என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    ஆரணி அரசு மருத்துவமனையில் இதுவரை 3,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    ஆரணி:

    நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று 2-வது அலை பரவி வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் கண்ணகி ஆகியோர் உத்தரவின்பேரில் ஆரணி அரசு மருத்துவமனையில் இதுவரை 3,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் ஆரணி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு ஏற்பாடு செய்து, தற்போது 26 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், என மருத்துவ அலுவலர் டாக்டர் மம்தா தெரிவித்துள்ளார்.
    அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 3 பேர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
    வேலூர்:

    அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 3 பேர் இறந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிறப்பு வார்ட்டில் ஆக்சிஜன் விநியோகத்தில் தடை என நோயாளிகளின் உறவினர்கள் புகார் கூறியுள்ளனர். 

    உடல்நலக் குறைவு காரணமாகவே நோயாளிகள் உயிரிழந்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் அல்ல, உயிரிழந்தவர்களில் 2 பேர் கொரோனா நோயாளிகளே அல்ல. ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது முற்றிலும் தவறான தகவல். அடுக்கம்பாறை மருத்துவமனையில் தயாராகவுள்ள  படுக்கைகளில் 50% நோயாளிகளே உள்ளனர் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். 
    கோப்பு படம்.
    ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் இறக்கவில்லை. சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்பால் நோயாளிகள் உயிரிழந்தாக மருத்துவமனை டீன் செல்வி தகவல் தெரிவித்துள்ளார். 
    தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் பக்தர்களின்றி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் திடீரென அறிவிக்கப்பட்டு உள்ளது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாதத்தில் சித்திரை வசந்த உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவ விழா நேற்று தொடங்கியது.

    முன்னதாக நேற்று முன்தினம் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவை முன்னிட்டு கோவிலில் நேற்று முதல் வருகிற 25-ந் தேதி வரை இரவில் மண்டகப்படி நிகழ்ச்சியும், 26-ந்தேதி காலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரியும், இரவில் கோபால விநாயகர் கோவிலில் மண்டகப்படி நிகழ்ச்சியும், இரவில் கோவில் கொடிமரம் அருகில் மன்மத தகனம் நிகழ்ச்சியும் நடைபெற இருந்தது.

    இந்த நிலையில் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் பக்தர்களின்றி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் திடீரென அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை வசந்த உற்சவம் விமரிசையாக நடைபெறும். தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் அரசு வழிகாட்டு நடைமுறையின்படி பக்தர்கள் அனுமதியின்றியும், விழா நாட்களில் யதாஸ்தானத்திலேயே சாமி அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும் என்றும் அதில் தெரிவித்து உள்ளார்.
    செய்யாறு அருகே ஏரியில் மூழ்கி அண்ணன்-தம்பி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா சின்னசெங்காடு கிராமத்தை சேர்ந்த முனுசாமி மகன்கள் பாஸ்கரன் (வயது 9), ஹரிஹரன் (6). 2 பேரும் நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றுள்ளனர். மதியம் 1.30 மணியாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் தாய், மகன்கள் மதிய உணவுக்காக வீட்டுக்கு வராததால் வயல்காட்டு பகுதிக்கு தேடிச்சென்றுள்ளார். ஆனால் இருவரையும் காணவில்லை.

    இதனால் சந்தேகமடைந்து அருகே உள்ள ஏரிக்கு சென்றபோது அங்கு சிறுவர்களின் செருப்பு மற்றும், ஆடு மேய்க்க கொண்டு சென்ற தழைகளை பறிக்கும் தொரட்டி இருந்தது. சிறுவர்களை காணவில்லை.

    அதைத்தொடர்ந்து பொதுமக்கள் ஏரியில் இறங்கி தண்ணீரில் சிறுவர்களை தேடினர். அப்போது சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சிறுவர்கள் 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
    சேத்துப்பட்டு அருகே மரத்தின் மீது கார் மோதியதில் கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலையை அடுத்த கிளியாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 50). கூலித்தொழிலாளியான அவர் சென்னை செங்குன்றம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். அவரும், மனைவி விருதாம்பாள் (42), மகன்கள் பவுன்ராஜ், நாராயணன் ஆகியோரும் ஒரு காரில் சென்னையில் இருந்து புறப்பட்டு சொந்த கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை, டிரைவர் சின்னராஜ் ஓட்டி வந்தார்.

    நள்ளிரவு 1 மணி அளவில் சேத்துப்பட்டுக்கும் வந்தவாசிக்கும் இடையே கோழிப்புலியூர் கிராமம் அருகில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தின் மீது மோதியது. அதில் பலத்த காயம் அடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மேலும் இந்த விபத்தில் வெங்கடேசனின் மனைவி, மகன்கள் மற்றும் டிரைவர் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அவர்கள் சேத்துப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்குச் சென்றுள்ளனர்.

    விபத்து குறித்து தேசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வந்தவாசி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
    தேனிமலை போக்குவரத்துக்கழக பணிமனையில் பணியாற்றும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த தேனிமலையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை எண்:1 மற்றும் எண்:2-ல் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

    பணிமனையில் 620 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். துரிஞ்சாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜா தலைமையில் டாக்டர்கள் முல்லைவேந்தன், தாமரைஅரசி, சவிதா, சுகாதார ஆய்வாளர்கள் அரிகிருஷ்ணன், பரணி மற்றும் செவிலியர்கள் கொண்ட குழுவினர் பணிமனையில் பணியாற்றும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்துக்கழக பணிமனை கிளை மேலாளர் துரை, கோதண்டராமன் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.
    செங்கம் அருகே கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி 7 மாத கர்ப்பிணி துணை சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள மேல்கரிப்பூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரி (வயது 21). இவரும் செங்கம் அருகே உள்ள முத்தனூர் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (27) என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் சென்னையில் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

    தற்போது சுந்தரி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது குறித்து சிலம்பரசன் தனது வீட்டில் பெற்றோரிடம் தகவலை தெரிவித்து விட்டு சுந்தரியை தனது வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி முத்தனூருக்கு சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் திரும்பி வரவில்லை. செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை

    இதனால் ஏமாற்றம் அடைந்த சுந்தரி செங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து தன்னை கணவர் சிலம்பரசனுடன் சேர்த்து வைக்கக்கோரி முறையிட்டார்.

