search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை படத்தில் காணலாம்.
    X
    சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை படத்தில் காணலாம்.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

    மகா தீபத்தன்று கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் பக்தர்கள் அனுமதிக்காததால் அன்று வரமுடியாத பக்தர்கள் விடுமுறை நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோவிலுக்கு வருகை புரிந்தனர்.
    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்குகிறது.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிப்படுவதால் இக்கோவிலின் பின்புறம் உள்ள மலையை அண்ணாமலையார் மலை என்று பக்தர்கள் அழைக்கின்றனர். மேலும் இந்த மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    இந்த மலையின் உச்சியில் கடந்த மாதம் 29-ந்தேதி மகா தீபம் ஏற்பட்டது. மகா தீபத்தன்று கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் பக்தர்கள் அனுமதிக்காததால் அன்று வரமுடியாத பக்தர்கள் விடுமுறை நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோவிலுக்கு வருகை புரிந்தனர். இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    நேற்று உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தனர்.

    பக்தர்கள் கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களை சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் முகக்கவசம் அணியாமல் வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் அம்மன் சன்னதி முன்பு விளக்கு ஏற்றி வழிபாடு செய்வார்கள். தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக ராஜகோபுரத்தில் இருந்து சாமி மற்றும் அம்மன் சன்னதி சென்று கோவில் பின்புறம் வழியாக திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வரும் வகையில் பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதனால் கோவிலுக்குள் விளக்கு ஏற்ற முடியாத பக்தர்கள் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ராஜகோபுரத்தின் முன்பு விளக்கு ஏற்றி விட்டு செல்கின்றனர். இதனை அங்கு இருக்கும் பணியாளர்கள் உடனடியாக அகற்றினால் பக்தர்கள் கோவித்து கொள்கின்றனர்.

    எனவே மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கு இடத்தில் விளக்கு ஏற்றுவதால் அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறும் முன்பு கோவில் நிர்வாகம் பக்தர்கள் விளக்கு ஏற்றி வழிபட இடவசதி செய்து கொடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    Next Story
    ×