என் மலர்
திருவண்ணாமலை
வருகிற 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் பயன்படுத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மராட்டிய மாநிலத்தில் இருந்து நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கிற்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சந்தீப் நந்தூரி தலைமையில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இதில் 1,480 வாக்குப்பதிவு எந்திரங்கள், 3,780 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 4,150 ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் ஆகியவை வந்து உள்ளன.
இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தற்போது வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்து உள்ளது. ஏற்கனவே உள்ள எந்திரங்கள் மற்றும் வரப்பெற்ற எந்திரங்கள் என தற்போது 5,037 வாக்குப்பதிவு எந்திரங்கள், 3,852 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 4,152 ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் உள்ளன.
இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலின் போது வாக்களிப்பதற்கு வசதியாக 1,000 வாக்காளர்கள் மேல் கொண்ட வாக்குச்சாவடிகளை 2 ஆக பிரிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. தற்போது நமது மாவட்டத்தில் 2,372 வாக்குச்சாவடிகள் உள்ளன.
கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 590 ஆக உள்ளது. அதன்படி 2,962 வாக்குச்சாவடிகள் வரும் சட்டமன்ற தேர்தலில் அமைய வாய்ப்பு உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,962 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் 70 சதவீதமும், கட்டுப்பாட்டு எந்திரங்கள் 30 சதவீதமும், ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் 40 சதவீதமும் கூடுதலாக உள்ளது. வருகிற சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021-க்கு பயன்படுத்துவற்காக மின்னணு வாக்குப்பதிவு மற்றும் வாக்கு ஒப்புகைச்சீட்டு எந்திரங்களை முதல் நிலை சரிப்பார்ப்பு பணிக்காக பெங்களூரு பெல் நிறுவனத்தில் இருந்து பொறியாளர்கள் விரைவில் வர உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படாததால் 4 இடங்களில் கமல் மக்களை வேனில் இருந்தபடி சந்தித்தார். பொதுமக்களை பார்த்து கைகூப்பி சென்றார். அதைத் தொடர்ந்து மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் முழு மாற்றத்தை கொண்டுவர வேண்டும். அரசும் அரசியலும் அதன் அடிப்படையில் அமைய வேண்டும். நான் தாமதமாக அரசியலுக்கு வந்து இருக்கிறேன். அரசியலுக்கு வந்தே தீரவேண்டும் என்று வந்துள்ளேன்.
உலக தரத்தில் திரைப்படங்களை கொடுத்தால் மட்டும் போதாது. என்னை வளர்த்து ஆளாக்கிய மக்களுக்கு என்னால் முடிந்த நல்லது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்துள்ளேன். என் வாழ்க்கை அர்த்தமுடையதாக இருக்க வேண்டும். தமிழகம் தலை நிமிர வேண்டும் என்று விரும்புகிறேன்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் அனைவரும் கைகோர்க்க வேண்டும். உங்களுடன் நாங்கள் இருக்கின்றோம்.
மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் செய்யாறு மணல் கொள்ளையைத் தடுப்போம். பழங்குடி மக்களுக்கு தேவையான வசதிகளை செய்வோம். நீங்கள் அன்புடன் என்னை ஆண்டவர் என்றழைக்கிறீர்கள். உண்மையில் நான் உங்களது தொண்டன்.
தமிழகத்தில் முறையான பாசன வசதி இல்லை. நீர் மேலாண்மை கவனிக்கப்படவில்லை.
மராமத்து பணிகளை தமிழக அரசுதான் செய்வது போல் சொல்கின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்ட குளங்களையும் சீரமைப்போம். முதல் முறை ஆட்சிக்கு வந்ததுமே அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி விடுவோம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏராளமான கூத்துக் கலைஞர்கள் உள்ளனர். நானும் ஒரு கூத்து கலைஞன்தான். நான்அவர்களை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். என் உள்ளத்தின் மையத்தில் அவர்களை வைத்துள்ளேன்.
