என் மலர்
செய்திகள்

ரஜினி-கமல் இணைந்தாலும் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படாது- முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டி
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மாநில திட்டக்குழு துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தலைமையில் மாநில வளர்ச்சி திட்டக்குழு கூட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து பொன்னையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
மக்களின் தேவைகளை அறிந்து அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு மாநில வளர்ச்சி திட்டக்குழு நிதி ஒதுக்குகிறது. அந்த நிதியை பயன்படுத்தி 42 அரசு துறைகளின் மூலம் திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது.
எனவே அரசின் திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா? அவற்றின் முன்னேற்றம், மேலும் கூடுதல் நிதி உதவி தேவைப்படுகிறதா? என மாநில வளர்ச்சி திட்டகுழு நேரடி ஆய்வு நடத்துகிறது. மேலும் பரிசோதனை முயற்சியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களில் தேவையான நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்கிறோம்.
நவீன தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி விவசாயிகளின் வருமானத்தை பெருக்க திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
குடிசைத்தொழில், சிறுதொழில், சுய உதவி குழுக்கள் செய்யும் தொழில்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க முன்வந்துள்ளது. எந்தெந்த தொழிலை மேற்கொண்டால் வாழ்வாதாரம் மேம்படும்.உற்பத்தியாகும் பொருட்களேக்கு விற்பனை வாய்ப்பு கிடைக்கும் என கண்டுபிடித்து அதற்கான நிதியை வங்கிகள் மூலம் பெற்று சுய வேலை வாய்ப்பை உருவாக்குவது அரசியல் நோக்கம்.
எனவே சுய உதவிக்குழுக்கள் அதிகம் உருவாக்கவேண்டும். அதிகமான பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளது. எனவே படித்த இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு உருவாக்குவது அவசியம்.
கிராம பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இது போன்ற திட்டங்களுக்கு மாநில வளர்ச்சி திட்ட குழு துணைநிற்கிறது.
அரசியலுக்கு வருவது பற்றி நடிகர் ரஜினி கடந்த 20 ஆண்டுகளாக சொல்லிவருகிறார். அவரது ரசிகர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் சேர்ந்து விட்டனர்.
எந்த கணிப்பில் அவர் அரசியலுக்கு வருகிறார்? என்பது அவருக்குத்தான் தெரியும். நடிகர்கள் கமல்- ரஜினி இணைந்தாலும் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.






