என் மலர்
திருவண்ணாமலை
செங்கம் அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்றால் இறந்துவிடுவோம் என பயந்து கடந்த 23-ந்தேதி மூதாட்டி வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் செவிலியர் குடியிருப்பு அருகே மூதாட்டி நேற்று இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த சுகாதார துறையினர் விரைந்து வந்து கடலாடி போலீசார் உதவியுடன், மூதாட்டி பிணத்தை மீட்டு அரசு வழிகாட்டுதலின் படி நல்லடக்கம் செய்ய சொந்த ஊரான புதுப்பாளையத்திற்கு கொண்டு சென்று அவரது மகளிடம் உடலை ஒப்படைத்தனர்.
மூதாட்டியின் மகன், மருமகள், பேரக்குழந்தை ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருவண்ணாமாலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்வது மணமக்கள் வாழ்கையை மிகவும் இனிமையாக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
இதனால் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மிகவும் வசதிபடைத்தவர்களும் கோவிலில் திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு விருந்து உள்ளிட்ட நிகழ்வுகளை திருமண மண்டபத்தில் நடத்துவார்கள்.சில சுபமுகூர்த்த நாட்களில் 100 திருமணங்கள் வரை நடைபெறும்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட இருப்பது பற்றி அறியாமல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று திருமணத்தை நடத்துவதற்கு சில மாதங்களுக்கு முன்பே 12 குடும்பத்தினர் பதிவு செய்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்றே திருவண்ணாமலைக்கு வந்துவிட்ட சில திருமண கோஷ்டியினர் இன்று காலை 6 மணி முதல் 7.30 மணிவரையிலான உள்பட 3 முகூர்த்த நேரத்தில், திருமணத்தை நடத்துவதற்காக கோவில் முன்பு திரண்டனர்.

இன்று முழு ஊரடங்கு என்பதாலும் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதாலும் கோவிலுக்குள் ஒரு திருமணம் முடிந்த பின்னரே, அடுத்த திருமண கோஷ்டியை அனுமதிக்க முடியும் என்று கோவில் ஊழியர்கள் உறுதிபட கூறிவிட்டனர்.
இதனால் குறிப்பிட்ட முகூர்த்த நேரம் முடிந்து விடும் என திருமண கோஷ்டியினர் தெரிவித்து தங்களை கோவிலுக்குள் அனுமதிக்கும்படி வற்புறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஒரு ஜோடி முகூர்த்த நேரம் முடித்துவிட கூடாது என்று தங்களின் திருமணத்தை உற்றார் உறவினர் முன்னிலையில் கோவிலுக்கு முன்பே நடத்தி கொண்டனர். இதனால் பிரச்சினை எதுவும் இல்லாமல் திருமணங்கள் நடந்தேறின.
மணமக்களின் உறவினர்கள் ஊரடங்கு காலத்திலும் அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு திருமணம் செய்ய முடிந்ததே என்று மிகவும் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
செய்யாறு:
செய்யாறு அடுத்த முளைகிரிபட்டு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 55). இவரது மனைவி பார்வதி (50). சங்கர் தனது மனைவி மற்றும் மகன்களுடன் சென்னையில் தங்கி வேலை செய்து வந்தார்.
தற்போது சங்கர் வேலை இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு முளகிரிபட்டில் சங்கர் வீடு கட்டினார்.
நேற்று முன்தினம் கணவன்- மனைவி இருவரும் முளகிரிபட்டு வந்தனர். நேற்று இரவு சங்கர் தனது மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டார். அதற்கு அவரது மனைவி ஏற்கனவே மது குடித்துவிட்டு இருக்கிறீர்கள் மேலும் பணம் தரமுடியாது என கூறினார்.
இதனால் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. விரக்தியடைந்த பார்வதி தன் தற்கொலை செய்து கொள்வதாக கூறினார்.
இதனைக் கேட்டு ஆத்திரம் அடைந்த சங்கர் நீ என்ன தற்கொலை செய்துகொள்வது நானே உன்னை கொளுத்தி விடுகிறேன் என கூறி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து வந்து பார்வதி மீட்டு மீது ஊற்றி தீ வைத்தார்.
இதில் பார்வதி உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் வலி தாங்காமல் அவர் அலறி துடித்தார்.
அப்போது சங்கர் தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது. இதனால் வலி தாங்காமல் வீட்டின் சுவர் ஏறி குதித்து அருகில் இருந்த குட்டையில் விழுந்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து அனக்காவூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பார்வதி உடல் கருகி இறந்து கிடந்தார்.
இதையடுத்து குட்டையில் கருகி கிடந்த சங்கரை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சங்கர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கிரிவல பாதை ரூ.65 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, கிரிவலப்பாதையில் உள்ள பழமையான மரங்களை வெட்டி அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் முயன்றனர். இதற்கு பக்தர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயம், தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மரங்களை அகற்றாமல் சாலை விரிவாக்கம் செய்ய உத்தரவிட்டது.
இதனால், பல நூறு மரங்கள் தப்பின. அதே நேரத்தில், 50க்கும் மேற்பட்ட மரங்கள் திராவகம் மற்றும் தார் உள்ளிட்ட ரசாயன கழிவுகளை ஊற்றி அழிக்கப்பட்டது.
இந்நிலையில் கிரிவலப் பாதையில் குபேரலிங்கம் அருகே உள்ள பழமையான மரங்கள் நேற்று வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன.
இதனை கண்டித்து இயற்கை ஆர்வலர்கள், கிரிவலப் பாதையில் நேற்று இரவு திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறி பழமையான மரங்களை வெட்டி அகற்றும் நெடுஞ்சாலைத்துறையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள், இது குறித்து கலெக்டர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பின்னர் அவர்கள், நெடுஞ்சாலைத்துறைக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம், பசுமை தீர்ப்பாய உத்தரவை மீறி கிரிவலப்பாதையில் மரங்களை வெட்டி அழிக்கும் நெடுஞ்சாலைத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அதற்கு பதிலளித்த அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையேற்று சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற சாலை மறியல் முடிவுக்கு வந்தது.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.
இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகிறார்கள். கார்த்திகை தீப திருவிழாவுக்கு அடுத்து சித்ரா பவுர்ணமியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 10 லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்லும் சித்ரா பவுர்ணமி வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) மதியம் 12.16 மணிக்குதொடங்கி 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.59 மணி வரை உள்ளது.
இந்த சித்ரா பவுர்ணமியில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர்சந்தீப்நந்தூரி கூறியதாவது:-
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியில் கிரிவலம் செல்ல பக்தர்கள் வரவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா தொற்று பரவாமல் பொதுமக்களை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.






