என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    செய்யாறு அருகே மனைவியை எரித்து கொன்று கணவர் தற்கொலை

    செய்யாறு அருகே மது குடிக்க பணம் தராததால் ஆத்திரமடைந்து மனைவியை எரித்து கொன்ற கணவரும் தற்கொலை செய்து கொண்டார்.

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த முளைகிரிபட்டு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 55). இவரது மனைவி பார்வதி (50). சங்கர் தனது மனைவி மற்றும் மகன்களுடன் சென்னையில் தங்கி வேலை செய்து வந்தார்.

    தற்போது சங்கர் வேலை இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு முளகிரிபட்டில் சங்கர் வீடு கட்டினார்.

    நேற்று முன்தினம் கணவன்- மனைவி இருவரும் முளகிரிபட்டு வந்தனர். நேற்று இரவு சங்கர் தனது மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டார். அதற்கு அவரது மனைவி ஏற்கனவே மது குடித்துவிட்டு இருக்கிறீர்கள் மேலும் பணம் தரமுடியாது என கூறினார்.

    இதனால் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. விரக்தியடைந்த பார்வதி தன் தற்கொலை செய்து கொள்வதாக கூறினார்.

    இதனைக் கேட்டு ஆத்திரம் அடைந்த சங்கர் நீ என்ன தற்கொலை செய்துகொள்வது நானே உன்னை கொளுத்தி விடுகிறேன் என கூறி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து வந்து பார்வதி மீட்டு மீது ஊற்றி தீ வைத்தார்.

    இதில் பார்வதி உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் வலி தாங்காமல் அவர் அலறி துடித்தார்.

    அப்போது சங்கர் தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது. இதனால் வலி தாங்காமல் வீட்டின் சுவர் ஏறி குதித்து அருகில் இருந்த குட்டையில் விழுந்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து அனக்காவூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பார்வதி உடல் கருகி இறந்து கிடந்தார்.

    இதையடுத்து குட்டையில் கருகி கிடந்த சங்கரை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சங்கர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    Next Story
    ×