search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்
    X
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

    மார்கழி பிறப்பையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு அதிகாலையில் கோவில் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு அதிகாலையில் கோவில் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பல்வேறு இடங்களில் இருந்தும் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மற்றும் உள்ளூர் பக்தர்கள் கோவில் முன்பு விளக்கேற்றி வழிபட்டனர்.

    சிறப்பு கட்டணம் இன்று வசூலிக்கப்படவில்லை. அனைவரும் இலவச தரிசன வழியில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. உண்ணாமலை அம்மன் சன்னதியில் திருவெம்பாவை சொற்பொழிவு நடைபெற்றது.

    திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் இருக்கும் பெருமாள் கோவில் மற்றும் அருணாச்சலேஸ்வரர் கோவில் அருகில் இருக்கும் பூத நாராயண பெருமாள் கோவில், கிரிவலப் பாதையில் இருக்கும் அஷ்ட லிங்கங்கள் சன்னதி உள்பட அனைத்து கோவில்களிலும் அதிகாலையிலேயே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    மார்கழி குளிரையும் பொருட்படுத்தாமல் சிறுவர் சிறுமியர் முதல் முதியவர்கள் வரை சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் பஜனை பாடி சென்றும் சாமி தரிசனம் செய்தனர். மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு திருவண்ணாமலை முழுவதும் வீடுகள் முன்பு பெண்கள் கோலமிட்டு சாணத்தில் பிள்ளையார் செய்து அதற்கு மலர் அலங்காரம் செய்து வைத்திருந்தனர்.

    மேலும் திருவண்ணாமலை பக்தர்கள்மயமாக இன்று காட்சியளித்தது. ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பஸ் நிலையம் மற்றும் கோவில் அருகில் உள்ள கடைகள்அதிகாலையில் திறக்கப்பட்டு வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

    டீக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.பல கோவில்களிலும் திருப்பாவை திருவெம்பாவை மற்றும் பக்திப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மார்கழி மாத வழிபாடுகள் ஆறுதல் தருவதாக இருக்கும் என்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் கூறினர்.
    Next Story
    ×