

    அவர்களுடன் துணை தாசில்தார் அகத்தீஸ்வரன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். அவரிடம் மனு அளித்த பொதுமக்கள் அதன்பின் கலைந்து சென்றனர்.
    ஆரணி அரசு மருத்துவமனையில் பிணவறைக்கு செல்லும் வழியிலேயே மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் அப்பர் தெருவும் குப்பைமயமாக மாறி வருவதால் போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.
    ஆரணி:

    ஆரணி அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகம் அருகில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இவர்களில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். மருத்துவமனையில் தினமும் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளை மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிணவறைக்குச் செல்லும் வழியிலேயே கொட்டுகிறார்கள்.

    மருத்துவமனையில் சேகரிக்கப்படும் அனைத்துக் குப்பைகளும் அங்கு தான் கொட்டப்படுகிறது. அந்தப் பகுதியில் சுற்றித்திரியும் மாடுகள், நாய்கள், பன்றிகள் அங்கு வந்து குப்பைகளை கிளறி விடுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பைகள், மருத்துவக் கழிவுகளை வேறு இடத்தில் கொட்டுவதற்கும், அதை அப்புறப்படுத்துவதற்கும் மருத்துவத்துறையினர், மருத்துவமனை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ஆரணி நகரில் 1 முதல் 18 வார்டுகள் வரை தனியார் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து குப்பை கிடங்குக்கு அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அதில் மார்க்கெட் ரோடு, காந்தி ரோடு, புதிய, பழைய பஸ் நிலையங்கள், பெரியகடை வீதி போன்ற பிரதான சாலைகளில் மட்டுமே குப்பைகளை அகற்றும் அவர்கள் மீதம் உள்ள தெருக்களில் குப்பைகளை கேரி பேக்கில் வாங்கிச் செல்கின்றனர்.

    பல வீடுகளுக்கு பணியாளர்கள் குப்பைகளை வாங்க சரிவர வருவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் ஆரணி கொசப்பாளையம் அப்பர் தெரு 17-வது வார்டு பகுதியில் கடந்த ஆறு மாத காலமாக குப்பைகளை அல்லாத அவல நிலை இருந்து வருகிறது. இங்கு குப்பைகளை நேரடியாக சேகரிக்க தனியார் துப்புரவு பணியாளர்கள் வருவதே இல்லை அப்பகுதியின் கடைசியில் குப்பை கொட்டும் இடமாகவும் மாறி வருகிற அவல நிலை உருவாகிறது. இதனால் அங்கு பல்வேறு நோய்களையும், தொற்று நோய்களை பரப்பும் அவல நிலை உருவாகி வருகிறது.

    எனவே குப்பைகளை உடனே அகற்ற வேண்டும் இல்லையெனில் நகராட்சி அலுவலகம் முன்பு குப்பைகளை கொட்டி போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.
    ஆரணி அருகே குடிநீர் வராததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
    ஆரணி:

    ஆரணியை அடுத்த பல்லாந்தாங்கல் ஊராட்சியில் கடந்த 10 நாட்களாக ஊராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனை கண்டித்தும் உடனடியாக குடிநீர் வழங்கக்கோரியும் கிராம மக்கள் நேற்று பகலில் வந்தவாசி நெடுஞ்சாலையில் பல்லாந்தாங்கல் கூட்டுரோடு அருகே காலி குடங்களுடன் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் ஆரணி தாலுகா போலீசார் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், பல்லாந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம்வேல் ஆகியோர் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது கடந்த அங்கு உள்ள மின் மோட்டார் பழுது அடைந்து உள்ளதாகவும் அதனை சரிசெய்ய முடியாத காரணத்தினால் தண்ணீர் வழங்க இயலவில்லை எனவும் சரி செய்யும் பணியை உடனடியாக முடித்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    ஆரணியில் பொது வழி தகராறில் தம்பியை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணி கொசப்பாளையம் கோபால் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 45). கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது தம்பி தியாகராஜன் (40) கார் கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார். இவர்களில் தியாகராஜன் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் இதனால் அண்ணன் -தம்பி இடையே தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இவர்களது வீட்டிற்கு செல்லும் பொதுவழி தொடர்பாக பிரச்சினை தொடர்ந்து இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு கார்த்திகேயன் வீட்டுக்குச் செல்லும்போது வழியில் மோட்டார் சைக்கிளை தியாகராஜன் நிறுத்தி இருந்தார். அது குறித்து கேட்டபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் தியாகராஜனை அங்கிருந்த இரும்புக்கம்பியால் கார்த்திகேயன் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் படுகாயமடைந்த தியாகராஜன் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஆரணி நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து தம்பியைத் தாக்கிய அண்ணன் கார்த்திகேயனை கைது செய்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.
    காஞ்சியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே உள்ள காஞ்சி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காஞ்சி, புதுப்பாளையம், நம்மியந்தல், பெரியகுளம், கடலாடி, வில்வாரணி, சிறுகளாம்பாடி, மட்டவெட்டு, மேலபுஞ்சை மற்றும் காரப்பட்டு பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என செங்கம் மின்வாரிய செயற்பொறியாளர் கேசவராஜ் தெரிவித்து உள்ளார்.
    வந்தவாசி அருகே தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 25). இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவர் வேலை செய்து வந்தார். போதைக்கு அடிமையான இவர் அடிக்கடி மது அருநதி விட்டு வருவார். இதனை மனைவி கண்டிப்பதால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று இரவு குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்த இவர் மனைவியிடம் தகராறு செய்தார். இதை அவரது மனைவி கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த சதீஷ்குமார் வீட்டின் பின்புறம் தூக்குப்போட்டுக்கொண்டார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சதீஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு அதிகாலையில் கோவில் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு அதிகாலையில் கோவில் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பல்வேறு இடங்களில் இருந்தும் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மற்றும் உள்ளூர் பக்தர்கள் கோவில் முன்பு விளக்கேற்றி வழிபட்டனர்.

