என் மலர்
செய்திகள்

குப்பைகளை கொட்டி பல மாதங்கள் ஆகியும் அகற்றாத அவலநிலையை படத்தில் காணலாம்.
ஆரணி அரசு மருத்துவமனையில் மருத்துவக்கழிவுகள், குப்பைகளை வழியில் கொட்டும் அவலம்
ஆரணி அரசு மருத்துவமனையில் பிணவறைக்கு செல்லும் வழியிலேயே மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் அப்பர் தெருவும் குப்பைமயமாக மாறி வருவதால் போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.
ஆரணி:
ஆரணி அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகம் அருகில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இவர்களில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். மருத்துவமனையில் தினமும் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளை மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிணவறைக்குச் செல்லும் வழியிலேயே கொட்டுகிறார்கள்.
மருத்துவமனையில் சேகரிக்கப்படும் அனைத்துக் குப்பைகளும் அங்கு தான் கொட்டப்படுகிறது. அந்தப் பகுதியில் சுற்றித்திரியும் மாடுகள், நாய்கள், பன்றிகள் அங்கு வந்து குப்பைகளை கிளறி விடுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பைகள், மருத்துவக் கழிவுகளை வேறு இடத்தில் கொட்டுவதற்கும், அதை அப்புறப்படுத்துவதற்கும் மருத்துவத்துறையினர், மருத்துவமனை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆரணி நகரில் 1 முதல் 18 வார்டுகள் வரை தனியார் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து குப்பை கிடங்குக்கு அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அதில் மார்க்கெட் ரோடு, காந்தி ரோடு, புதிய, பழைய பஸ் நிலையங்கள், பெரியகடை வீதி போன்ற பிரதான சாலைகளில் மட்டுமே குப்பைகளை அகற்றும் அவர்கள் மீதம் உள்ள தெருக்களில் குப்பைகளை கேரி பேக்கில் வாங்கிச் செல்கின்றனர்.
பல வீடுகளுக்கு பணியாளர்கள் குப்பைகளை வாங்க சரிவர வருவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் ஆரணி கொசப்பாளையம் அப்பர் தெரு 17-வது வார்டு பகுதியில் கடந்த ஆறு மாத காலமாக குப்பைகளை அல்லாத அவல நிலை இருந்து வருகிறது. இங்கு குப்பைகளை நேரடியாக சேகரிக்க தனியார் துப்புரவு பணியாளர்கள் வருவதே இல்லை அப்பகுதியின் கடைசியில் குப்பை கொட்டும் இடமாகவும் மாறி வருகிற அவல நிலை உருவாகிறது. இதனால் அங்கு பல்வேறு நோய்களையும், தொற்று நோய்களை பரப்பும் அவல நிலை உருவாகி வருகிறது.
எனவே குப்பைகளை உடனே அகற்ற வேண்டும் இல்லையெனில் நகராட்சி அலுவலகம் முன்பு குப்பைகளை கொட்டி போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.
Next Story