தேர்தலுக்கு முன்பே நமதுகட்சித் தொண்டர்கள் வீடு வீடாக சென்று நமது கொள்கைகளை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். தேர்தலின் போது பொதுமக்கள் கடைசிநேர கண்கட்டி வித்தையில் மயங்கிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் கடைசி நேரத்தில் ஒற்றை விரலில் மக்கள் வைக்கும் முத்திரை மைதான் நாளைய அவர்களின் வாழ்வை நிர்ணயிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட வராத, வேளாண் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வந்தவாசியில் என்.எம்.ஆர். உழவர் பேரவை சார்பில் இறுதி சடங்கு நடத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக வந்தவாசி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் 18-ம் நாள் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக தர்ப்பை புல் உள்ளிட்டவற்றை தூளி கட்டியும், தோளில் பால்குடத்தை சுமந்தபடியும், சங்கு ஊதிக்கொண்டும், மணி அடித்தவாறு, தாலுகா அலுவலகம் வரை வந்தனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அவர்கள் கொண்டு வந்த பால் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் விவசாயிகள் மனுக்கள் கொடுக்க தாலுகா அலுவலகத்திற்கு சென்றனர். இந்த போராட்டத்தில் உழவர் பேரவையை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்
செங்கத்தை அடுத்த அந்தனூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு, பொதுமக்களுக்கு வழங்குவதற்கான அத்தியாவசிய பொருட்கள் வந்துள்ளது. ஆனாலும் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் ரேஷன் கடையில் கேட்டதற்கு முறையான பதில் இல்லாததால் நேற்று திடீரென அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் செங்கம்- நீப்பத்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மேல்செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். செங்கம் தாசில்தார் மனோகரன், வட்ட வழங்கல் அலுவலர் லதா உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் ரேஷன் பொருட்கள் வழங்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டு பழையனூர் ஊராட்சியில் துருவம் கிராமம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு ஊராட்சிக்கு சொந்தமான பழமையான குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றை சரியான முறையில் பராமரிக்காததால் சேதம் ஏற்பட்டு இருந்தது. கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த குக்கூ குழந்தைகள் வெளி என்ற அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் கிணற்றை தூர்வாரி, சுத்தம் செய்து, சேதமான பகுதிகளை சீரமைத்து, வர்ணம் பூசி, கிணற்றை சுற்றிலும் அழகான பறவைகள் மற்றும் பல்வேறு ஓவியங்களை வரைந்து அழகுபடுத்தினர்.
இதனால் அந்த கிணறு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. இதை பொதுமக்கள் பாராட்டினர். மேலும் இந்தக் கிணறு சீரமைக்கப்பட்டதை அறிந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நம்பிக்கை நட்சத்திரங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மாநில திட்டக்குழு துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தலைமையில் மாநில வளர்ச்சி திட்டக்குழு கூட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து பொன்னையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
மக்களின் தேவைகளை அறிந்து அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு மாநில வளர்ச்சி திட்டக்குழு நிதி ஒதுக்குகிறது. அந்த நிதியை பயன்படுத்தி 42 அரசு துறைகளின் மூலம் திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது.
எனவே அரசின் திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா? அவற்றின் முன்னேற்றம், மேலும் கூடுதல் நிதி உதவி தேவைப்படுகிறதா? என மாநில வளர்ச்சி திட்டகுழு நேரடி ஆய்வு நடத்துகிறது. மேலும் பரிசோதனை முயற்சியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களில் தேவையான நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்கிறோம்.
நவீன தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி விவசாயிகளின் வருமானத்தை பெருக்க திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
குடிசைத்தொழில், சிறுதொழில், சுய உதவி குழுக்கள் செய்யும் தொழில்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க முன்வந்துள்ளது. எந்தெந்த தொழிலை மேற்கொண்டால் வாழ்வாதாரம் மேம்படும்.உற்பத்தியாகும் பொருட்களேக்கு விற்பனை வாய்ப்பு கிடைக்கும் என கண்டுபிடித்து அதற்கான நிதியை வங்கிகள் மூலம் பெற்று சுய வேலை வாய்ப்பை உருவாக்குவது அரசியல் நோக்கம்.
எனவே சுய உதவிக்குழுக்கள் அதிகம் உருவாக்கவேண்டும். அதிகமான பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளது. எனவே படித்த இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு உருவாக்குவது அவசியம்.
கிராம பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இது போன்ற திட்டங்களுக்கு மாநில வளர்ச்சி திட்ட குழு துணைநிற்கிறது.
அரசியலுக்கு வருவது பற்றி நடிகர் ரஜினி கடந்த 20 ஆண்டுகளாக சொல்லிவருகிறார். அவரது ரசிகர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் சேர்ந்து விட்டனர்.
எந்த கணிப்பில் அவர் அரசியலுக்கு வருகிறார்? என்பது அவருக்குத்தான் தெரியும். நடிகர்கள் கமல்- ரஜினி இணைந்தாலும் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.