    சிறப்பு கட்டணம் இன்று வசூலிக்கப்படவில்லை. அனைவரும் இலவச தரிசன வழியில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. உண்ணாமலை அம்மன் சன்னதியில் திருவெம்பாவை சொற்பொழிவு நடைபெற்றது.

    திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் இருக்கும் பெருமாள் கோவில் மற்றும் அருணாச்சலேஸ்வரர் கோவில் அருகில் இருக்கும் பூத நாராயண பெருமாள் கோவில், கிரிவலப் பாதையில் இருக்கும் அஷ்ட லிங்கங்கள் சன்னதி உள்பட அனைத்து கோவில்களிலும் அதிகாலையிலேயே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    மார்கழி குளிரையும் பொருட்படுத்தாமல் சிறுவர் சிறுமியர் முதல் முதியவர்கள் வரை சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் பஜனை பாடி சென்றும் சாமி தரிசனம் செய்தனர். மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு திருவண்ணாமலை முழுவதும் வீடுகள் முன்பு பெண்கள் கோலமிட்டு சாணத்தில் பிள்ளையார் செய்து அதற்கு மலர் அலங்காரம் செய்து வைத்திருந்தனர்.

    மேலும் திருவண்ணாமலை பக்தர்கள்மயமாக இன்று காட்சியளித்தது. ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பஸ் நிலையம் மற்றும் கோவில் அருகில் உள்ள கடைகள்அதிகாலையில் திறக்கப்பட்டு வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

    டீக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.பல கோவில்களிலும் திருப்பாவை திருவெம்பாவை மற்றும் பக்திப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மார்கழி மாத வழிபாடுகள் ஆறுதல் தருவதாக இருக்கும் என்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் கூறினர்.
    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வைக்கப்பட்டுள்ள வரைபடத்தில் ஆதிஅண்ணாமலையார் கோவிலின் பெயர் குறிப்பிடப்படாததால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
    திருவண்ணாமலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள். இங்கு மலையையே சிவனாக வழிபடுவதால் இந்த மலை அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

    இந்த மலையை சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் இந்திரலிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என அஷ்டலிங்க கோவில்கள் உள்ளன. மேலும் கிரிவலப்பாதையில் உள்ள அடிஅண்ணாமலை கிராமத்தில் ஆதிஅண்ணாமலையார் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும். இக்கோவில் அருணாசலேஸ்வரர் கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    கிரிவலம் வரும் பக்தர்கள் அடிஅண்ணாமலையில் உள்ள ஆதிஅண்ணாமலையார் கோவிலுக்கு செல்லாமல் போகமாட்டார்கள். இந்த நிலையில் கிரிவலப் பாதையில் பக்தர்கள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் அஷ்ட லிங்க கோவில்களுக்கான வழியை தெளிவுப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் வரைபடங்கள் வைக்கப்பட்டு உள்ளன. அதில் கிரிவலப்பாதையில் உள்ள பழமையான கோவிலான அடிஅண்ணாமலை ஆதி அண்ணாமலையார் கோவிலின் பெயர் குறிப்பிடவில்லை. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.

    திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல புதிது, புதிதாக பலர் வருகை தருகின்றனர். பல்வேறு சிறப்பு வாய்ந்த ஆதி அண்ணாமலையார் கோவில் உள்ள இடம் அவர்கள் அறியும் வகையில் நெடுஞ்சாலைத் துறையினர் கிரிவலப்பாதையில் வைத்து உள்ள வரைப்படங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
    3 வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 81 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண்மை சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் நேற்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவினர் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்..

    அதன்படி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஒருங்கிணைப்பு குழுவினர் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், 8 வழி சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு, புதிய விவசாய சங்கம், மக்கள் அதிகாரம் உள்பட பல சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் இதற்கு ஆதரவு தெரிவித்து ம.தி.மு.க. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சீனி.கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஏராளமான போலீசார் கலெக்டர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், மின்சார திருத்த சட்டம் 2020-ஐ திரும்ப பெறக் கோரியும், தமிழகத்தில் விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை பாதுகாத்திட வேண்டும் என்றும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    இதையடுத்து அனுமதியின்றி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக அதில் கலந்து கொண்ட 36 பெண்கள் உள்பட 81 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமையான நேற்று பெரும்பாலான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கே மனு அளிக்க வருகை தந்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்து வந்தது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தற்காலிகமாக மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று கோரிக்கை மனுக்களை அதிகாரிகளை நேரில் சந்தித்து அளிக்க வருகை தந்தனர்.

    பொதுமக்கள் மனுக்களை அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதை தவிர்த்து அந்தந்த பகுதி தாலுகா அலுவலகங்களில் வைக்கப்படும் பெட்டியில் கோரிக்கை மனுக்களை செலுத்துமாறு மாவட்ட நிர்வாகம் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் திங்கட்கிழமையான நேற்று பெரும்பாலான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கே மனு அளிக்க வருகை தந்தனர். அவர்கள் அலுவலக நுழைவு வாயில் அருகில் வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் மனுவை செலுத்தினர். தாலுகா அலுவலகங்களில் வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் ஒருசிலர் மட்டுமே மனு அளித்தனர்.

    இதேபோல் வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் மனுக்கள் போடுவதற்காக தனி பெட்டி வைக்கப்பட்டுள்ளது. தாசில்தார்கள் திருநாவுக்கரசு, நரேந்திரன் ஆகியோர் பொதுமக்கள் மனுக்கள் போடுவதை தொடங்கி வைத்தனர். இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்து கோரிக்கை நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×