என் மலர்
திருவண்ணாமலை
ஆரணி:
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வேலப்பாடி கிராமத்தில் டிராக்டர் மூலம் வைக்கோல் உருட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு பணி முடிந்து பலாந்தாங்கல் கூட்டுச் சாலையில் உள்ள கோவில் அருகே டிராக்டரை நிறுத்தி விட்டு உறங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த 3 பேர் மோகனை தாக்கி அவரிடம் இருந்த ரூ.12 ஆயிரம் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு தப்பி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
இதையறிந்து கிராம மக்கள் அவர்களை விரட்டி சென்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க, இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியபோது, சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அதில் ஒருவர் படுகாயமடைந்ததாகவும், 2 பேர் தப்பித்து சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. படுகாயமடைந்து சிக்கியவரை அங்குள்ளவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் ஆரணி அடுத்த புனலப்பாடி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (வயது27), ஆரணி பாளையத்தை சேர்ந்த சூர்யா(25), பலாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(25) என்பதும் தெரியவந்தது. மேலும் படுகாயமடைந்தவர் சக்திவேல் என்ற விவரம் கிடைத்தது.
இதுகுறித்து மோகன் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், விபத்தில் படுகாயமடைந்ததாக கூறப்படும் சக்திவேல், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
இந்நிலையில் சக்திவேல் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறி, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர்.
அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். அப்போது அவர்கள் சக்திவேலுவை அடித்து கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதையறிந்த கூடுதல் எஸ்.பி. அசோக்குமார், சக்திவேல் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது அவரிடம், சக்தி வேலுவின் தாயார் அலமேலு அளித்துள்ள புகார் மனுவில், “எனது மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி புகார் கொடுக்க ஆரணி தாலுகா போலீஸ் நிலையம் சென்றேன்.
அப்போது, எனது மகன் சக்திவேல் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீசார் கூறினார். மேலும் எனது புகார் மீது விசாரிக்க முன்வராமல் எங்களை விரட்டினார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எனது மகன் உயிரிழந்தார்.எனது மகனை அடித்து கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு சாதகமாக போலீசார் செயல்பட்டுள்ளனர்.
எனது மகனை அடித்துக் கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும். அவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
பின்னர் அவர்களிடம், தனிப்படை மூலம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் எஸ்.பி. உறுதி அளித்ததால், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில், தப்பித்து சென்றதாக கூறப்படும் சூர்யா மற்றும் மணிகண்டன் ஆகியோர் பிடிபட்டதால்தான் உண்மை விவரம் தெரியவரும் என போலீசார் கூறினர்.
மேலும் அலமேலு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு ஞாயிறு விடுமுறை தினத்தில் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். ஆனால் நேற்று கொரோனா அச்சத்தால் பக்தர்கள் வருகை மிகவும் குறைவாக காணப்பட்டது.
கோடை வெயிலை பொருட்படுத்தாமல் நேற்றும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று அமாவாசை தினம் என்பதால் சித்தர் சன்னதிகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வழி எங்கும் கோடைகாலம் என்பதால் சோடா மற்றும் குளிர் பானங்கள் விற்பனை களை கட்டியது. தர்பூசணி, முலாம்பழம், இளநீர்,மோர் உள்ளிட்டவைகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கி தாகம் தணித்தனர்.

குழந்தைகள், சிறுவர்கள் நடக்க சிரமப்பட்டதால் அவர்களை பெரியவர்கள் தூக்கிக்கொண்டு கிரிவலம் சென்றனர். முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் சென்றனர்.
இந்த நிலையில் வருகிற 14ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது. அதனையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று கூறப்படுகிறது.
இதையொட்டி தேவையான முன்னேற்பாடு பணிகளில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் பக்தர்கள் பல சன்னதிகளை காணவும் அனுமதிக்கப்பட்டனர். 10-ந்தேதி முதல் குறைந்த சன்னதிகளை காணவே அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் பக்தர்கள் தரிசனம் முடித்து சிறிது நேரம் கோவில் வளாகத்தில் இளைப்பாறி சென்று வந்தனர். அதற்கும் தற்போது அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை சாமிநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சீனு (வயது 36), கூலித்தொழிலாளி. இவரது மனைவி வெண்ணிலா (30). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சீனு வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சீனு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை தாலுகா காட்டாம்பூண்டி மடுவங்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 49). இவரது மகள் மோனிஷா (21). இவருக்கும், அய்யம்பாளையத்தை சேர்ந்த சாமிதுரை என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மோனிஷா ஓட்டு போடுவதற்காக கணவருடன் சென்றபோது மயங்கி விழுந்துவிட்டதாகவும், மருத்துவமனையில் இருப்பதாகவும் ஏழுமலைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மோனிஷா தூக்குப்போட்டு இறந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஏழுமலை திருவண்ணாமலை தாலுகா போலீசில் மகள் சாவில் மர்மம் உள்ளதாக புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மோனிஷாவுக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி டவுன் கோட்டைக்குள் தெருவைச் சேர்ந்தவர் நசீர்கான் (30).
