என் மலர்
செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் முழு மாற்றத்தை மக்கள் கொண்டு வரவேண்டும்- கமல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படாததால் 4 இடங்களில் கமல் மக்களை வேனில் இருந்தபடி சந்தித்தார். பொதுமக்களை பார்த்து கைகூப்பி சென்றார். அதைத் தொடர்ந்து மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் முழு மாற்றத்தை கொண்டுவர வேண்டும். அரசும் அரசியலும் அதன் அடிப்படையில் அமைய வேண்டும். நான் தாமதமாக அரசியலுக்கு வந்து இருக்கிறேன். அரசியலுக்கு வந்தே தீரவேண்டும் என்று வந்துள்ளேன்.
உலக தரத்தில் திரைப்படங்களை கொடுத்தால் மட்டும் போதாது. என்னை வளர்த்து ஆளாக்கிய மக்களுக்கு என்னால் முடிந்த நல்லது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்துள்ளேன். என் வாழ்க்கை அர்த்தமுடையதாக இருக்க வேண்டும். தமிழகம் தலை நிமிர வேண்டும் என்று விரும்புகிறேன்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் அனைவரும் கைகோர்க்க வேண்டும். உங்களுடன் நாங்கள் இருக்கின்றோம்.
மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் செய்யாறு மணல் கொள்ளையைத் தடுப்போம். பழங்குடி மக்களுக்கு தேவையான வசதிகளை செய்வோம். நீங்கள் அன்புடன் என்னை ஆண்டவர் என்றழைக்கிறீர்கள். உண்மையில் நான் உங்களது தொண்டன்.
தமிழகத்தில் முறையான பாசன வசதி இல்லை. நீர் மேலாண்மை கவனிக்கப்படவில்லை.
மராமத்து பணிகளை தமிழக அரசுதான் செய்வது போல் சொல்கின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்ட குளங்களையும் சீரமைப்போம். முதல் முறை ஆட்சிக்கு வந்ததுமே அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி விடுவோம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏராளமான கூத்துக் கலைஞர்கள் உள்ளனர். நானும் ஒரு கூத்து கலைஞன்தான். நான்அவர்களை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். என் உள்ளத்தின் மையத்தில் அவர்களை வைத்துள்ளேன்.
தேர்தலுக்கு முன்பே நமதுகட்சித் தொண்டர்கள் வீடு வீடாக சென்று நமது கொள்கைகளை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். தேர்தலின் போது பொதுமக்கள் கடைசிநேர கண்கட்டி வித்தையில் மயங்கிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் கடைசி நேரத்தில் ஒற்றை விரலில் மக்கள் வைக்கும் முத்திரை மைதான் நாளைய அவர்களின் வாழ்வை நிர்ணயிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.