    அதனை விசாரித்த மகளிர் போலீசார் சமூக நலத்துறை மூலம் சேர்ந்து வாழ இருவருக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக தெரிகிறது. அதன் பின்பும் சிலம்பரசன் தனது மனைவி சுந்தரியை அழைத்துச் செல்லவில்லை.

    இந்த நிலையில் தனது புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி சுந்தரி நேற்று செங்கம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சுந்தரியிடம் அங்கு வந்த அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கோமதி பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    அதனை தொடர்ந்து தர்ணாவை கைவிட்டு சுந்தரி அங்கிருந்து சென்றார். இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
    காட்பாடியில் காதல் திருமணம் செய்த பெண் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போளூர்:

    போளூர் அருகே உள்ள பிலாசூர் கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்த முரளி (20) என்பவருக்கும், சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியது.

    இதனிடையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவியை முரளி யாருக்கும் தெரியாமல் காட்பாடி அழைத்து வந்தார்.

    மகள் காணாமல் போனதால் பதட்டமடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து போளூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் முரளி நேற்று மாணவியை வள்ளிமலை கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து இருவரும் திருமணம் செய்துள்ளனர்.

    பின்னர் காட்பாடி கிளித்தான் பட்டறை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கினர்.

    நேற்று இரவு மாணவி குளிர்பானம் குடித்தார்.சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த முரளி மற்றும் அவரது உறவினர்கள் மாணவியை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் போளூரில் உள்ள அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. மாயமான மகள் இறந்ததை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    காட்பாடி போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவி எப்படி இறந்தார் என்பது குறித்தும் முரளியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் பாதிப்பு இருந்ததாகவும் குளிர்பானம் குடித்ததும் அவர் மயக்கம் ஏற்பட்டு இறந்ததாக முரளி தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    முக்கிய அரசியல் முடிவுகளை எடுக்கும் முன்பும், தேர்தல் பிரசாரம் தொடங்கும் முன்பும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் டி.டி.வி.தினகரன் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    திருவண்ணாமலை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள மூக்குப்பொடி சித்தர் மீது பக்தி கொண்டவர்.

    மேலும் அவர் முக்கிய அரசியல் முடிவுகளை எடுக்கும் முன்பும், தேர்தல் பிரசாரம் தொடங்கும் முன்பும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    அதன்படி டி.டி.வி தினகரன் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் தனது மனைவியுடன் நேற்று திருவண்ணாமலை வந்து அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் காரில் கிரிவலம் சென்று அஷ்ட லிங்கங்களை வழிபட்டார்.

    மேலும் கிரிவலப் பாதையில் உள்ள மூக்குப்பொடி சித்தர் சன்னதிக்கு சென்று வழிபட்டார்.

    முன்னதாக அவர் அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் திருக்கல்யாணம் நடைபெறும் கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதி மற்றும் மண்டபத்தை பார்வையிட்டார்.

    வருகிற ஜூன் மாதம் அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் தனது மகள் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளதாகவும், அதனால் அவர் திருக்கல்யாண மண்டபத்தை மனைவியுடன் வந்து பார்வையிட்டதாகவும் கூறப்படுகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 78 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 440 ஆக உயர்ந்துள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 78 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 440 ஆக உயர்ந்துள்ளது.

    இதில் 19 ஆயிரத்து 577 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 575 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 288 பேர் உயிரிழந்து உள்ளனர்.
    கொரோனா பரவலை கட்டுப்படுத்த 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
    திருவண்ணாமலை:

    கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுகூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நோய்தடுப்பு குறித்து கலெக்டர் கேட்டறிந்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

    அப்போது நோய் பரவலை கட்டுப்படுத்த 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை அதிகரிக்க அறிவுறுத்தினார்.

    மருத்துவமனைகள் மற்றும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மருந்துகளின் கையிருப்பு, தேவையின் அளவு குறித்தும், அங்குள்ள கழிப்பிடங்களை தூய்மையாக வைத்திருக்கவும் அறிவுறுத்தினார்.

    அரசு அலுவலகங்கள், வழிபாட்டு தலங்கள், வணிகவளாகங்கள், ஓட்டல்கள், பூங்காக்கள் மற்றும் சந்தை போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருமால், சுகாதார பணிகள் இணை இயக்குனர் கண்ணகி, துணை இயக்குநர் அஜித்தா மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    திருவண்ணாமலையில் செங்கம் சாலையில் உள்ள பழைய மருத்துவமனையில் 70 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தினையும், அதே வளாகத்தில் 100 படுக்கைகள் கொண்ட ஆயுஸ் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தினையும் ஆய்வு செய்தார்.

    பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதிகள் குறித்தும், சிகிச்சைகள் குறித்தும் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான பேகோபுரம் முதல் தெருவில் நடைபெற்று வரும் காய்ச்சல் முகாமினையும் ஆய்வு செய்தார்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மீண்டும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மேலும் 111 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 307 ஆக உயர்ந்துள்ளது. இதில், 19 ஆயிரத்து 512 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து ஆஸ்பத்திரிகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 507 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 288 பேர் உயிரிழந்து உள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு பிறகு திருவண்ணாமலை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்றால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×