இவர் கடந்த நவம்பர் மாதம் வரை வந்தவாசி தாலுகா அலுவலகம் சாலையில் உள்ள அம்மா உணவகம் அருகேயுள்ள நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டி வந்தார்.
அப்போது அப்துல்கலாம் என்ற பெயரில் இருந்த ஆட்டோ சங்கத்தை கட்சி சார்பில் மாற்ற முயன்ற சம்பவம் தொடர்பாக அதே ஆட்டோ சங்கத்தில் இருந்த ஆட்டோ டிரைவரான மஸ்தான்(28) என்பவருடன் தகராறு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து நசீர் கான் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தரணிதரன் (20), தாமோதரன் (22) ஆகியோர் உதவியுடன் கடந்த நவம்பர் மாதம் மஸ்தானை ஆட்டோ சவாரிக்கு அழைத்து சென்றனர்.
தழுதாழை கூட்டு சாலை அருகே சென்றபோது எனது நண்பர் நசீர் கானிடம் தகராறு வைத்துக் கொண்டால் இருக்கும் இடம் தெரியாமல் செய்து விடுவோம் என கூறி மஸ்தானை கழுத்தில் வெட்டி ஆட்டோவை கடத்தி சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வந்தவாசி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தரணிதரன், தாமோதரன்,நசீர் கான் ஆகியோர்களை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். 3 பேரும் கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்தனர்.
ஜாமீனில் வெளியே வந்த நசீர் கான் ஆட்டோ ஓட்டுவதை நிறுத்தி விட்டு செய்யாறு தாலுகா மாங்கால் கூட்டு சாலையில் சிக்கன் பக்கோடா கடை நடத்தி வந்தார். தனது மனைவி சாகினா (25) என்பவருடன் அங்கேயே தங்கி வியாபாரம் செய்து வந்தார்.
தேர்தலுக்காக. 2 நாட்களாக கடை விடுமுறை என்பதால் மாங்காள் கூட்டு ரோட்டில் இருந்து வந்தவாசியில் உள்ள வீட்டிற்கு நேற்று இரவு 10.30 மணியளவில் மனைவியுடன் நசீர் கான் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை கொலை செய்வதற்காக திட்டமிட்ட 10 பேர் கும்பல் அங்குள்ள தெருவிளக்குகளை அனைத்து விட்டு காத்திருந்தனர்.
கோட்டைக்குள் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய முஸ்லிம் தொடக்கப் பள்ளி அருகே நசீர்கான் சென்றபோது வளைவில் முகமூடி அணிந்த 10 பேர் கொண்ட கும்பல் நசீர்கானை சரமாரியாக வெட்டினர்.
உயிர் தப்பிக்க நசீர்கான் அருகே உள்ள ஒரு வீட்டுக்குள் ஓடினார். அவரை விரட்டி சென்று கும்பல் வெட்டி சாய்த்தனர். இதில் படுகாயம் அடைந்த நசீர்கான் துடிதுடித்து இறந்தார். அங்கிருந்து அந்த கும்பல் தப்பி ஓடியது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பிணத்தை0 கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை எஸ்.பி. அரவிந்த் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். நசீர் கானை முன்விரோதம் காரணமாக கொலை செய்தார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெம்பாக்கம் தாலுகா வடக்கல்பாக்கம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 41), கூலித்தொழிலாளி. இவரது மகன் விக்ரம் (14), மாமண்டூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் கடந்த 2-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது மோட்டார் சைக்கிளில் அதே கிராமத்தைச் சேர்ந்த அற்புதராஜ் என்பவரின் மகன் ஆதி (14) என்பவரை மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார வைத்து மாமண்டூர் கிராமத்திற்கு சென்றார். வடகல்பாக்கம் -மாமண்டூர் சாலையில் செல்போன் டவர் எதிரில் எதிரில் வந்த வேன் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் விக்ரம் படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை விக்ரம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






