என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    வந்தவாசியில் வீட்டின் 2-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த சிறுமி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வந்தவாசி:

    சென்னை அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்சில் டிரைவாக வேலை பார்த்து வருபவர் சுரேஷ். இவர், வந்தவாசியில் உள்ள கே.ஆர்.கே. தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    அவர் நேற்று வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட மகள் புவனேஸ்வரி (வயது 15) அடுக்கு மாடி குடியிருப்பின் 2-வது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது அவர், அங்கிருந்து தவறி கீழே விழுந்தார்.

    அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குள்ள டாக்டர்கள், புவனேஸ்வரியை பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். வந்தவாசி தெற்குப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூரில் சாராயம் விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர்:

    போளூர் டவுன் இந்திரா நகரில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்.

    அப்பகுதியில் சாராயம் விற்ற குப்பு (வயது 67) என்ற மூதாட்டியை கைது செய்து அவரிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தார்.
    பள்ளிகொண்டா அருகே வேன் கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அணைக்கட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் படவேடு பகுதியைச் சேர்ந்தவர் குழந்தை இவரது மகன் ரஞ்சித்குமார் (வயது 30), கும்பகோணம் சீனிவாசநல்லூர் பகுதியைச் சேர்ந்த நவாப்ஜான் மகன் ஆசிக் (33). இருவரும் ஒரே பார்சல் வண்டியில் டிரைவராக வேலை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து பார்சல்களை ஏற்றிக்கொண்டு பெங்களூருவை நோக்கி வேன் சென்று கொண்டிருந்தது வேனை ரஞ்சித்குமார் ஓட்டினார். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த கிங்கினிஅம்மன் கோவில் அருகே அதிகாலை 4 மணிக்கு வந்த போது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை பள்ளத்தில் கவிழ்ந்தது. இ்தில் ஆசிக் சம்பவ இடத்திலேயே பலியானார். ரஞ்சித்குமார் காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வந்தவாசி அருகே மோட்டார் சைக்கிள் மோதி நடந்து சென்ற பாட்டி, பேத்தி பரிதாபமாக இறந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமம் வாணியசெட்டி தெருவை சேர்ந்த நவாப்ஜான். இவருடைய மனைவி அலிமாபீவி (வயது 70). இவர் தனது பேத்தி பரிதா பானுவுடன் (31) அக்கி எனப்படும் இயற்கை வைத்திய சிகிச்சைக்காக நேற்று காலை சுமார் 9.30 மணி அளவில் வந்தவாசியில் இருந்து வெண்குன்றம் செல்லும் சாலையில் நடந்து சென்றார்.

    அப்போது வெண்குன்றம் கிராமத்தை சேர்ந்த அருண்குமார் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அலிமாபீவி, பரிதாபானு ஆகியோர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அதேபோல் மோட்டார் சைக்கிளில் வந்த அருண்குமார், அவரது தம்பி விஜய் என்ற சஞ்சய், தினேஷ்குமார் ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அலிமாபீவி, பரிதாபானு ஆகியோர் உயிரிழந்தனர்.

    சஞ்சய்(17), அருண்குமார்(18), தினேஷ்குமார்(17) அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சஞ்சய் மற்றும் தினேஷ்குமார் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த விபத்து குறித்து வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருண்குமார் சென்னை கிண்டியில் ஐ.டி.ஐ.யும், சஞ்சய் மற்றும் தினேஷ்குமார் வந்தவாசியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2-வும் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆரணியில் மின்சாரம் தாக்கி செல்போன் கடை ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணி மார்க்கெட் ரோடு பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரின் மகன் பிரகாஷ் (வயது 24). ஆரணி அண்ணாசிலை அருகில் உள்ள செல்போன் கடையில் வேலைபார்த்து வந்தார். இவர் நேற்று பகலில் இரும்பு கம்பியால் செய்யப்பட்ட விளம்பர பலகையை கடையின் மேல்பகுதியில் வைப்பதற்காக எடுத்துச் சென்றார். அப்போது மேல்பகுதியில் சென்ற உயர் அழுத்த மின்கம்பி மீது விளம்பர பலகை பட்டு அதன்மூலம் பிரகாசை மின்சாரம் தாக்கியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவரை ஆரணி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சென்ற சிறிது நேரத்தில் பிரகாஷ் இறந்துவிட்டார்.

    இதுகுறித்து ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்- இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதில் முறைகேடுகள் ஏதேனும் இருந்தால் புகார் செய்யலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.
    திருவண்ணாமலை:

    தமிழ்நாடு மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும் வகையில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழுக் கரும்பு, துணிப்பை ஆகிய பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2500-ம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டு உள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.2500 அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்கள் அனைவரும் அந்தந்த நியாய விலைக் கடைகளில் சுழற்சி முறையில் பரிசுத் தொகுப்பினை பெறும் வகையில் நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்கு அதாவது பகலில் 100 குடும்ப அட்டைகளுக்கும், மதியத்தில் 100 குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்பட உள்ளது.

    நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு, டோக்கன்கள் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை வீடுதோறும் சென்று நியாய விலைக்கடை பணியாளர்கள் மூலம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட நாளில் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிற ஜனவரி 13-ந் தேதியன்று வழங்கப்படும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே பொருள் வாங்க வரவேண்டும். நடைமுறையில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விடுதலின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

    குடும்ப அட்டைதாரர்கள் எவ்வித சிரமமுமின்றி நியாய விலைக் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வந்தாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வரும் குடும்ப அட்டைதாரர்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று பொருட்கள் பெறவேண்டும். முகக்கசவம் அவசியம் அணிந்து வரவேண்டும்.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதில் ஏதேனும் முறைகேடுகள் இருந்தால் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04175-233063 அல்லது வருவாய் கோட்ட அலுவலர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் போன்று வட்ட அளவில் நியமனம் செய்யப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்களை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    சேத்துப்பட்டு அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். குழந்தை உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த பெரிய கொழப்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் நந்திவர்மன் (வயது 65). ஓய்வுபெற்ற அலுவலர். இவர் சேத்துப்பட்டில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல நந்திவர்மன் நேற்று காலை சேத்துப்பட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார்.

    நிர்மலா நகரை சேர்ந்தவர்கள் ராஜா (19), ரேணு (30), மஞ்சுளா (27). மரம் வெட்டும் தொழிலாளர்கள். இவர்கள் நேற்று காலை மரம் வெட்டுவதற்காக மஞ்சுளாவின் 2 வயது குழந்தை வள்ளிக்கண்ணுவுடன் ஒரே மோட்டார்சைக்கிளில் உலகம்பட்டு கிராமத்துக்கு சென்றுகொண்டிருந்தனர்.

    கெங்கைசூடாமணி அண்ணாநகர் பகுதியில் வந்தபோது நந்திவர்மன் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிளும், ராஜா உள்பட 4 பேர் வந்த மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன.

    இதில் இரண்டு மோட்டார்சைக்கிளில் வந்த 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் நந்திவர்மன், ராஜா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர். வள்ளிக்கண்ணு, ரேணு, மஞ்சுளா ஆகிய 3 பேர் படுகாயமடைந்து ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் சேத்துப்பட்டு போலீசார் விரைந்து சென்று விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சேத்துப்பட்டு அருகே வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு அருகே கங்கைசூடாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் (வது 27). இவர் நேற்றுமுன்தினம் இரவு சேத்துப்பட்டு நோக்கி மோட்டாசைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அண்ணாநகர் என்ற இடத்தில் சென்றபோது பின்னால் வந்த அடையாளம்தெரியாத ஒரு வாகனம் அவர்மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சுந்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கெடாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 50), கூலித்தொழிலாளி. இவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுெதாடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் ரூ.2 லட்சம் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு அரவிந்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் டெல்டா தனிப்படையினர் சிவன்படை தெருவில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மளிகைக்கடை ஒன்றில் ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த திருவண்ணாமலையை சேர்ந்த பாரஸ் (வயது32), சித்திக் (38) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சியில் மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார்.
    ஆரணி:

    ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சியில் மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் அ.கோவிந்தராசன், மேற்கு ஆரணி ஒன்றியக் குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்ட ஆவீன் துணைத் தலைவர் பாரி பி.பாபு, மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் வக்கீல் கே.சங்கர், வைகை கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பி.ஆர்.ஜி.சேகர், ஊராட்சி மன்ற தலைவர் தரணிவெங்கட்ராமன், ஒன்றிய கவுன்சிலர்கவுரிபூங்காவனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்யார் சுகாதார துணை இயக்குனர் அஜிதா வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு மினி கிளினிக்கை, ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    மேலும் கடந்த ஆண்டு ஏரியில் மூழ்கி பலியான கோகுல் என்ற சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை, 5 கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு கால ஆரோக்கிய கிட்டுகளை வழங்கி பேசினார்.

    முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மாமண்டூர் பி.சுப்பிரமணி, ஆரணி ஒன்றிய அ.தி.மு.க. துணைச் செயலாளர் கே.வேலு, பையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.சரவணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கே. பெருமாள், சிவகாமிஜெகன், ஆரணி தாசில்தார் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.வி.மூர்த்தி, ஏ.பி.வெங்கடேசன், கே.ஹரி, ஏ. ஸ்ரீதர், மற்றும் மருத்துவ குழுவினர்கள், கட்சி பொறுப்பாளர்கள் கோபி, கோவிந்தராஜ், குண்ணத்தூர் வி.எஸ்.செந்தில் உள்பட், பலரும் கலந்து கொண்டனர். 

    முடிவில் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுதா நன்றி கூறினார்.
    சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் 2 பேர் உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 31). இவருடைய நிலத்தை் அளவீடு செய்வதற்காக பணம் கட்டி அதற்கான ரசீதை தாலுகா அலுவலகத்தில் கொடுத்துள்ளார். ஆனாலும் நிலத்தை அளக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளனர்.

    இதனால் ஆவேசமடைந்த லோகநாதன் அவருடைய நண்பர் சிவா என்பவருடன் நேற்று சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு இருவரும் தாலுகா அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் சேத்துப்பட்டு போலீசார் மற்றும் தாசில்தார் ஆகியோர் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நிலத்தை அளக்க ஏற்பாடுகள் செய்வதாக கூறினார்கள். அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்றனர்.
    ×